அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாஞ்சாலியும் பாரதத்தாயும்

“நான் ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன்” என்று குடிசைக்குள் இருந்த குந்தியிடம் அருச்சுணன் கூறினான். “அப்படியானால், அதனை ஐவருமே புசியுங்கள்” என்று ஆணையிட்டாள் அன்னை குந்தி. அருச்சுணன் திடுக்கிட்டான். நான் கொண்டுவந்தது கனியன்று, ஒரு கன்னி” என்றான். “அப்படியா? அதைப்பற்றிக் கவலைப்படாதே. நீ கொண்டு வந்தது கனியானாலும், கன்னியானாலும், அது உங்கள் ஐவருக்குமே சொந்தமானது; ஆகையால், அக்கன்னியை நீங்கள் ஐவருமே பங்கிட்டுக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் ஐவருமே அவளுக்குக் கணவராகுங்கள்” என்று குந்தி கூறினாள். அதன்படி பாண்டவர் ஐவருமே பாஞ்சாலியை மணந்து பங்கு போட்டுக் கொண்டனர் என்பது பாரதக் கதை.

“அன்று, பாஞ்சாலி இருந்த நிலையிலேயே இன்று பாரதத்தாய் இருக்கிறாள்” என்று தோழர் காந்தி அவர்கள் கூறுவது மேற்சொன்ன கதையை நினைவூட்டுகிறது.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள கதை, மெய்யோ பொய்யோ அல்லது மெய்யும் பொய்யுங்கலந்த கற்பனையோ, எப்படியிருந்தாலும், தோழர் காந்தியார் தாம் கூறும் கற்பனா தேவியான பாரதத்தாய்க்குப் பாஞ்சாலியை ஒப்பிட்டு, இவளும் அவள் நிலையை அடைந்துவிட்டாளே என்று அல்லற்படுகிறார்.

தோழர் காந்தியாரால் குறிப்பிடப்படும் பாரதத்தாய், இன்று பிரிட்டிஷாரின் பாதுகாப்பிலிருக்கிறாள். காந்தியார், அவள், தமக்கே சொந்தமென்றும் அவளைத் தம்மிடமே ஒப்படைத்து விடும்படியும் பிரிட்டிஷாரிடம் கேட்கிறார். ஆனால் பிரிட்டிஷார் அதற்கு இணங்கவில்லை. “உமக்கு மட்டும் அவள் சொந்தமன்று; அவளை அடையத் தகுதியுடைய வேறு சிலரும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் உம்மைப்போல, ஏகபோக உரிமை பாராட்டி அவளைத் தங்களிடமே ஒப்படைத்துவிடும்படி கேட்கவில்லை. உங்கள் பாதுகாப்பிலிருக்கும் பாரதத்தாய் காந்தியாருக்கு மட்டும் சொந்தமானவளன்று, எங்களுக்கும் அவள் சொந்தமானவளே, ஆகையால், பங்கு விகிதாசாரப்படி, அவளைப் பங்கு போட்டுக் கொடுப்பதே முறையென்று உம்மைப்போலவே அவளுக்குச் சொந்தக்காரர்களான திராவிடர்களும் முஸ்லீம்களும் கேட்கின்றனர்” - என்று பிரிட்டிஷார், குந்தியின் முறையைக்கூடப் பின்பற்றாமல் குறுக்கே நிற்கின்றனர்.

ஆனால் காந்தியாருக்கு மட்டும், தாம் ஏகபோக உரிமை பாராட்டி அனுபவிக்கலாம் என்ற எண்ணத்துக்குப் பாரதத்தாய் இணங்காமல், பாஞ்சாலி நிலையை அடைந்து விட்டாளே என்ற கவலை பிறந்துவிட்டது. இந்தக்கவலை காந்தியாருக்கு மட்டுமன்று, இந்நாட்டு அமைப்பு முறையை ஓரளவுக்காவது சிந்தித்து உணரக்கூடிய சாதாரண மக்களுக்குக்கூட, இந்நாடு பாஞ்சாலி நிலையிலேயே உள்ளது, இதனை ஒருவர் மட்டும் ஏகபோக உரிமை பாராட்ட முயல்வது தவறு என்ற கவலை பிறக்காமல் இருக்க முடியாது. ஆனால், காந்தியாருக்கு ஏற்பட்டுள்ள இத்தந்நலக்கவலை, இந்நாட்டிலுள்ள ஏனை அரசியல் தலைவர்களுக்கிருக்கும் பொதுநலக் கவலையாக மாறுவதற்குத் தோழர் இராச கோபாலாச்சாரியாரால் கொடுக்கப்பட்டுவரும் “பிரிவினை மருந்து,” மருத்துவனால் கூறப்பட்ட பத்தியங்களோடு கொடுக்கப்படாத மருந்துபோல் பயன் அளியாதுபோனாலுங்கூடக் - குந்தியின் நிலையிலுள்ள பிரிட்டிஷார் இப்பங்கு விகிதாச்சாரமுறையை ஏற்றுக்கொள்ள மறுத்தாலுங்கூடத், தோழர் காந்தியாரால் குறிப்பிடப்பட்டபடி, பாஞ்சாலி நிலையிலேயே இருந்த நாடு - இருக்கவேண்டிய நாடு - இருந்தே தீரவேண்டிய நிலைமையை அடைந்தே தீரும் என்பது மட்டும் உறுதி.

(27.5.1945)