அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“பஞ்சாபி – சுபா“

இந்து மதத்தின் போக்கு பிடிக்காததால் உண்டானவைகளிலே ஒன்ற, சீக்கிய மதமாகும்.

“ஆண்டவன் எங்கும் நிறைந்தவர்! ஒருவராய் இருப்பவர்!“ எனும் கொள்கை கொண்டது.

“காக்க ஒருத்தன், ஆக்க ஒருத்தன், அழிக்க ஒருத்தன், அக்கினிக்கு ஒரு கடவுள், காற்றுக்கு ஒரு தெய்வம் – என்று, ஏராளமான தெய்வங்களைச் சிருஷ்டித்து, வணங்குவது இந்து மதமாகும்.

அதனால், ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்!‘ எனும் கோட்பாட்டுக்கு, இன்று மட்டுமல்ல, எப்போதுமே பார்ப்பனீயம் தடைக்கல்லாயிருந்து வந்திருக்கிறது.

அதனாலேயே, புத்தமதம் விரட்டி ஓட்டப்பட்டது – ஜைனமதம் அழிக்கப்பட்டது. இந்தக் காரியத்தை, அந்தக் காலத்தில் பார்ப்பனிய மதத் தலைவர்கள் செய்தனர்.

அந்த மனோபாவம் இன்னும், ‘உயர்சாதி‘யினரிடம் குறையாதிருக்கும் பண்பை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம்.

இதோ, ஒரு சான்று! இங்கல்ல, வடநாட்டில்!!

பஞ்சாபில் வாழும் சீக்கிய மக்கள் அகாலிதளம் என்றோர் இயக்கம் கண்டு, தங்களுக்கோர் தனி நாடு வேண்டுமென்று முழக்கமிட்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற ஸ்தல ஸ்தாபனத் தேர்தலில் அகாலிதளம் பெற்ற பெருமிதமான வெற்றியைக் காட்டி, தங்கள் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவிருக்கிறது, அதனால் தமக்கோர் தனிநாடு தேவையென முழக்கம் எழுப்புகிறார்கள். அப்படிப் பெறவிருக்கும் நாட்டுக்கு. “பஞ்சாபி சுபா“ என்று பெயரிடுவதென முடிவு செய்திருக்கிறார்கள்.

பஞ்சாபி சுபா! - இந்தப் பெயரைக் கேட்டதும் தண்டு தூக்கி, தோள் தட்டக் கிளம்பியிருக்கின்றனராம். ‘ஜனசங்கம்‘ எனும் போர்வையில் மறைந்துள்ள இந்து வெறியர்கள்.

அண்மையில் மாநாடு கூட்டி, சீக்கியர்களை ஒரு கை பார்த்துவிடப் போகிறோம், என எச்சரித்துள்ளனர், லூதியானா என்னுமிடத்தில்.

வகுப்புவாதிகள்! குறுகிய மதியினர்!! - என்று நம்மீது வீசப்படும், அதே குற்றச்சாட்டுகள், அவர்கள்மீதும் வீசப்பட்டிருக்கின்றன, ஜனசங்கத் தலைவர் ஆச்சார்ய ராம்தேவ் என்பவரால்.

தனிநாடு கோரிக்கை! - ஜனசங்கத்தினருக்கு, உண்டாக்குகிறது எரிச்சலை, சீக்கியர்களா,கேட்பது தனிநாடு! - என்று சீறுகிறார்களாம். இவர்கள் – மதந்தாங்கிள்.

இங்குள்ள வைதீகர்களும், நமது இனக்குரல் கேட்டு, இதே எரிச்சலைத்தானே கொள்ளுகின்றனர்! ஏசுகின்றனர்!!

பஞ்சாபில், ஜனசங்க எதிர்ப்ப! இங்கே, வைதீகர்கள் எதிர்ப்பு!

அதனால்தான், அண்மையில் ஜனசங்கத்தை உண்டாக்கும் இந்துமகா சபையின் தலைவர்களை அழைத்து, இங்குள்ள மயிலையும் மாம்பலமும், மாலைகள் சூட்டியிருக்கிறது.

மதபோகிகள், தமது சுரண்டலை எதிர்க்கும் ஒளிகள் புறப்பட்டால், ஒன்றுகூடி அழிப்பது – அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும், கதை.

அதனைத்தான் லூதியான காட்சி நினைவூட்டுகிறது.

திராவிட நாடு – 9-1-55