அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொன் தந்து மண் பெறுவோர்!

“பாராளும் பாக்கியசாலியாயிருக்காரே, இவர் யார் தெரியுமா, என்னிடம் படித்தவர் படிக்கும்போது, சுத்த மக்கு அதட்டியவன் நான், இன்றோ, நம்மையெல்லாம் ஆளும் மந்திரியாகயிருக்கிறார்.

பச்சையப்பன் கல்லூரித் தலைவர் தோழர் கிருஷ்ண மூர்த்தி டில்லி மந்திரி கே.சி. ரெட்டியை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த போது இதுபோலக் குறிப்பிட்டாராம்! பச்சையப்பன் கல்லூரித் தலைவர் மட்டுமல்ல. அவரைப்போல ஆசீரியப்பீடத்து அமர்ந்திருக்கும் பலருக்கு, கடைசியில் மிஞ்சுகின்ற பெருமை இதுதான்.

“என்னிடம் படித்த பையன்!“

“உலகமே புகழ்கிறது – காதுக்கு, இனிப்பாகயிருக்கிறது, தம்பி, கேட்க! சௌக்யமாயிருந்தால், சந்தோஷம்.“

“சரமாரியா வாதாடுகிறானே மேடையில்! அப்பப்பா, படிக்கும்போது, அவன் முதுகில், எத்தனை தடவை இந்தக் கை விளையாடிருக்கும் தெரியுமா?“

இதுபோலப் பலர், நாட்டின் நானாவிடங்களில்லாம் பெருமூச்சு விடாமலில்லை! ஆரம்ப ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் – ஒவ்வொருவரும், தம்மிடம் படித்தவன் முன்னுக்கு வந்திருப்பதைப் பற்றி இன்னொருவரிடம் பேசும்போது வீட்டு வாடகை கொடுக்கவில்லையே இன்னும்! பெரிய மகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டுமே! ‘முதல் தேதி‘ எப்போது வருமோ! அரிசியிருக்கிறதோ! இல்லையோ! என்கிற கவலைகளைக்கூட மறந்து, ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆனந்தத்தை அடைவர்! அப்படிப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் நடமாடும் தெய்வங்கள் எழுத்தறிவித்தவன் இறைவனாகும். மாதாபிதா குரு தெய்வம், பார்த்தாயா குருவுக்கு அடுத்தபடிதான் தெய்வங்கூட – என்ற அவர்தம் புகழ் குறித்து அந்தாதி பாடாதோர் கிடையாது! ஆசிரியத் தொழிலலைப் பாராட்டுவதென்றால், வாய்மணக்க, தமிழ்துள்ள, சரமாரியாகப் பேசுவர்! ஆனால், நாட்டில் அவர் தம் நிலையோ – எண்ணக் கொடுமை! நினைப்பே நெருக்க நெருப்பு வயிற்றில் தீ எரிந்தாலும் வகுப்பறையில் ஒரு மாணவன் ‘முதல்மார்க்கு‘ பெறும் புத்திசாலியாயிருப்பதைக் கண்டு விட்டால், மனைவிமீது கொண்ட கோபம் மாறும் அடையாத பேரின்பத்தைப் பெற்றுவிட்டதாக அகமகிழ்வர் மாணவன் யார், மகனோ! நாளைய தினம் சம்பாதித்து ஒரு பைசாவும் தனக்குப் தரப்போவதில்லை என்றும் தெரியும்!! - ஆயினும் அந்த ஆசிரியப் பெருந்தகையின் மனதில் அவனைப் புத்திசாலியாகக் காணும்பேது, சுரக்கும் அன்பு வெள்ளத்துக்கு ஈடேது, உலகில்?

தாயினும் பெரியோர்! தந்தையினும் சிறந்தோர்! வழிகாட்டும் விளக்குகள்! சமூகத்தை வளர்த்தெடுக்கும் கருத்துக் கொல்லர்கள்! நடமாடும் கடவுள்கள்! ஆனால், அவர்தம் நிலையோ ஏட்டில் இதோ ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது. ஆசிரியரைக் குறித்து ஓவியருக்குச் சிரமமேயில்லை – உடைந்த கண்ணாடி ஒட்டுப்போடக் காது வரையில் போயிருக்கும் நூல் கயிறு கிழிந்து போய்த் தொங்கும் ஒரு மேலங்கி, ‘இங்கி‘ ஒழுகிக் கிடக்கும் வேட்டி, சீவப்படாமலிருக்கும் தலை, கையில் ஒரு பிரம்பு – சுலபமாகத் தீட்டிவிடுகிறார்! அதைப் பார்த்ததும் நாமும், ஆசிரியர்கள் என்று தெரிந்து கொள்ளுகிறோம்!

ஆசிரியர்களின் வறுமை, பிரசித்தமாகிப் போய்விட்ட ஒன்று பிரெஞ்சுப் புரட்சியின் காரணத்தை அறிந்து அலசும் அந்த இதயம்! ஆனால், ‘சம்பள உயர்வு, கேட்டால் மானேஜர் என்ன சொல்வாரோ, என்று மிரளும்! ரஷ்யாவில் மடமடவெனச் சாய்ந்த ஜாரின் கொடுங்கோன்மைகளைப் பற்றி, விளக்கும், வகுப்பறையில் – ஆனால் நாலு பேராகப் போய் ‘கல்வி மந்திரி‘யைப் பார்த்து நன்மைகளைப் பெறலாமே என்றால், அஞ்சும் – வேலைபோய் விட்டால் வீட்டில் தன்னை நம்பியிருக்கும் ‘பெரும் குடும்பத்துக்கு’ என்ன செய்வது என்கிற அச்சத்தால்! தேர்தல் நடைபெறும் ஊரில் தன்னிடம் அனா ஆவன்னா கற்றுக் கொண்ட காளிமுத்துதான் நிற்கிறான் என்பது தெரியும்! எனினும் ‘யாருக்கு ஓட்டு போடலாம்? என்று பிறரிடம் தெரிவிக்கவே அஞ்சும்! ஏனெனில், அரசியலில் கலந்து கொண்டதாக எங்கே அரசாங்க ஓலை வந்துவிடுகிறதோ என்கிற அச்சத்தால்! ஊரிலே பெரிய விருந்து, மந்திரிக்கு – கலெக்டர், டிஎம்ஓ, தாசில், பணம் பெருத்தோர் – எல்லோரும் போவர், ஆனால், ஆசிரியர், அவர்களையெல்லாம் பயிற்றுவித்த ஆசிரியரோ வீட்டுத் திண்ணையில் கிழிந்து போன பாயில் உட்கார்ந்து கொண்டு ‘கம்போசீஷன்‘ நோட்டைத் திருத்திக் கொண்டிருப்பார்! இவ்விதம் குறைந்த சம்பளம், கௌரவம இன்மை, வறுமைத் தொல்லை ஆகியவைகளுக்கு இரையான, ஒரு தொழில் உண்டென்றால், அது ஆசிரியத் தொழில்தான். பொன் தந்து மண்பெறுவோரைக் காண முடியாது! ஆனால், ஆசிரியத் தொழிலில் நாடு வாழ, நேரம் தந்து, தங்களைச் சாகடித்துக் கொள்ளும் ஆசிரியர்களைக் காண்கிறோம்! பாடுபவடுவது, அதிகம் – கண் விழிக்கும் நேரம் அதிகம் தொண்டை நீர் வற்றுகிறது வகுப்பில் – ஆனால், கிடைக்கும் ஊதியமோ, கண்றாவி, இப்படிக் குறைந்த ஊதியம் அவர்களுக்கு இருப்பதாலேயே, போலிகளுக்குச் சாமரம் வீசும் பொல்லாத இச்சமூகத்தில், ஆசிரியர்களுக்கு அந்தஸ்து ஏற்படவில்லை! அத்தொழில் என்றாலே அஞ்சுகின்றனர் – படித்தோர், அதைவிட, குமஸ்தாவாகி, ஓட்டிவிடலாம் காலத்தை என்றெண்ணுகின்றனர் ஆசிரியர்கள் பஞ்சம், அதிகமாகிறது நாட்டில்!

இந்தக் கேட்டை எண்ணாத நாளில்லை, நாம் எடுத்துரைத்ததுண்டு, பலமுறை, எனினும், கேளாக் ககாதினராய் இருந்தனர், ஆளவந்தார். எனினும், இப்போது எப்படியோ திடீர் விழிப்பு ஏற்பட்டு சட்டசபையில் தோழல் சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். ஒரு தித்திக்கும் செய்தியை.

ஆரம்ப ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளிகளிலுள்ள ஒரு சில ஆசிரியர்களுக்கும் ‘பென்ஷன்‘ தரப்படுமாம்!

வரும் ஏப்ரலிலிருந்து விலகும், இந்த ஆசிரியப் பெருமக்களுக்கு ‘பென்ஷன்‘ அளிக்கப்படுமாம்.

மகிழ்கிறோம், நாம்! மனதார வாழ்த்துகிறோம், மந்திரிசபையை! நாட்டின் ‘சாபத்தைப்‘ பெற்று வரும் நண்பர் சுப்ரமணியத்தை, ஒட்டிய வயிறுடன் உலவும் உத்தமர்கள் பலர், நிச்சயம் வாழ்த்துவர் அந்த வாழ்த்துதலைப் பெறும் அருகதையை, இப்போதாவது ஏற்படுத்திக் கொண்டமைக்காக உள்ளபடியே பாராட்டுகிறோம். நீண்டநாள் கோரிக்கை, நினைப்பில் இடம் பெற்றமைக்காக, நிச்சயம் மகிழும் நாடு.

இப்படி பென்ஷன் தருவதால், சர்க்காருககு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்தான் செலவழிகிறதாம்.

ஒரே ஒரு லட்சம் ரூபாய்! இதற்குப் பயந்தா இவ்வளவு நாள்களும் இந்த ஆளவந்தார் அஞ்சினர்? – என்று நினைக்கும் போது விந்தையே மலர்கிறது, மனதில்.

கிண்டித் தோட்டத்திலே ‘கித்தாப்புக்காக‘ ஒரு மனிதனுக்கு ஆண்டு ஒன்றுக்கு அளந்து கொண்டிருக்கிறோம் நம் பணத்தில், ரூபாய் பத்து லட்சம்!! கவர்னர் என்கிற பதவிக்காக! அப்படியிருக்கும் போது, ஆசிரியப் பெருந்தகையாளர்களின் அல்லல் போக்கும் இந்த ஒரு லட்சம் – சிறு தூசு! மிகச் சாதாரணம்.

இந்த ‘பென்ஷன்‘ முறைப்படிப் பார்த்தால் 1976ல் – அதாவது இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகுப் பிறகு – சர்க்கார் கஜானவுக்கு எட்டே எட்டு லட்சம்தான் செலவேற்படுமாம் எழுத்தறிவிக்கும் ‘இறைவர்க்ளுக்காக, இந்த இலட்சங்களை வழங்குவது குறித்து, எவரும் ஆயாசப்படார் கோயில் தெய்வங்களுக்கென்று கொட்டி அளக்கப்படும் காசில், கொஞ்சத்தைக் கேட்டால்கூட மனமுவந்து தருவர், மக்கள் எனவே, இப்போதாவது, இந்தச் ‘சிறுதுளி‘யைப் பெரிதென எண்ணாது, செலவிட முன்வந்த சென்னை அரசைப் பாராட்டுகிறோம்.

அதே நேரத்தில், அமைச்சரைப் பார்த்து அன்புடன் கேட்க விரும்புகிறோம், ஒரே ஒரு லட்சம் – மிகப் பெரிய தொகை அல்ல. கவர்னருக்கு பத்து லட்சம் கொட்டி அழும் நமக்கு. வந்த போகும் வடநாட்டு மந்திரிகளுக்காக எத்தனையோ லட்சங்களைக் கொட்டி அழும் சென்னைக்கு, மிகமிகச் சிறு தொகையே அப்படியிருக்கும்போது.

இந்த ‘பென்ஷன்‘ முறையிலும், ஏன் தாரதம்மியம்?

ஆரம்ப ஆசிரியர்களுக்கு ‘பென்ஷன்‘ உண்டாம்.

ஆரம்பப் பள்ளிகிளில் இருக்கும் ‘செகண்டரி கிரேட்‘ ஆசிரியர்களுக்கு பென்ஷன் உண்டாம்.

உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும், இரண்டாவது ‘கிரேட்‘ தமிழாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தொழில் போதிப்போர், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் பென்ஷன் உண்டாம்.

ஆனால், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் எல்.டிக்கள் ஆகியோருக்குக் கிடையாதாம்! ஏனெனில்,அவர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்களாம்! - அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களே, சம்பளம் போதாமல், சர்க்கார் சர்வீசுகளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், எல்.டி.க்களும் அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்! - அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

மந்திரிமார்களுக்கு மனம் ஒரு நிலையில் இராதுபோலும் – விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தைப்போல! இதை எண்ணியே, பாராட்டவந்த நாம், பரிதாபப்படவும் நேருகிறது.

ஆரம்ப ஆசிரியர்களைவிட இவர்கள், அதிகச் சம்பளம் வாங்குவது உண்மையாயிருக்கலாம்.

அதைபோல அதிகச் சம்பளம் வாங்கும் சர்க்கார் உத்யோகஸ்தர்களுக்கு ‘பென்ஷன்‘ தராமலா இருக்கிறது. சர்க்கார்? கவர்னர் ஜனரலாகயிருந்த ஆச்சாரியார்கூட அல்லவா மாத மாதம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். பென்ஷன்! அப்படியிருக்கும்போது, அமைச்சர் கூற்று, மிகமிகத் தவறாகும்.

ஆசிரியத் தொழிலுக்கு ஒரு புனிதத் தன்மை உண்டாக்க வேண்டுமென்றால், போதுமான பாதுகாப்புகள் அளிக்கப்பட்டாக வேண்டும்.

இவர்களுக்கு ‘பென்ஷன்‘ அளிப்பதால், சர்க்கார் கஜானாவுக்கு ஏராள சேதம் உண்டாகிவிடுமென்று சொல்ல முடியாது! ஏனெனில், எல்.டி.க்களும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்க்ளும் அதிகம் அல்ல. அப்படி அதிகமாகவேயிருந்தால்கூட அவர்களுக்கு நீதி வழங்குவதில் என்ன தவறு? ‘சோஷியலிச மாதிரி‘யை இங்கே ஆரம்பிக்க வேண்டாம்! ஏற்றத் தாழ்வைப் போக்கிட இந்த ஏழைகள் அல்ல இடம்! ஆகவே, இந்த மாசுமருவையும் நீக்கி, அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கி உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அது மட்டுமல்ல, அமைச்சரின் புது உத்திரவுப்படி.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் சம்பளத்தில் கால்பங்கே ‘பென்ஷனாக‘த் தரப்படுமாம். ஒரே ஒரு லட்சம்! என்று கணக்குக் காண்பிக்கும் அமைச்சரே இதனையும் அறிவித்துள்ளார். இந்த கால்பங்கை, அரைப்பங்காக்கினால் ஆண்டு இரண்டு லட்சம் தானே ஆகிறது. ஒரு தனிமனிதனுக்கு கவர்னர் என்ற பெயரால் பத்து லட்சத்தைக் கொட்டியழும்போது, வாடும் ஆசிரியர்களின் பிற்கால வாழ்வுக்காக ரூபாய் இரண்டு லட்சம் போவது பெரிதல்ல! சுமார் 50 கோடி ரூபாயை டில்லிக்கு தரும நமக்கு ஒளிதரும் உத்தமர்களுக்காக ஒருசில லட்சத்தை அளிப்பதில் தவறே கிடையாது! அமைச்சர் கூற்றுப்படி பார்த்தாலும், இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அரைப்பங்கு வீதம் அளிப்பதால் ரூபாய் பதினாறு லட்சமே – ஆகும்!! கடலில், சிறுதுளி,இது ஆகவே,

எல்லோருக்கும் பென்ஷன்
கால் பங்குக்குப் பதில் அரைப் பங்கு

ஏப்ரல் முதல் தேதியிலிருந்து விலகுவோருக்கு மட்டுமின்றி, இதற்கு முன்பே விலகி இப்போது உயிரோடிருப்பவர்களுக்கும் பென்ஷன் உண்டு.

என்ற யோசனைகளையும், ஏற்று, புது உத்திரவு பிறப்பிக்குமாறு அன்பர் சுப்ரமணியத்தைக் கேட்டுக் கொள்ளுகிறோம். “செய்வன திருந்தச் செய்“ என்று சிறு வயதில் அவருக்கும் ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருப்பார்! அந்தப் பழ மொழியையும் – அதை நமக்குப் பயிற்றுவித்த ஆசிரிய வள்ளலையும், அவர் எண்ணிப் பார்த்தால், நிச்சயம் செய்யலாம்! செய்த குறைகளுக்கு ஒரு விமோசனமாவது பெறலாம்! செய்வாரா! என்று கேட்காமல், அவசியம் செய்ய வேண்டும். என வலியுறத்துகிறோம்- கொடுமையானது ஆசிரியத் தொழில் என்கிற தப்பெண்ணம் அழிய! அவர்களும் பிற அதிகாரிகளைப் பேலா வாழ!!

திராவிட நாடு – 20-3-55