அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்

கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடக நூலை இயற்றிப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாடகம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அது நடிக்கப்பட்டும் வருகின்றது. இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் நடிக்கப்பட்டுப் பல ஆயிரக் கணக்கான மக்கள் அந்த நாடகத்தைப் பார்த்திருக்கின்றனர். பற்பல அதிகாரிகள், மந்திரிகள் முன்னிலையில் கூட அந்த நாடகம் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கில எகாதிபத்திய ஆட்சிக்காலத்திலும் நடிக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்திய பாதுகாப்பின் கீழ் மாகாண நிர்வாகத்தை நடத்திய ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலும் நடத்தப்பட்டது.

அப்போதெல்லாம், இந்த நாடகம் மக்களால் பார்க்கபடக் கூடாதென்பதற்குரிய காரணங்களை எந்த அதிகாரிகளும், பொதுமக்களும் கண்டுபிடிக்கவும் இல்லை தடை விதிக்கவும் இல்லை.

இப்போது இந்த நாடகத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. யார் தடை விதித்திருக்கின்றனர்? ஜனநாயக சர்க்கார். காங்கிரஸ் பாஷையில் சொல்லவேண்டுமானால், ஜனநாயக சர்க்கார் என்று சொல்லிக்கொள்ளும் சர்க்கார், ‘பொதுஜன’ சர்க்கார்தான் இந்த நாடகத்துக்குத் தடை விதித்துள்ளனர்.

பதினைந்து ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாத குற்றம் என்ன இந்த நாடகத்தில் இப்போது கண்டு பிடிக்கப்பட்டது? இன்று இந்த நாடகத்துக்குத் தடை விதித்த ‘ஜனநாயக’ சர்க்காராவது, “இந்த நாடகம் இன்னின்ன குற்றங்களைக் கொண்டதாக இருப்பதால் இதனைப் பொதுமக்கள் முன்னிலையில் நடிக்கக்கூடாது. எனவே இந்த நாடகத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று ஏதாவது விளக்கம் கூறிற்றா? இல்லை அரசாங்கம் ஏதாவதொன்றுக்குத் தடைவிதிக்கும்போது அதற்குரிய காரணங்களை நாட்டிலுள்ள பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் கூறாமல், ஓநாய் ஆட்டு“க்குட்டியைக் கொன்று தின்ற கதைபோல், அறிவு நூல்களை அடக்குமுறைக்கு இரையாக்குவது முறையா என்று கேட்டால், அப்படிக் கேட்பவர்களையும் அடக்குமுறைக்கு ஆளாக்கும் போக்கில் இன்றைய அரசாங்கம் கெடுபிடி செய்தால்கூட அதைக் கண்டு நாம் ஆச்சரியப்படமாட்டோம்.

ஏனென்றால், இன்றைய ஆட்சி முறையை, அடக்குமுறை ஒன்றின் துணைகொண்டு மட்டுமே நடத்தமுடியும் என்ற அளவிலும் அடிப்படையிலும் அமைந்திருப்பதை, நாடு விடுதலையடைந்த நாளிலிருந்து இன்றுவரை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

மக்களின் உரிமை என்று கருதப்படும் எதற்கும் தடை! எங்கும் தடை! எப்போதும் தடை! மொழி வளர்ச்சிக்குத்தடை! கலை வளர்ச்சிக்குத்தடை! அறிவு வளர்ச்சிக்குத் தடை! கூட்டத்திற்குத் தடை! மாநாட்டுக்குத் தடை! தெருவில் நடந்து செல்வதற்குக் கூடத்தடை! என்ற முறையிலேயே இன்றைய ‘பொதுமக்கள்’ சர்க்கார் நடந்துகொள்கின்றனர். இதற்குப் பேர்தான் ஜனநாயக சங்காராம்!
‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடகத்தைத் தடை செய்த சர்க்கார், அந்த நாடகத்தை நடத்தக்கூடாதென்று யார் சர்க்காரிடம் விண்ணப்பித்துக்கொண்டார்கள் என்பதையாவது கூறிற்றா? போகட்டும், குற்றஞ்சாட்டியவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கூறக்கூடாதென்று சர்“க்கார் கருதியதாகவே வைத்துக்கொள்வோம். குற்றஞ்சாட்டியவர்கள் என்னென்ன குற்றங்களை அந்த நாடகத்தில் கண்டுபிடித்துக் கூறினர் என்பதையாவது நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சர்க்கார் வெளியிட வேண்டாமா?

ஆங்கில ஆட்சிக் காலத்தில் கண்டு பிடிக்கப்படாத குற்றம் ஆச்சாரியார் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்படாத குற்றம். ஓமாந்தூரர் ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்ற ‘பெருமை’யை நிலைநாட்டிக்கொள்வதற்காகவாவது அத்தகைய குற்றச்சாட்டுகளைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? குற்றச்சாட்டுகளை அறியவும், அறிந்ததை வெளியிடவும் முடியாத இரங்கத்தக்க நிலையிலுள்ளவர்கள் ஆட்சிப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டு இருப்பானேன்?

பொதுமக்களின் நலனில் துளியேனும் இவர்களுக்கு கவலையோ கருத்தோ இருக்குமானால், பொதுமக்களுக்குத் தீமை உண்டாக்கக் கூடியதாக இந்த நாடகம் அமைந்திருப்பின், அத்தீமைகளைப் பொதுமக்கள் அறியும்படி செய்வதைவிட்டு, இரண்டே வரியில் தடை உத்தரவை வெளியிடுவது எந்த ஜனநாயக முறையைச் சேர்ந்ததென்று கேட்கிறோம்.

இன்றைய ஜனநாயகத்தின் இலட்சணம் எப்படி இருக்கிறதென்பதைப் பொதுமக்களுக்கு விளக்கவே 5.9.48 ல் காஞ்சி சீர்திருத்தநாடக சபையார், சர்ர்காரால் தடைசெய்யப்பட்ட ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடகத்தைத் திருவத்திபுரத்தில் நடத்தினர். நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே போலீசார் நடிகர்களைக் கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர். நாடகத்தை முன்நின்று நடத்திய காஞ்சிபுரம் தோழர் வெ.சம்பந்தன் அவர்களையும் மற்றும் பத்து நடிகர்களையும், நாடக அமைப்பாளர் தோழர் பூங்காவனம் அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்து நாட்கள் நான்காகியும் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. விசாரணை தொடங்கப்படாததற்குக் காரணம், என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை, எந்தச் செக்ஷனில் இந்த வழக்கை விசாரிப்பது என்ற முடிவுக்கு அதிகாரிகள் இன்னும் வரவில்லையோ என்னவோ, அல்லது விசாரணையின்போது, இந்த நாடகத்தைத் தடை செய்தது எதற்காக என்று கைது செய்யப்பட்டவர்கள் கேட்டால், அதற்கு என்ன விடை கூறுவது என்று அதிகாரிகள், தடை விதித்த சர்க்காரைக் கேட்டிருக்கலாம், சர்க்காரிடமிருந்து விளக்கம் கிடைத்த பின்னர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். ஆனால் நாடகத்திற்குத் தடைவிதித்தபோது அதற்குரிய காரணங்களைக் கூறாத சர்க்கார் இப்போது மட்டும் கூறும் என்றோ கூறுவதற்குரிய நிலையினைப் பெற்று இருக்கிறதென்றோ நாம் நம்பவில்லை. எனவே கைது செய்யப்பட்ட தோழர்களை ஏதாவதுதொரு செக்ஷன் முன்னிறுத்திச் சிறைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த நாடகத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீங்கும் வரையில் இந்த நாடகத்தை நடிப்பதன் மூலம் சிறைக்கூடத்தை நிரப்புவதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் தயாராக உள்ளனர் என்பதை மட்டும் சர்க்கார் மறந்துவிடக்கூடாது.

(திராவிடநாடு-12.9.48)