அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொது விசாரணை தேவை

‘தேனி’ கலவரத்தைக் கண்டித்து சர்.பி.டி.ராஜன், வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்:-
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தேனியில் 4.7.51 ல் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபொழுது, ஏற்பட்ட சம்பவங்களைப் பார்த்தால், காங்கிரஸ்காரர்கள், தலையிட்டுக் கலைத்தது நன்றாகத் தெரியும். சர்க்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரிகள் கடமை மீறி நடந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேனி சம்பவத்தினை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்திரவிட்டு, டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலை அனுப்புவதற்கு முன்னால் சர்க்காருக்கு அந்த இடத்தின் அதிகாரிகளிடமிருந்து, ஜில்லா கலைக்டரிமிருந்தோ, ஜில்லா சூப்ரண்டிடமிருந்தோ, அறிக்கை வந்ததா என்பது நமக்குத் தெரியவில்லை.

டெபுடி ஜெனரல் அறிக்கையை வைத்துக்கொண்டு, நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். மேலும், இலாகா விசாரணை நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். மேலும், கலகம் செய்தவர்களெனப் பிடிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதா இல்லையா என்பதையும் அவரையே முடிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் செய்கை, சர்க்கார் தன் கட்சித் தோழர்களைக் காப்பாற்ற நீதியின் போக்கிலே கூட தலையிட்டு மாற்றுகிறது என்ற எண்ணத்தைத் தான், பொது மக்களிடத்தே உண்டாக்கும்.
ஆகவே, பொதுமக்களின் பயத்தைப் போக்க வேண்டுமானால், உயர்நீதி மன்ற நீதிபதி நிலையிலுள்ள ஒருவரைக் கொண்டு, தேனியில் நடந்த சம்பவங்களைப் பற்றி ஒரு பொது விசாரணை நடத்த வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

(திராவிடநாடு 29.7.51)