அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பஞ்சமாம் பஞ்சம்!

பஞ்சம்! பசி! பட்டினி! என்று கூவுகிறார்கள்! யாருக்குப் பஞ்சம்? யார் பசியுடன் போராடு கின்றனர்? எங்கே தாண்டவமாடுகிறது, பட்டினி.

இதோ, பட்டி! பாருங்கள், இந்தப் பஞ்ச காலம், பஞ்சகச்சத்தைக் கண்டு பயந்தோடுவதை!

பிப்ரவரி 2- மன்னார்குடியில் மாத்வாவமி நடைபெற்றது, பிராமண சந்தர்ப்பணை நடைபெற்றது.

ஜனவரி 31- திருச்சி மலைக் கோயிலில் கும்பாபிஷேகம், பசுமடத்தில் பொது ஜன உதவியால் சுமார் 2000 பிராமணர்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி-6 திருவனந்தபுரம் மகாராஜாவின் தந்தையின் சஷ்டியப்தபூர்த்தியை முன்னிட்டுப் பிராமணர்களுக்கு (வைதீக முறைப்படி) தானம் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 4- பெரிகுளம், பாலசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐந்து நாட்களாக, ஆயிரக்கணக்கான பிராமணர் களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரபரி 7-ந் தேதி காஞ்சிபுரத்தில், சங்கராச்சாரியார் நடத்திய கும்பாபிஷேகத்தை அனுசரித்துப் பிராமணர்களுக்குப் போஜனம் அளிக்கப்பட்டது.

ஜனவரி 30-ந் தேதி தஞ்சை ஜில்லா கலியாணபுரத்தில், லட்சார்ச்சனை நடைபெற்றது. அதை அனுசரித்து பிராமணர்களுக்கு (நதியாராதனை) போஜனம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 5-ந் தேதி மாலை தியாகராய நகரில் இராமாயண உபன்யாசம் செய்து வந்த சாஸ்திரிகளுக்குப் பணமுடிப்பு அளிக்கப்பட்டது.

பஞ்சமும், பட்டினியும் இந்தப் `பரப் பிரம்ம சொரூபிகளைத்’ தீண்டிற்றா? திக்கற்ற தமிழர்களே! இந்தப் பட்டி புகட்டும் பாடம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்.

(திராவிட நாடு - 13-2-1944)