அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாராட்டுகிறோம்! - வரவேற்கவில்லை
ஈறாயிரம் கல் தொலைவுக்கு அப்பாலுள்ள ஆங்கிலேயன் இங்கு வந்து நம்மை அடக்கி ஆள்கிறான்! அநியாய வரி போட்டு ஆள்ளிக்கொண்டு போகிறான் நம் பணத்தை யெல்லாம்! கொள்ளையடிக்கிறான்! கொடுங்கோலாட்சி புரிகிறான்! பேச்சுரிமை இல்லை! எழுத்துரிமை இல்லை! எடுத்ததற்கெல்லாம் அடக்குமுறை போடுகிறான்! ஏன் அன்று கேட்பாரில்லை! ஊப்புக்கும் வரி! எரிலுள்ள பொருள்கள் அனைத்திற்குமே வரி! ஒண்டவந்த பிடாரி ஊரை ஆள்வதா? ஏவரேனும் ஒருவருக்கு அடிமைப்பட்டுத் தான் வாழவேண்டுமென்று கூறும் கூட்டத்தாரின் வார்சுகளா? நம்முடைய நாட்டை நாம்தானே ஆண்டுகொண்டிருந்தோம். ஏன் இன்று அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்? நம்மை ஆள்வது? தான் பிழைக்கலாம் என்று வந்தவன், நம்முடைய பிழைப்பிலேயே மண்ணைப்போட்டு விட்டானே! பிச்சை எடுக்க வந்தவனிடம் இச்சகம் பேசி வாழ்வதா? பெருமைக்குரியதா இது? எந்த நாடாவது இந்த இழிநிலை அடைந்த துண்டா? நேர்மையா? இனியும் நாம் வாளா இருப்பதா? நம்முடைய நாடு நமதென்பதை உணர்ந்த பின்னரும் - உணரும் நிலைமையை அடைந்த பின்னரும் நாம் அடிமை வாழ்வு வாழ்வதா? ஆடுக்குமா இது?
****

வெள்ளையனை இந்நாட்டை விட்டு விரட்டுவதற்காக நம்நாட்டுத் தலைவர்களால் பேசப்பட்டது இவ்வாறெல்லாம். இவற்றையெல்லாம் கேட்ட பொதுமக்களும் தங்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் தாராளமாக வழங்கி நாட்டை அடிமைத் தளையினின்றும் விடுவிக்க உதவிபுரிந்தனர். நாடு விடுதலையடைந்துவிட்டது! சுயராச்சியம் நடைபெறுகிறது! ஆனால்...!

அந்நியன் போய்விட்டான், ஆனால் அவன் தன்னுடைய சுயநலத்துக்காக உண்டாக்கிக் கையாண்ட அடக்குமுறைப் பாணங்கள் இன்னும் போகவில்லையே - போகும்படி செய்யவில்லையே! இதுதானா மக்களாட்சி ஏ;னறு திராவிடர் கழகத்தான் கேட்கிறான். அந்நியர் ஆட்சியின்மீது மக்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நம்மவர் ஆட்சியின்மீதும் சுமத்தப்படுமானால், அதற்கு நல்லாட்சி என்று பெயரா என்பதாகத் திராவிடர் கழகத்தான் கேட்கிறான். அந்நியன் ஆட்சியில் இருந்தகேட்டை ஒழிக்காவிட்டாலும், புதியகேடுகளை யாவது நாடாளவந்த “நம்மவர்கள்” உற்பத்தி செய்யாமல் இருக்கக் கூடாதா என்று திராவிடர் கழகத்தான் கேட்கிறான். பாலாற்றைக் காரிவரியாக்காவிட்டாலும், பாலாற்றை மேலும் பாலைவனமாக்கும் திட்டத்தையாவது வகுக்காமல் இருக்கக்கூடாதா என்று கேட்கிறான். இருக்கிற வரியை எடுக்காவிட்டாலும் புது வரி போடும் “புண்ய காரியத்தை” யாவது செய்யாமல் இருக்கக்கூடாதா என்று கேட்கிறான். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை நீக்க முடியாவிட்டாலும், பணக்காரனையே மேலும் பணக்காரனாக்கும் பாதகத்தையாவது செய்யாமல் இருக்கக்கூடாதா என்று கேட்கிறான். பாடுபடுபவன் ஒருவன், பலன் அனுபவிப்பவன் இன்னொருவன் என்ற பாதகத்தை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மதச் சார்ற்ற ஆட்சியை நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் சர்க்கார், மழையில் “வருண ஜெபம்” செய்யும்படி கட்டளையிட்டு, மக்களை ஏமாற்றாமலாவது இருக்கக்கூடாதா என்று திராவிடர் கழகத்தான் கேட்கிறான்.

விஞ்ஞானம் நாளுக்குநாள் வளர்ச்சி யடைந்து வருகிறது. இயற்கை அமைப்புகளை எல்லாம் மனிதன் தன் வசப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுத் தன் விருப்பப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறான். வருண ஜெபத்தால் மழை பெய்யாது என்பதனை இன்றைய விஞ்ஞானி நிரூபித்துக் காட்டிவிட்டான். இந்த நிலையிலும் மந்திரம் ஓதி மழையை வரவழைக்கும் மாயாஜாலவித்தையை ஒரு மதச்சார்பற்ற சர்க்கார் மேற்கொள்ளலாமா என்று கேட்கிறான். மந்திரம் ஓதினாயே! மழை பெய்ததா? வயல் விளைந்ததா? வறுமை நீங்கிற்றா என்று கேட்கிறான். நாடு சுதந்தரம் பெற்றுவிட்டதென்ற போதிலும், நாட்டில் வாழும் மக்கள் இன்னும் நல்லாட்சி பெறவில்லை என்று திராவிடர் கழகத்தார் கூறுகின்றனர். இந்த உண்மை இது வரை மறுக்கப்படும் மறைக்கப்பட்டும் வந்திருக்கிறது. காரணம், இந்த அரிய உண்மையை - மக்கள் அறியும் வாய்ப்பை இளவந்தார்களும், அவர்கள் எதைச் செய்தாலும் அது நல்லதோ கெட்டதோ எதுவாயினும் அவர்களை ஆதரிப்பதே அறிவுடைமை என்ற அறியாத்தனத்தில் மூழ்கிக்கிடக்கும் பத்திரிகைகளும் மறைத்துவிட்டன.

பெற்ற சுதந்திரத்தால் நம் அனைவருக்கும் பொதுவாக இருந்த ஒரு விரோதி ஒழிந்தானே என்பதனால் மகிழ்ச்சியடைந்தோமேயன்றி, நம்முடைய மனக்குறைகள் தீரும் வகையில் நாம் நல்லாட்சி இன்னும் பெறவில்லை என்று கூறினோம். பலவகையில் பிரிந்து வாழும் பண்போடுள்ள மக்களைக் கொண்ட இவ்வுபகண்டத்தை ஒன்றாக்கிக்காட்டி உரிமை வழங்கவேண்டுமென்று கேட்டால், அது ஒருபோதும் கைகூடாதென்று காரணகாரியங்களைக் காட்டி விளக்கினோம் - வீண்வம்பு செய்வதாக ஐசப்பட்டோம்.

வெள்ளையன், தன் கண்களுக்கு விளக்கமாகத் தெரிந்த இந்து - முஸ்லீம் பிளவைக் காட்டிச் சுதந்ரம் வழங்க மறுத்தான். அந்த மறுப்புரைக்கு மாற்று மருந்து காணமுடியா தென்பதை உண்மையாகவே உணர்ந்த காந்தியார், நிலைமை நியாமென்பதை ஒப்புக்கொண்டு, இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனியாகச் சுதந்தரம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தை, ஆங்கில அரசாங்கம், ஏற்கெனவே தனக்கு ஏற்பட்டுள்ள ஏகாதிபத்ய வீழ்ச்சியையும், அதற்கேற்பத் தன்னுடைய பிடிகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டுமென்பதையும் உணர்ந்து பயன்படுத்திக் கொண்டது. காலமாறுதல், ஏகாதிபத்ய ஏடுபிடி ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி போட்டு வருவதை அவர்கள் உணரும் நிலை ஏற்பட்டதும், இங்குள்ளவர்களின் விடுதலைக் கிளர்ச்சி வலுத்துக் கொண்டிருந்ததும் ஒன்று சேர்ந்து அங்கிலேயரைத் திக்குமுக்காடும்படி செய்யவே அவர்கள் வேறுவழியின்றி, நாட்டுக்கு விடுதலையளித்து விட்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால், இந்நாட்டிலுள்ள ஆரிய திராவிடப் பிளவையும், அதற்குரிய முக்கியமான காரணங்களையும் ஆங்கிலேயரால் உணர முடியவில்லை உணர முடியும்படி செய்யப்பட வில்லை - செய்யப்பட்ட போதிலும், அது அவர்களுக்குத் தெரியவிடாமல் மறைக்கப்பட்டது. எனவே தான், இந்து முஸ்லீம் பிளவை உணர்ந்து அதற்கேற்ப நாட்டைப் பிரித்துக் கொடுக்குமளவுக்கு விஷயங்களை உணர்ந்த ஆங்கில அரசாங்கத்தால் ஆரிய - திராவிடப் பிளவையும் அதற்கேற்ப அவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தையும் செய்ய முடியாமல் போய்விட்டது. என்ற போதிலும், திராவிடர்களாகிய நாம் நம்முடைய கொள்கைகளையும், நமக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும் நாட்டு மக்களுக்கும் இளவந்தாருக்கும் எடுத்துக்கூறாமல் இருந்து விடவில்லை - நம்முடைய பிரசாரம் வீண்போகும் என்ற பீதியையும் நாம் அடையவில்லை. சமுதாயத் துறையிலே ஆரியமும், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்யமும் நம்மை ஆட்டிப்படைக்கும் ஆலங்கோலங்களையெல்லாம் நடுவு நிலை திறம்பாது நின்று கூறிக்கொண்டுதான் வருகிறோம். ஆரியம் செய்து வரும் அட்டூழியங்கள் பலவற்றை இன்று இளவந்தார்களே உணர்ந்து ஆவற்றிற்குப் பரிகாரம் தேட முற்பட்டு விட்டனர். ஆனால், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்யம் செய்யும் அட்டூழியங்களை ஒழிக்கும் ஆண்மை இன்னும் நம்மாகாண அமைச்சர்களுக்கும் உண்டாகவில்லை என்ற போதிலும் வடநாடு தென்னாட்டின் மீது ஏகாதிபத்யம் செலுத்துகிறது என்பதை மட்டும் ஓரளவுக்கு உணர்ந்துகொண்டு வருகிறார்கள் நம் அமைச்சர்கள். பொறுப்புகள் வளரவளர மேலும் பல உண்மைகளை நம்மை இளவந்த அமைச்சர்கள் உணர்வார்கள் - உணரும் நிலை அவர்களுக்குத் தானாகவே உண்டாகும். அப்போதுதான் நாம் அவர்களுடைய கண்களில் படுவோம். திரும்பிப் பார்ப்பார்கள் ஓ! இவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களா? என்ற எண்ணம் பிறக்கும். உடனே கண்களை மூடிக் கொள்வார்கள். பிறகு அவர்களுடைய கருத்தில் திராவிடர் கழகம் இடம் பெற்று விடுகிறது கண்களை மூடலாம், ஆனால் கருத்தை மூடமுடியாதே! புண்ணைப் பார்க்கக் கூடாதென்று நினைப்பவன் கண்ணை மூடலாம் - புண் தெரியாது. ஆனால் புண்ணால் ஏற்படும் வலி எண்ணத்தில் கலந்து கருத்தைக் குடையுமே! அப்போது அவனால் கருத்தை மூட முடியுமா? அது போன்ற நிலை தான் இன்று காங்கிரஸ் அன்பர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவனா இவன்? இவனுடைய முகதரிசனமே கூடாது - கருப்புச் சட்டைக்காரனா? கடைக்கண்ணாலும் பார்க்கக் கூடாது என்று கதராடைக் காங்கிரஸ் அன்பர் கருதுகிறார். உடனே, திராவிடர் கழகத்தான் கூறினால் என்ன? அவனுடைய திட்டம் நாட்டுக்கு ஏற்றதாகத்தானே இருக்கிறது. கருப்புடை அணிந்திருந்தால் என்ன? நாவல் பழம் கூடக் கருப்பாகத்தான் இருக்கிறது, ஆனால் அதன் சுவை, இன்னும், ஒரு பழம் கூடச் சாப்பிடலாமா என்ற ஆவாவை அல்லவா உண்டாக்கி விடுகிறது. அதுபோலக் கருப்புடைக்குள் இருந்து கிளம்பும் கருத்தக்கள் காலப் போக்கிற்கும் நடைமுறைக்கும் ஏற்றவையாகத்தானே இருக்கின்றன - ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்ற எண்ணம் பிறக்கிறது. உடனே அந்த எண்ணம் வேறு வடிவில் வெளிவருகிறது. கருப்புடைக்குள் இருந்து கிளம்பிய கருத்துக்,க கதருடைக்குள் புகுந்து கனம் (மதிப்பு) பெற்று வெளிவருகிறது.
****

நாட்டை ஆள்வதற்குப் பணம் வேண்டும். ஆனால் பணம் இல்லை. இல்லையா? இருக்கிறது - ஆனால் இங்கே இல்லை - வேறொரு இடத்துக்குப் போய்விடுகிறது - நம்முடைய பணம் நம்முடைய நாட்டை ஆள்வதற்குப் பயன்படாமல் வேறு இடத்துக்குப் போய்விடுகிறது - இல்லை - போகும்படி செய்யப்படுகிறது - கட்டாயப்படுத்தி வாங்கப்படுகிது. மேலும் நாட்டின் செல்வம் ஒரு சிலரின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்முறையில் அமையும் ஆட்சிக்குப் பெயர் மக்களாட்சி அல்ல என்று கூறுகின்றோம், இவ்வாறெல்லாம் நாம் கூறுவதை, நமது காங்கிரஸ் அன்பர்கள், “இவர்கள் எங்களிடமுள்ள ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகக் கூறும் குற்றச்சாட்டுகள் - இவர்கள் கூறுவதை நம்பாதீர்கள்” என்றே பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்கள் - செய்கின்றார்கள். ஆனால், நாம் பலதடவை கூறியிருக்கிறோம், எங்களுயைட நோக்கம் அரசியலைக் கைப்பற்றுவது அல்ல என்று என்றாலும் எத்தர்கள் ஏமாளிகளிடம் இதுபோல் கூறிவருகின்றனர். காரணம், அவர்களுடைய அரசியல் நிர்வாகம் ஆலங்கோலமாக இருக்கிறது, அதைப் பொதுமக்கள் தெரிந்துவிட்டால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடும் என்ற அச்சமே, அவர்களை இவ்வாறெல்லாம் பேசும்படி செய்கிறது. திராவிடர் கழகத்தார் அரசியலைக் கைப்பற்றவே இல்லாததும் பொல்லாததும் கூறிக்காங்கிரஸ் சர்க்காரைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று பிரசாரம் செய்து, பொதுமக்கள் ஆதரிப்பார்கள் - தங்களைத் தவிர வேறு எந்தக் கட்சியிடமும் பற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நினைப்போடுதான் காங்கிரஸ் அன்பர்கள் இவ்விதம் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

“கடைத்தெருக்களிலும், மார்க்கெட்டுகளிலும், மூலை முடுக்குகளிலும் ஆட்சி நிர்வாகத்தின் லஞ்ச ஊழல்களைப் பற்றியே பேச்சாக இருந்து வருகிறது. இது மந்திரிகளின் காதுக்கு எட்டாமல் இருக்கலாம் ஏனென்றால் பொது மக்களோடு கலந்து பழக அவர்களுக்கு நேரமில்லை”

என்று டில்லியில் பட்ஜெட் கூட்டத்தின் போது 6-3-49ல் ஆச்சாரிய கிருபளானி பேசியிருக்கிறார். ஒரே உண்மையைக் காங்கிரஸ் காராகிய கிருபளானி போன்றோர் கூறினால், அது அவர்களுக்கும் உபதேசமாகவும், திராவிடர் கழகத்தாராகிய நாம் கூறினால், அது அரசியலைக் கைப்பற்றும் சூழ்ச்சியாகவும் தோன்றுகிறது காங்கிரஸ் அன்பர்களுக்கு! நாவற்பழம் கருப்பு, ஆகையால் அதனை நஞ்சாகவும், ஏட்டிப்பழம் பழுப்பு ஆகையால் அதனை ஆமிர்தமாகவும் கொள்வார் உண்டோ? கருப்புச் சட்டைக்காரன் கூறினால் என்ன? கதராடைக்காரன் கூறினால் என்ன? உண்மையை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!
****

நாம் பலகாலமாகவே கூறிவருகிறோம், வடநாடு வேறு - தென்னாடு வேறு, இரண்டையும் ஒன்றாக இணைத்து ஆட்சிப்புரியக் கூடாது என்று, பழக்க வழக்க கலாச்சாரங்கள் நமக்கும் வடநாட்டவருக்கும் வேறு என்பதால் மட்டுமல்ல நாம் இவ்விதம் கூறுவது, பொருளாதாரத் துறையில் நாம் வடநாடடவரால் சுரண்டப்படும் கொடுமை மாற வேண்டுமென்பதற்காகவுமே தான் நாம் அவர்களோடு இணைந்து வாழ முடியாது - வடாது என்று கூறுகிறோம். ஆங்கிலேயன் நம்மை ஆண்டபோது அவன் நம்முடைய செல்வத்தின் பெரும்பகுதியைக் கொள்ளையாடிக் கொண்டிருந் தார்கள். வெள்ளையன் விலகியபின் இப்போது இருவித கொள்ளையும் நடநாட்டுக்கே போய்ச் சேருகிறது. இதனை நாம் சொன்னால், நாம் காங்கிரசைக் கவிழ்ப்பதற்காகச் சொல்கிறோம் என்று கூக்குரலிடும் காங்கிரஸ் தோழர்களுக்குக் கூறுகிறோம். வடநாட்டின் பிடியில் இருந்து தென்னாடு விடுபடவேண்டுமென்று நாம் மட்டும் கூறவில்லை அன்பனே! உங்கள் காங்கிரசில் இருப்பவரே இவ்விதம் கூறுகிறார். இவ்வாண்டு பட்ஜெட்டைத் தயாரித்த நிதிமந்திரி தோழர் கோபால்ரெட்டி அவர்களே கூறுகிறார். வடநாட்டின் பிடியிலிருந்து தென்னாடு விடுபட்டாலன்றித் தென்னாடு பொருளாதாரத் துறையில் முன்னேற முடியாது என்ற கருத்துப்படப் பேசி இருக்கிறார்.

“இன்னும் இந்திய சர்க்கார் சட்டத்தின் கீழ்த்தான் நாம் இளப்படுகிறோம் என்பதை மறந்து விடலாகாது. அந்தச் சட்டத்தின் கீழ்தான் நம் சர்க்காரின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. நம்முடைய நிதி நிலைமையை ஆபிவிருத்திசெய்து கொள்ள இன்னின்ன வரிதான் நாம் விதித்துக் கொள்ளலாம் என்று இந்திய சர்க்கார் சட்டம் கூறுகிறது... புகையிலை வரியை இராசகோபாலாச்சாரியார் கொண்டு வந்தார். அதுவும் இப்போது மத்யசர்க்காருக்குப் போய்விடுகிறது, நமக்கு இவர்கள் நஷ்டஉடுதான் கொடுக்கிறார்கள்.”

என்று பேசியிருக்கிறார். ஆனால் தோழர் கோபால் ரெட்டி இவ்விதம் பேசியது, உண்மையை உள்ளபடியே கூறவேண்டுமென்பதற்காகப் பேசிய பேச்சல்ல வென்பதையும், பட்ஜெட்டில் துண்டு விழுவதால் அதனை உடுசெய்யப் புதுவரி போட்டாக வேண்டுமென்பதற்காகப் பூசி மெழுகப்பட்ட பேச்சுத்தான் என்பதையும் நாம் அறிவோம். என்ற போதிலும் உண்மை எந்தக்காரணத்தைக் கொண்டோ வெளிப்படுத்தப்பட்டு விட்டதென்பதை இனி எப்படி மூடி வைத்தாலும் மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதை, நம்மீது சாடி சொல்லும் சாய்ந்த மதியினரும், அதனைப் பொறுப்பற்ற முறையில் கேட்டுப் பொழுது போக்கும் பொது மக்களும் இதனை உணரவேண்டுமென்பதை எமது விருப்பமாகும்.

மத்திய சர்க்காரின் தலையீடு மாகாண சர்க்கார்களுக்கு இருக்கக் கூடாது - அதற்கு ஏற்றமருந் நாட்டுப் பிரிவினை ஒன்றுதான் என்று நாம் பலகாலமாகக் கூறிவந்த ஒரு மறுக்கமுடியாத உண்மையை நிதி மந்திரியார் ஒளிவு மறைவு இன்றி ஒப்புக் கொண்டாரே என்பதற்காக அவரை அந்த வகையில் நாம் பாராட்டுகின்றோமாயினும், மத்ய சர்க்கார் நம்முடைய பணத்தை எடுத்துக் கொண்டு போவதற்கே இன்னும் உடந்தையாக இருப்பதற்கறிகுறியாக மேலும் மேலும் புதுப்புது வரிகளைப் போட்டு ஏழைகளை வாட்டி வதைக்கும் கொடுமையை நாம் ஒருபோதும் வரவேற்கமாட்டோம்.

மத்ய சர்க்காரின் தலையீட்டால் மாகாண சர்க்காரின் செல்வம் சுரண்டப்படுகிறது என்பதை நிதிமந்திரி உண்மையாக ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் என்ன செய்திருக்கவேண்டும்? ஒரே வரியில் ராஜிநாமா எழுதிக் கொடுத்துவிட்டு விலகியிருக்க வேண்டும். அந்த ராஜிநாமாக் கடிதத்தில், மத்ய சர்க்கார் மாகாணா சர்க்காரின் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போவதால் மாகாண சர்க்கார் தன்னுடைய நிர்வாகத்தை நடத்த முடியவில்லை. இந்த நிலைமையில், மேலும் புதுப்புது வரிûளைப் போட்டுப் பொது மக்களைத் துன்புறுத்தும் துரோகத்தைச் செய்ய ஏன் மன சாட்சி இடந்தரவில்லை. எனவே என்னுடைய ராஜிநாமாவை ஏற்றுக்கொள்கவென்று தரவில்லை. எனவே என்னுடைய ராஜிநாமாவை ஏற்றுக்கொள்கவென்று முதலமைச்சர் ஓ.பி.இராமசாமி அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டு, டில்லிக்கு அதன் நகல் ஒன்றை அனுப்பிவிட்டு விலகி இருக்கவேண்டும். விலகிவில்லை! விலகும் சாடையைக் கூடக் காணவில்லை. என்ன இதன் மர்மம்?

காங்கிரஸ் திராவிடர்களைக் கேட்டுக் கொள்கிறோம். இதனைச் சிந்தியுங்கள் என்று! கைக்கு வரும் பணத்தையெல்லாம் வரியாக வாரிக் கொடுத்துவிட்டு வயிற்றைப் பிசைந்து கொண்டு நிற்கும் பொது மக்களைக் கேட்கிறோம் இது பற்றிச் சிறிது சிந்தியுங்கள் என்று!

(திராவிட நாடு 13.3.49)