அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பொது வாழ்வு

ஒரு கண்ணோட்டம்
தூக்குமேடை!
கேலிச் சிரிப்புடன் காட்டினர்; கிஞ்சித்தும் கவலை கொண்ட தில்லை அம்மாவீரர்கள். துணிவோடு ஏறினர். அவர்கள் கண்களிலே புது ஆவேசம் பிறந்தது. தூக்கு, அவர்களது உயிரைப் போக்கிற்று. பிணமாயினர்-ஆனால், அவர்களது புகழ் மணம், மறையவில்லை; மாறாக, எங்கும் வீசலாயிற்று.
சித்திரவதை!
அவர்கள் சிந்தையைக் குலைக்கவில்லை. சிறிதும் தயங்கவில்லை. ‘இதெல்லாம் வரும்’ என்று எதிர்பார்த்தது போல, அவர்கள் கணகளிலே புது ஒளி கிளம்பிற்றே தவிர, நீர் எழும்பவில்லை.
துப்பாக்கிகள்!
கர்ஜித்ததுண்டு, பலமுறை ஆனால் குலைந்து போனதில்லை, அந்த வெற்றிச் செல்வர்கள். வீரம், அவர்கள் இதயத்திலே விளையாடிற்று. மயங்கியதில்லை, தயங்கியதில்லை, மார்பைக் காட்டினர்.
தடியடி!
எத்தனையோ தடவைகள், அவர்கள் தலைகளை உடைத்ததுண்டு, கால்க கைகளை ஒடித்ததுண்டு இரத்தத்தைக் கீழே ஓடச் செய்ததுண்டு.
நச்சுக் கோப்பைகள் ஒரு சமயம்! தீச்சுழல் வேறொரு நேரம்! சாட்டையடி, இன்னொரு வேளை! உயிரோடு சாவுக்குழியில் தள்ளப்பட்ட கோரம், மற்றொரு நேரம்! மக்கள் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்காகக் கிளம்பியோர் பெற்ற, கொடுமைகளும், தீங்கும், பலப்பல காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றபடி, அவர்கள் உடலையும் உள்ளத்தையும், ஆள்வோரும், அவர்தம் கொள்கைகளை வெறுத்தோரும் செய்த கொடுமைகள் ஒன்று, இரண்டல்ல!
சமுதாய சீரமைப்புக்காக, சுயவாழ்வை ஒதுக்கி, பொதுவாழ்விலீடுபட்ட அப்போர் வீரர்கள், ஆங்காங்கு அனுபவித்த கொடுமைகள் உலக வரலாற்றைப் பார்ப்போரின் உள்ளங்களைக் குலுக்கும்.
அவ்வளவு வேதனைகள் அவ்வீரர்களுக்கேற்பட்டதுண்டு. ‘அரசாங்கம்’ என்பதன் மீது அமர்ந“தோர். ஒரு சமயம், அம்மாவீரர்களின் எதிரிகளாயிருப்பர். இன்னொரு சமயம், அம்மா வீரரின் பேச்சும் செயலும் பிடிக்காதோர், விரோதிகளாயிருப்பர்.
மத மடங்கள் ஒரு நேரம் பாயும்! பணபீடங்கள் இன்னொரு நேரம் உறுமும்! அரசு அதிகாரம், மற்றொரு சமயம் தூக்கு மேடை துப்பாக்கி-தடியடி, ஆகியவைகளைக் காட்டி கர்ஜிக்கும்!
ஆனால், இதையெல்லாம் கண்டு, பொது மக்களுக்காக உழைக்க முற்பட்டோர் கலங்கியதில்லை-மிரண்டோடியதுமில்லை.
சரியென்று நினைத்தமைக்காகப் போராட சாவு, தடுத்ததில்லை அவர்களை அதற்காகப் போராடி சாவதே தமது வீரத்துக்குக் கிடைக்கும் விருது, என்று அவர்கள் கருதியதால்.
பசிக்கொடுமை தாங்க முடியவில்லை-உணவில்லாததால் உலர்ந்த சருகுபோலானாள் மனைவி. அவளது கண்களோ, கீழே செத்துக்கிடக்கும் குழந்தையை, கண்ணீரால் கழுவிக் கொண்டிருக்கின்றன. அவனோ அருகே உள்ள மேஜையின் மீது அமர்ந்து எழுதுகிறான், கடிதம்-தனது நண்பனுக்கு; “பாலில்லை எனினும் பசி தாங்காமல் என் குழந்தை. தாயின் மார்பைச் சப்புகிறது. பாலிருந்தாலன்றோ வர! ஆனால் குழந்தை, அதை, எப்படி அறியும் ஆவலோடு, சப்புகிறது. பாலுக்குப்பதில் வரண்டு போன என் மனைவியின் மார்பிலிருந்து இரத்தம் வடிகிறது. அதையும் விடவில்லை. என் குழந்தை, குடித்தது-செத்தது! எவ்வளவு கொடுமை, நான் என்ன செய்வேன், எங்செல்ஸ், அருமை நண்பா, ஆறாத்துயரோடு நிற்கும் மனைவியின் கண்ணீர் என்னைச் சுடுகிறது. துடிக்கிறாள் அவள், நானென்ன செய்வேன்?”
உலகின் பேரறிஞனாம் காரல் மார்க்ஸ், பட்ட கஷ்டங்களிலே ஒரு காட்சி இது.
இதுபோல, மக்கள் வாழ்வைப் பெரிதென மதித்து, தம்மை அதற்கு அர்ப்பணித்த வீராதிவீரர்களின் குடும்பங்களெல்லாம் வேதனையில் மூழ்கியவைதான்.
பட்டினிக் கொடுமையும் பணத் தொல்லையும், உற்றார் தூற்றலும், அவர்களைச் சுற்றி வளைத்துக் கிடந்ததுண்டு.
ஒரு பக்கம், தனது கொள்கைகளை எதிர்ப்போரும் மறுப்போரும் விரோதிகளாயிருப்பர்!
இன்னொருபக்கம், குடும்பத்தில் புயல் வீசும்!
இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளித்தாலும், இலட்சிய வீரர்கள், ஏங்கியதில்லை அவைகளை நினைத்து.
மனைவியின் ‘ஐயோ’ என்ற அழுகுரல், மக்கள் எழுப்பும் ‘வாழ்க’ என்ற முழக்கத்தால், மறைந்து விடும். பட்டினிக்கொடுமை, மக்கள் தன்னை ஆதரிக்கின்றனர் என்ற மகிழ்ச்சி முன் சிறுதுரும்பாகி விடும்.
பொதுவாழ்வு-ஒரு சிலந்திக் கூடு. ஆனாலும், அதிலீடுபட்டோர், தளர்வதுமில்லை, அயர்வதுமில்லை.
உலகத்தை உற்றுப்பார்த்து, அதன் வேதனை தாங்காது, அவைகளை ஒழித்து, நல்வாழ்வு காண வேண்டும் என்ற ஒரே எண்ணம், அவர்கள் உள்ளத்தில் குடியேறி விடுவதால், அந்த எண்ணமே, அவர்களோடு பிணைந்துவிடுகிறது.
பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்தில் தாங்களும் ஒரு துளியாக, தங்கள் காலத்தைத் தள்ளி விட்டுப் போவது என்பது கஷ்டமானதல்ல.
ஆனால், இலட்சிய வீரர்களோ, தம்மைப்பற்றி நினைப்பது இல்லை. நினைப்பதே தவறு, சமுதாயத்தை நினைத்து, பிறகு தன்னை நினைக்க வேண்டுமென்பது அவர்கள் சித்தாந்தமாகி விடுகிறது.
பொதுவாழ்வு மகிழ்ச்சி ததும்பும் மலர்த் தோட்டமல்ல; கொளுத்தும் வெய்யிலும், குமுறி வீசும் காற்றும்.
இது, அவர்களுக்கு, நன்றாகத் தெரியும். ஆனாலும் ஈடுபடுகிறார்கள்-தொல்லைகளைப் பெரிதென மதியாது.
இலட்சிய வெறி கொண்டோர், இதுவரை ஆளாகியிருக்கும் கொடுமைப் பட்டியலைப் பார்த்தால், மிகப் பெரியதாகும்.
தமது வாழ்வை பொருட்படுத்தாது, சமுதாயக் கூட்டமைப்பையே, பெரிதென எண்ணி அதன் சுழற்சிக்குப் பலியானோர் பல்லாயிரக்கணக்கில் உண்டு.
கிளியைத் துரத்துகின்ற பூனை, கதறுகிறது அப்பைங்கிளி! அதைக் காப்பாற்றுவது, மிகவும் முக்கியம்.
தன்னைக் காப்பாற்ற வருவோரைக் கண்டு கிளி மகிழும்- ஆனால் பூனை? கோர நகங்களால், பிறாண்டாமல் விடாதே!
இதைப் போலத்தான், சமுதாயக் கேடுகளைப் போக்கும் எண்ணத்தோடு, ஈடுபடுவோர் பெறும் பலனும்.
போக போக்கியங்களிலே புரளுவோரானாலும், குடிசைக்குள்ளே கொந்தளிக்கும் குடும்பத்தைப் பெற்றவரானாலும், பொது வாழ்விலே ஈடுபட்டுவிட்டால், அவர்கள் ஒரே வரிசையில்தான் நிற்பார்கள்.
பணம் படைத்தவன், தனது பணிக்காக, அதிகப் பலனை எதிர்பார்ப்பதும், தன் குரலுக்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமென நினைப்பதும், வாழ முடியாத வறியோன் அவன், ஆகவே அவனுக்கு உரியது கொஞ்சம் பலன்தான். எனவே அவன் பேச்சு எடுபடவில்லை என்பதுமான, வித்யாசம், பொதுப்பணி கொண்டோரிடையிலே உலவாது.
கிளியைப் பூனையிடமிருந்து விடுவித்துப் பறக்கவிடவேண்டும் என்று எணணுவோரும் உண்டு.
அதே நேரத்தில், பூனையிடமிருந்து கைப்பற்றி தன் வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டுமென்று முனைவோரும் உண்டு.
இருவரும், கிளியை விடுவிக்கப் போராடினாலும், முதல் நபரே உண்மையுள்ளமும், நல்லெண்ணமும் கொண்டவரென மதிப்புப் பெறுவார்.
‘எனது பணியும் கிளியை விடுவிப்பதுதானே’ என்று, வீட்டிற்கு விடுபட்ட கிளியைக் கொண்டுபோக எண்ணுபவன் கூறினால், அதை எவரும் ஒப்பார்!
“துரோகி!”
“பொதுப்பணியின் பேரால், தன் வாழ்வை வளமாக்க நினைப்பவன்.”
“சுதந்திரம் தரப்போவதாகச் சென்று, கிளியைத் தன் மகிழ்ச்சிக்காக எடுத்துக் கொண்டவன்” என்ற பழியே பரிசாகக் கிடைக்கும்.
பொதுப்பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப் படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளைக் கூறினாலும் அது செம்பாகுமே தவிர, பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
வேதனைகளைத் துச்சமென மதித்து, தூக்குமேடையையும் துப்பாக்கியும், சீறியபோதும் சிந்தை கலங்காது, மக்களின் வாழ்க்கை யுயர்வுக்காகப் போராடுபவரே, உண்மைத் தியாகி. அவனே, மக்களின் இதயத்தில் மங்காத நிலவாவான்!
பொதுப்பணி, கஷ்டமானது தான் ஆனால் அத்துன்பங்களைத் தாங்குவதிலும் இன்பம் உண்டு. கடலுக்குள் சென்று முத்தையெடுத்த போது எழும்புவதுபோல.
பொது வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்த, மாவீரர்கள், மறைந்து போய்விட்டார்கள். ஆனால் அவர்களது பெயர்கள் உலகின் நாவிலே, இன்றும் நர்த்தனமாடுகிறது.
மனிதன் பிறக்கிறான்-வாழ்கிறான்-சாகிறான்!
அவன் சாவோடு, அவனுருவமும், அவனைப் பற்றிய நினைவும் அஸ்தமித்துவிடுகிறது.
ஆனால், மக்கள் வாழ்வுக்காக, வீரச்சாவு பெற்றவன் பெயரோ என்றும் அழிவதில்லை.
உண்மைப் பொதுப் பணியாளனுக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசு இதுதான்.
பொதுவாழ்வு தோப்பில், இலையுதிர் காலம் மட்டும் ஏற்படுவில்லை கனி குலுங்கும் காலமும் உண்டு!
பொதுப்பணி புரிவோரின் உண்மையுள்ளமும், தூய்மை எண்ணமும் துலாக்கோல் ஏறும் சந்தர்ப்பம் அதுதான்!
காங்கிரஸ், அந்தத் தராசில் தன்னை ஏற்றி நிறுத்தியுள்ளது!
அதன் விளைவுகளைத்தான் இன்று காண்கிறோம்.
பொதுவாழ்வு, காமவேள் நடன சாலையாகக் கருதியோரின் தொகை அதிகம் அதில்-ஆகவேதான் பொது வாழ்வில் இருள் பகுதி இன்று திருப்பப்பட்டுள்ளது!
பொதுவாழ்க்கையில், மக்கள் மனதைக் கவரும் வகையில், பணி புரிந்துவிட்டு, பணியின் பலன் கிடைத்ததும் ‘அதனால் தனக்கென்ன’ லாபம்? என்று கணிப்போரின், கதி, இன்றைய ‘காங்கிரஸ்’ போலத்தான் ஆகும்.
நல்லதுக்குப் போராடி, அந்நன்மை கிடைத்ததும் அதை தன் சுயநலத்துக்கும் பயன் படுத்தினால், பேரும் புகழும் மறைவது மட்டுமல்ல மக்களின் கண்டனத்துக்கும் ‘துரோகி’ என்கிற பழிச் சொல்லுக்கும் ஆளாவார்கள்.
பொது வாழ்வு இன்பந் தேங்கும் சுனையல்ல! ஆனால், தன் பெயரை, உலகு நிற்கும் மட்டும், பொறித்துக் காட்டும், பொன் ஏடு!
(திராவிடநாடு 17.6.51)