அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொங்கற் புதுநாள்!
பொங்கற் புதுநாள் எனும் விழாமணம் சூழ்ந்துள்ள வேளையிலே, இக்கிழமை இதழ் உம்மிடம் வருகிறது. இன்றுபோல் என்றும் இன்புற்று வாழவேண்டும் என்ற நன்மொழி கூறிக்கொண்டு, விழாவிலே வழியும் மகிழ்ச்சிப் பெருக்குத் தமிழரின் மனைதோறும், என்றும் தங்குக என்ற வாழ்த்துரை கூறிக்கொண்டு, பொங்குக இன்பம், தங்குக எங்கும் என்றுரைத்துக் கொண்டு. ஆடவரும் பெண்டிரும் சிறாரும், ஏன், சிற்றினமாம் கால்நடைகளுங்கூடப் புதுக்கோலத்துடன் விளங்கும் விழாவை இனிது முடித்தீர்கள். பொங்கற் பானைகளிலே படிந்த கரிப்பூச்சுக் கலையவில்லை. வெண்சுண்ண ஒளியும் செம்மண் அழகும் சிதைய வில்லை, புத்தாடையின் கஞ்சிவாடையும் புன்முறுவலும் போய்விட வில்லை, காய்கறிக் குவியலும் முழுவதும் செலவாகிவிடவில்லை. குடும்பத்தைவிட்டு வேற்றூர் சென்று பணிமனை பலவற்றிலே உழைக்கும் மக்கள், மன அறமுறைப்படி, விழாவுக்காக வந்துள்ளனர். காண்போர் களித்து. நலன் விசாரிக்கும் நற்பண்பு நடந்தவண்ணமிருக்கும் நாளிலே, திராவிடத்தைத் தன்குடும்பமெனக் கருதும், ஏடு, உங்களை நாடி வந்துளது. “என் சிந்தனையும் செயலும் சரிவர உளதா’ என்று உம்மைக்கேட்க, ஆம் என்று நீவிர் கூறிடின் அகமகிழும்.

இவ்வாண்டு, பொங்கற்புதுநாள் விழா, போங்கர்காலத்தது, ஆம்! சில ஆண்டுகளாகவே, போர்ச்சுழலிலேயே தான் நாம் உள்ளோம். அளவரிசிக்காலம்! மூடியிட்ட விளக்குகளும், சீலிட்ட வேட்டி சேலைகளும் உள்ள காலம்! ஆனால், இவ்வளவுக்கிடையே, செந்நெற்குவியலையும், பச்சைக் காய்கறிகளையும், பாலையும் தேனையும் நாம் உண்டு களித்தோம், புத்தாடை பூண்டு, புனலில் குளித்து புன்முறுவலுடன்! இதே நேரத்திலே, மலையுச்சியிலே, பணியிலே, பலர் உள்ளனர், அங்குப் பொங்குவது, பால் அல்ல, இரத்தம்; அவர்கள் காண்பது, பாற்சாதம் செய்ய நமது பாவையர் மூட்டும் அடுப்பிலிருந்து சுருண்டுவளைந்து பாம்பென எழும்பும் புகைமணமல்ல, வெடிகுண்டு; எரிகுண்டு வீச்சால் எழும் புகை நாற்றமும், வீழ்ந்த வீரரின் உடலிலிருந்து கிளம்பும் பிணவாடையும்! அவர்களின், குடும்பங்களிலே இந்தப் பொங்கற்புதுநாளன்று, பூரண மகிழ்ச்சி இருந்திருக்க முடியாது. ஈராக், ஈரான், மால்ட்டா, சைப்ரஸ், மாயூ நதிமுனை போன்ற பல்வேறு இடங்களிலே, தமிழகத்தின் குடும்பத்தினரை, நாம் மறக்கவில்லை. அடுத்த பொங்கலன்றேனும் அவ்வீரர்கள் வீடுதிரும்பி, புகைசூழ்ந்த அடுப்பருகே அமர்ந்து, போரிலே தாமாற்றிய செயல் பலவற்றைக் கூறவும், தாயும் தந்தையும், வயோதிகத்தை இம்மகிழ்ச்சியால் வாலிபமாக்கிக் கொள்ளவும், அண்ணன் தம்பியும், அக்காள் தங்கையும், மணி தோன்றிய மனையிலே நாம் தோன்றினோம் என்ற களிப்பெனும் கலாபத்தை விரித்தாடவும், காதலனின் பெருமைதனைக்கேட்ட களிப்பால் தன்னை மறந்து, வெண்டைக்குப் பதில் காலில் உள்ள தண்டையைத் தொட்டும், உலர்ந்த புல்லை அடுப்பில் இடுவதற்குப் பதில் நெல்லையிட்டும், கெண்டைவிழியால் அவனைத் தாக்கிடும் கோமளவல்லிகளும், கூடிப் பொங்கற் புதுநாள் கொண்டாட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

அறுவடை எனும் அகமகிழ்ச்சிக்கான அறிகுறியே இப்பொங்கல் விழா. உழைத்து வாழு என்ற உத்தம இலக்கணப் போதனையை ஊட்டும் விழா, திருந்திய வயலிலே மணிகொழிக்கும் என்ற பாடத்தை நல்கும் விழா! இவ்விழாவை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடிய மாண்புடைத் தமிழருக்கு, வாழ்வு முழுவதும், வளமும் வகையும் பொங்கட்டும் என்ற நல்லெண்ணத்தையன்றி, வேறென்னதான் தேவை! நாம் வேறு என்ன தர முடியும், பொங்குக மகிழ்ச்சி, தங்குக எங்கும்!!

(திராவிட நாடு பொங்கல் மலர் – 1944)