அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போர் ஒழிந்தது
“ஜெர்மனி விஷயம் போல அல்ல. ஜப்பானுடையது. அதன் போக்கே தனியானது! தற்கொலை செய்து கொண்டாலும் கொள்வார்களே யொழிய, ஒரு நாளும் எதிரியிடம் சரணாகதி அடைய மாட்டார்கள்!

வீரத்திலே, தியாகத்திலே, ஜப்பானியருக்கு இணை யாரும் கிடையாது. ஆசியாவின் அசகாய சூரனான ஜப்பானிடம், அமெரிக்க, பிரிட்டன், சைனா முதலிய எந்நாடும் ஒன்றும் செய்து கொள்ள முடியாது ஆச்சரியப்படத் தக்க விதத்திலே, பல ஆயுதங்களைப் பிரயோகிக்கும் ஆற்றல் படைத்தது ஜப்பான்! பிரின்ஸ் ஆப் வேல்ஸ், ரிபல்சும், எவ்வளவு பிரமாண்டமான போர்க்கப்பல்கள், ஒரு விநாடியிலே கட டியிலே அவை இரண்டும் மூழ்கும் செய்துவிட்ட வீரத்தைக் காணீர்!

மகாசமுத்திரம், பசிபிக் மச எனும் இரு இடங்களிலும் ரும் இனி இருக்க முடியாது!!

பர்மா, மலாய், தாய்லாந்து, போர்னியோ, நியூகினி, பிலிப்பைன்ஸ், அந்தமான், எங்கும் வெற்றி! எதிர்ப்பு யாவும் தவிடுபொடி!

அமெரிக்காவைத் தாக்கத் திட்டம் இருக்கிறது! பலூன் மூலம் பயங்கரமான வெடிகுண்டுகளை அனுப்பத் திட்டம் தயாராகிவிட்டது.

டோக்கியோவை எட்டிப் பார்க்கக் கூட முடியாது நேசநாட்டினரால்.

சைனாவிலே முக்காலே மூன்று வீசம் முடிந்துவிட்டது, அங்கு ஒப்புக்குத்தான் போர் நடக்கிறது, அதுவும் விரைவிலே ஒழிந்துபோகும்!”

என்றெல்லாம் விளம்பரப் படுத்தப்பட்ட ஜப்பான், சரண் புகுந்துவிட்டது. மன்னர் மன்னன் ஹிரோஹீட்டோ, அந்நாட்டினருக்குக் கண் கண்ட தெய்வமாம்! அவருடைய திவ்யதரிசனமே பாப விமோசனமாம்! பேசுவது அபூர்வமாம்! ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணிவதில்லையாம். களைந்த ஆடை, மந்திரிப் பிரதானியருக்குப் “பிரசாதமாக” வழங்கப்படுமாம்! அந்தத் “தெய்வம்” தன் தேச மக்களை ரேடியோ மூலம் அழைத்து, “உத்தம மக்காள்! உலக க்ஷேமத்தை முன்னிட்டும், நம்நாட்டு நலனைக் கோரியும் ரம் சரணாகதி அடையுமாறு நம் நாட்டுச் சர்க்காருக்கு உத்திரவு பிறப்பித்துள் திருவாய் மலர்ந்தருளினராம்! மன்னரின் நிலைமை இருக்கட்டும், மக்களின் நிலை என்ன அங்கு? தோல்வி நேரிட்டதால் துக்கமும் வெட்கமும் கொண்டு, புரண்டு அழுதனராம்! கண்ணீர் பெருக்கிய வண்ணம் காவலன் காலடி வீழ்ந்து, “கடையராம் எம்மைக் கருணை கூர்ந்து பொறுத்திடுக” என்று இறைஞ்சினராம். முதலமைச்சராக இருந்த சுஜுகி “இந்த மண்டலாதிபதியின் கட்டளைப்படித் தாயகத்துக்கு வெற்றி கொண்டு வர முடியாத வீணனான நான் இனி அமைச்சனாக இருக்கும் அருகதை உடையவனல்ல; பதவியை ராஜிநாமாச் செய்கிறேன்” என்று கூறிவிட்டார். போர் மந்திரியோ, தற்கொலையே செய்துகொண்டாராம்!

இந்த நிகழ்ச்சிகளெல்லாம், மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தீட்டப்பட்ட கதைகளிலே காணப்படும் சம்பவங்கள் போன்றுள்ளன. இந்தத் திரையின் மூலம், புள்ளி போடத் தெரியாமலும், தன்வலி மாற்றான் வலி உணர முடியாமலும், ஆழம் தெரியாமல் குழியில் இறங்கியும் ஜப்பான் படுதோல்வி அடைந்ததை மறைக்கப் பார்க்கின்றனர். ஜப்பானியர், நாட்டுச் சண்டையிலும், கள்ளத் தாக்குதலிலும், ஓரளவு வெறி கொண்டவர் என்பது உண்மை, ஆனால் உலகிலேயே அவர்களுக்கு இணையான வீரர் இல்லை என்று கூறுகூது கட்டுக்கதை! இன்றையப் போரிலே, எந்த நாட்டினரால் அதிகக் காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடிகிறதோ, எந்தத் தேசத்தின் செல்வவளம் செம்மையாக இருக்கிறதோ, எங்கே மக்களின் மனவளம் சீராக இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி சென்று தங்கும், இந்தப் போரின் ஆரம்ப காலத்திலே பிரிட்டனைப் போலப் பாதுகாப்பும் பலமுமற்று இருந்த நாடு வேறு எதுவுமில்லை. ஆனால் தனியே நின்று அந்நாடு போராடினதன் பலன் இன்று தன்னிகரற்று விளங்குகிறது. ஜப்பானோ, வெற்றி கிடைத்தவரையிலே வெறியும், தோல்வி தொடரத் தொடங்கியதும் கண்ணிருமாகக் காட்சி அளிக்கிறது. அணுகுண்டு வீசினர், அவதியைப் பொழிந்தனர்; சோவியத்தும் படை எடுத்தது; சொல்லொணாக் கஷ்டம், எனவே பணிவதன்றி வேறோர் வழி இல்லை என்று இன்று பேசும் ஜப்பான், 1931 முதல், சைனாவைச் சித்திரவதை செய்து வந்தது. பல இலட்சம் சீனர்கள், வாழ்வு நொறுங்கிக் கூலிகளாய், பிச்சை எடுப்பவராய், பிணமாய்ப் போனதற்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டதில்லை. சீன மக்கள் செய்த குற்றம் என்ன? பட்ட கஷ்டம் எவ்வளவு! சீனாவிலே வளமான பகுதிகளை ஜப்பான் அபகரித்துக் கொண்டது; சுற்றி வளைத்துக் கொண்டனர் ஜப்பானியர். பலமற்ற நிலையிலே பிரிட்டன் பர்மாப் பாதையை மூடிவிட்டது; ஆயுதம் இல்லை; ஆபத்துக்கோ எல்லையில்லை; உள் நாட்டிலேயோ துரோகிகளின் தொல்லை; உள்நாட்டுப் போர் வீரர்களுக்குள்ளாகவே சியாங் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட்சி என்ற சிக்கல். இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு மரணப் படுகுழயில் விழ மறுத்துக் கொண்டு 8 ஆண்டுகளாக மகத்தான போரை நடத்திக் கொண்டு வந்தனர் சீனமக்கள்! ஒரு பெரிய பழய, கீர்த்தி வாய்ந்த பிற நாட்டினிடம் பிரேமையன்றி கேடான நினைப்புக் கொள்ளாதிருந்த சீனரை சித்திரவதை செய்ததை உலகம் ஒரு நாளும் மறவாது, மன்னரும் மக்களும் மாரடித்து அழுத போதிலும், அந்தக் கொடுமை மறையாது!

ஜப்பானின் சரணாகதியை அணுக்குண்டு துரிதப்படுத்திற்று; அது ஒன்றேதான் காரணம் என்று நாம் கூற மறுக்கிறோம். அணுக்குண்டுவின் உதவியின்றியே, ஜப்பானை முறியடிக்கும் “வல்லமை” நேச நாட்டினருக்கு ஏற்பட்டுவிட்டது. ஜப்பானைச் சுற்றி வளைத்துக் கொண்டாகி விட்டது. கடற்படை ஒழிந்து, விமானப் படை நொறுங்கி, தரைப்படைகள் திக்குக்கொன்றாக இருக்கும் நிலையிலே ஜப்பான், ஆறேழு திங்களிலே அடிபணிந்தே தீரும், அணுக்குண்டுவினால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோவியத் சம்மட்டி அடியும், சரணாகதியைத் துரிதப்படுத்திற்று, பிடிபட்ட நாடுகளை நிரந்தரமாக அனுபவிக்கலாம் என்று ஜப்பான் நினைத்தது. பெயர் மாற்றுச் சடங்குகூட நடந்தது. மன்ச்சூரியா - மன்ச்சுக்கோவாயிற்று. சிங்கப்பூர் - ஷோனான் ஆயிற்று.

இனி பிடிபட்ட நாடுகளை இழப்பதோடு மட்டுமின்றி, ஆசியாவையே கட்டி ஆள வேண்டுமென்று கொண்டிருந்த பேராசையையும் கைவிட்டு, ஜப்பான் இனியேனும், தன் நிலையுணர்ந்து நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடக்கம் தேவை! என்று அந்த நாட்டுத் “தெய்வம்” உபதேசித்ததாம்! மிகக் காலங் கடந்து வந்த உபதேசம், என்றாலும், இனியேனும் அந்த நாடு அந்த வாசகத்தை வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளட்டும். ஹிரோ ஹிட்டோ என்றால் சாந்தசீலர் என்று பொளாம், ஜப்பானிய மொழியிலே! இதுவரை ஜப்பானிலே சாந்தமும் இல்லை, சீலமும் காணோம்! இனியேனும் அவை தோன்றுமாக!

உலகிலே மக்கள் சொல்லொணாக் கஷ்டங்களை அனுபவிக்கும் நிலைக்குக் காரணமாக இருந்த இரு பெரும் போரும் ஒழிந்தன. மீண்டும் அமைதி ஆளவந்திருக்கிறது. இனியேனும் வல்லரசுகள், வம்புகளைத் தூவாமல், வாழ்வது பிறரையும் வாழ வைப்பது என்ற இலட்சியத்தோடு காரியங்கள் நடத்திப் புண்பட்டுக் கிடக்கும் மனித வர்க்கத்துக்குப் புதுவாழ்வு கிடைக்கும் பணியை மேற்கொள்ளுமாக!

(திராவிட நாடு - 19.8.1945)