அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பாதிரியாகலாம், எவரும்! வேதியராக முடியாதே!

தந்தது தங்கம்-செய்ததோ விலங்கு

இந்தி நல்லெண்ண தூதுகோஷ்டியார் பேரறிஞர் அண்ணாவைக் கண்டு பேசியபோது நடந்த உரையாடலின் ஒரு பகுதி.

சதுர்வேதி-பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார். பிரச்சினை பற்றிய தங்கள் கருத்தென்ன?

சி.என்.ஏ-இங்குள்ள பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லிம் விஷயம் வேறு பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர்களெனக் கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும், பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கிருக்கிறது!

சதுர்வேதி:- இந்தப் பிரச்சினை தீர வழியில்லையா?

சி.என்.ஏ:- இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துரிடலாம்.

காஞ்ச:- அதெப்படி, அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்!

சி.என்.ஏ:- சகோதரி! அது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கிய பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ராகவதாஸ்:- திராவிட நாட்டில் பார்ப்பனர்கள் நிலையென்ன?

சி.என்.ஏ:- மனித உரிமையோடு வாழ்பவார்கள் அவர்களை விரட்டுவதல்ல எங்கள் நோக்கம்.

பாண்டே:- பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப்பிரச்சினையைத் தீர்க்கமுயலவில்லையா?

சி.என்.ஏ:- முயன்றிருந்தால் பிரச்சினை வெகுசீக்கிரம் முடிந்திருக்கும் உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 ல் கூட எங்களால், பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்கமுடியாது. அது மட்டுமல்ல. கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூஜை முதலாயகாரியங்களை ‘அவர்கள்’ மூலம்தான் செய்யவேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை! அதே போலத்தான். எங்கள் சடங்குகளும்.

காஞ்சன்:- ஐரோப்பாவில் கூட மதக் குருமார் இருக்கத்தான் இருக்கிறார்கள்!

சி.என்.ஏ:- அங்கு யாரும் மத குருவாக வரலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால், அப்துல் லதீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேத சாஸ்திரங்களைக் கற்றாலும் இங்கு நான் புரோகிதராக முடியாது!

காஞ்சனலதா: உண்மைதான். இதே நிலைதான் வடநாட்டிலும் இருக்கிறது.

சி.என்.ஏ:- அதை உணரவில்லை.

ராகவதாஸ்:- தனிப்பட்ட பிராமணர்கள் இந்த விஷயத்தில் சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லையா?

சி.என்.ஏ:- எடுத்துக்கொண்டார்கள். அது அவர்களுடனேயே நின்றுவிட்டது. உதாரணமாக ராஜகோபாலாச்சாரி போன்றவர்கள் தங்களைப் பொறுத்தவரையில் சீர்திருத்தவாதிகள் தான். ஆனால் அவர்கள் சீர்திருத்தம் அவர்களுடனேயே நின்றுவிட்டது. தங்களைச் சேர்ந்தோரையும் தங்களைப் போல ஆக்கத் தவறிவிட்டார்கள்.

சதுர்வேதி:- மனிதாபிமானம் நிறைந்தோர் இக்கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்க வேண்டு மென்பதை யாரும் மறுக்கமுடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினையா கேட்கவேண்டும்.

சி.என்.ஏ:- காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால் இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரித்திக் கொண்டனரே!

காந்தியார் ‘ராம் ராஜ்யமாக நாடு இருக்க வேண்டும் என்று நல்ல நாடாக அமையவேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னார். ஆனால் அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ, ‘ராம் ராஜ்யம்’ என்றால் இந்து ராஜ்யம் அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும். நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்!

சதுர்வேதி:- உண்மைதான்.

சி.என்.ஏ:- காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால் அதை தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்து கொண்டனர். அவரது சகாக்கள் ஆனால் இங்குள்ளோரோ அதைக்கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் பூட்டிடுகிறார்கள்!

சதுர்வேதி:- டெல்லியில் கூட ‘மதராசிகள்’ என்றால் வெறுப்பு இருக்கிறது. எல்லா உத்யோகங்களையும் அவர்களே பிடித்துக்கொண்டதாக அதிருப்தி உலவுகிறது. பிரிவினை ஏற்பட்டால் அவர்கள் பலாத்காரத்தோடு வெளியேற்றப்படலா மல்லவா?

சி.என்.ஏ:-அதை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் நாட்டுப் பிரிவினை என்றால் இவைகளையெல்லாம் எதிர்பார்க்கத்தானே வேண்டும்.

மேலும் தொடர்ந்து, பொதுச் செயலாளரிடம் கேள்விகள் கேட்ட போது, திராவிட நாட்டில் வெளிநாட்டாருக்குள்ள மனித உரிமைகள் குறித்து விளக்கினார். கடைசியில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினை எவ்வளவு சீக்கிரம் முடிவடைகிறதோ அவ்வளவு விரைவில் பிரிவினைக் கிளர்ச்சி அதிகமாகும் என்றும் ஏனெனில் இப்போது இந்த வேற்றுமை ஓயவேண்டுமென்பதில் பார்ப்பனத் தலைவர்களும் சிரத்தை காட்டி வருவதாகவும், “அது வளர்ந்தால் ‘இந்து’ போன்ற பத்திரிகைகள் எங்கள் கோரிக்கையை விளக்கலாம். நாங்கள் பாகிஸ்தானுக்கு முன்பிருந்தே! தனிநாடு கோருகிறோம். ஆனால் வட நாட்டிலிருக்கும் உங்களுக்கு வேண்டிய அளவுக்கு எங்கள் கோரிக்கை விளங்கியிருக்கவில்லை காரணம், ஆங்கிலப் பத்திரிகைகள் அவர்கள் வசமிருப்பதால் எடுத்துச் சொல்லவில்லை என்று விளக்கினார்.

கடைசியில் எல்லோரும் விடைபெற்றுக் கொள்ளுகையில், “தாங்கள், ஓய்வு கிடைக்கும் போது வடநாடு வரவேண்டும்” என்று அழைத்தனர். பொதுச் செயலாளர் தாம் முன்பே வந்திருப்பதாகவும் ஓய்வு கிடைக்கும் போது ‘அவசியம்’ வருவதாகவும் கூறினார்.

“நமது நட்பு வளரவேண்டும். நாங்கள் அரசியல் வாதிகள் அல்ல. சொந்த முறையில் கூறுகிறோம்” என்று விடைபெற்றுக் கொண்டு சென்றனர்.

(உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெற்றது)

(திராவிடநாடு 22.10.50)