அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பழம், வீழ்ந்தது!

“உங்களுடைய இந்தக் காலம் நமது முன்னோர் காலம் போன்றதல்ல. உலகம் விரிந்து விட்டது. அறிவோ, பரந்து கிடக்கிறது. காடுவனங்களெல்லாம் நகரமாகி விட்டன. மலை, சமுத்திரம், ஆகாசங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வழியாகி விட்டன. பல தேசத்து உண்மை நியாயங்களெல்லாம் உங்கள் முன்னால் நடனமாடுகின்றன. அறிவின் ஒளியோ, ஊர்ந்தூர்ந்து வராமல் ஓடி வருகின்றது. அல்லிக்கொடியும், பவழக்கொடியும் மறைந்து பல தேசத்துப் பண்டிதர்கள் உண்மை விளக்கால் பரிசோதித்து எழுதின அறிவு நூல்களும் மொழி பெயர்ப்புகளும் உங்கள் உதிரத்தின்மேல் சிந்திக்கிடக்கின்றன....“

“உலகத்துப் பொதுக் கடவுளே நமது கடவுள், நமது பொதுக் கடவுளே உலகத்துக் கடவுள், சாணிக் கடவுள் காய்ந்தவுடன் எருவுக்குப் போவது போலவே, உலகப் பொதுக் கடவுள் தவிர மற்றெல்லாக் கடவுளும் நம்மை விட்டுப் போய்விடவேண்டும். அப்பொழுதுதான், உலகத்தார் ஆசனத்தில் நமக்கு இடம் கிடைக்கும் மும்மூர்த்திகளும், அவர்கள் பத்தினிகளும், அவர்கள் பிள்ளைகுட்டிகளும், தேவணகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் இவர்கள் அவதாரங்களும், காளி, காட்டேரி, கருப்பண்ணன், இருளன், முதலிய நமது ‘அநந்தம்‘ தெய்வங்களும்‘ அங்கே இடம் பெறாது.

“நம் நாட்டிலில்லாத கடவுளா பிற நாட்டிலிருக்கிறது? தில்லையில் நடராஜப் பிரபு ஆடினதுபோல வேறு எந்நாட்டிலாவது ஆடினாரா! ‘தில்லை வாழ் அந்தணர்களின் அடிமைக்கும் அடிமை நான்‘ என்று சிவபெருமான் எங்காவது சொன்னாரா? எல்லா ஏடுகளும் செல்லரித்து மண்மூடிப்போயும் இந்த ஒரு ஏட்டை சிவபெருமான் எவ்வளவோ, அதிக ஜாக்கிரதையாகக் காப்பாற்றி நம்பியாண்டார் நம்பி வந்ததும் அவர் கைக்குப் போய்ச் சேரும்படியாகச் செய்த கருணையை இது வரையிலும் யார் மறந்தார்? நம்பியோ, பிள்ளையாரின் மாணாக்கள் இந்தக் காலத்து பிள்ளையாரைப் போன்றதல்ல அந்தக் காலத்துப் பிள்ளையார்கள். எழுநூறு வருஷங்களுக்கு முன்னிருந்த பிள்ளையார்கள், வைத்த படையல்களையெல்லாம் வாரியுண்டு பாடம் சொல்லிக் கொடுக்கும்! தில்லை வாழ் அந்தணர்களும் நம்பியாண்டாரும்சுந்தரும் பார்ப்பனர்கள். அதனால்தானே ஆண்டவனும் பார்பபனராக வந்து முதல் அடி எடுத்துக் கொடுத்தாரோ?“

“மிருகங்களில் சிங்கமாகவும், பட்சிகளில் ராஜாளியாகவும், மீன்களில் கொம்பன் சுறாவாகவும், மனிதனின் ராஜாவாகவும், நஞ்சையில் மகதடியாகவும், புஞ்சையில் மலையடிகாயவும், தோட்டத்தில் ஊரடியாகவும் எல்லா வஸ்துக்களிலும் உயர்ந்ததாகவும், நானிருக்கிறேனென்று நமது கிருஷ்ணன் சொன்னார். சிவமென்றாலே, சந்தோஷமென்ற அர்த்தம் சந்தோஷமான சிவமென்னும் கடவுள் நிறைந்திருக்கும் நம் வீடுகளில் நாளை வரும் தீபாவளியில், கொரநாட்டுப் புடவைக்கும் பெங்களூர் பட்டுக்கும், சேலம் குண்டஞ்சு வேஷ்டிக்கும், குஷாதாஸ் கடை சீமை ஜவுளி தினுசுக்கும், ஏங்கி வருந்துவதை தள்ளிவிட்டாலும், ஒருபடி புழுங்கலரிசிக்கும் கால்படி உளுந்திற்கும், கஷ்டப்படுகிறானே மனிதன், என்ன காரணம்? எங்கே போயிற்று தெய்வாம்சம்?“

“என்னென்னமோ, எழுதுகின்றானய்யா!“

“பச்சை அட்டை ‘குடியரசு‘ பிரித்தால் போதும் விட மாட்டேனென்கிறான்.!

“விதண்டாவாதமென்று தள்ளிடவும் முடியவில்லையே விளக்கம் தந்து, விமர்சனம் செய்து, குற்றங்களையல்லவா, காட்டுகிறான்?“

“புராணம் – வேதாந்தம் – சித்தாந்தம் – எல்லாம், தலைகீழ்ப்பாடமாம்!“

அந்த ஆளின் பெயராகவன்றோ அழைக்கப்படுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் பவனிவரத் துவங்கிய காலத்திலே, ‘பச்சை அட்டைக் குடியரசு‘, பலரைத் திடுக்கிடச் செய்தது – மிரண்டனர் பக்தர்கள். கொதித்தனர், வேதாந்தம் சித்தாந்தம் அத்தனையும் கரைத்துக் குடித்ததாகக் கூறிக்கொண்ட மதத் தலைவர்கள், அவர்கள் யாவரும் ‘மருளுமளவுக்கு, ‘குடியரசில்‘ என்ன இருந்தது? புரோகிதப் புரட்டு! பார்ப்பனச் சுரண்டல்! அக்கிரகாரத்தின் அக்கிரமம்! அய்யரின் மோசடி! என்கிற தீப்பொறி பறக்கும் தலைப்புகள் மட்டுமா? அல்ல! அல்ல! இத்தனையும் விளக்கும், எழுத்துக்கள், அங்கே இருந்தன. அவைகளைப் படிக்கம் சு.ம.தோழர்கள் தென்றலின் சோலையில், தேன் குடிப்பது போல ஆடுவர்! மதம் – புராணம் ஆகிய போர்வைகளில் மறைந்து திரியும் பண்டிதரும், சந்நிதானங்களுமோ சஞ்சலமடைவர்! தனித்துக் கூடிப்பேசிக் கொள்வர்.

“புராணம் – ஒரு பித்தலாட்டம்“ – என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதாகக் கூறிவிடலாம். இப்போதிருக்கும் வாலிப உலகுக்கு, இது போதும்.

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு! தமிழகத்தின் நிலை, அதுவல்ல. காலக்கழனி, காய்ந்து உலர்ந்துகிடந்த நேரம், அது! சுயமரியாதைக் கொள்கையென்றாலே தூற்றப் பட்ட காலம் அது! - அந்த நேரத்தில், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக, எதனையும் எடுத்துச் சொல்லிவிட முடியாது. அவ்விதம் சொல்வதன் மூலம், அவைகளிலுள்ள குற்றங் குறைகளை மக்களும் உணர்ந்துவிட மாட்டார்கள். “புராண்த்தை ஏன் குற்றம் சொல்கிறோம்?“, என்பதில் ஆரம்பித்து, “இவ்வளவு கடவுள்கள் யாருடைய சிருஷ்டி?“ என்ற கேள்வியை எழுப்பி, “மனிதன் தவிப்பதேன்?“ என்கிற சிந்தனையைத் தூண்டுவதென்றால், ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் தரப்பட வேண்டும்.

அத்தகைய விளக்கங்களைத்தான் அந்தக் காலத்திய ‘குடியரசு‘ ஏடு ஏந்தி வந்தது.

அதனைப் பார்த்தால்தான் மதவாதிகள் மருண்டனர் – பண்டிதர்கள் பயந்தனர்.

“தேள் கொட்டும், தீண்டாதே!“ என்று சொல்வதைவிட, தேள் கொட்டியதால் ஏற்பட்ட வலியைத் தெரிந்தவன், அதனைப்பற்றி விளக்கினால், யார் மறுக்க முடியும்?

எனவேதான், கைவல்ய சாமியார் அவர்களின் கட்டுரைகள், வெளி வருவதைக்கண்ட, பண்டிதரும் பக்தர் குழாமும், திகைத்தனர் – விழித்தனர்.

கைவல்ய சாமியார்! - இந்தப் பெயர், அவர்களை, நடுங்க வைத்தது. ‘இந்த வாரம் என்ன எழுதுவாரோ?‘, என்று ஏங்குமளவுக்கு, அவர்தம் சிந்தையைக் குழப்பிற்று.

புராணங்களைக் கரைத்துக் குடித்து, தமிழ் மறைகளின் பெருமைகளைத் தினமும் ஓதி, தமக்கு நிகர் தரணியில் எவருமில்லையென்கிற தருக்கோடு உலவிய, பண்டிதமணி களிடையே ‘ஒரு வெடிகுண்டாக‘ விளங்கினார் நமது கைவல்யம்.

“புராணங்களில் புளுகுகள்அதிகம்“

“கணட்யோ, நீ? கதையளக்கிறாய்!“

“யாரப்பா, நீ வா, இப்படி“

கைவல்யத்திடம் சிக்கினோர், மீள முடியாது. அகில உலக வளர்சசி அங்கிருக்கும் ஆண்டவன், நமது மதம், இங்கிருக்கும் தேவாதிதேவர்கள், அவர்களது திருவிளையாடல்கள் அத்தனையையும், ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுவார். பதிலா கூற முடியும்? - திகைத்தவனாயிருந்தால், ‘சு.ம. வைப்பார்த்தீங்களோ?“ என்று கேலி செய்து விடலாம் அவர். கைவல்யமாச்சே! பண்டிதரும் பக்தரும் கூறும் அத்தனை நூல்களையும் கரைத்துக் குடித்தவராச்சே!

வேதாந்த விற்பன்னர், சித்தாந்தத்தில் சிங்கம், தமிழ்மறை ஆய்ந்த தனிப்பெருங்கடல், அஷ்டமாசித்திகளும் அடையப் பெற்றவர், இவ்விதம் பற்பல பட்டங்களைப் பெற்றோர்,அப்போதும் அதிகம்.

சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கு இவர்கள்தான், சூறாவளி போல எதிர்ப்பை எழுப்பி வந்தார்கள். இந்தப் பண்டிதர்களின் கொட்டமடக்கி, அறிவுவழி,அவர்களை மடக்கிய பெருமைக்குரியவர் நமது கைவல்யம் ஆவார்கள் எடுத்ததற்கெல்லாம் குற்றங்களைச் சுமத்தி, குறும்புத்தனமான வாக்குவாதங்களைப் பரவவிட்டு, இடையூறாக இருந்த பண்டிதர் குழாத்தைப் பார்த்து, ஒருமுறை தெரிவித்தார்.

“எழுத்துத் தெரிந்து, இலக்கிய இலக்கணம் படித்து, சமய நூல் பார்த்து பண்டிதர்களானோர் பலர் இருக்கிறார்கள். இவர்கள் படித்த சாஸ்திரத்தின் உண்மையுணராது பலர் ‘குடியரசைத்‘ தொடப்படாதென்றும் படிக்கக்கூடாதென்றும் நினைக்கிறார்கள். தங்கள் மாணாக்கர் படிக்கக்கூடாதென்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால், மாணாக்கர் அந்தப் பண்டிதர்களின் குறுகிய புத்தி, விவேக வெளிச்சமடையவில்லை என்று நினைத்து அவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நமது கருத்துக்களைப் படித்தே வருகிறார்கள்.

“நாகரிக உலகத்தில் பெரும்பான்மையான வஸ்துகள், உண்ணல், களித்தல், கல்வி, பயிற்சி, அரசு, சுயராஜ்யம் முதலியன. இவை தத்தமக்குரிய எல்லையை மீறி அதிக எல்லையை வியாபித்து நிற்கின்றன. இவற்றில் உண்டாகும் சுமையில் பெரும்பகுதி அனாவசியம் என்றும், இதைச் சுமப்பதில் மனிதன் தனது பிறவி பலத்தைக் காட்டுகிறானே யொழிய புத்திக் கூர்மையை காட்டவில்லை. இவை, ஆத்ம லாபத்திற்குப் பலனளிக்காது என்றும் பண்டிதர்கள் சொல்லுவதுண்டு. ஒருவன், குளத்தில் அதிக ஆழத்திலிறங்கி நீச்சுத் தெரியாமல் தத்தளிக்கையில், அவன் குளம் முழுவதையும் தன வீணாண வலிய முயற்சிகளால் குழப்பிக் கொண்டு, அங்ஙனம் குழப்புவதால் ஏதேனும் லாபம் கிடைக்குமென்ற மூட நம்பிக்கை கொள்வதுபோல, மேற்கண்ட உலக அவஸ்தையிலிருக்கிறவர்கள் கடவுள், பக்தர்களுக்குத் தோன்றுவதாகச் சொல்லுகிறார்கள். ஆனதால், கடவுள் கைங்கரியமும் சாஸ்திர விசாரணையும் ஏழ்மைத் தன்மையும் போதுமென்று சொல்லும் பண்டிதர்களுமிருக்கிறார்கள். இவர்கள் பக்தியும், ஞானமும் இவர்களோடிருக்கட்டும்“ என்று, ஆத்திரமாகத் தீட்டினார். அவர், பழமைகளைக் கண்டிக்கும்போது ஒரு சமயம் எழுத்துக்களில் கனல் பறக்கும்! மற்றோர் சமயம், நகைச்சுவை ததும்பும் – எதிரிகளை எள்ளி நகையாடி மட்டந்தட்டுவார்.

“வேதம் உயர்ந்ததா? ஆகமம் உயர்ந்ததா? இரண்டும் ஒன்றா? எதிலிருந்து எது வந்தது, எதை எது போர்த்துக் கொண்டிருக்கிறது? – என்று சண்டை போட்டு, வேதத்தும்ஸ கோளரி, சைவ மத கண்ட சண்டமாருதம், மாயாவாத கண்டன கேசரி என்கிற பட்டங்களைச் சூட்டிக் கொள்வோரின் தர்க்கங்களும், கடவுள் பக்திகளும், எழுதின புஸ்தகங்களும் மோட்சம் கொடுக்காதென்று நாங்கள் சொல்லவரவில்லை. ஆனால், இதில் செலவழிப்பதில் சிறிது நேரத்தை எடுத்து ஒரு ‘பெப்பர்மிண்டு‘ செய்யப் புஸ்த்தகம் எழுதியிருந்தால் இவர்கள் பிள்ளைகள் ஆசார தோஷமில்லாமல் பெப்பர்மிண்டு தின்னலாமே? தங்கள் பிள்ளைகள் ‘பெப்பர்மிண்ட்‘ கேட்கையில் ஆசாரதோஷம் வந்து விடுமென்று அதை அடிக்க வேண்டாமே?“

எவ்வளவு குறும்பு – வேதநூல்களைப் புரட்டி விதண்டாவாதம் செய்வதைவிட, ‘பெப்பர்மிண்ட்‘ செய்யக் கற்றிருக்கலாமே! என்று கேலி செய்வதைப் படிக்கும் எவர்தான் மறுப்புக் கூறமுடியும்!

கைவல்யம் அவர்கள் தமது முதிர்ந்த வயதில் நம்மையெல்லாம் விட்டு, கடந்த 18-4-53 அன்று பிரிந்துவிட்டார். அவரது பிரிவு நம்மைக் கலங்கச் செய்கிறது! பழுத்த அறிவுப் பழம் ஒன்று. வீழ்ந்ததாக எண்ணி – வேதனையடைகிறோம். ஆனால், மக்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட அந்தப் பேரறிஞரைப்பற்றி இந்நாட்டு இதழ்களில் சிறு செய்திகூட வரவில்லை! எப்படி வரும்? கைவல்யம் அவர்களும் தாம் கற்ற வேதாந்த சித்தாந்தங்களை ‘வியாபாரப் பொருள்காளக்கி‘ நீறுபூசி, அம்பலவாணனையும், ஆதீனத்துக்கரசுகளையும் போற்றித் துதிபாடியிருந்தால், ஏடுகள்பல தீட்டும்! வால் நட்சத்திரம் முளைத்தாகக் கதை தீட்டும்! கைவல்யம் அவர்கள், கண்ணைக் கரிக்கும் கடலாக இருந்தார். திருவண்ணாமலை ரமணரைப்போல, இடையில் கௌபீனத்தைக் கட்டிக்கொண்டு ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்து தம்பிக்கு ‘உயிர்‘ எழுதிவைத்துவிட்டுப் போகும் ‘மகான் அல்ல, இவர் மக்களை எண்ணினார் – அவர்களுக்காகப் பாடுபட்டார். சித்தர் – ஜீவன்மூக்தர் – சாது சந்நியாசி – ஜீயர் – மடாதிபதி – மகனர் – இந்த ரகங்களில்‘ ஒன்றாகச் சேரவில்லை. அவர் படித்த கல்வியும், அறிந்திருந்து நூல்களும், அவரைப் பெரிய ‘மகனாக்கி‘ விட முடியும். ஆனால், அவர் விரும்பவில்லை! அவைகளை வைத்துக் கொண்டு மக்களின் அறியாமையை வளர்க்க விரும்பவில்லை! - அதனால்தான், அவரது பிரிவு கேட்டு, வாலிப உலகம் கண்ணீர் வடிக்கிறது.

இருளிலே உதயமாகிய அறிவியக்கத்துக்கு, ஆதவன் போல விளங்கினார், கைவல்யம் அவர்கள்.

அவரது அனுபவம் வழங்கிய ஆராய்ச்சிக் கருத்துக்களும், எதிர்காலத்தை அவர் அறைகூவியழைத்த அன்புக் குரலும், நமது காதுகளைவிட்டு நீங்க முடியாது.

வேத, புராண, மதச் சாக்கடைகளுள் புகுந்து, அங்கே தாம் கண்ட நாற்றங்களை விளக்கி நாட்டில் நறுமணம் பரவப்பாடுபட்டார்.

அத்தகைய ஓர் அறிவுப் பெரியாரை இழந்துவிட்டோம்.

அவரது இழப்பு – ஈடு செய்யமுடியாததாகும்.
அவர் மனிதர் வாழப் பாடுபட்டார்.

“நன்மை செய்தலே ஜீவிதம். பிறருக்கு நன்மை செய்யாமலிருப்பதே மரணமெனப்படும். நீங்கள் பார்க்கின்ற மானிட மிருகங்களில் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் மரித்தவர்களே – பிரேதங்களே ஏனெனில், மனித உயிர்களிடம் அன்பு செலுத்துகிறவன் சாவதில்ல – எப்போதும் ஜீவிப்பான்.

என்ற கொள்கையோடு வாழ்ந்தார் – எவ்வுயிரும் அவருக்கு ஈசன் கோயிலாக இருந்தது – அந்த உயிர்களின் உயர்வுக்காகப் பாடுபட்டார்.

“அவதி – அவதி ஆகாரம்! இங்கு எனக்கு ஆகாரம் கொடுக்க முடியாது கடவுளால் மோட்சலோகத்தில் எனக்கு நித்தியானந்தத்தைக் கொடுக்க முடியுமென்று நம்பமாட்டேன். தேசம் முன்னேற்றத்தில் வரவேண்டும். எளியவர்கள் போஷிக்கப்பட வேண்டும். கல்வி, பரவ வேண்டும். வைதீகக் கொடுமை கூடவே கூடாது. ஜன சமூகத்தில் கொடுமை உதவாது“ என்பதே அவருடைய தாரக மந்திரமாயிருந்தது. அத்தகைய, ஒரு அறிவுப் பெரியார் – நமது வழிகாட்டி – இங்கில்லை, இனிக் காண முடியாது.

அவரது அறிவுரைகள், இதோ! நடமாடுகின்றன, நம் கருத்துத் தரையில்.

அவைகளைப் பின்பற்றுவோம். அவரது பெயர், அவரது சொற்படி, சாகாது! சாகாது! புதுயுகம் இருக்கும் வரை சாகாது!!

திராவிட நாடு 26-4-53