அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போலியின் கேலி

அடி அலமு! ஏண்டி இப்படிப் பிராணனை வாங்கிண்டிருக்கே, பேசாமே, போய்ப்படு இருமலைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ளவேணும், என்ன செய்யறது? கர்மம் யாரைவிட்டது? சனீஸ்வரர் சன்னதிக்கு விளக்கு ஏற்றச் சொன்னேனே செய்தாயோ? என்று, இருமல் நோயை இரண்டே நாளிலே தீர்த்துவைக்கும் அற்புதச் சூரணம் தயாரித்த ஆயுர்வேத வைத்தியர் நாடிப்பரீட்சை நிபுணர் நாகபூஷண ஐயர், இருமல் நோயினால் இரண்டாண்டுகளாக இம்சைப்படும தமது இல்லக்கிழத்தியிடம் கூறுகிறார்.

நான் நாலுநாளாகச் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறேன், நாலு வேளை மருந்து சாப்பிடாமல் இந்த நாசமாய்ப்போன வயற்றுவலி தீராது என்று, கேட்டால்தானே என்று வாழ்க்கைப்பட்டவனிடம் கூறுகிறர், சகலரோக சிவாரணத்துக்குச் சக்திபூஜை செய்து தாயத்து தரும் மந்திர மாடசாமி.

இந்த இருவரும் எங்கே இருககின்றனர் என்ற கேட்க வேண்டாம். எங்கும் உண்டு இது போன்ற போலிகள்.

அந்த வைத்தியன் தயாரித்த மருந்து இருமலை நீக்குவதாய் இருந்தால், அதே நோயால் நொந்துகிடக்கும் தனது மனைவியைச் சனீஸ்வரன் கோயிலுக்கு விளக்கு எற்றும் படியா உபதேசம் செயதிருப்பான்? அது போலவே மந்திரத்தின் உதவியால் நோயைப் போக்க முடியுமென்றால் அந்த மந்திரவாதி, தன் மனைவியின் வலிதீர மருந்து உட்கொள்ளச் சொல்வானா!

போலிகளின் சரக்கு, ஏமாளிகளுக்குத் தானே விற்கப்படும்! இஸ்லாமியர் ஏமாளிகளல்ல! எனவே ஆச்சாரியாரின் சரக்கு அங்கு விலைபோகவில்லை.

ஆயிர்வேத நாக பூஷணத்துக்கம் மந்திர மாடசாமிக்கும் ஒப்பாக எமது அரசியல் தலைவர் ஆசசாரியாரைக் கூறுவதா, துடுக்குத்தனமல்லவா இது என்ற கோபத்துடன் கேட்கத்தான் காங்கிரசாருக்குத் தோன்றும். நாம் கேலிக்கல்ல இங்ஙனம் கூறினது. சற்றே சிந்தனையைச் செலவிட்டால். சிந்திக்கும் அறறல் உள்ளவர்களுக்கு மட்டுமே கூறுகிறோம். போலிவைத்திய பூஷணத்தைப்போல வேதமந்திர மாடசாமியை போலவே ஆச்சாரியாரின் அறிவிலே முளைத்த திட்டமும், அவ்ர வாழுமிடத்துககுப் பயன் தருவதாக இல்லை என்பது விளங்கும். அதன் பயனாக அவருடைய போக்கின் தன்மையும் விளங்கிவிடும்.

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சுயராஜ்யத்தை வரவிடாமல் தடுக்கும் பெரிய தடையைப் போக்கி, வெள்ளையர் அடிக்கடி வீசும் நிந்தனையை நீக்கி, விடுதலை காண விழைகிறாராம்! அதற்காக அரும்பாடுபட்டு, ஜனாப் ஜின்னாவின் பாதத்தைத் தொட்டு, முத்தமிட்டு ஜனாப்ஜீ! இனியேனும் பாரத மாதாவின் தளைகளை உடைக்க வருக! என்று அழைக்கிறாராம். என்றபோதிலும் அந்த ஜினனா, பிடிவாதமாக இருக்கிறாராம்!!

இது இன்றைய அரசியல் நிலைமை என்று ஏடுகளிலே எழுதப்பட்டிருக்கிறது.

பசியுடன் இருப்பவனுக்குப் பழங்கஞ்சி கொடுத்தாலும் பரிவோடு எடுததுப் பருகுவான், ஆனால் கஞ்சிக்கலயத்திலே கடு விஷத்தைக் கலந்து காடியை ஊற்றித் தந்தால் பசிபோக்கிக்கொள்ள வேண்டி அதை யார் பருகுவர்! அதுபோலப் பாக்கிஸ்தானுக்காக இதுவரை பாடுபட்டு, பரங்கியின் எதிர்ப்புக்கும் பனியாவின் சூழ்ச்சிக்கும் வீழாமல் நிமிர்ந்துநின்ற போராடும் ஜானப் ஜின்னா உண்மையாகவே, பாகிஸ்தான் ஆச்சாரியாரால் அளிக்கப்பட்டால், பெற்றுக்கொண்டு நன்றி கூறவா தயங்குவார்? பாகிஸ்துன் என்ற போர்வையிலே ஆச்சாரியார், ஜின்னா முன்பு காட்டியது ஒரு கந்தல்தான்!! பார்வைக்குப் பீதாம்பரம், பிரித்தாலோ அதன் உள்ளே எண்ணற்ற கிழிசல்கள்! அதுபோலப் பெயரளவிலே பாகிஸ்தான் என்று கூறினார் ஆச்சாரியார், ஆனால் நடைமுறையிலே அது கேவலம், மாடு மேய்ந்த வயல்போல இருக்கும். எந்தெந்த ஜில்லாவிலே முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கிறார்களோ அங்கு ஓட் எடுத்துப் பார்க்க வேண்டும என்று கூறுகிறார் ஆச்சாரியார்.

எந்தத் தொடர்ச்சியான, பரந்த பிரதேசங்களிலே, முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ளனரோ, அந்த இடங்களை இணைத்து ஒரு அரசாக்குவதுதான் பாகிஸ்தான் திட்டம் - லாகூர் தீர்மானத்தின்படி, ஆச்சாரியாரின் பாக்கிஸ்தானமோ, ஒரு கேலிஸ்துன்!! இதை ஜனாப் ஜினனா வன்மையாகக் கண்டித்துவிட்டார்.

பாகிஸ்தான் தர நான் இசைகிறேன், காந்தியாரும் கனிவுடன் இதற்குச் சம்மதம் அளித்திருக்கிறார், ஆனால் பிரிட்டிஷாரை விரட்ட, சுயராஜ்யத்திற்காக வேலை செய்ய ஜனாப் ஜின்னா சம்மதித்தால்தான், பாக்கிஸ்தான் தர நான் சம்மதிக்க முடியும் என்று ஆச்சாரியார் கூறினார்.

ஜனாப் ஜின்னா, ஏதோ சுயராஜ்யத்தைப் பெறவேண்டுமே என்ற அக்கறையே இல்லாதவர் போலவும், இந்தக் காங்கிரஸ் சூரர்களுக்கு மட்டுமேதான் சுயராஜ்யத்தைப் பற்றிய சிரத்தை இருப்பது போலவும் அடிமை மனப்பான்மையிலே இருக்கும் ஜனாப் ஜின்னாவுக்குப் பாக்கிஸ்தானைப் பரிசாகத் தந்தாகிலும், சுயராஜ்ய வேட்கையை அவர் உள்ளத்திலே கிளப்பவேண்டி இருப்பது போலவும், ஆச்சாரியார் பேசியிருக்கிறார். ஜனாப் ஜின்னா, சுயராஸ்யத்தின் விரோதி என்று கருதியது போக்கிரித்தனம். அதனை வெளிப்படக் கூறுவது போக்கிரித் தனத்துடன் கூடிய இறுமாப்பு! கூலி போலப் பாகிஸ்தானைத் தருகிறோம் என்ற மனப்பான்மையிலே கூறுவது மமதையின் விளைவான மடமை!

ஜனாப் ஜின்னா, ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் ஏமாளியல்ல, பேரம்பேசும் பூர்ணய்யா அல்ல, காட்டிக்கொடுக்கும் கௌடல்வா அல்ல. கைக்கூலி கேட்கும் அமீர்ச்சந்து அல்ல, ஆண்மையின் அறிகுறி, இஸ்லாமியரின் எழுச்சிச்சின்னம், ஏகபோக உரிமையாளரின் பகைவன்! ஆச்சாரியார், ஜனாப் ஜின்னாவை பாமர மக்கள் தவறாகக் கருதும்படிச் செய்யும் முயற்சி பலிக்காது, இந்த போக்கிரித்தனமான பேச்சு சமரசத்துக்கு வித்து அல்லவா! என்று ஜனாப் ஜின்னா கூறியிருக்கிறார்.
ஆச்சாரியார் வலிய அணைக்கச் சென்றும், ஜனாப் ஜின்னா விலகி நிற்பதாகப் புகார் செய்கிறார். ஆனால் ஜனாப் ஜின்னா வரவேண்டியவர் வரட்டும் என்று ஆச்சாரியாருக்குக் கூறிவிட்டார். கடைகியில், தூது தோற்றுப் போகவே, தரகர் வேண்டாம் என்று ஜனாப் ஜின்னா கூறிவிடவே, காந்தியார், வருகலாமோ! என்று இன்று பாடுகிறார்.

எந்த ஜின்னாவை ஒரு தலைவர் என்றோ பொதுநலத் தொண்டர் என்றோ மதிக்கவும் மறுத்தனரோ, அவரை நாடி, அவதார புருஷர் அந்தராத்மாவுடன் பேசுபவர், போகிறார்!! முஸ்லீம்களுக்கு இவரா பிரதிநிதி அபுல்கலாம் ஆஜாது இல்லையா, எல்லைப்புறக் காந்தி இல்லையா; எத்தனையோ உபயதுல்லாக்கள் இல்லையா, அல்லபிச்சைகளுக்கும் எஞ்சமா என்று பேசிக்கிடந்த காலம்போய், இஸ்லாமியருட்ன் சமரகம் தேட ஜனாப் ஜின்னாவைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு, வைசிராய் மாளிகையை உபவாசத்தாலேயே மிரட்டும் உத்தமகுண வித்தகர்(!) காந்தியார் வந்துவிட்டார்.

ஆகஸ்டு மாத இறுதியிலே, பம்பாயிலே, எனது மாளிகையிலே வந்து காணலாம் இது பத்துக கோடி முஸ்லீம்களின் பாதுகாவலர் அனுப்பிய கடிதத்தின் சாரம் எமது எம்மான், பாரதமாதா பெற்றெடுத்த ம்மான் காந்தி எனும் பெயர்படைத்த சீமான், அவர் பெயரைக் கேட்டால் பிரிட்டிஷ் படை பீதி அடைகிறது, வைசிராய் விடிய விடிய விழித்துக கிடக்கிறார். அமெரி அலறுகிறார், அகில உலகும் புகழ்கிறது, என்றெல்லாம் காங்கிரஸ்காரர் பராக்குக் கூறியது ஒரு நேரம்! இப்போது அந்தத் தற்பெருமைக்குச் சரியான காரம் கிடைத்திருககிறது. இங்கே இரண்டே கட்சிகள், ஒன்றே சர்க்கார், மற்றோன்று காங்கிரஸ்! இரண்டே விதமான ஆயுதங்கள், ஒன்று துப்பாக்கி, மற்றோன்று தக்ளி! இந்த முழக்கம் இன்று எங்கே? முஸ்லீம் லீகை அஹ்ரார்கள் எதிர்க்கிறார்கள், மஜ்லீஸ்கள் எதிர்க்கிறார்கள், ஷியாக்கள் எதிர்க்கிறார்கள், அஜரத் முஸ்லீம்கள் எதிர்க்கிறார்கள், காக்சார்கள் கண்டிக்கிறார்கள், க்கினர் அதட்டுகின்றனர். எல்லைக் காந்தியின் படை விரட்டுகிறது. என்று பேசியும் எழுதியும் வந்த பெருமதியினர் எங்கே? முஸ்லீம் லீக், அடிமைகளின் முகாம், பிரிட்டிஷாரின் செல்லப்பிள்ளை சுயராஜ்யத் தேருக்கு முட்டுக்கட்டை, என்று நாக்கில் நரம்பின்றி நிந்திக்க நேயர்கள் எங்கே?

பதவி வேட்டைக்காகப் பணக்கார முஸ்லீம்கள் சிலர் கூடிக்கொண்டு பாமரமுஸ்லீம்களை வஞ்சிக்கிறார்கள் லீக் என்ற பெயரைக் கூறி, இனிப் பாமர முஸ்லீம்களிடம் நாம் தொடர்பு கொள்வோம், லீகை ஒடுக்குவோம் என்று உரைத்ததுகள் எங்கே! எத்தகைய எதிர்ப்பையும் வெட்டி வீழ்த்த வல்ல பாரதமாதாவின் வாள் எங்கே! பரந்த இந்தியாவைப் பரிபாலிக்கும் உரிமை பெற்றது என்று வர்ணிக்கப்பட்ட தோள் எங்கே! எங்கே அன்றைய இறுமாப்பு!

காந்தியார், ஜனாப் ஜின்னாவைக் காணச் செல்வது கேட்டுக் கேலிசெய்வதல்ல நமது நோக்கம். காந்தியார், சொல்ல இசைந்ததால் ஜனாப் ஜின்னாவின் கீர்த்தியும் மதிப்பும் அதிகரித்துவிட்டது என்று நாம் கூறவில்லை, ஜனாப் ஜின்னாவுக்குக் காந்தியார் இந்தக் கனிவு காட்டுவதற்கு முன்பே, கீர்த்தியும் மதிப்பும் உண்டு என்பது தெரிந்திருப்பதால், நாம் கூறுவது, நிலைமை எப்படியாகும், என்பதை உணர்ந்து உரையாடும் சக்தி இன்றிக் காந்தியார்கள் அந்த நாளிலே பேசினரே, அந்தப் போக்கு மிகமிகத் தவறானது என்பது இப்போதாவது அவர்களுக்குப் புரியவேண்டும் எப்தற்காகவே இதனை எழுதினோமே தவிர, வீண்பெருமை கொண்டல்ல தேர்தலிலே வெற்றிபெற்ற உடனே, செல்லுமிடமேங்கும் செருக்குடன் நடந்தவர்கள் இன்று, செக்குமாடுகளாகி விட்ட காட்சி, சிந்தனைக்கு உரியது.

காந்தியாரை, மகாத்மா என்று மாநில முழுதும் விளம்பரப்படுத்தினர். அவர் சாதாரணமானவரல்லர், அவதார புருஷர் என்று கூறினர். அவர் சொல்லும் செயலும், அவருடைய அறிவுன் விளைவுகள் என்று கூறவில்லை. அவ்வளவும் அந்தராத்மா அவருக்கு அருள்புரிவதாகும் என்று உபதேசித்தனர். அவர் இமாலயத் தவறு புரிவார், கங்கைபோல் கண்ணீர் உகுப்பார், ஆனால் அவரே கண்கண்ட தெயவ்ம் என்று கூறினார். அவருடைய கைத்தடி, பிரிட்டிஷ் படையை விரட்டியடிக்கும் மந்திரக்கோல் என்று மொழிந்தனர். அவர் இந்தியாவுக்குத் தலைவர் மட்டுமல்ல, ஆசியாவின் ஜேழதி, அது மட்டுமல்ல, அகில உலகுக்கே அகிம்சா மூர்த்தி என்று அகவல் பாடினர். இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகுக்கே அந்த உத்தமரே விடுதலை வழங்குவார் என்றனர். சீடகோடிகளின் சிந்து, பக்தகோடிகளை மக்கத்திலே வீழ்த்தியது அல்ல வேடிக்கை, குருவையே மயக்கத்திலே ஆழ்த்திவிட்டது. அவ்வளவு அளவுமீறிக் காந்தியார் மீது பஜனை பாடினர், மற்ற எந்தத் தலைவரும், பிரிட்டிஷாரின் கையாள் என்று சாடினர், இன்று என் செய்கின்றன்ர. இந்த நாப்பறையாளர் என்று கேட்கிறோம்.

இவ்வளவு பூஜைக்கு உரியவராகி அஸ்ரமசாசியாகி, அந்தராத்மாவின் விஜவாசியாகிய காந்தியாருக்கு சரி, ஆகஸ்ட்டு மாதத்திலே, பம்பாயிலே என் மாளிகையிலே வந்து என்னைப் பார்க்கலாம் என்று எழுத ஜனாப் ஜின்னாவுக்கு எப்படி மனந் துணிந்தது? காந்தியாரின் கட்டளையை வேதமாகக் கருதுவோர் கணக்கற்றவர் உள்ளனரே இங்கு அவர், கனவிலே தோன்றினாலும் கைகூப்பித் தொழும் கனதனவான்கள் உள்ளனரே! சிற்றரசர்களும் சீமான்களும் அவருக்குச் சேவை செய்யச் சித்தமாக உள்ளனரே, அப்படிப்பட்ட மகானை, கொடுமுடிக் கோகிலமும், தேசிய விநாயகரும், நாமக்கல்லாரும், நாவலர் கலியாணசுந்தரனாரும் ஏத்தி ஏத்தித் தொழும் தேவனை, மாளிகை மாடியிலே நின்றுகொண்டு மக்களுக்குத் தெரிசனம் தரும் திவ்யசொரூபனை, வெள்ளை மாது பணிவிடைபுரியும் படியான பேறு பெற்ற பெம்மானை, ஒரு வகுப்புவாதி, ஏகாதிபத்தியதாசர் சமரச விரோதி வீட்டுக்கு வா என்று அழைப்பதா, அதைக்கேட்டுக்கொண்டு நாம் வெட்கத்தால் ஒரு முழக்கயறு தேடாமல் நிற்பதா, என்று காந்தீயர்கள் சஞ்சலப்படத் தேவையில்லை. ஜனாப் ஜின்னா, இவ்வளவு காந்திபுராணம் நாட்டிலே குவிந்த பிறகும், காந்தியாரை, சாதாரணமாக ஒருதலைவராக மட்டுமே மதித்து, அவருடைய மகிமையோ, மகாத்துமாத் தன்மையையோ கண்டு மயங்க மறுக்கும் காரணம், அவருடைய இஸ்லாம்! ஆம்! இஸ்லாம், மனிதனைத் தேவனாக்கும் தரகருககு இடம் அளிக்காது அவதார புருஷர்களுட்ம, திருத்தூதர்களும், அடிக்கடி வருவார்கள் என்று நம்பவேண்டாமம் என்று இஸ்லாம் போதிக்கிறது. அவர்கள் நபிகள் நாகயம் அவர்களே. இறதி நபி என்ற கோட்பாடு கொண்டவர்கள், எனவே மனிதரைத் தேவதூதனாக்கும் செயலுக்கு அவர்கள் மதிப்பளிக்க மாட்டர்கள். இந்துக்களுக்கு அப்படியல்ல! இமைகொட்டுவதற்குள் ஒரு புதுத்தேவன் வரக்கூடும்! மனித உருவில் மட்டுமல்ல! மச்சம், கூர்மம், வராகம், வானரம், மரம், எந்தனையோ உருவிலே வரக்கூடும என்ற பித்தலாட்டத்தைப் பெரியதோர் உண்மை என்று நம்பும் ஏமாளித்தனம் இந்துமார்க்கத்தவரிடம் குடி கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் காந்தியாரைத் தயக்கமின்றி கடவுள் அவதாரமென்ற ஏற்றுக்கொண்டனர். இஸ்லாம் இதனை மறுக்கிறது. இஸ்லாமியரின் இமணையில்லாதத் தலைவராம் ஜனாப் ஜின்னா, காந்தியாரைத் தமது மாளிகைக்கு வந்து பார்க்குமாறு சொன்னதம்ன மர்மம் இதுதான். காந்தியாரை ஒரு மகாத்மா என்று ஏற்க, இஸ்லாமியர் பண்பிலே தேறிய ஜனாப் ஜின்னா மறுக்கிறார். இது முற்றிலும் முறையே!! இஸ்லாத்தின் பண்பும் பயிற்சியும், எவ்வளவு விளமபரம் தரப்பட்டாலும், எத்தனை நூறு பத்திரிகைகள் நித்த நித்தம் புகழ்பாடினாலும, எத்துணை புரசாரகர்கள் ஆதரவுதேடித் திரட்டினாலும், யாரையும் மனிதத் தன்மைக்கு மேம்பட்டவராக நம்பும்படியான நிலைமையை உண்டாக்காது என்பதை உணராமலேயே காங்கிரசார், காந்தியாரின் மகாத்துமாத்தன்மையை மட்டுமே நம்பினர், இன்று மனம்வெம்பினர். மொட்டைச்சாமி, குட்டைச்சாமி, கட்டைச்சாமி, கோவணச்சாமி, நிர்வாணச்சாமி, மௌனச்சாமி,உண்ணாவிரதச்சாமி, பொன்செய்யும்சாமி, பொட்டைக் கண்ணைத் திறக்கும்சமி, மன்னார்சாமி, என்று, யாரையும் தேவனாகக் கொள்ளும் கோணல்புத்தி இந்துக்களிடம் இருப்பதாலேயே, காந்தியாரை மகாத்மாவாக்கி, அரசியலுக்கு அதிபராக்க முடியும் என்று காங்கிரஸ் சூத்திரதாரிகள் துணிவுபெற்றனர்.

பார், யாரைப்போய்ப் பார்க்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். இந்த சந்திப்பின்போது, காந்தியார், தமது மகாத்மா மகிமையை நம்பிக்கொண்டிருப்பரானால், காரியம் சித்தியாகாது இஸ்லாமியப் பண்பு தெரிந்த இணையில்லாத் தலைவர், இஸ்லாமியரின் ஏகப்பிரதிநியிடம் பேசுகிறோம் என்ற நினைப்புடன், பேச வேண்டும. எவ்வளவோ, தூற்றித் துவைத்து, மிதித்து அழித்திட முய்ன்று, முடியாததாலேயே இன்று ஜனாப் ஜின்னாவைக் காண வந்திருக்கிறோம் என்பது காந்தியாரின் நினைவிலிருக்கவேண்டும. சில ஆண்டுகளுக்குள், முஸ்லீம்களை ஒதே முகாமிலே கொண்டுவந்து சேர்த்த தீரனிடம் உரையாடப் போவதை உள்ளத்திலே நிறுத்த வேண்டும். ஆஸரமவாசி என்பதற்காகவோ, ஆட்டுப்பால் அருந்துபவர், அரை நிர்வாணி, அகிம்சா மூர்த்தி என்ற காரணங்களுக்காகவோ, மதிப்புக் கொடுப்பவர் ஜனாப் ஜின்னா அல்ல என்பதை மனத்திலே பதிய வைத்துக்கொண்டு, கவைக்கு உதவக்கூடிய திட்டத்தைப் பற்றிக் கள்ளம் கபடமின்றி, ஒருபதம் ஒருபொருள் என்ற முறையிலே இல்லாமல், திறந்த மனத்துடன் திட்டமாகப் பேசிடுவதே நலன்தரும. இப்போது காந்தியாரின் கைவசம் இருக்-கும் ஆச்சாரியாரின் திட்டம் நாம் கூறியிருக்கிறபடி, மந்திரமாடசாமி, ஆயுர்வேத நாகபூஷணம் போன்ற போலிகளின் திட்டம், அதை ஆதாரமாகக்கொண்டு காரிய சித்தி அடைய முடியாது.

ஏன், ஆச்சாரியாரின் திட்டத்தைப் போலித்திட்டம் என்று கூறுகிறோம் என்றால், உண்மையிலேயே ஆச்சாரியாருக்கு இன எழுச்சியை உணர்ந்து இன அரசு அமைக்கவேண்டுமென்பதிலே இருதய பூர்வமான அக்கரை இருக்குமானால், எந்தப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேசுகிறாரோ, அந்தப் பாகிஸ்தானுக்கு எவ்வளவு தேவை இருக்கிறதோ அவ்வளவு தேவை திராவிட நாட்டிற்கும் இருக்கிறதென்பதை உணருவார். அதற்காவன செய்வார். அதைவிட்டார், ஆயிரம் மைலுக்கு அப்பால் சென்று அன்பு அளிப்பு இதோ என்று கூறுகிறார். இதை எப்படி நம்புவது? மனைவிக்கு இருமல், மருந்துதரவில்லை வைத்தியர், அவர் இருமலைக் குணப்படுததும் சூரணம் இருப்பதாகப் பிறருக்குக் கூறினால், அதுபோலிதானே அதுபோலத்தான் இருக்கிறது ஆச்சாரியாரின் போக்கும் அந்தப் போலி நம்மைக் கேலிசெய்கிறார் நமது கோரிக்கையைக் கவனிக்க மறுத்து பாகிஸ்தானுக்காகக் கிளர்ச்சி பலமாக இருக்கிறது. ஆகவே, ஆச்சாரியார் அதைனைக் கவனிக்கிறார், நமது திராவிடநாடு தனிநாடாக வேண்டுமெனக் கோரிக்கை தேங்கிக் கிடக்கிறது ஆகவேதான் ஆச்சாரியார் அதைக் கவனியாமலிருக்கிறார் என்ற சிலர் கூறுகின்றனர். பாகிஸ்தானுக்காக நடத்தப்படும அளவு கிளர்ச்சி, திராவிடநாடு பெறக் செய்யப்படவில்லை என்பது உண்மையே! ஆனால் நீதியை நெறியாகக் கொண்டவர்கள், இதனைத் தக்கதோர் காரணம் என்ற கூறக் கூசுவர். யூகம் தெரிந்தவர்களுங்கூட, இன்று அவ்வளவு வலிவாகக் காணப்படவில்லை என்பதற்காக, வளர்ந்து வலிமைபெறக்கூடிய கோரிக்கையைக் கவனிக்க மறுக்கமாட்டார்கள் ஆச்சாரியார், நீதிக்கோ, பூகத்துக்கோ, கட்டுப்பட்டவராணால் முதலிலே திராவிடநாடு தனிநாடு ஆவதற்காக கிளர்ச்சியைக் கவனித்து, அதற்கோர், சமரசத் திட்டம் தயாரித்துவிட்டுப் பிறகு விந்தியமலைக்கு அப்புறம் சென்றிருப்பார், அங்ஙனம் செய்யாமல், இங்குள்ள திராவிடரின் வேண்டுகோளைக் கேளாக் காதிலே வாங்கிக்கொள்கிறார்! இன்றைய வேண்டுகோள், நாளைக்குக் கட்டளையாகிவிடும் என்று அரசியல் அரிச்சுவடி கூறும். அதைப் படிக்க மறுக்கிறார்! ஒற்றுமையுடன் ஒரு கொடிக்கீழ்நின்று உறதியுடன் உரைத்ததால், இன அரசுக்கு வழிகிடைக்கப் பெற்றனர் இஸ்லாமியர். ஆச்சாரியார், அடிக்க முயன்றார் முடியாது போகவே இஸ்லாமியரின் அடிவருடுகிறார் என்பது திராவிடருக்குத் தெரியவந்தால், திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழககம், கேளாக் காதையும் கேட்கவைக்கும்!! திராவிடரே! உமது உரிமையைக் கேட்க வாய் இல்லையா! இனஎழுச்சி, கட்டுப்பாடு, கிளர்ச்சி, ஆணவக்காரரை ஆட்டுக்குட்டிகளாக்கி, ஆர்ப்பரிப்பை ஆலாபனமாக்கி, கசையடி தந்தவரைக் காவடி தூக்கச் செய்துவிட்ட காட்சியைக் காண உங்கட்கக் கண்கள் இல்லையா!! திராவிட இனம், தனி அரசு அமைக்க வேண்டும் என்று உறுதிகொள்ள மனம் இல்லையா! வீரர் இங்கே இல்லையா! விழியற்று, பொழியற்று, வாழ வழியற்று, ஒரு இனம் நடமாடுவானேன்! கடல் இருக்குமிடம் தெரியாததாலா!!

(திராவிடநாடு - 06.08.1944)