அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பரிதாபம்!

பரிதாபத்தோடு கூறுகிறார்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் எவரும்.

அமெரிக்காவின் தூதர்கள் பல இடங்களையும் சுற்றிப் பார்வையிட்டுச் சென்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள் – பரிதாபத்தோடு.

சின்னஞ்சிறு சிறுநாடு ஜப்பான் கூறுகிறது – எமது உதவி வேண்டுமா என்று.

எங்கு போனாலும் எப்போது பார்த்தாலும், இந்தப் பரிதாபத்தைக் குறித்தே பேசுகிறார்கள் – இந்திய மந்திரிகளும் அவர்தம் தலைவர் பண்டித நேருவும்.

‘பெரியநாடு இது. ஆனால் பின் தங்கிக் கிடக்கிறது‘ என்று துவங்கி, ‘நாடு வளம்பெற, சிக்கல்கள்தீர, தொழில் வளர்ச்சி வேண்டும்‘ என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

அண்மையில் நடந்து முடிந்த மாஸ்கோ மாநாட்டிலும் ‘இந்தியாவுக்கு ஏராளமாக ஆலைகள் தேவை‘ என்பதாக, வால்சந்த் ஹீராசந்த் என்கிற பெரிய முதலாளி தெரிவித்திருக்கிறார் ரஷ்யாவும், இந்தக் கோரிக்கையைப் ‘பரிதாபத்தோடு‘ கவனித்ததாகப் பத்திரிகைகளில் பார்க்கிறோம்.

வளர்ந்துள்ள நாடுகள் அனைத்தும் ‘வறுமை‘யால் வாடும், இந்த உபகண்டத்தை,பரிதாபமாகவே பார்க்கின்றன.

இன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய தேவைகள் !1) உணவு !2) ஆலைகள் என்பதாக எல்லா அறிஞரும் கூறுகிறார்கள் – வலியுறுத்துகிறார்கள்.

உணவுப் பிரச்னை உடடினத் தேவை. தொழில் ஆலைகள், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் – ஏழ்மையைப் போக்கும்.

ஆலைகள் அவசியம்! - இதை மறுப்பார் இல்லை ஆலைகள் வளர்ந்தால்தான், வறுமை தொலையமுடியும் – வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய ஏதுவாகும். செல்வம் கொழிக்கும்.

இன்றைய பொருளாதார யுகமே, ஆலைகளின் உற்பத்தியில்தான் அமைந்து கிடக்கிறது ஆகவே, ஆலைகளுக்கு இவ்வளவு முக்கியத்தவம் தந்து பேசப்படுகிறது.

ஆலைகளின் தேவையை எவரும் மறுக்கார் – ‘கைராட்டைச்‘ சுற்றச் சொல்வோர்கூட எத்தனையோ ஆலைகளுக்கு அதிபதியாக இருப்போர்தாம், ஆலைகள், அவ்வளவு முக்கியமானவையாயிருக்கின்றன.

பொருளுற்பத்திகள் பரவுவது மட்டுமினறி, மனித வாழ்க்கைத் தரம் உயரவும், ஏழ்மை அகலவும், ஆலைகள் ஓடுவது அவசியமாகும்.

இத்தகைய ஆலைகள் இந்திய உபகண்டத்தில் பெருக வேண்டுமெனக் கூறப்படுகிறது – நாமும் ‘ஆம்!‘ என்றுதான் கூறுகிறோம், வலியுறுத்துகிறோம்.

ஆலைகள் பெருக வேண்டுமென்றால் – இந்திய உபகண்டமெங்கும் பலப்பல இடங்களில் புதிது புதிதான ‘மில்கள்‘ ஓடவேண்டும் என்பதாகும்.

இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு. விதவிதமான இயந்திரங்கள் இயங்க வேண்டும் – இந்த ஆசையை எவரும் மறுக்க முடியாது.

இப்போது இருப்பது! மிகமிகக் கொஞ்சம் உலகத்தார் கூற்றுப்படி இப்போது இருப்பது, போதாது –வெளிநாட்டினர் கூறுகிறார்கள் இவ்விதம். இப்போது இருப்பது, தேவையைப் பூர்த்தி செய்யாது – நமக்கே தெரிந்த இந்த உண்மை.

இப்போது இருப்பது! இதை சிறிது நாம் சிந்திக்க வேண்டும். இப்போது என்று கூறப்படுவதைப் பற்றியல்ல, இப்போது இருப்பது எங்கெங்கே எப்படியெப்படி இருக்கிறது என்பதைப்பற்றி.

இந்திய உபகண்டத்தில் ஆலைகளே இல்லையென்று கூறிடமுடியாது. இருக்கிறது! அவை எப்படி, எங்கே இருக்கின்றன.

தொழில் வளர்ச்சியே துரைத்தனத்தில் முதுகெலும்பு ஒரு ‘மில்‘ ஏற்பட்டால், அந்த வட்டாதரத்தில் வேலைத் திண்டாட்டம் நீங்கும்! ஏழ்மை ஒழியும்! எல்லோரும் நலம் பெற வழி கிடைக்கும்.

இந்த நிலை நாடெங்கும் இல்லை – எனினும் ஒருசில இடங்களிலே மட்டுமே இருக்கிறது. ஆலைகள் அங்கு மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன – அந்த ஆலைகள் தயாரிக்கும் பொருள்களை நம்பியே முப்பதுகோடி மக்களும் இருக்க வேண்டியிருக்கிறது.

இந்திய உபகண்டம் மிகமிகப் பெரியது – அங்கே, ஒரு சில இடங்களில் மட்டுமே “ஆலை வளர்ச்சி“ – உலகத்தோடு ஒப்பிடும் போது அதிகமாக இல்லையென்றாலும் மற்றப் பகுதிகளை வைத்துப் பார்க்கும்போது அதிகமாக இருக்கிறது.

இப்போது இருக்கும் ஆலைகளில் அதிகம் இருக்கும் பிரதேசம் எது? கூசாமல்பதில் கூறமுடியும், “வடக்கு“ என்று ‘துவேஷி‘ என்று பாய்வோருள்பட எவரும் இதை மறுக்க முடியாது தென்னாட்டைவிட வடநாடு தொழிலுற்பத்தியில் சிறந்து விளங்குகிறத – வடநாடு ‘பணத்தோட்டம்‘! தென்னாடு பிணக்காடு!

இந்த உண்மையை நாம் சுட்டிக்காட்டும்போது, தேசீய நண்பர்கள் சீறத் தவறுதில்லை. போபிக்க மறப்பதில்லை.

அனந்தராமகிருஷ்ணன் சென்னை நகரத்தின் ‘ஷரீப்‘ சிறந்த தொழிலறிஞர் என்ற ‘அந்த‘ வட்டாரத்தின் அர்ச்சனைக்குப் பிரியமானவர் அவர் சொல்கிறார்

“கடந்த கால் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி சில இடங்களில் மட்டுமே குவிந்தது. தென்னாட்டைவிடப் பம்பாய் கல்கத்தா போன்ற இடங்களே வளர்ந்திருக்கின்றன.“

சில இடத்தில் மட்டும் குவிந்தது! சொல்கிறார் அவர். “வேற்றுமைகளில்லாமல் எல்லா இடங்களிலும் சரிசமமாக தொழில் வளர்ச்சியிருந்தால் தென்னிந்தியா தொல்லைப்பட வேண்டியதே இல்லை. ஏனெனில் வேலையில்லாத திண்டாட்டத்தால் தெற்கிலிருந்கும் ஏராளமான இளைஞஙர்கள் வேலைதேடி வெளியில் செல்லுமாறு ஏற்படுகிறது“ இவ்விதம், பேசியிருக்கிறார். சென்னையில் ஏப்ரல் 13ந் தேதியன்று – இந்த வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தபோது, ‘இதென்னடா! நாம் பேசுவது திராவிட நாடு கேட்போர் பேசுவது போலிருக்கிறதே‘ என்ற சந்தேகம், அவருக்கே வந்துவிட்டது போலும்.

“வடக்கும் தெற்குக்குமிடையே தாரத்மயம் இருக்க வேண்டுமென்று கூறுகிறவனல்ல நான்“ என்று, தெரிவித்து விட்டு, ‘தெற்கிலே சிறந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களது சக்தியெல்லாம் வீணாகிறது – இந்தியா முழுமையும் அலைகிறார்கள் வேலைதேடி இங்கே ஆலைகளிருந்தால் இப்படி ஏற்படுமா? நமது சக்தி வீணாகத்தான் நேருமா! உழைக்க மனிதர்கள் இருக்கிறார்கள் – ஆலைகளுக்கான வசதிகளும் உள்ளன. ஆனால், ஆலைகள்தான் இல்லை!“ என்பதாகக் கூறியிருக்கிறார்.

ஆலைகள் தெற்கே இல்லை – இந்த உண்மையை மறுக்க முடியாது. அதனால்தான், நாட்டையே பணத்தால் நிரப்பக்கூடிய டாடாவும், பிர்லாவும், டால்மியாவும் வடக்கே வளர்ந்து கிடக்கின்றனர் – சாதாரணமாக அல்ல, தென்னாட்டையே வளைக்கக்கூடிய அளவில்.

முதலையும் மீனும்! வடக்கும் தெற்கும்! - இந்த நிலைமைகளியிலிருந்து தெற்கு மீள்வது எவ்விதம் எப்படி, இங்கே, ஆலை வளர்ச்சி, ஏற்படுமாறு செய்வது , புதிதாக ஆலைகள் ஏற்படுத்துகிறோம் வெளி மூலதனத்தால் – ஆனால் அந்த ஆலைவக் வளர எத்தனை ஆண்டுகள் ஆகும்? வடநாட்டோடு போட்டியிட எவ்வளவு காலம் பிடிக்கும்! மீன் முதலையாவது எளிதா? முதலை மீனை விழுங்கி விடுமே, வளர்வதற்குள்!

இதை எண்ணும்போதுதான், நம்மை எதிர்பபோருக்குத் தெளிவு ஏற்பட முடியும்.

ஆலைகள் இங்கே புதிதாக அமைக்கப்பட வேண்டும் – வடக்கே அப்படியல்ல.

வடக்கே, இனி ஆலைகள் தோன்றுவது, லாபத்துக்கு மேல் லாபம் – வளர்ச்சிக்குமேல் வளர்ச்சி.

தெற்கே ஆலைகள் ஏற்படுவது – ஏற்பட்டால்? – புதிதாக.

புதிய ஆலை பழை ஆலையோட போட்டியிடுவது சாமான்யமா!

இந்த கேடு களையப்படவேண்டுமானால், ‘வடக்கிலிருந்து வரும் ஆலைப்பொருள்களைக் கட்டுப்படுத்தி தெற்கில் உற்பத்தியாகும் பொருள்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும்.

பாதுகாப்பு தரும் அதிகாரம் டில்லியின் கையிலிருக்கிறது. டில்லியின் மூலவர்களோ வடநாட்டுப் பண முதலையின் ‘பரிவர்த்தினர்‘ இந்நிலையில் இது சாத்யமாகவா ஆகும் ஆகாது! ஆகாது!! நாம், பிற்பட்ட பிரதேசமாகத்தான் – என்றும் இருக்க நேரிடும்.

உலகில் இந்தியா பிற்பட்ட நாடு – இந்தியாவில் தெற்கு பிற்பட்ட பிரதேசம்.

இந்த நிலையைப் போக்க நாம் கூறும் முடிவுதான், ‘திராவிடநாடு‘ நம்மை ஆள்வது – நமது தேவைகளை நாமே கவனித்துக் கொள்ளும் அதிகாரத்தோடு இருப்பது.

இதைக் கண்டிக்கின்றனரே, அவர்தம் சிந்தனை வேலை செய்தால் விளங்கும் – தென்னாட்டின் பரிதாபம். அவரும், விடுதலை பெறும் படையை நோக்கி, உடனே தயாராவார்.

திராவிட நாடு – 20-4-52