அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பழைய பாதை!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, காங்கிரஸ் பற்றடைய மாணவர்கள், திராவிடர் கழக மாணவர்களைத் தாக்குமளவு, ‘பண்பு’ பெற்றுள்ளனர் என்று அறிகிறோம். தமிழ்ப் பேரவையினர், பல்கலைக் கழகத் துணைவேந்தரின் ஒப்புதலைப் பெற்றுப், பெரியார் விழாக் கொண்டாடியபோது, காங்கிரஸ் பற்றடைய மாணவர்கள், கலகம் செய்த, கூட்டத்தைத் தடை செய்ததுடன், விழாவுக்காகப் பறக்கவிடப்பட்டிருந்த கழகக்கொடியை அகற்றியும், கழக மணவர்களைத் தாக்கியும், தங்கள் “வல்லமையைக்” காட்டினராம். உணவுவிடுதி சென்று, படித்துக் கொண்டிரந்தவர்களை, தாக்குதல் வருமென்ற நினைப்பற்று இருந்தவர்களைப், பலர் கும்பலாகக் கூடிக்கொண்டு தாக்கினதாகத் தெரிகிறது. ஆறு, ஏழு மாணவர்களுக்குப் பலத்த அடியாம். பிறகு திராவிடர் கழக மாணவர்கள் சுமார் அறுபதின்மர், நகரப்போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன்,மாணவருக்கு உறவினர் இரவர், மாணவரைக் காணவந்ததைக் காரணமாகக் கொள்ளாமல், அவர்கள், ‘அடி ஆட்கள்’ என்று கூறி, அவர்களையும், அதிகாரிகள், போலீசுக்க அழைத்துக் சென்றனர் எனத் தெரியவருகிறது. இதுபற்றி, அண்ணாமலை சிதம்பரத்திலும் பரபரப்பு இருக்கிறதென்றும், திராவிடர் கழக மாணவர்களைத் தாக்கி வெற்றிகண்டு விட்டோமென்ற களிப்புடன், காங்கிரஸ்ப ற்றுள்ள மாணவர்கள் களிப்படைந்திருப்பதகாவும் அறிகிறோம். ஆளவந்தார்கள் நமது கட்சியினர், ஆகவே அதிகாரம், தமது பக்கம் இருக்கும், அமைச்சரே, திராவிடர் கழகத்தினிடம் கோபம் கொண்டவர். எனவே, நாம் எவ்வளவு அக்ரமமாக நடந்து கொண்டாலும், ஏதும் இடர் வராது, சட்டமும் நம்மைத் தீண்டாது, சர்க்காரும் நம்மைக்கை விடாது, என்று அந்த மாணவர்கள் கூறிக்களித்தனராம். இது சகஜமான சபலம். எந்த மாணவர்கள், இன்று, போலிஸ், தம்பக்கம் இருக்கும், ஏனெனில், போலீசையும் ஆளும் நிலை தமது கட்சிக்கு எற்பட்டிருக்கிறது, என்று கருதிக் களிக்கிறார்களோ, அந்த மாணவர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பழைய ஏட்டினைப் புரட்டிப் பார்த்தால், திராவிட மாணவர் தாக்குண்ட படலத்துக்குப் பலப்பல பக்கங் களுக்குமுன் புள்ள பகுதியிலே,

பல்கலைக் கழகத்தில் போலீஸ்!
மாணவர்கள் தாக்குண்டனர்!
போலீசின் தடியடி தர்பார்!
மாணவருக்கு மண்டையிலடி!
மாணவர் விலக்கப்பட்டார்!
பல்கலைக் கழகப்பகுதிக்கு144!

என்ற பல சம்பவங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கக் காண்பர். அந்த நாட்களில் இருந்த, பாணவர்கள் பாலதண்டாயுதம், திரவியம் போன்றாரைக் கேட்டாலும் விஷயம் விளங்கும். அன்று போலீசார் காங்கிரசை ஆதரிக்கும் மாணவருக்குத் தாக்குதல்! இன்று, திராவிடமாணவர் தாக்குண்டனர், காங்கிரஸ் பற்றுக் கொண்ட மாணவர்களால். தாக்கிய துடனன்றி, அதிகாரி களும் தமக்கே துணை நிற்கிறார்கள் என்று அகமகிழ்கிறார்களாம்!! எதைத், தமக்குற்றபுது வலிவு, புதுப்பெருமை என்று கருதிக்காங்கிரஸ் மாணவர்கள் களிக்கின்றார்களோ, அவர்களுக்கு அதே அதிகாரம் தங்களை ஒருகாலத்தில் துரத்தித் தாக்கிவந்தது என்ற செய்தியைக் கவனமூட்டுகிறோம் - மகிழ்ச்சி, மறதி தந்திருக்கக்கூடுமாகையால். எங்ஙனம், அந்தத் தாக்குதலைக் காங்கிரஸ் மாணவர்கள் அந்த நாட்களில் தாங்கிக் கொண்டனரோ, அதுபோலவே, திராவிடர் கழக மாணவராலும் முடியும், என்பதையும், ஒருபதினைந்து வருடகாலம், ஏகபோக மாகப் பெற்றிருந்த ஜஸ்டிஸ்கட்சி கடைசிவரையில், வெற்றி காணவில்லை என்பதையும், ஆரம்பநாட்களிலே ஜஸ்டிஸ் கடசி எதைப் பெருமைக்குரியது என்று கருதிவந்ததோ, அதே அதிகார நேசத்தை இன்று நம்பும் காங்கிரசும், மிகவிரைவிலே, தனக்குத் தானே கேடு தேடிக்கொள்கிறது என்பதையும் அந்த மாணவர் களுக்குக் கவனமூட்டுகிறோம். மாணவ உலகிலே, இத்தகைய ‘அமளியை’ மூட்டிவிடச்சமயம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், இதனை ‘முற்றவிட’ எண்ணுவர். நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள், இதனை ‘முற்றவிட’ எண்ணுவர். நாம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் - பல திராவிடத்தலைவர்களும் ஏற்கனவே வேண்கோள் விடுத்தனர் என்றும் அறிகிறோம் - குரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தாக்குதலைக் கண்டு கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாமென்று திராவிட மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். அந்தத் தழும்புகள், திராவிட அரசுக்கான, அச்சாரங்கள்! அந்தத்தழும்புகள், யாருடைய தாக்குதலால் ஏற்பட்டனவோ அவர்களிலே சிலரேனும், நாளை, தழும்புகளைக் கண்டு, வெட்கித் தலைகுனிந்து “அன்று நானுந்தான் தாக்கினேன்! தவறான கருத்துடன் இருந்ததால் தாக்கினேன்! தமிழன் உடலில் தமிழன் தாக்கித்தழும்பு ஏற்பட்டது!” என்றுகூறி வருந்திடக் காண்போம். புதியபலம் பெற்றதாகக் கருதிப் பூரிக்கும் அந்தத் தோழர்கள், பழைய பாதை வழியேதான் நடக்கிறார்ளக் - செல்வாக்கைச், சிதையாத பொருள் என்று தவறாகக் கணக்குப் போடுவது, அதிகாரம் நமது பக்கம் இருக்கிறது. ஆகவே அச்சம் வேண்டுவதில்லை, என்று எண்ணுவது, என்ற இந்தப் பழையபாதை! அந்தப் பாதை, என்றும் எவரையும், எந்த நாட்டிலும், வெற்றிக்கு அழைத்துச் சென்றதில்லை. அது வீழ்ச்சிக்குவழி! வீரத்துடன் விவேகமும் கொண்ட திராவிட மாணவர்கள், இதனை மனதிற்கொண்டு, ஆறுதல் பெறுவது மட்டுமல்ல, நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.

ஆம்! நாம் தாக்கப்படுகிறோம், தமது செல்வாக்குச் சரிந்து விடுகிறது என்ற கிலி கொண்டவர்களால்.

நாம் தாக்கப்படுகிறோம் நாடாள்வோரின் பலம் நமக்கு இருக்கிறது, என்று நம்பியதால் புதுமுறுக்கு பெற்றுள்ளவர்களால்.

நமக்கு முன்பு, கொள்கைக்காகப் பலர் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்கள், கொள்கையைத் தகர்த்ததில்லை - இயக்கங்களை அழித்ததில்லை - மாறாக, ஒவ்வொருதாக்குதலும், இயக்கத்தை வெற்றி பெற வைத்தன.

அந்தத்தாக்குதலும் இதுபோன்றதே.

நாம்தாக்கப்பட்டோம், எனவே, நாம் வெற்றிப்பாதையிலே வந்துவிட்டோம் என்று பொருள்.

நமது உடலிலே எழும் தழும்புகள், இன்பத்திராவிட அரசுக்கு, எழிலணிகள்! என்று இம்முறையில் எண்ணிட வேண்டும். கோபம் - சோகம் - சலிப்பு - ஆத்திரம் இவை ஏதும் வேண்டாம்.

தாக்குதலா? ஆமாம்! பிறகு? பிறகு என்ன? அது ஓர் சம்பவம் - எமது பயணத்திலே நேரிடக்கூடிய பலவற்றிலே ஒன்று, அவ்வளவுதான். ஆனால் பயணம் நிற்காது! என்று கூறிவிட்டுத் தமது பணியினைத் தொடர்ந்து நடத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட நாடு - 12-10-1947