அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


போன மச்சான்..!

வயலோரத்திலே பாடுவார்களே, போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடே என்று, அதைப்போலப் பெர்லின் ரேடியோ, சிறைப்பட்ட முசோலினி மீட்கப்பட்டுவிட்டார். அரசு இழந்த முசோலினி மீண்டும் ஆளத்தொடங்கிவிட்டார் - என்று பாடுகிறது. முசோலினிபிடி தளர்ந்ததால், அவர் சிறைப்பட்டார், அவரைச் சிறை மீட்டது, நாஜிப்படையினரின் தந்திரத்துக்குச் சான்றாகுமே தவிர, இத்தாலி மீண்டும், முசோலினிக்கு அடிபணிந்தது என்பதற்கு ஆதாரமாகாது.

இத்தாலியைப் போர்க்களமாக்கி விட்டனர் நாஜிகள். வட இத்பலியில் அவர்கள் வளைதோண்டிக் கொண்டனர், பெர்லினை நோக்கி வரும் பேராபத்தைத் தடுக்கலாம் என்ற எண்ணத்தால்; ஆனால் தென் இத்தாலியிலே, நேசநாட்டுடன் இத்தாலி சர்க்கார் நேசமாகப் பணியாற்றி வருகிறது. ஐந்தாம் படை, எட்டாம் படை இரண்டும், ஜெர்மன் படையின் பிரம்மாண்டமான தாக்குதலைத் தூளாக்கி முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. ஜெர்மன் எதிர்த்தாக்குதலை, ஐந்தாம்படை முறியடித்து விட்டது. முன்னேறித் தாக்குகிறது! போர் கடுமையாக இருக்கலாம், நாட்கள் சில பலவாகலாம், ஆனால் ஜெர்மானியரால் இனி ‘முடிவை’ மாற்ற முடியாது. இத்தாலியை விட்டுப் பிரென்னர் கணவாய் வழியாக நாஜிகள் ஓடும் நாள் வந்தே தீரும். அப்போதும் முசோலினியை, அடால்ப் ஹிட்லர், உடனழைத்துக் கொண்டு பெர்லினில் போய்ப் பதுங்கட்டும், உலகு அதனைப் பொருட்படுத்தாது. ஒருபுறம் நேச நாட்டு இடுக்கித் தாக்குதலும் மற்றோர் புறத்திலே, அலைகடலோ, பெருங்காற்றோ, அடக்கொணாத்தீயோ என்று கூறும் விதத்திலே வெற்றிமேல் வெற்றிபெற்று வேகமாகப் பாய்ந்து வரும் சோவியத் சேனையும், நாஜித்தலைவனையும் அவனால் சிறை மீட்கப்பட்ட நாடி முறுக்கிழந்த முசோலினியையும், தண்டித்தே தீரும் என்பதிலே சந்தேகமில்லை. இனி, நேசநாடுகள் வெற்றி பெறுவதைத் தடுக்க நாஜியால் முடியாது. அந்தக்காலம் மலைஏறி விட்டது!!

(19.9.1943)