அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரசாதம்!
“மகாஜனங்களே! மகாபுத்திவான்களும், வியவகார ஞானஸ்தர்களுமான உங்கட்கு நான் என்ன விசேஷமாகக் கூற இருக்கிறது. காலம் ரொம்பக் கஷ்டம்! உணவுப் பொருள் விஷயமாக ரொம்ப திண்டாட்டம்! என்ன செய்வது, மலைபோன்ற கஷ்டம் வந்தாலும், மனம் கலங்காத மனோதிடம் கொண்ட மகானுபாவர்களல்லவா தாங்கள்! ஆகவே, இப்போதைய உணவுக் கஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அரிசி கிடைக்காதவர்கள், கோதுமை சாப்பிடுங்கள், அதுவும் கிடைக்காதவர்கள் சோளம் சாப்பிடுங்கள். பிரயத்தனம் செய்து பார்த்தும் பிரமாதமான பலன் இல்லையே!

மகாஜனங்களே! இப்போது உங்களுக்குத் தரப்படுகிற அரிசி அந்த அளவும், இனிக் குறைக்கப்படும் பொறுத்தருள்க!

இந்தியாவிலுள்ள சுதந்திரம் உதயமாகி விட்டது - இடைக்காலச் சர்க்கார் ஏற்பாடாகிவிட்டது - இனி இன்பம் துன்பம் இல்லை, என்று பேசின அன்பர்கள் பலர்.

பாமரன், பாழும் உணவுப் பிரச்சனை தீர்ந்து, பசியாற முடியும் என்று எண்ணினான்.

உணவு மந்திரி தோழர் ராஜேந்திர பிரசார் செப்டம்பர் 23ந் தேதி ரேடியோ சொற்பொழிவு மூலம்.
கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள்.

அந்த வித்தையிலே தான் நீங்கள் கை தேறினவர்களாயிற்றே.
என்று தட்டிக் கொடுத்துவிட்டு
அரிசியின் அளவும் குறைக்கப்படும்
என்று கூறிவிட்டார் கிடைத்த “பிரசாதம்” இது!

முதலமைச்சர் பிரகாசம், உணவு மந்திரியைக் கண்டுபேசி சென்னை உணவு நெருக்கடியைத் தீர்க்க வழிதேடச் சென்றார் - செல்லுமுன் டாக்டர் ராஜேந்திரபிரசாத், ரேடியோ மூலம் இந்தப் “பிரசாதம்” அளித்தார்.

காந்தியாரைக் கண்டு பேசினால் காரியம் கைகூடுமென்று கருதிக் கொண்டு அவரையும் கண்டார் முதலமைச்சர் அங்குக் கிடைத்த பிரசாதம் அதைவிட அற்புதமாக இருந்தது.

ராஜேந்திர பிரசாதைத் தொந்தரவு கொடுக்க வேண்டாமன்று நான், பிரகாசத்தைக் கேட்டுக் கொண்டேன், அவரும் அதற்குச் சம்மதித்தார்” என்று கூறுகிறார் காந்தியார்.
தொந்தரவு தரக்கூடாது என்று கூறினதோடு விட்டாரா? இல்லை. உணவு நெருக்கடி பற்றியும் பேசினார் என்ன சொன்னார்?

“தென்னாட்டு மக்களை எனக்கு நன்றாகத் தெரியுமே! தென்னாப்பிரிக்காவிலே எனக்கு அவர்களின் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தெரியும் அவர்கள் புத்திசாலிகள்” என்று கூறினார்.

பிரகாசம் கேட்கப் போனது சோறு கிடைத்தது. “புகழ்” போகட்டும். நம் நாட்டாருக்கு ஒரு மகாத்மாவின் வாயால் புத்திசாலி என்ற பட்டம் கிடைத்ததல்லவா? சந்தோந்தான் என்று திருப்தியும் அடையலாம். ஆனால், மேலும் சிலபேசி இருக்கிறார் காந்தியார் அது என்ன?

“தென்னாட்டார் புல்லுக்கு இடையே கிடைக்கும் கீரையைக் கூடச் சைவ உணவாகச் செய்து கொள்வார்கள். தென்னை, வாழை, மரவள்ளிக் கிழங்கு, மிளகாய் முதலியன அங்கு உற்பத்தியாகின்றன. இன்னும் என்ன வேண்டும்? புத்திசாலிகளான தென்னிந்திய மக்கள் அரிசி இல்லாமலேú காலந்தள்ளமுடியும்” என்று கூறிவிட்டார்.

“அரிசி இல்லை - அளவும் குறைக்கப்படும்” என்கிறார் இராஜேந்திர பிரசாத்.

ராஜேந்திர பிரசாதிடம் போய் அரிசி கேட்கிறார் பிரகாசம்.

ராஜேந்திர பிரசாத்தைத் தொந்தரவு கொடுக்கவேண்டாமென்று காந்தியார் பிரகாசத்துக்குக் கூறுகிறார். கூறுவதோடு, புத்திசாலிகளான தென்னிந்தியர்கள் கீரை கிழங்கு தின்று வாழலாமே, அரிசிகூடத் தேவை இல்லையே என்று கூறுகிறார்.

தேசிய சர்க்கார் வரவேண்டும். வரவேண்டும் என்று பசிகொண்டு இருந்தார்களே, அன்பர்கள், இந்தப் பிரசாதம் கிடைத்திருக்கிறதே. பசி அடங்கிவிட்டதா என்று கேட்கிறோம்.

(திராவிட நாடு - 29.9.46)