அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போலிச் சமாதானம்!

தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதன் அடிப்படைக் காரணத்தை முதலமைச்சர் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அதாவது,

``இந்தி படித்திருந்தால்தான் மத்திய சர்க்காரில் இனி வேலை கிடைக்கும்.''

என்பது அவருடைய காரணங்களில் ஒன்று. இந்தக் காரணம் படிப்பின் அடிப் படைக்கே முற்றிலும் மாறானது. இந்நாட்டிலுள்ள வர்களின் படிப்பு முறை. ஏதாவதொரு வேலை (உத்தியோகம்) கிடைக்கும் என்ற அடிப்படை யின் மீது கற்கப்படுவதால், பலர் படிப்பினால் ஏற்படும் சரியான பயனைப் பெற முடியாதவர் களாகி விடுகிறார்கள் என்று முதலமைச்சரே பல தடவை கூறியிருக்கிறார். முதலமைச்சர் மட்டு மல்ல, உலகிலுள்ள அறிஞர்கள் எல்லாருமே படிப்பின் பயன், வெறும் பதவி பிடிப்பதற்காக இருக்கக் கூடாதென்றும், படிப்பு, தனக்கும் பிறர்க்கும் பயன்படக்கூடிய அறிவைப் பெறக் கூடியதாக அமைய வேண்டுமென்றும் கூறுகின்ற னர். ஆனால், முதலமைச்சர், `இந்தி படித்தால் வேலை கிடைக்கும்' என்று கூறுகிறார்.

எப்படியாவது இந்தி மொழியைத் தமிழ் மக்கள் படித்தாக வேண்டுமென்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்து விட வேண்டு மென்பதற்காகவேதான் முதலமைச்சர் இவ்வாறு கூறுகிறார் என்று நினைக்கிறோம். இல்லாவிட் டால், கல்வித் துறையின் கடைசிப் படியில் போய் நின்று கொண்டு, ``இந்தி படித்தால் வேலை கிடைக்கும். எனவே இந்திப் படியுங்கள்'' என்று ஒரு மாகாணத்தை நடாத்தும் பெரிய பொறுப்பை ஏற்று நிற்கும் முதலமைச்சர் கூறுவாரா? கல்வி யையும் அதனால் பெறப்படும் உண்மையான அறிவையும் பெறாத மக்களையே பெரு வாரியாகக் கொண்ட ஒரு நாட்டில்தான் இவ்விதம் பேசி மக்களை ஏமாற்ற முடியுமேயன்றிக் கல்வி யறிவின் உண்மைப் பயனை உணர்ந்த எந்த நாட்டிலும் இத்தகைய பொருளற்ற பேச்சுக்களால் மக்களை ஏமாற்றித் தங்கள் சுயநல வேட்கை யைத் தீர்த்துக்கொள்ள முடியாது.

இனி, `இந்தி கற்றால்தான் மத்திய சர்க் காரில் வேலை கிடைக்கும்' என்று முதலமைச்சர் கூறியதற்கு நாம் இன்னும் விரிவாக விடை எழுதி, அவருடைய தவற்றை எடுத்துக்காட்ட முன்வந் தால், ``எதற்கெடுத்தாலும் இவர்கள் சர்க்காரைக் குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டிருக் கிறார்கள்.'' என்று சிலர் பொறுப்பற்றும்- பொறுமை யை இழந்தும்- உண்மையை மறந்தும் சாட்டப் படும் குற்றச்சாட்டுக்கு நாம் ஆளாகாமல் மகனே தந்தையின் குற்றத்தை எடுத்துக்காட்டித் திருத்து வது போல், காங்கிரஸ்காரரே காங்கிரஸ் சர்க் காரின் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சர்க்கார் செய்யும் தவற்றைத் திருத்தும்படி செய்வதே இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்கிறது.

எனவே, இந்தி படித்தால்தான் மத்திய சர்க்காரில் வேலை கிடைக்கும் என்று முதலமைச் சரின் கூற்றுக்குத் திருச்சியிலிருந்து வெளிவரும் காங்கிரஸ் இதழான `சிவாஜி' 8.8.48ல் தக்க விடையளித்திருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் நம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள், அவர்களுக்கு இயல்பாகவுள்ள பொறாமையினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளே என்பதை அனைவரும் உணர இது பெரிதும் பயன்படும் என்று கருதிச் `சிவாஜி' இதழில் `பொதுமொழி யாருக்குத் தேவை?' என்ற தலைப்பில் அந்தக் குறிப்புகளில் சிலவற்றை இங்குத் தருகிறோம்.

``மாகாண எல்லைக்கு அப்பாற்பட்ட அனைத்திந்திய அரசாங்க அலுவலகங்களில் வேலைக்குப் போக விரும்புவோருக்கும், வர்த்தக வகுப்பினருக்கும், உல்லாச யாத்ரீகர் களுக்குமே இந்தப் பொதுமொழித் தேவை ஏற்படுகிறது. இத்தகைய தொடர்பை விரும்புவோர் அல்லது தொடர்பைப் பெறக் கூடியவர் 100க்குப் பத்து பேர் தான் இருக்கலாம். 90 சதவிகிதமுள்ள தொழிலாளிகளும், விவசாயி களும் அந்தந்த நாட்டிலேயே அடிப்படை உற்பத்தி உணவுப் பெருக்கம் இவற்றில் ஈடுபட்டி ருப்பவர்களேயல்லவா?

பொதுமொழி ஒவ்வொரு மாணவனும் பயின்றாக வேண்டுமென்ற கவலை ஏற்படுவதே னென்றால் பாட சாலையில் படித்துப் பட்டம் பெறுவதன் லட்சியம் அரசாங்க உத்தியோகம் பெறுவதே என்ற தத்துவம் தோன்றியிருப்பது தான். உண்மையிலேயே படித்துப் பட்டம் பெறுவோர், அனைவரும் உத்யோகங்களுக்குப் போய்விடுவதில்லையென்பதையும் இனியாவது நாம் உணர வேண்டாமா?

ஆனால் இன்று பெரும்பாலான விவசாயி களுக்கும் தொழிலாளிகளுக்கும் கலாசாலைப் படிப்புக் கிடைப்பதில்லை. கல்வி கிடைக்கும் ஒருசிலர் இயற்கையாகவே உத்யோகங்களை நாடுவது இயல்பு. இதனாலேயே இனியும் படிப்பின் பயன் உத்யோகம்தான் என்ற நிலை மாறப் போவதில்லை என்று கருதுவது போலச் செயல் புரியக்கூடாது.

கல்வி வசதி ஒவ்வொரு பிரஜைக்கும் கிடைக்குமென்ற நிச்சயமில்லாத நாடுகளில்தான் படிப்பின் பயன் உத்யோகம் என்ற லட்சியம் நடைமுறையில் தோன்றலாம். இனியும் இந்த நாட்டில் படிப்பின் பயன் உத்யோகம்தான் என்றால் சராசரி அனைவருக்கும் கல்வி கிடைக் காதென்றும், உத்யோகங்களுக்கு செல்லக் கூடிய சிறுபான்மையோருக்கு மட்டுமே கல்விச் சாலைகள் பயன்படுமென்றும் ஆகிவிடும்.

இன்றைய நிலையில் இன்னும் முந்தைய நாள் போலவே கல்வி இன்னும் சிலருக்கு மட்டுமேதான் கிடைக்கிறது. இதனால்தான் மாண வர்களை வருத்தும் பொதுமொழித் தேவை தீரவில்லை. இந்த நடைமுறை உண்மையை மனத்தில் கொண்டே நாம் கூறுகிறோம். சரியான திட்டங்கள் அமலுக்கு வந்து, கல்வி அனைவருக் கும் கிடைத்து வாழ்வுக்குக் கல்வி சகல துறை களிலும் பயன் தரும் நாள் வரை இடைக் காலத் தில் இன்றியமையாத பொதுமொழியாக ஒன்று தேவையாக இருப்பதால், அது ஏற்கெனவே இத்தனை காலம் நம்முடன் பழகிவிட்டதும், அகில உலகத் தொடர்புக்கு ஏற்றதுமான ஆங்கிலமே இருந்துவிட்டுப் போகட்டும் என்று.

ஏனெனில் பொதுமொழியொன்று இல்லா விட்டால் தொடர்பு அற்றுப் போகும் என்று நினைப்பது தவறு. பிரான்சுக்கும், இங்கிலாந்துக் கும் - ருஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் பொது மொழி ஒன்றும் கிடையாது. அதனால் அவற்றுள் தொடர்பு அற்று விட்டதா?

பொதுமொழி இல்லாதிருப்பதால் ஒவ் வொரு ருஷியனுடனும், நேரடியான தொடர்பு கொள்வது அசாத்தியமாயிருக்கலாம். ஆனால் இந்தத் தொடர்பு அவசியமாயிருக்கிறதா? அதேபோல் ஒவ்வொரு வடநாட்டானுடனும், வடநாட்டார் அவ்வளவு பேரும் இந்தி பேசுகிறார் கள் என்று வைத்துக் கொண்டால் கூட, தொடர்பு கொள்ளத் தேவையிருக்கிறதா? இல்லை.

எனவே, இந்த நீண்ட காலத் திட்டத்தின் கீழ் பொது மொழியின் தேவையே அறவே இல்லாமல் போய்விடுகிறது. எனவே ஆங்கிலத்தில் தேவை யும், அந்த அளவில் குறைந்து இன்மையை நெருங்கி விடுகிறது'' என்று எழுதியிருக்கிறது. காங்கிரஸ் இதழான `சிவாஜி' எழுதியிருக்கும் இக்கருத்துக்களை ஊன்றிக் கவனிப்போருக்கு, இந்திக் கட்டாயத் திட்டத்தை எதிர்த்து நாம் நடத்தும் போராட்டம், மந்திரி பக்தவத்சலம் அவர்கள் கூறுவது போல், `அரசியல் வாண வேடிக்கை' அல்லவென்பதும், உண்மையாகவே தமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் நடத்தப்படும் நேர்மையான கலாச்சாரப் போராட்ட மென்பதற்குக் கூறும் போலிச் சமாதானத்தின் உட் பொருள் என்ன என்பதும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.

(திராவிட நாடு - 15.8.1948)