அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பட்டம் - ஒரு பாடம்!

திருவாங்கூர் சமஸ்தான மக்களை அடக்க, டயர் போல் நடந்து கொண்டார் சர். சி.பி. இராமசாமி ஐயர்.

போலீசையும் ராணுவத்தையும் ஏவி மனித வேட்டை ஆடினார்.

அதிகாரிகள் அவருடைய ஹிட்லர் ஆட்சிக்கு அரணாக விளங்கி, காடுமேல், இவர் ஆளும் நாட்டை விட என்று மக்கள் கதறும் நிலையை உண்டாக்கினார்.

அவருடைய அடக்குமுறைக் கொடு மைக்கு ஆளான போதிலும், உரிமை உணர்ச்சியை உருக்குலைய விடாமல் பாதுகாத் தனர் உத்தமர் பலர்.

தடியடியும், குண்டு வீச்சும் தாக்கியபோது, சிறையில் கொடுமை பல நிகழ்ந்தபோது, உரிமைப் போரிட்ட உத்தமர்கள் என்ன விலை கொடுத்தேனும் விடுதலையைப் பெறுவது என்று சூல் உரைத்ததுடன், விடுதலை கிடைத்ததும், கொடுங்கோலாட்சி புரியும் சர். சி.பி.யின் புகழை நிலைநாட்டுவதற்காக பொதுமக்கள் பணத்தால் அமைக்கப்பட்ட அவருடைய சிலைகள், நினைவுக் குறிகள் ஆகியவற்றை அழித்தாக வேண்டும் என்று சூள் உரைத்தனர்.

மனித வேட்டையாடிடும் அதிகாரிகளை விசாரித்துத் தண்டனை தருவோம் என்று சூல் உரைத்தனர்.

சர். சி.பி.யின் பொருளாதாரத் திருவிளை யாடல்களான பல புதிய கம்பெனிகளின் யோக்யதைகளை விசாரணை செய்து அம்பலப் படுத்துவோம் என்றும் கூறினார். பொதுவாகவே சர்.சி.பி.யின் நிர்வாகத்தின் வேதனை தரும் விளைவுகளைப் பாரறியச் செய்தாக வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

உரிமைப் போர், வெற்றிகரமாக முடிந்தது, விடுதலை கிடைத்ததும், சி.பி. ஆட்சியும் தொலைந்தது. பட்டம் தாணுப் பிள்ளை ஆட்சிப் பீடம் ஏறினார். மகிழ்ச்சி பெற்றனர் மக்கள்- சூளுரைகளை நிறைவேற்ற வேண்டுமெனத் துடித்தனர். ஆனால், பட்டம் தாணுப் பிள்ளை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அவர், தமது ராஜிநாமாவை விளக்கி, `இந்து' இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் குறிப்புக் காணப்படுகிறது.

``முன்னாள் திவானுக்காக எழுப்பப்பட்ட சிலைகளையும், நினைவுக் குறிகளையும், நீக்கியாக வேண்டும், அவர் பெயர் சூட்டப் பட்டிருக்கும் அமைப்புகளுக்கெல்லாம் வேறு பெயரிட வேண்டும், என்று கூறினார்'' என்று பட்டம் தாணுப் பிள்ளை குறிப்பிடுகிறார்.

நீலன் சிலையை நீக்கியாக வேண்டும் என்ற உணர்ச்சி நமது பகுதியிலும் டயரின் ஞாபகக் குறிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பாஞ்சாலப் பகுதியிலும், இயற்கையாக எண்ணம் எழுந்தது போல, திருவாங்கூர் மக் களுக்கு சர்.சி.பி.யின் சிலைகளை நீக்கியாக வேண்டும் என்றஉணர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் அவரால் பட்ட அவதி அப்படிப்பட்டது.

பட்டம் தாணுப் பிள்ளை இதற்கு, சாக்குப் போக்குகள் கூறலானார். மட்டு மரியாதையைக் கவனிக்க வேண்டாமா என்று வாதாடலானர் ஏன் திருவாங்கூர் டயருக்காக, பட்டம் இவ்வளவு பரிவு காட்ட வேண்டும்?

திருவாங்கூரில், சர். சி.பி. திவானாக இருந்த போது, துவக்கப்பட்டு கம்பெனிகள் பற்றியும், பணச் செலவு வகைகள் பற்றியும் ஒரு பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். நான் பகிரங்க விசாரணை கூடாது என்று கூறினேன் என்று பட்டம் தாணுப் பிள்ளையே தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

ஏன், பகிரங்க விசாரணை நடத்தக் கூடாது? சர். சி.பி.யின் பத்தினித்தனத்துக்குப் பங்கம் நேரிடக் கூடாது என்ற எண்ணமா? ஏன் மாஜி திவானிடம் அவ்வளவு பரிவு? திருவாங்கூர் மக்கள், இதற்கான காரணங்களை அறிய ஆவல் கொள்ள மாட்டார்களா!

பட்டம் தாணுப் பிள்ளை தமது வீழ்ச்சிக்குக் காரணம், சமஸ்தானக் காங்கிரசிலே, முளைத்த வகுப்பு வாதச் சூழ்ச்சிதான் என்று கூறுகிறார்.

சமஸ்தானக் காங்கிரசிலே உள்ள கிறிஸ்த வர்களின் சூழ்ச்சியாலேயே, தன் வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறுகிறார்.

பொது எதிரியுடன் போராடிக் கொண்டி ருந்தபோது, இந்த வகுப்பு வாதம் தலை தூக்க வில்லை, ஆனால் அதிகாரம் கிடைத்த உடனே, வகுப்புவாதம் தலைவிரித்தாடி, என்னைக் கவிழ்த்துவிட்டது. புதிதாகப் பதவிக்கு வந்திருப்ப வரும், கிறிஸ்தவ வகுப்புவாதிகளின் பாட்டுக்கு ஏற்ற தாளம் போடாவிட்டால், அவருக்கும், எனக்கும் நேரிட்ட கதிதான் என்று எச்சரிக்கை யும் செய்கிறார்.

புதிய மந்திரிசபை அமைத்துள்ள தோழர் நாராயண பிள்ளையோ, வகுப்பு வாதமோ, சூழ்ச்சியோ, பட்டம் ராஜிநாமாவுக்குக் காரண மல்லவென்று, கூறுவதுடன், வகுப்புவாதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன் - பொது மக்கள் அந்தப் பீடையைக் களைந்தெறிய வேண்டும் என்று கூறுகிறார்.

வகுப்பு வாதம் கூடாது என்றும் அதை ஒழிப்பதே என் வேலை என்றும், வீழ்ந்தவரும் வீரமாகக் கூறுகிறார். வந்திருப்பவரும் வீர மாகவே பேசுகிறார். இந்நிலையில், வகுப்பு வாதத்தைப் பட்டம் தன் பட்டம் பறி போனதற்குக் காரணமாகக் கூறிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.

ஐக்யகேரளம் என்ற அமைப்பு விஷயத் தில் பட்டம் அவ்வளவாக அக்கறை காட்ட வில்லை. புதியவருக்கு, அந்தத் திட்டத்திலே, மிகுந்த பிரேமை- இது ஒரு காரணம் பட்டத்தின் வீழ்ச்சிக்கு என்று கூறுகிறார்கள். இதையும் பட்டம் தாணுப்பிள்ளை மறுக்கிறார். ஐக்கிய கேரளத் திட்டத்தை வானளாவப் புகழலாம். கூரை மீதேறிக் கூவலாம் அதுபற்றி, ஆனால் அதிலே உள்ள சிக்கல்கள், நடைமுறையில் இறங்கும் போது தெரியும் என்று அவர் கூறுகிறார்.

திருவாங்கூர் சமஸ்தானப் போராட்டத் திலே தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவரும், சமஸ்தானத்தால், நாடு கடத்தப்பட்டவருமான ராம கிருஷ்ணம் பிள்ளை என்பவரின் அஸ்தியை புதைத்து ஒரு நினைவுக்குறி எழுப்ப, திருவனந்த புரத்திலே, இரண்டு செண்டு, நிலம், இனாமாகத் தர வேண்டுமென்று, பட்டம் தாணுப் பிள்ளை- நிர்வாகத்திலிருக்கையில் கேட்டனராம்- அவர் ஏதேதோ காரணம் கூறி, நிலம் தர மறுத்தாராம்! தியாகிக்கு, புதைவிடம் தரக்கூட மறுத்தாரே இந்த பட்டம், இவரை எப்படி நாங்கள் இனி நம்புவது என்று கேட்டிருக்கிறார், ஓர் திருவாங்கூர்த் தோழர்.

ஆக, பட்டம் தாணுப் பிள்ளையின் வீழ்ச் சிக்காகக் கூறப்படும் காரணங்களிலே, குறிப்பிடத் தக்கதாகவும், முக்கியமானதாகவும் தெரிவது சர். சி.பி.யின் ஆட்சிக்காலத்தின் ஊழல்களையும், அக்ரமங்களையும் அம்பலப்படுத்த அவர் இணங்காததுதான், என்று எண்ணுகிறோம். பாபம் சி.பி. அங்கு இருக்கும்போதுதான், இடர் விளைவித்தார் என்றால் சமஸ்தானத்தை விட்டு வெளி ஏறிய பிறகும், அவரால் தொல்லை ஏற்படத்தான் செய்கிறது.

ஏழு மாதங்களுக்கு முன்பு பட்டம் நிர்வாகத் தலைவரானபோது எல்லோருக்கும் அவரிடம் பற்றும், மதிப்பும், நம்பிக்கையும் இருந்தது. அவரை வாழ்த்தி வரவேற்றனர். ஆனால், இப்போது, அவருடைய நிர்வாகம் ஊழலானது என்றும், அவரிடம் நம்பிக்கை இல்லை என்றும் மிகப் பெரும்பாலார், தெரிவித்து விட்டனர்! ஏழே மாதங்களிலே, பட்டம் தூக்கி வைக்கப்பட்டுக் கீழேயும் தள்ளப்பட்டுவிட்டார். இதற்கிடையே, அவர் போட்டாடிய புலி வேட மும் சாமான்யமல்ல! தமிழர் மீது போர் தொடுத்தார்- தொழிலாளர் மீது போர்- மாணவர் மீது போர்- இப்படிப் போர்க் கோலமே பூண்டிருந்தார்.

ஜனநாயக நாட்களில், பதவிக்கு வரும் போது, சக்திக்கு மீறிய பல திட்டங்களைச் சாதிக்கப் போவதாகக் கூறி, மக்களை மகிழச் செய்து அவர்களின் ஆசையைக் கிளறி ஆதரவு திரட்டுவது, ஆபத்தான காரியம். ஏனெனில், எழுச்சிக் குரலில் எதையெதைச் சாதிக்கப் போவதாக கூறுகிறார்களோ, அவைகளிலே பலவற்றைச் சாதிக்கும் வழிவகையே கிடைப்ப தில்லை. சொன்னபடி ஏன் செய்யவில்லை என்று கேட்டு..... பதவியை விட்டுவிடு என்று கூறிட, உடனே மக்கள், தயாராகிவிடுகின்றனர்.

பிரிட்டனில் ஒருமுறை மன்னராட்சி முறையை முறியடித்துவிட்டு ஆட்சித் தலைவ ரான கிராம்வெல் என்பவரைக் கண்டுகளித்து பெருந்திரளான மக்கள், ஆனந்த ஆரவாரம் செய்தனராம். கிராம்வெலின் நண்பர் சிலர், இந்தக் காட்சியைப் பூரிப்புடனும், பெருமையுடனும் அவருக்குக் காட்டி, ``தலைவரே! பார்த்தீர்களா, தங்களுக்குள்ள பொதஜன ஆதரவை'' என்று கூறினராம். குறுநகையுடன் கிராம்வெல், ``என்னைத் தண்டிக்கத் தீர்மானித்து, ஒரு சமயம் தூக்குக்குக் கொண்டு போனால், இதைவிடப் பெருங் கூட்டமாக இந்தப் பொதுஜனம் திரண்டு வரும்'' என்று கூறினாராம்.

பட்டம் தாணுப் பிள்ளையின் வீழ்ச்சி இந்த மகத்தான பாடத்தைக் காட்டுவதாக இருக்கிறது- கருத்துள்ளார் கவனிக்க வேண்டிய காட்சி, கதர் இருக்க, காந்தி அருள் இருக்க, எப்படி எம்மை வீழ்த்த முடியும் என்று வீம்பு பேசும் நமது ஆள்வந்தார்களுக்குக் கூறுகிறோம், பட்டத்தைப் பார்த்த்து பாடம் பெறுக என்று.

(திராவிட நாடு - 7.11.1948)