அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரிக்க வேண்டும்!

குறுகிய நோக்கினர்- கோணல் மதியினர்- பதவி பித்தினர்- துரோகச் சிந்தையினர்' இவ்வாறு அர்ச்சிக்கப்படுகின்றனர். காங்கிரஸ் மேலிடத் தால், டாக்டர் பட்டாபி, கொண்ட வெங்கிடப் பய்யா, பேராசிரியர் இரங்கா முதலியவர்கள்.

``ஹிட்லரிசம்- பாசீசம்- ராஜ்வீசம்! பிரிக்கப் பட வேண்டும்- மொழி வழி மாகாணம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்போரைப் பார்த்து கனல் கக்குகிறார் கே.எம்.முன்ஷி!

`மூடத்தனம்- பொய்யர்கள்- நன்றியற்றவர் கள்' என்று பதிலாகக் கிளம்புகிறது. தனி மாகாணக் கோரிக்கைக்காரர்களிடமிருந்து!
* * *

`பிரிவினை வேண்டும்' என்ற மூல மந்திரம், மற்றவர்களால் பேசப்படுவதைக் காட்டிலும், உரத்து உச்சரிக்கப்படுகிறது. பெரும் பெரும் தேச பக்தர்களால், இதனைப் பெருங்குரலெடுத்து மறுக்கிறவர்களும் தேசபக்தர்கள்தான்! தலைவர் கள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்களிடையே இவ்வளவு பலமான குழப்பம் இருப்பதைக் கண்டு, வயலிலே வேலை செய்யும் வரதனும், தொழிற்சாலையில் உழைத்து உருக்குலைந்து கிடக்கும் உலகப்பனும், குழப்பத்தின் முழு உருவம் தெரியாமல் திகைக்கிறார்கள். தலைவர் களுக்குள்ளே குழப்பம், மக்களுக்குள்ளே மலைப்பு, இந்தச் சூழ்நிலையில் சூதுமதியினர் சிலர் கூடிக்கொண்டு சுயராஜ்ய சாசனம் துரிதமாகத் தயாரித்துக் கொண்டு உள்ளனர்!

இந்தப் பிரிவினை மனோபாவம், வெள்ளையர் வந்தபோதும், ஆண்டபோதும், வெளியேறினபோதும், பின்னரும், இன்றும் இருந்து கொண்டுதான் இருந்தது- இருக்கிறது என்பது மட்டுமல்ல, நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டும், உரம் பெற்றுக் கொண்டும் வருகிறது.

பலமொழியினரை- பல மதத்தினரை - பல இனவழி வந்தவரை- வேளா வேளையில் கிடைத்த- வெற்றியின் பயனாகக் கிடைத்த நிலப் பரப்பினை, ஒன்றாக்கி, மாகாணம் என்று பெயர் சூட்டி, தங்களுக்கு ஏற்ற வகையில் நிர்வாக வசதி செய்துகொண்டு ஆண்டனர் வெள்ளையர். ஒரு நூற்றாண்டுகளுக்கு அதிகமாக, பற்பல இயற்கைக் காரணங்களால், மாறுபட்டும் கிடப்பவர்களை பிணைத்து வைத்திருந்தும், பிரிவினைப் பண்பாடு மறையவில்லை- மாற்றமுறவில்லை- மங்கியும் போகவில்லை, மக்கள் என்னும் பொது உணர்வோ, `இந்தியன்' என்னும் எண்ணமோ ஏற்படவில்லை- ஏற்படுத்த முடியவில்லை.

அஸ்ஸாமியர்கள், வங்காளியர்களை வெறுக்கிறார்கள். பீகாரிகள், வங்காளிகளோடு பிணங்கிக் கொள்ளுகிறார்கள். மராட்டியர்கள் குஜராத்தியர்களிடமிருந்து தனித்து வாழ விரும்புகிறார்கள். ஒரே மொழியை மூலமாகக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரே இன வழி வந்தவர்கள், ஆரிய மொழிபுகுந்து செய்து விட்ட அனர்த்தத்தின் காரணமாக அடிப்படை யில் எவ்வளவு முரண்பாடு இல்லாமல் இருந்தும் கூட தமிழர்கள்- ஆந்திரர்கள்- மலையாளிகள்- கன்னடர் ஆகிய திராவிட இனத்தைச் சேர்ந்தவர் களிடை, அவசியமற்ற சந்தேகமும் பிணக்கும் ஏற்பட்டு இருக்கிறது வெளிப்படை.

இந்தத் துணைக்கண்டத்தில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களிடை- `பிரிவினை' உணர்ச்சி வளர்ந்த வண்ணம் இருக்கிறது என்பதை எவராலும் மறைத்துவிட முடியாது. இந்தப் `பிரிவினை' ஒரு நோயாக இருக்கு மானால், இந்தப் பிணியைப் போக்குவதற்கு, காங்கிரஸ் காட்டிய தேசிய மருந்து பலனற்றுப் போய்விட்டதைக் கவனிக்க வேண்டும்.

`பிரிவினை'க்குச் சிலர் மதத்தைக் காரண மாகக் காட்டி பிரச்சினையை உருவாக்கினார்கள். இதனை எள்ளி நகையாடிற்று காங்கிரஸ் மேலிடம் `ஏகாதிபத்ய கூலிகளின் செயல் இது' என்று. பிரிவினை வேண்டினோர் முகத்தில் கரி தடவிற்று. பிரச்சினையைத் தகர்க்க எடுத்துக் கொண்ட எல்லா நடவடிக்கைகளும், முயற்சி களும், பிரிவினைக் கோரிக்கைக்கு ஆக்கத்தைக் கொடுத்துவிட்டது. முடிவில் கனவு நனவாயிற்று. பாகிஸ்தான் அரசு பகைத்தவர்களின் ஒப்புதலு டன் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

`மொழி'யை முன்தள்ளி, இன்று `பிரிவினை' பேசப்படுகிறது. ஒரேமொழி பேசும் மக்கள், ஒரே நிலப்பரப்பில், அரசு அமைத்து ஆட்சி செய்வது தான் அறிவியல் வழி என்பது இவர்கள் வாதம். இதனைக் காங்கிரஸ் தனது முக்கிய கோட்பாடு களில் ஒன்றாக ஆக்கிக் கொண்டு இருந்தது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடக் கிளம்பிய காங்கிரஸ் தலைவர்கள், பலமொழி பேசுவோரை ஒன்றாக்கி ஒரு மாகாணமாகப் பிரித்திருப்பது, கூடாது, பொருந்தாது. இந்தக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சேர்க்கை, ஒரு மொழியினர் மீது மற்றொரு மொழியினருக்குப் பொறாமையும், பகையையுமே வளர்க்கும். ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தங்கள் மொழியை வளமாக்கிக் கொள்ளவும், கலைச் செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளவும், இந்தப் பலவந்தச் சேர்க்கை வாய்ப்பளிக்காது. எனவே மொழி வழி மாகாணம் அமைக்கப்படுவதுதான் அறிவிற்குப் பொருத்தமான முறை, பலமொழி பேசும் மக்களிடத்திலும் அன்று தான் உண்மை யான கூட்டுறவை எதிர்பார்க்க முடியும் என்று கூறி, மொழி வழி மாகாணம் அமைக்கப்படுவது தான் அறிவிற்குப் பொருத்தமான முறை, பலமொழி பேசும் மக்களிடத்திலும் அன்றுதான் உண்மையான கூட்டுறவை எதிர்பார்க்க முடியும், என்று கூறி, மொழி வழி மாகாணம் அமைக்கப் படுவதின் அவசியத்தை மக்களுக்கு விளக்கினார்.

பல மொழியினரிடை நல்லுறவு ஏற்படு வதைக் குலைப்பதற்கும், ஒருவரோடு ஒருவர் பிளவுபட்டுக் கிடந்தால்தான் தங்கள் பிடி நீடித்துப் பலமாக இருக்கும் என்னும் தீய நோக்கத்தோடுதான் ஏகாதிபத்தியம் இந்தத் தகுதியற்ற செயலைச் செய்திருக்கிறது. வெள்ளையர் வெளியேறினதும், இந்த அதர் மத்தைத் துடைத்துவிட்டு, மொழி வழி மாகாணங்கள் ஏற்படுத்துவதுதான் முதல் பணி யாக- முக்கிய பணியாகக் கொள்ளப்படும், என்று ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி அமைத்த போது, பலமொழி பேசுவோரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த னர் இந்த வாக்குறுதியை. மொழி வழி மாகாணம் அமைந்தால்தான், சுயராஜ்ய இந்தியாவில் சுக வாழ்வு கிடைக்கும். வழிபிறக்கும் என்ற நம்பிக்கையையும், மக்களுக்கு ஊட்டினர். மொழி வழி மாகாணம் அமைத்தல் என்னும் எண்ணத் தை மக்கள் உள்ளத்தில் தோற்றுவித்து வளர்த்து விட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்களேயாவர். இதன் விளைவாக மக்கள் மொழி வழி மாகாணம் அமைந்துவிட்டால் தங்களுடைய குறைபாடுகள் அனைத்தும் களையப் பட்டுவிடும் என்னும் தவறான ஆசையை வளர்த்துக் கொண்டனர். இந்த ஆசை, அதன் வரம்பைக் கடந்துவிட்டது. ஏகாதிபத்தியப் பிடி நொறுக்கப்பட்டதும், தங்கள் கோரிக்கை நிறைவேறி விடும் என்று நம்பிக்கை கொண்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முன்னிலும் அதிக ஆர்வம் காட்டினர். விடுதலைப் போராட்டத்திற்கு, மொழி வழி மாகாண அமைப்பு ஆசை புது முறுக்கைக் கொடுத்தது. வெற்றி கிடைத்தது. வெள்ளையர் வெளியேறிவிட்டனர்.

ஆனால்....?

மொழி வழி மாகாணம் ஏற்படவில்லை. அதனைத் தடுத்தொழிக்க முயற்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுவும், அன்று மொழி வழி மாகாணம் அமைவது, குறிப்பிட்ட மக்களின் மொழி வளர்ச்சிக்கும், கலை ஆக்கத்திற்கும், கல்விப் பெருக்கத்திற்கும், சுகவாழ்விற்கும் அடிப்படைத் தேவை என்று பேசியவர்களா லேயே, மொழி வழிமாகாணம் அமைவது கூடாது என்று பேசப்படுகிறது. அன்று நாட்டுப் பற்று என்று நவிலப்பட்டது. இன்று தேசத் துரோகம் என்று சித்தரிக்கப்படுகிறது. மொழி வழி மாகாணம் அமைப்பதே முதல் பணி- முக்கிய பணி என்று பேசுவோர்களை, அவர்கள் எவ்வளவு தியாகங்கள் செய்தவர்களாக இருந்த போதிலும், எத்தனை முறை ஏகாதிபத்தியச் சிறையில் தள்ளப்பட்டவர்களாக இருந்தபோதி லும், காங்கிரஸ் மேலிடம் அவர்களை முன்பின் யோசிக்காமல், கட்டுரை ஆரம்பத்தில் குறித் துள்ளபடி அர்ச்சிக்கிறது!

மொழி வழி மாகாணம் அமைக்கப்படாத தால் குறிப்பிட்ட மொழியின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது. அந்த மொழியினரின் கலைஞானம் கருகிவிட வழி இருக்கிறது. உயர்ந்த பண்பு உருக்குலைந்து விடவும் இடமிருக்கிறது. இதற்குப் பரிகாரமாக ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மொழி வழி மாகாணம் அமைத்தல் என்று முன்பு காங்கிரஸ் மேலிடம் பேசி வந்ததில் உண்மை இருக்குமானால், வெள்ளையர்கள் வெளியேறி விட்டதினாலேயே அந்த உண்மை பொய்த்து விடாது. வெள்ளையர்கள் ஆட்சியில்தான் அந்த விளைவு இருக்கும்- `நம்மவர்' ஆட்சியில் அந்த விளைவு இருக்காது என்று பேசுவது அறிவுக்குப் பொருத்தமற்றதாகும்.

வேறு சிலர், குறிப்பாக, கே.எம்.முன்ஷி போன்றவர்கள், மொழிவழி மாகாண அமைப்புக் கிளர்ச்சியைப் பொது அறிவு படைத்தவர்களால் விரும்பத்தகாத முறை என்று கருதப்படும் `ஹிட்லரிசம், பாசீசம், ரஜ்வீசம்' போன்ற மனிதப் பண்பறியாத மிருகத் தத்துவங்களுக்கு ஒப் பிட்டுப் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுகிறவர் களில் சிறந்து விளங்கும் கே.எம்.முன்ஷியின் முன்னாள் சொல்லும் செயலும் எவ்வாறு இருந்தது? டில்லிப் பகுதியிலே ஒரு வேதியர் சிற்றூர் அமைக்க வேண்டுமென்று வீண் முயற்சிச் செய்தவர். வெட்கமின்றி இத்தனை வெளியில் சொல்லிக்கொண்ட தேச பக்தர். அகண்ட ஹிந்துஸ்தான் கூச்சலின் ஆக்க முதல்வர். இவ்வாறு இவர் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான் காங்கிரஸ் மேலிடம், இவர் பேச்சையும் பலத்தையும் புறக்கணித்துவிட்டு, பாகிஸ்தான் அமைப்புக்கு, ஆங்கிலேயர் குறித்த இடத்தில் கைச் சாத்திவிட்டது!

மாகுஜரத் என்று முழங்கி, சிதறிக் கிடக்கம் குஜராத்தியர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு மாகாணம் அமைக்க வேண்டுமென்று, சில நாளைக்கு முன்பு வரையில் பெருமுயற்சி செய்து வந்த முக்கிய புருஷர் இந்த முன்ஷிதான். ஆனால், இன்னு இதுவரை எது சிறந்தது என்று பிரசாரம் செய்து வந்தாரோ, அதனையே `பாசீசம்' என்று சித்தரிக்கிறார் இந்தச் சீரற்றவர் சிந்தனை யை இழந்து!

இன்று, வேலையில்லையே என்று விம்மி னாலும், பசி தணியவில்லையே என்று பதறினா லும், கூலி உயர்த்த வேண்டும் என்று கூறினாலும், அகவிலை உயர்ந்திருக்கிறதே என்று அலறினா லும், எங்கள் குறைகள் இது இது என்று எடுத்துக் காட்டினாலும், இதனை எவர் செய்தபோதிலும்- சொந்தக் கட்சியினர் ஆயினும் சரி, மாற்றுக் கட்சியினர் ஆயினும் சரி- இவ்வளவிற்கும் ஒரே பதில்தான் கிடைக்கிறது என்ன பதில் அது? துன்பம் நீக்கும்- துயர் போக்கும் தெளிந்த பதில்? இல்லை- இல்லை! காங்கிரஸ் மேலிடத்தை ஆட்டிப் படைக்கும் அதிகாரம், இந்த நல்ல காரியத்தையா செய்வதற்கு. அவர்களுக்கு ஊக்கமளிக்கும்!

`இந்தக் குறைபாடுகள் அனைத்தும் சாதாரணம்!'

`வேறு இருக்கிறது முதலில் செய்ய வேண்டியது! முதலில் கவனிக்க வேண்டியதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்! இந்தச் சில்லறைகளில் கவனம் செலுத்துவதற்கு இதுவல்ல தருணம்! கிடைத்த சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குப் பலம் பொருந்தியவர்களாக நம்மைக் ஆக்கிக்கொள்ள வேண்டும்! எனவே பலம் பொருந்திய இராணுவத்தை உண்டாக்க வேண்டும்!'

`இதனை- முதலில் கவனிக்க வேண்டிய இந்த முக்கிய பணியை மறந்து- மக்களின் தேவையான- குறைகளை- பேசிக் கொண்டிருப் பது கிடைத்த விடுதலைக்கு உலை வைப்பதாகும். எனவே, மக்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறுபவர்கள் பதவி மோகங் கொண்டவர்கள்- நாட்டு நலத்தை நாடாதவர்கள்!

இவ்வாறு அதிகாரத்திலுள்ள மேலிடத்தார், நாட்டு மக்களின் நலிந்த வாழ்வைச் சுட்டிக் காட்டுகிறவர்களை, மக்கள் சிந்தும் கண்ணீரைத் துடைக்க மார்க்கம்க hண வேண்டுமென்று கேட்பவர்களை, எல்லாம் ஒரே பட்டியில் சேர்த்துப் பேசுவது போலவே, மொழி வழி மாகாணம் வேண்டுமென்று கூறுபவர்களிடமும் உள்ளெண்ணம் கற்பிக்கவும், அவர்கள் கோரிக்கை தேசியத்திற்கு விரோதமானது என்றும் பேசுகின்ற அளவிற்குத் துணிவு கொண்டுள்ளார்கள். இரண்டொரு மேலிடத்தார், கோரிக்கை நியாயமானதாயினும், அதனை அமுல் நடத்த இதுவல்லத் தருணம் என்று கூறி, காலத்தின் மீது பழியைப் போட்டு, பிரச்னையை தட்டிக் கழித்துவிடுகிறார்கள்.

மொழி வழி மாகாணம் அமைவது பயங் கரமானதோர் பிரச்னையாகக் காட்சி அளிக்கிறது. எனவே, பிரச்னையை ஆராய்ந்து அறிந்து, நீதி வழங்கப்படுகிறார்கள். கோரிக்கையைக் கிளப்பு கிறவர்களும், அதனை மறுப்பவர்களும் ஒரே கட்சியினர்- கதர் சட்டையினர் என்பது குறிப் பிடத்தக்கது!

`பிரிவினை' வேண்டும் என்னும் மூலக் கொள்கையில் ஒருவருக்கும் வேற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு, அவர வர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடும் காரணங் களில்தான் தாரதம்மியம் இருக்கக் காண்கிறோம்.
* * *

சிந்தனையைத் தூண்டி விடும் முறையில், தோழர் எஸ்.வி.இராமமூர்த்தி (ஐ.சி.எஸ்.) ஆந்திர மாகாணப் பிரிவினையை வற்புறுத்திச் சில கூறியுள்ளார். அதாவது, ஒரு மாகாணத்தின் நிலப் பரப்புப் பெரிதாக இருப்பதும், அதிக ஜனத் தொகையைக் கொண்டதாக இருப்பதும், ஒழுங்காக நிர்வாகம் நடப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. வங்காளம், பிரிக்கப்படுவதற்கு முன், 6 கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது. அதனாலேயே அங்கு பஞ்சம் ஏற்பட்டபோது, பஞ்சம் ஏற்பட்ட குறிப்பிட்ட இடத்தை- நிலப் பரப்பு பெரிதாக இருந்த- நிலப்பரப்பு பெரிதாக இருந்த காரணத்தால்- கல்கத்தாவிலுள்ள அரசிய லார் நிலையை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியாமல் போனதோடு தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொள்ளும் சக்தியும் இல்லாமல் போய் விட்டது. சென்னை மாகாணத்தின் ஜனத் தொகை 5 கோடியாக இருக்கிறது. எனவே, திறமையான நிர்வாகம் இருப்பது முடியாத காரியம் என்று தோழர் இராமமூர்த்தி குறிப்பிட்டுவிட்டு, ஆந்திர மாகாணம் பிரிக்கப்பட்டால் 5 கோடி மக்கள்தான் இருப்பர். அதுகாலை நிர்வாகம் திறமையானதாக ஏற்பட்டுவிடும் என்றும் பேசியுள்ளார்.

அதாவது, நிலப்பரப்பு அதிகமாக இருத்தல்- மக்கள் தொகை பெரிதாக இருத்தல்- ஆகிய இரு காரணங்களால் நிர்வாகம் திறமை யாக இருக்காது- இருக்கவில்லை- இருக்க முடியாது. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது வங்காளப் பஞ்சம். இவ்வாறு கூறுகிறார் தோழர் எஸ்.வி.இராமமூர்த்தி. யார் இந்த நபர்? மஞ்சள் பெட்டி மகத்துவத்தில், மக்கள் பிரதிநிதிகள் என்று மகுடஞ் சூட்டிக்கொண்டு, கொலு வீற்றிருக் கும் நடமாடும் பொம்மைகளைப் போன்றவர்களா இவர்? இல்லை, நாட்டு நிர்வாக நுணுக்கங்களை அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்துள்ளவர். சென்னை மாகாண சர்க்காரில் பல முக்கிய பதவிகளிலே அமர்ந்து வேலை பார்த்துப் பயிற்சி பெற்றுள்ளவர். சர்க்காரின் பிரதம காரியதரிசியாக இருந்து, நிர்வாகத்திலே குறைபாடு எங்கே இருக்கிறது? அதற்கான காரணங்கள் எவை எவை- அதனைப் போக்குவதற்குள்ள வழி வகை என்ன- என்று தெள்ளத் தெளிய அறிந் துள்ளவர். அவர் கூறுகிறார், அதிக எண்ணிக்கை யான மக்கள்- பெரிய நிலப்பரப்பு- நிர்வாகத் திறமையைக் கெடுக்கிறது என்று வங்கத்தைக் காட்டி, பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்ததைக் காட்டி, இதனைத் தடுக்க சக்தியற்றுக் கிடந்த நிர்வாகச் சீர்குலைவைக் காட்டி, தமது வாதத்தை மெய்ப்பிக்கிறார் தோழர் இராமமூர்த்தி.

கல்கத்தாவிலிருந்து இருநூறு மைல் களுக்குள் பஞ்சம் ஏற்பட்டதும், அந்தச் செய்தி கல்கத்தாவிலுள்ள சர்க்காருக்கு எட்டுவதற்கும், அதனைத் தடுக்க சர்க்கார் நடவடிக்கை எடுப்ப தற்கும் உள்ள காலத்தில், பல இலட்சம் மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதென்பது உண்மை யானால், அம்பாசமுத்திரத்தில் பட்டினியால் செத்துமடியும் நிலையிலுள்ள அப்பாசாமியின் அபயக்குரல், அப்பாசாமியும் இறந்து, அவன் மகன் குப்புசாமியம் மண்ணில் புதைக்கப்பட்ட பின்னராவது, டில்லியிலே இருக்கும் அதிகார தேவதைகளுக்குக் கேட்கும் என்று எப்படி நம்புவது? நிலைமையைத் தெரிந்து கொள்வ தற்கே நீண்ட காலம் பிடிக்கிறதென்றால், தகுந்த நடவடிக்கையை டில்லி எடுத்துக் கொள்ளுவதற் குள், நாட்டில் எத்தகைய கேடுகள்- மாற்றங்கள் நிகழ்ந்துவிட வழி ஏற்பட்டுவிடும் என்பதை எவ்வாறு சிந்திக்காமல் இருக்க முடியும்?

நாம், இனத்தைக் காட்டி, மொழியின் மூலத்தைக்காட்டி, பூகோள அமைப்பின் உண்மையைக் காட்டி, பழக்க வழக்கத்தின் அடிப்படை ஒற்றுமையைக் காட்டி, வரலாற்றுச் சுவடிகளின் வளத்தைக் காட்டி, வாதிடுகிறோம். வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு, திராவிட நாடு அமைப்பதற்காக, இதனை எவரும் மறுத்துக் கூறவில்லை. இதுவரை, அறிவின் துணையைக் கொண்டு, ஆனால், தங்களது ஆற்றலை, நமக்கு அச்சமூட்டு ஆயுதம் என்று தவறாகத் தீர்மானித்துக்கொண்டு நமது திராவிட நாடு கோரிக்கையைத் தகர்த்துவிடச் சல்லடம் கட்டுகிறார்கள். நமது பலம், முயற்சி முதலியவன வற்றைச் சுட்டிக்காட்டி, நமது கோரிக்கையின் நியாயத்தை மறுத்துவிட்டதாக, மனத்துள் மகிழ்ச்சி கொள்ளுகிறார்கள் சில குறுகிய மதியினர்.

ஆனால், ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விடாமல், இருக்க வேண்டும். பிரிவினை வேண்டும் என்னும் அடிப்படையில் அனை வருக்கும் ஒற்றுமை இருப்பதை நாம் மறந்தாலும், அவர்களால் மறக்க முடியாது. இன்று வெளிப் படும் காரணத்தில் வேற்றுமை இருப்பினும், உள்ளத்தில் உறைந்து கிடக்கும் உண்மை, எவ்வளவு முயற்சித்த போதிலும், மறைக்கப்பட முடியாமல் என்றைக்காவது ஒருநாள், மக்களிடம் உலவத்தான் போகிறது. அந்த நல்ல நாளும் அதிக தூரத்தில் இல்லை. விரைவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. மொழி வழியா, பூ கோள வழியா, இன வழியா எதன்படி பிரிவினை ஏற்பட்டால், மக்கள் வாழ்வு பெறுவர் என்ற பிரச்சனை எழத்தான் போகிறது. இதற்கான முடிவு, நமது கோரிக்கையில், கேலிக்கும், கண்டனத்துக் கும் இன்று உள்ளாக்கப்படும். நமது கோரிக்கை யில், `திராவிட நாடு' அமைப்பில், இழைந்து இருப்பதைக் காண்பர். திராவிட நாடும் உருவாகி, எதிர்பார்த்தபடி, வளமார் திராவிடமாக இருக்கும் என்பதில் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம். இதற்குச்சில காலம் பிடிக்க லாம். காத்திருப்போம் அதுவரை, கைகட்டி அல்ல, நமது அணிக்கு ஆள் திரட்டிக் கொண்டு. இதுவே நமது பணி, பிறர் கேலிக்கும், கண் டனத்துக்கும் சாய்ந்துவிடாத பெரும் பணி. நம்மைக் காய்ந்தோரும், நமது அணிக்கு நெருங்கி வருவது, நமக்கு ஊக்கமளிக்கிறது என்பது மட்டுமல்ல, நமது கோரிக்கை நிறைவேறும் காலத்தையும் குறைக்கிறது என்று பொருள்.

காரணம் வெவ்வேறானாலும், பிரிக்க வேண்டும் என்னும் குரல் வலுக்கிறது. எங்கெங்கோ இருந்தும் கிளம்புகிறது!

(திராவிட நாடு - 12.12.1948)