அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிணத்தின்மீது பணம்

வீண் சடங்குகளில், அர்த்தமற்ற சம்பிரதாயங்களில் பணத்தைக் கொட்டியழுகிறார்கள்.

அர்த்தமற்ற விழாக்களில் அவசியமில்லாது, பொருளைப் பாழாக்குகிறார்கள்!

பழைய நம்பிக்கைகளின் பேரால் செய்யப்படும், சடங்குகள் பல, வெள்ளிப் பணங்களை விழுங்கி விடுகின்றன.

திருமணம் என்று விருந்தும், விழாவும் செய்து, வெள்ளி வெள்ளியாக கொள்ளை போகிறது, நம் நாட்டில்!

ஈமச்சடங்கு, இதற்குக்கூட, அனாவசிய செலவுக் கணக்கு!

என் தாய் இறுதிச் சடங்கிற்கு, இருபதாயிரம் வெள்ளி ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இறந்து போகும் என் தாய்க்கு-ஏன் இவ்வளவு வெள்ளி வீணாக்கப்பட வேண்டும். இப்படிக் கேட்பதால், தாயிடம் எனக்கு அன்பில்லையென்று அர்த்தமில்லை. தாயிடம் பாசம் அதிகம். அதனால்தான் அவரின் பெயரால் ஒரு பெருந்தொகை பாழானது என்ற பழி வரக்கூடாதென்பதற்காக, அந்தத் தொகையைப் பிரித்து கல்வி ஸ்தாபனங்கள் பலவற்றிற்கும் கொடுக்கத் தீர்மானித்து விட்டேன்.

சிங்கப்பூர் சீமான், சீனக் குடும்பத்தைச் சேர்ந்த ரப்பர் வணிகன் லிம்சாய்வீ என்பவர் இப்படிக் குறிப்பிட்டு அதன்படியே பிரித்தும் கொடுத்தார்.

அவர் சீனச் சமூகத்தின் சிறுமதிச் சடங்குகளைக் கடிந்து கொண்டுள்ளார்.

அந்தச் சமூகத்திற்கு எந்த வகையிலும் இளைத்ததல்ல நம் சமூகம்!

அர்த்தமற்ற சடங்குகளால் சீனச் சமூகம், குற்றுயிராய்க் கிடக்கிறதென்றால் நம் சமூகம், செத்துவிட்டதென்றே கூறவேண்டும்!

அர்த்தமற்ற சடங்குகளை காணவேண்டுமானால், வைதீகபுரியார் நடத்தும் திருமணங்களைப் பாருங்கள்.

செத்துப்போன பிறகு, பிணத்திற்குச் செய்யும், இழவுச் சடங்குகளைக் கவனியுங்கள்.

உயிரோடிருக்கும் பொழுது ஏதும் செய்ய மாட்டான். செத்த பிறகு அவன் செய்யும் சடங்குகளைப் பார்த்தால் சகிக்க முடியாது!

அதுபோலவே விழாக் கொண்டாடுவதும், அர்த்தமில்லா முறையில், ஆனால் ஆயிரக்கணக்கான செலவில் செய்வான்!

கம்பசேர்வையென்பான், கலனான கோயில் திருப்பணி யென்பான், கார்த்திகை தீபம் என்பான், காணிக்கைச் செலுத்த திருப்பதி செல்வேன் என்பான் ஏதாவது கூறி, இருக்கும் பணத்தை உருப்படாத வகையில் கரைத்துவிடுவான்.

மனிதனுக்குச் செய்யும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் கிடக்கட்டும். மகேசனுக்குச் செய்கிற தடபுடல் தர்பார். இந்நாட்டுப் பொருளாதாரத்தையே முடமாக்கிவிட்டது!

மலாயாவிலுள்ள சீனக் குடும்பத்தவர் ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் வெள்ளியைப் பாழாக்கிறார்கள் என்று கணக்கிடப் படுகிறது!

லிம், அழகாகக் குறிப்பிடுகிறார் இறுதிச் சடங்கிற்கு அந்தத்தொகை செலவிடப் படாமல் கல்வி நிலையங்களுக்குச் செலவிடப் பட்டதால், இறந்த தாயை அதிக கௌரவம் செய்ததாகவே இருக்கிறது என்று!

ஆம், அத்தகைய லிம்கள் ஏற்பட வேண்டும் நம் சமூகத்தில்!

அப்பொழுது தான் புரோகிதர் புலம்பல். புராணப் பிரசங்கியின் ஓலம். சடங்குகளின் சங்கடம், தேர், திருவிழா, திருவாதிரை, துவாதசி, அமாவாசை என்ற அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் அடங்கும்!

பிணத்தின் மீது பணத்தைக் கொட்டிப் பாழாக்குவானேன் என்று கேட்டிடும் லிம்கள் நமக்கு தேவை!

(திராவிடநாடு 26.8.51)