அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொது உடைமையும், பெர்லின் மடமையும்

போர்முனையிலே உள்ள தோழர் களுக்கு உதவி செய்ய வாருங்கள்! குளிர் காலம் பிறக்கிறது. உடை வேண்டும், உணவு வேண்டும், உற்சாகம் வேண்டும், நீங்கள் உறுதியுடன் இருந்தால்தான், களத்திலே உள்ள உங்கள் காளைகள் களித்து, வாழ முடியும் என்று ஹிட்லர் பேசினாராம். ஜெர்மன் மக்களிடையே அது அவரது சொந்த ஜோலி! தேவையுங்கூட, மாறி மாறி பிரிட்டிஷ் அமெரிக்க, ரஷிய விமானங்கள், பெர்லின் மீதும், வேறு பல நகரங்கள் மீதும் குண்டு பொழிவதால், குளிர் காலம் பிறப்பதற்கு முன்பே, ஜெர்மன் மக்களின் குலை நடுங்கி விட்டது. காரசாரமாகப்ப் பேசி, நடுங்குவோருக்கு, நாவு முறுக்கேற்றப்பார்க்கிறார். செய்து பார்க் கட்டும்!

ஆனால் பொது உடைமை எனும், பயங்கரமான கொடுமையினின்றும் உலகை விடுவிக்கவேதான் பாடுபடுவதாக, பெர்லின் நாஜிப் பாதிரியார் பேசுவது கேட்டே, நான் ஆத்திரமடைகிறேன்.

மண்ணையும், விண்ணையும் கடலையும் கட்டி ஆள்கிறாயோ என்று பிரிட்டனைப் பார்த்துக் கேட்கிறபோது, எனக்கு பெர்லினில் கேட்கிற பொச்சரிப்புப் பேச்சு சிரிப்பை ஊட்டுகிறது. சீற்றம் எழவில்லை.

ஐரோப்பாவிலே, அவ்வப்போது கிளம்பும் வல்லரசுகள் கடற் கோட்டையாம் பிரிட்டனை யும், அதன் கொடி, குவலயத்திலே பல இடங் களிலே பறப்பதையங் கண்டு, இதுபோலவே பேசிட்ட தாகச் சரிதம் சாற்றுகிறது.

பிஸ்மார்க் பேசினார், கெய்சர் கொதித்துக் கூவினார், இன்று ஹிட்லரும் பேசுகிறார், பரம்பரை பேச்சு அது!

ஆனால் பொது உடைமைப் பேயர்களை நான் அடக்குகிறேன், என்று ஹிட்லர் கூறுவது கேட்க, நெஞ்சு பொறுக்குதில்லையே, என் செய்வது! பிரிட்டன், கடற் கொள்ளைக்காரனாம், அமெரிக்கா ஆசை பிடித்த மாமனாம், ரஷியா, பொது உடைமைப் பேயனாம், இந்தப் பரம சாது, மட்டுமே, தேவதூதனாம். மக்களை வாழ்விக்க வந்த மகரிஷியாம். என்ன மடமை!

பொது உடைமைப் பேய், என்ன செய்தது? பெர்லின் மீது பாய்ந்ததா? பாசீசத்தை ஒழிக்க முதலில் முளைத்ததா? ஜெர்மனிக்குச் சொந்த மான பூமி மீது நாட்டங் கொண்டதா? வியாபாரத் துறையிலே, ஜெர்மனியுடன் போட்டிக்கு வந்ததா? காரல் மார்க்சின் ஜென்ம பூமியிலே, கசடர் ஆட்சி ஏற்பட்டதைக் கவிழ்ப்பேன் என்று கூறிற்றா? என்ன தீங்கு இழைத்தது பெரிலினுக்கு! உலகுக்குந்தான் ரஷியா என்ன கேடு செய்தது? எதற்கு உளம் எரிந்தவர் போல் உளறுகிறார் ஹிட்லர். பொது உடைமை, பேயாம், பாசிச நேயரின் விஷவாயின் வாடை அது, விவேகிகள் அதனை மதியார்.

ஐரோப்பா கண்டத்திலே, அழுகிக் கிடந்த ஒரு நிலப் பரப்பை, வல்லவராக்கியதும், பேய்த் தன்மையா? எதிரியின் சுரங் கண்டதும் சிரம் வளைக்கும் மக்களை, உயிரைத் தந்தேனும் உரிமையைப் பெறுவோம் என்று உத்தம வீரர் களாக்கியது, பேய்த்தன்மையா! உண்டு களித்து ஒரு சிலரும், பசித்துப் பதைத்து பலரும், பாழான, பயங்கரமான, பாதகமான, நெடுஞ்சுவரை இடித்துத் தள்ள மதமுள் வேலியை அறுத்தெரிந்து, ஜாரிசம் எனும் குழியைத் தூர்த்து, அதன்மீது, மக்களாட்சி எனும் மனோ ரம்மியமான மாளிகையைச் கட்டியது, பேயின் செய்லென்று பெர்லின் கருதுகிறது!

வயிறார உணவு, உடலார உடை, இருக்க இன்பமான இடம், அறிவாற கல்வி, நோய் தீர மருந்து, நல்கி, மக்களுக்கு வாழ்வு தந்தது, பேயின் சேட்டையென்றா பெர்லின் எண்ணுகிறது!

பொது உடைமை எனும் தீட்டுக் கோல் கொண்டு, வரையப்பட்டுள்ள சோவியத் சித்திரம், பேய்ச்செயலாக பெர்லின் கண்களுக்குப் படுகிறது! கண் பழுதா? கருத்து பழுதா? மூளைக் கோளாறா? ஏன் இந்த மடமை?

காடு, பூங்காவாயிற்று! கொடுங்கோல், செங்கோலாயிற்று. சிறைக்கூடம், சிங்கார மண்டபமாயிற்று. பாலைவனம், நீரோடையா யிற்று! வரண்ட வயல், வளமிகுபண்ணையாயிற்று! இருள் நீங்கி ஒளி கிடைத்தது, மருள் மாண்டது, அறிவு துலங்கிற்று, சோவியத் சித்திரம் சோபிதத்தின் சிகரம்! அதை உணர, ஜெர்மன் நாஜிக்கு முடியவில்லை!

பிடி! சுடு!! என்று ஒருவன் கூறிட பிணங்கள் கீழே வீழ்வதுமாக உள்ள இடம் பேய்க்காடு! மக்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து உழைத்து அலுத்து, உண்டிக்கும் உடைக்கும் அலைந்து, அவதிப்படும் இடம், பேயர் பிரதேசம். கொழுத்து வாழும் முதலாளிகளின் கோணக் குணத்துக்குக் கோல்கொண்டோன் கூவி கொண்டு, காப்பு அளிக்குமிடம், பேய்ப் பிரதேசம்! வணங்க, வாழ்த்த, பின்பற்ற, பேசாதிருக்க, பாடம் போதிக்கப்பட்டு, மக்கள் வாயில்லாப் பூச்சிகளாக் கப்படும் இடம் பேயர் கூடம்! தங்கச் சீமான்! மது வகை விற்ற சீமான்! என்று சீமான்களைக் சிருஷ்டித்து, சைத்தான்களைத் தாண்டவமாட விட்டு, அவர்களிடம் தரகு பெற்று, உரத்த குரலான், ஊர்க்குடி கெடுத்தோன், உலுத்தன் ஆகியோரை ஏவலாகக் கொண்டு, ஆணவ ஆட்சி நடத்தும் பெர்லின், பேயர் மடம்! மாஸ்கோ, மக்களின் மணிபுரி! வாட்டமுறுந் தோழர்களுக்கு வழிகாட்டி! ஆணவக்காரரின் இருதயத்துக்கு ஈட்டி! உலகியலே சமதர்மமே உண்மை நெறி என்று முரசு கொட்டும் தோட்டி! புது உலகச் சிற்பியின் பூங்கா! நொந்த ரஷியாவுக்கு திடகாத்திரத்தைத் தந்த மூலிகை வளர்ந்த தோட்டம்! பாட்டாளியின் வாழ்வுக்குப் பண்புதரும் பச்சிலை உள்ள இடம்! அத்தகைய தோட்டத்தை பேயர் இடம் என்று பேசிட, கூசாது முன் வந்தோரை குவலயம் எப்போது தண்டிக்கப் போகிறது!

ஜாரின், காலத்திலே, பெர்லின் தலைவனின் வணக்கத்திற்குரிய அந்தத் தேவன் திருவிளை யாடலை நடத்தியபோது, பஞ்சம் எவ்வளவு, பிணி எவ்வளவு, பாடு எவ்வளவு, அறியாமை வெள்ளத் திலே வீழ்ந்து ஆணவ அலைகளால் தாக்கப் பட்டு, முதலாளித்வ முதலையிடம் சிக்கியோ, சதிகாரர் எனும் சூழலில் அகப்பட்டோ, மக்கள் சிதைந்தனர். தொழிற்சாலைகள் உண்டா? கல்வி நிலையங்கள் உண்டா? வைத்திய சாலைகள் உண்டா? வாழ்வில் இன்பம் உண்டா? கர்வம் சூன்யமாம் ஜகத்! என்றன்றோ இருந்தது. நீதிக்கு இடமேது! நேர்மையாளருக்கு இடமேது! நன்னெறிக்கு மதிப்பேது! நாட்டிலே, நாணயம் ஏது! ஆறுகள், மாரிக் காலத்திலே கரை புரண்டோடி, ஊரை அழிக்கும், பிறகோ வரண்டு, வயலை வெளியாக்கி, வேதனை ஊட்டும்! பாலங்களோ, கண்ணீரால் கரைத்துவிடக்கூடிய அளவு இளைத்துக் கிடக்கும், பள்ளியோ, பஞ்சைகள் கூடும் பரிதாபச் சாலைகளாக இருக்கும். வைத்திய சாலை என்ற பெயர் வழங்கப்பட் டிருந்த இடங்களோ, செத்தவரின் கணக்கைப் பாதிரிமார் எடுத்து, பாவமன்னிப்பு தந்து, பணம் பறிக்கும், பரிவர்த்தனைப் பீடங்கள்! வழிபடும் இடங்களிலோ, ரஸ்புட்டின் லீலைகளை மறவாத வர்கள், ரமணிகளுக்கு, மதரசத்தை மனங் கொண்ட மட்டும் தரும், குச்சுகள்! பேய், ரஷியாவிவிலே புகாமுன்பு இருந்த பெருமை இது! பேய், வந்த பிறகு, நேரிட்ட கேடு எவை? பெர்லின் பேசுமா அவை பற்றி!

இதோ புள்ளி விவரம். 1941ம் ஆண்டு ஜுன் மாதம் (அமெரிக்கா) நியூயார்க் ஆராய்ச்சிக் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கை, ரஷியச் சரக்குக் கூட அல்ல, அமெரிக்கத் தயாரிப்பு.

ஜனத் தொகை
1913ல் - 13,900 இலட்சம்.
1940 - 19,300 இலட்சம்

நாட்டு வருமானம்
1913-ல் 24 பில்லியன் ரூபிள்
1940ல் - 125 பில்லியன் ரூபிள்

வைத்திய சாலையில் படுக்கைகள்
1913ல் - 17,500
1940-ல் - 84,00

கல்வி (ஆரம்பம்)
1913ல் - 700 இலட்சம் பேர்
1940ல் - 3,500 இலட்சம் பேர்

உயர்தரக் கல்வி
1913ல்- 11,200 பேர்
1940-ல் 62,000 பேர்

மாதர் சுக நிலையம்
1913ல் - 9
1940ல் - 4,384

எஃகு உற்பத்தி
1913ல்- 4,200 இலட்சம் டன்
1940ல்- 18,400 இலட்சம் டன்

நிலக்கரி உற்பத்தி
1913ல் - 2,900 இலட்சம் டன்
1940-ல் 16,400 இலட்சம் டன்

இவ்விதமாகவே, ``பேய்’’ பீடத்திலே அமர்ந்த பிறகு, சோவியத் நாட்டிலே, ஏற்பட்ட முற்போக்கு, சுகவிருத்தி, சுபிட்சம், செல்வ வளர்ச்சி, மக்கள் மன வளர்ச்சியும், குளிர்ச்சியும் ஆகியவற்றைக் கூறினால் அந்தப் `பேய்’ இங்கும் வரவேண்டும் என்று ஜெர்மானியரும் இதரரும் கூறுவரேயன்றி, ஹிட்லர் போல், அந்ந்தப் பேயை அழிப்பேன் என்றுரைக்க மாட்டார்கள்.

களவாடினது உண்மைதானே?

ஆம்! களவாடினேன்.

ஏன் களவாடினாய்.

பசி! பிழைப்பு இல்லை!

கடுங்காவல் தண்டனை உனக்கு ஓராண்டு.

திருடினாயன்றோ, உண்மையைக்க் கூறு?

உண்மை ................

முன்பு ஜெயிலுக்குப் போயிருக்கிறாய் அல்லவா, இதே குற்றத்துக்காக?

ஆமாம், போனேன்.

மறுபடியும் திருடினாய், உனக்கு மூன்று வருடம் தண்டனை, போ.
* * *

நீதிமன்றத்துக்கு இந்த வேலை ஓயவில்லை. சிறைக்கூடத்தில் இடம் காலியாக இருப்பதில்லை. சட்டமும், கட்டுத்திட்டமும், நீதி மன்றமும், நெடுஞ்சுவற் அமைந்த கற் கோட்டை களான சிறைக்கூடங்களும் இருந்தும், வளர்ந்தும், பசிப் பிணி, பஞ்ச நோய், வேலையில்லா வேதனை உள்ள இடத்திலே, கொள்ளையும், கள்ளத்தனமும், இருந்தே வரக் காண்கிறோம். ``இல்லை! ஆகவே இதனைச் செய்தேன்’’ என்று குற்றம் புரிந்தோர் சொல்லக் கேட்கிறோம். பசிவந்திடப் பத்தும் பறக்கும் என்ற பாட்டி மொழியும் படிக்கிறோம். ஆனால, நோயின் மூலத்தைக் கண்டறிந்து சிகிச்சை செய்ய உலகில் முடியவில்லை, ஒரே ஒரு நாடு மட்டுமே, ஏழை என்றும், அடிமை என்றும், எவனுமில்லை. ஜாதியில் என்பதனையும், புனல் நிறைந்த தொட்டி போன்ற சீமான்கள் ஆடலழகிகள் போலாடவும், எச்சில் இலைக்கலமான ஏழைகள் புழுப் போல் துடிக்கவுமாக இருந்த பேதத்தை நீக்கி, இங்குள்ளோர் ஒப்பப்பர் என்ற உயர்நிலை தந்தது. திருட, பொய்யுரைக்க, வஞ்சகம் பேச, கொள்ளை யிட, கபட வேடம் புனைய, காரணமேயில்லாத படி செய்து, சமுதாயமெனும் பண்ணையிலே முளைத்துக் கிடந்த பல களைகளைக் கவ்வி எடுத்து எறிந்துவிட்டனர்.

இதைப் பேய்ச் செயல் என்று தேவதூதன் திருவாய் மலர்ந்தருளுகிறார் போலும்! என்ன தூய்மை. அவரது உள்ளத்திலே! எவ்வளவு வாய்மை அவர் உரையிலே! உலகை, ஏமாளி களின் இடமாக எண்ணினார் போலும்!

பொது உடைமை ஆட்சிக்குப் பிறகு, மக்களின் வாழ்க்கையிலே வஞ்சகம், சூது, சூழ்ச்சி, கள்ளம், கபடம் ஆகியவை இருக்க இடமேயின்றிப் போய் விட்டது.

திருட்டு என்ற பதத்துக்கே பொருளின்றிப் போய் விட்டது திருந்திய ரஷியாவிலே. யார் சொத்தை யார் திருடுவது? சொத்து, பொது! உழைப்பு, சகலருக்கும்! உரிமை, யாவருக்கும்! எனவே, ஒருவருடைமை என்றொன்று மில்லை! இருந்தால்தானே அபகரிக்க!

ஜார்கால ரஷியாவிலே, 100க்கு 73 மக் களுக்குப் படிப்பு கிடையாது.

இன்று சோவியத் ஆட்சியின் சோபிதத் தின் பயனாக எழுத்தறியாதார் இல்லை எனலாம்! பேயின் வேலை, பெர்லின் அகராதிப்படி!

முதியோர்கள், படிப்பு வாசனையே அற்றுக் கிடந்தனர் ஜார் காலத்தில். சோவியத் சர்க்கார் ஏற்பட்டு, இடைவிடாது, முயன்று 40,000,000 முதியோருக்கும் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தது.

1933லிருந்து 1938க்குள் ஐந்தாண்டுகளிலே சோவியத் சர்க்கார், 20,607 புதுப் பள்ளிக் கூடங்கள் அமைத்தனர்.

1937ம் ஆண்டு, கல்விக்காகச் செலவிடப் பட்ட தொகை 6,179,000,090 ரூபிள்கள்.

அபிவிருத்திக்கான அருமையான திட்டங் கள் இன்று அடால்ப்ஹிட்லரின்அக்ரமத்தின் பயனாக, ரஷியாவிலே நடைபெறுவதற்கின்றிப் போய்விட்டன.

(திராவிட நாடு - 20-9-1942)