அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாண்டியன் - படுகொலை

அரசியலில் வளர்க்கப்பட்டுவரும் காட்டுமுறையின் விளைவாக நமது கண்மணிகளில் ஒருவரை இழந்துவிட்டோம். 1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட நாள் முதல் நம்முடனிருந்து பணியாற்றியவரும் வண்ணாரப்பேட்டை தி.மு.க. உறுப்பினருமான தோழர் கே.எஸ். பாண்டியன் அவர்கள் 28.10.52 இரவு, காங்கிரஸ் காட்டுமுறை, நம்மிடமிருந்து கொண்டு போய்விட்டது இருட்டு நேரத்தில், வீட்டிற்குள்ளேயே மறைந்த நின்று, மிளகாய்ப்பொடியினைத் தூவி, கத்தியால் குத்திக் கொன்றுவிட்டனர். நாள் முழுதும் பாடுபட்டுவிட்டு, மனைவியைம், மகளையும் காண ஆசையோடு வீட்டு வாயிலில் அடி எடுத்து வைத்த தோழரைக் குருதிக் குளத்தில் மிதக்கக் கண்டனராம் – குடும்பத்தவர்கள். ‘ஐயோ! ஐயோ‘ என்று அலறி ஓடி வந்த அவரது அண்ணியாரையும், அருமை மகளையும், காலிகள் தாக்கியிருக்கின்றனர். கத்தியால் குத்தியிருக்கின்றனர். குருதி கொதிக்கும் இவ்வளவு காரியங்களும், தோழருடைய வீட்டு வாயிலிலேயே நடைபெற்றிருக்கிறதென்றால், பாதகம் புரிந்தோருக்குள்ள நெஞ்சுரமும், இவ்வளவு காரியத்தையும் துணி்ந்து செய்யத் தூண்டிய உள்ளப்பாங்கையும் பற்றி நாம் சிந்திக்காமலிருக்க முடியாது. பொதுவாழ்வில், அரசியல் காரணங்களுக்காக, இதுபோன்ற கொலை நிகழ்ச்சிகள் காங்கிரசார் ஆட்சியில் சவ்சாதாரணமாகி வருகின்றன. முன்பு உடையார்பளையும் வேலாயுதம் – அண்மையில் மஜீது – இப்போது பாண்டியன்! இந்தக் கொடுமையை, நாம் எப்படித் தாங்கமுடியும்? அடியும், கத்தியும், அரிவாளும்தான் அரசியல் வாழ்வின் முட்டுக்கட்டைகள் என்றாவது, ஆட்சிப் பொறுப்பேற்றோர் அறிவித்து விடட்டும். தொடர்ந்து நம்மீது பாய்வோர். காங்கிரஸ் கட்சியினரைச் சார்ந்தோராகவே இருக்கின்றனர் சாவு- சாதாரணமான சங்கதியல்ல. உலகத்தில் வாழப்பிறந்த ஒருவனை, அவன் ஒரு அரசியல் கொள்கைக்காக உழைக்கிறார் என்பதற்காக, இந்த உலகத்திலிருந்து ஓட்டி விடுவது என்கிற முறையைக் கையாண்டால், நாடு காடாக எவ்வளவு நேரம் பிடிக்கும்? இந்தக் காட்டு முறையை வளர்ப்பது, மாபெரும் அரசியல் கட்சியென்று மார்தட்டப்பட்டு, அரசுபீடம் ஏறியிருக்கும் கட்சியென்றால், இது என்ன நாடா அல்லது புலியும் நரியும் வாழும் காட்டுக்குகையா என்று நமக்கு விளங்கவில்லை. பாண்டியன், போய்விட்டார்! அவரது பணி மக்கள் மன்றத்தில், எவ்வளவு தூரம் அவருக்குச் செல்வாக்கை வளர்த்திருக்கிறது என்பதை மறுநாள் நடைபெற்ற பிரேத ஊர்வலத்தில் கண்டோம். வண்ணையம்பதியே கண்ணீர் சிந்திற்று! நமது இயங்களைத் துடிக்கச் செய்துவிட்டு அருமை, வீரரின் ஆவி பிரிந்துவிட்டது. ஆனால், அவரது ஆவியை உடலிலிருந்து விரட்டிய அக்கிரமக்காரர்களை நோக்கி மக்கள் சீறுகிறார்கள் – ‘மாபாவிகள்‘ என்று தூற்றுகிறார்கள் மக்களின் சீற்றமும், நமது கண்ணீரும் நமது கண்மணியை நமக்குத் தந்துவிடாதே என்று எண்ணும்போதுதான், “அக்கிரமக்காரர்களே! என்ன காரியம் செய்தீர்கள்?“ என்று வேக உணர்ச்சி ஏற்படுகிறது.

எதிர்க்கட்சிக்காரர்களைக் காட்டு முறைகளால் ஒடுக்க வேண்டுமெனும் வெறி, கடந்த பொதுத் தேர்தலின் போதும், அண்மையில் நடைபெற்ற நகர சபைத்தேர்தலின் போதும், அந்தப் பகுதியில் அட்டகாசம் செய்திருக்கிறது – அதைக் குறிப்பிட்ட கட்சியினரே செய்துமிருக்கிறார்கள். அவ்வளவு நடைபெற்றிருந்தும் களைத்தெறியவில்லை, சர்க்கார். இதனால், “எதையும் செய்யலாம்“ என்று துணிந்து செய்யும் நிலை வளர்ந்து இன்று,நமது பாண்டியனைக் கொண்டு போய்விட்டது.

சில காலமாகவே, எதிர்க்கட்சியினரை ஒடுக்க, வெறித்தனத்தை நம்பி பலாத்காரமான காரியங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுவரும் தகவல்களைத் தந்து வந்துள்ளோம். நாம். பல இடங்களில் நமது தோழர்களே, தாக்குதலுக்கும் தடியடிக்கும் ஆளாகியிருக்கிறார்கள். பொதுத் தேர்தலில் காங்கிரஸ் முறியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட திகைப்பு, அந்த வட்டாரத்திதல் காட்டுமிராண்டித்தனத்தை மூட்டி விட்டிருக்கிறது.

இதற்குச் சாதகமாக, கட்சித் தலைவர்களின் நடவடிக்கையும் அமைந்துவிட்டது. தேர்தலில் தோல்விகண்டு, மைனாரடியாகி விட்ட காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்தைக் கொலை செய்து, ஆளத் தொடங்கிற்று. இது, காங்கிரசாருக்கு நெஞ்சுத் துணிவைத் தந்துவிட்டது – நமது சர்க்கார் இருக்கிறது. எனவே யாரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு பிறந்துவிட்டது. இது நாட்டை நாசத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்.

காட்டு முறையின் மூலம், உயிர்களைக் கொத்துவதும், அதனால் அரசியல் எதிர்ப்பைத் தீர்த்துக் கொள்வதும், அதற்குச் சாதகமாக ஆட்சி அதிகாரப் போர்வையில் மறைய முயல்வதும், வளர்வது ஆபத்து – மிக ஆபத்து.

இந்த ஆபத்துக்கு, அஸ்திவாரம் எழுப்பும் கும்பல், ‘அகிம்மை‘யின் பேரைச் சொல்லித் திரிவோரிடமே அதிகரிக்கிறது என்பதைக் கண்டும், காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் சர்க்காரும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது கவலைப்பட வேண்டியக் காரியமாகும்.

நீதி நிலைநாட்ட வேண்டும் – சட்ட குனிந்து கொடுக்கக் கூடாது சந்து பொந்துகளைக் கொண்டு குற்றம் புரிவோர், தப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்படவிடக்கூடாது. பொது வாழ்வு, பொறுப்பும் கண்ணியமும் நிரம்பிய புனிதத் தன்மையுடையது என்று நிலைநாட்டப்பட வேண்டும். இந்த அரசியல் கண்ணியத்தைக் கூட, காந்தியாரைப் பலிகொடுத்த, காங்கிரஸ் கட்சியினர் உணரவில்லை யென்றால், பிறகு கல்லறைகள்தான், கேலி எழுப்பும்!

ஆட்சி அதிகாரம் இருக்கிறதெனும் எண்ணத்தால், அடியாட்கள் கூட்டமாக, காங்கிரஸ் கட்சி, வளர்வது எத்தனை நாட்களுக்குத்தான் நீடிக்க முடியும். கத்தியும் கம்பும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வஸ்துக்கள்தானே? – இதையும் மறந்துவிட்டு, மதோன்மதத்த நிலையிலேயே, ஆளும் கட்சி செல்கிறதென்றால், விளைவு விபரீதமாகத்தான் ஆகும்.

ஒரு உயிர்! அதுவும் மக்களிடையே பணியாற்றிய உயிர்! - அதனைக் கத்தி கொண்டு பிரித்துவிட்டனர். எண்ணினாலே, இதயம் குமுறுகிறது! பாண்டியன், எத்தகைய சீயம்? அவரை இருட்டுள்ளம் கொண்ட எத்தர்கள், பிரித்து விட்டனரே நம்மைவிட்டு! இந்தக் கோரச் சம்பவங்கண்டு, உளங்கலங்கும். நண்பர்களுக்கெல்லாம் நாம் எவ்விதத் தேறுதலும் கூறுவதற்கு இயலவில்லை! கண்ணீர், எழுத்துக்களை மறைக்கிறது. தனது இரத்தத்தால், நமது இதயங்களிலும், கழகக் கொடியிலும் செந்நிறத்தைத்தடவி விட்டார், தோழர் பாண்டியன். அத்தகைய அருந்தகை வீரரை இழந்த பாண்டியனின் குடும்பத்தினருக்கும் – உற்றார் உறவினருக்கும், நமது மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாண்டியனின் படுகொலை கேட்டு பதறித் துடிக்கும் இயக்கத் தோழர்களை, பணிவன்போடு வேண்டிக் கொள்கிறோம், மனமுடைவதோ, ஆத்திரமடைவதோ வேண்டாம்! வேண்டாம்! என்று.

அரசியலில் நம் உயிரைக் குடிக்க எத்தனிக்கும், பாசிச வெறியர்களின், அரசியல் வாழ்வை, நமது அமைதியும் கண்ணியமும் சுக்கு நூறாக்கிவிடும் – ஐயம் வேண்டாம்!

மறைந்த வீரர் பாண்டியனின் படுகொலையைக் கண்டித்தும், அவரது சேவையை விளக்கியும், நீதி கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றுமாறு கிளைக்கழகத்தினரை வேண்டிக் கொள்கிறோம். கொள்கைக்காக வாழ்ந்து, கொள்கைக்காக உயிரையும் இழந்த, அந்த அருமை வீரர் ஆற்றிய தொண்டுப்பாதையில், அவர் சிந்திய இரத்தத்தை நினைவில் கொண்டு, நாம் சென்று கொண்டிருப்போம்! வாழ்க பாண்டியன் நாமம்! ஒழிக அரசியல் வெறி!

திராவிட நாடு – 9-11-52