அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பேரறிஞர் அண்ணா அவர்கள் விடுத்த அறிக்கை

என்.எஸ்கிருஷ்ணன் - பாகவதர் அவர்களின்
இசை உங்களை பரவசப்படுத்திற்று.

நடிப்பு உங்களை இன்பபுரிக்கு அழைத்துச் சென்றது.

கொடை எவ்வளவோ நற்காரியங்களுக்கு பயன்பட்டது.

தமிழகத்தைத் தங்கள் கலைப்பணி மூலம் மகிழச்செய்தனர்
இசைச் செல்வர், கலைவாணர்.

இன்று
ஆயுள்தண்டனை அனுபவிக்கிறார்கள்!

ஐயோ! என்ற சோகக்குரல் தமிழகத்தைக் கப்பிக்கொண்டது.

அன்பர்களே! இரு இசைமணிகளையும், கருணை கூர்ந்து சர்க்கார் விடுதலை செய்யவேண்டுமென்று, கேட்டுக்கொள்ளவும், அதற்காவன செய்யவும். பலபிரமுகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். உங்கள் ஆதரவை அவர்களுக்கு அளுயுங்கள்! புதுவைப் பிரமுகர்கள், கருணை காட்டுக! என்று சென்னை கவர்னருக்கு மனு அனப்பினர். திருச்சித் தமிழர்கள், கலைஞர்பால் கருணை காட்டுக என்று வேண்டித், தீர்மானம் நிறைவேற்றினர்

பொன்மலை, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், திருவாரூர், சாக்கோட்டை நாமகிரிப்பேட்டை, முதலிய பல ஊர்களிலும், இதுபோன்றே, கலை செல்வர் இருவரையும் குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

உங்கள் ஆதரவு எங்கே? அதனைத் தருக!
இன்றே!
இதிலே கட்சி இல்லை! காய்ச்சல் இல்லை!
கருணை! கருணை!
தமிழரின் நெஞ்சமெல்லாம் இன்பரச இசைத்தேனைப் பெய்த
இரு இசைமணிகளின் பால்
கருணை!
இதைத் தமிழகம் எந்தப் பேதமும் பாராட்டாது கேட்கவேண்டும்!
சொந்தக் காரியமாகக் கருதவேண்டும்.
தமிழகத்தில்,
இசைத்தென்றல் மீண்டும் வீச,
இன்பத்தமிழின் இனிமை தவழ
கலைமணம் மீண்டும பரவ.

கலைவாணர் இருவரும் சர்க்காரின் கருணையைப் பெறச்செய்க! அவர்களிடம் கொண்ட அன்புக்கு, கலையிடம் உள்ள அன்புக்கு, இதனைச் செய்யலாகாதா?

(திராவிடநாடு - 25.11.1945)