அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பிரகாஸ் பிக்சர்ஸ்
(கம்யூனிஸ்டுகளின் பலாத்காரச் செயல்களைப் படம்எ டுத்திருக்கவேண்டும்’ - என்று சடட சபையிலே, பிரதம மந்திரி கூறினார். செய்யட்டும். சர்க்காரால் இதுசர்வ சாதாரணமாக முடியக்கூடியதுதானே! ஆனால் படம் எவ்வளவோ எடுத்திருக்கலாம். நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தன. போனது போகட்டும், இனிப்புதிதாக ‘பிரசாசம் பிக்சர்ஸ் லிமிடெட்” துவக்கப்பட்டால், இந்தச் சில யோசனைகளின் படி, படங்களை எடுத்தால்,நல்லது, பலவிதத்தில். இலாபம் ஏராளமாகவரும். கவர்னர் கூடிப்பேசியிருக்கிறாரே, பணம் குறைவு என்று அந்தப்பேச்சுக்கே இடமிராது. எனவே பிரகாசம் பிக்சர்சார் என்னென் வகையான படங்கள் எடுத்திருக்கலாம், எடுக்கலாம், எடுக்கவேண்டும் என்று நான் எண்ணுகிறோனோ அதைக் குறித்திருக்கிறேன், கம்யூனிஸ்ட்டுகள் சொல்லி அல்ல! நானாக! நான் ஒன்றும் டைரக்டர், காமிராமேனும் அல்ல. படம் பார்க்கும் பல இலட்சம் பேர்களிலே ஒருவன் - கொஞ்சம் சாமான்யனுங்கூட; என்றாலும் சர்க்கார் இலாபமடையட்டும், பிரதாசம் பிக்சர் சார் செழிக்கட்டும் என் றஆசையால் தூண்டப்பட்டு எழுதினது. வேறொன்றுமில்லை பராபரமே!

“அரிஜனங்களே! அம்பேத்கார் போன்றாரின் முகத்திலே கரிபூசுவதுபோல, பூலோகவைகுந்தமாம் ஸ்ரீரங்கத்திலே, ரங்கநாதர் ஆலயத்தை நாளைத் திறந்துவிடப் போகிறோம், வருக, திரண்டுவருக! திருநாமம் தரித்துக்கொண்ட, ராமபஜனையுடன், காந்திக்குஜே கூறிக்கொண்டு, ஆச்சாரத்துடன் திரண்டுவருக” என்று பேசிய காங்கிரஸ்வாதி, ஓய்! குப்பண்ணா! என்னவோய் என்னமோ சொல்லிக்கிறாளே! நாளைக்குப் பஞ்சமாளை ஆலயத்துள்ளே.....”

“ஒண்ணும் நடக்காது; சம்மா இரும் ஓய்! ஸ்ரீரங்கமோ, கொக்கோன்னேன். அதெல்லாம் நடக்கிறகாரியம் இல்லேன்னேன்.”

“என்ன ஓய் இப்படி நீர்பேசறீர்? எங்கே பார்த்தாலும் ஒரே கூட்டம் பேச்சா இருக்கு, ஊரே அலங்காரம் செய்யறாளே ஓய்!”

“செய்வா ஓய்! செய்வா சும்மா இரும். டாக்டர் ராஜன் முன்பு ஆரம்பித்தாரே, என்ன ஆச்சு!”

“அது, நம்ம ஆத்து ஸ்திரி சிரோமணிகளின் மிளகாய் பொடியின் தயவாலே, தோற்றுப் போச்சு.”

“போச்சேன்னோ! இப்பவும் பாரும். அதே கதிதான்.”

இப்படிப் பேசிக்கொண்ட வைதீகர்களையும், “என்னசார்! ஆலயப் பிரவேசம் இல்லையாமே இன்று எப்படி நாம் கடைவீதியிலே முகத்தைக் காட்ட முடியும்? எவ்வளவு விளம்பரப் படுத்தினோம், என்னென்ன கூறினோம். எவ்வளவு ஆதரவு இருக்கிறது, ‘சாடேதீன்’ பேர்வழிகள் என்கிற மாதிரியாக, இந்த வைதீகப்பீச்சுகள் ஒரு சிறுகூட்டம் சீறுகிறது என்று, இவ்வளவு பெரிய பொதுஜன சர்க்கார் தயங்குவதா? வெட்கமாக இருக்கே! இந்தத் திராவிடக் கழகத்தாள் வேறு, நம்மைக் கிண்டல் செய்வார்களே, எப்படியப்பா அவர்கள் முகத்திலே எல்லாம் விழிப்பது” என்று விசாரத்துடன் பேசிக் கொண்ட காங்கிரஸ்காரர்களையும், “இதுக என்னமோ உரக்க உரக்கப் பேசினாங்களே, இவங்க கட்சி தானே ஊர் ஆளுது, கோயிலுக்குள்ளே விடறதிலே தொல்லை ஏது என்று எண்ணிதானே தலைமுறை துலைமுறையாகக் கோயிலுக்குள்ளே போகாதகூட்டம் இன்று போகப் போவுது, தேங்கா பழம், கற்பூரம், செலவாகும்னு நம்பி, ஏராளமாக வாங்கி வைத்தேன். கடைசியிலே கையை விரித்துவிட்டாங்க; கோயிலைத் திறக்கவில்லையாமே! வீணா எனக்க நஷ்டமாச்சே! நான் என்ன செய்வேன்” என்று வேதனைப்பட்ட கடைக்காரரையும், ஆங்காங்கு சிறுசிறு கூட்டங்கள், சிலகூட்டம் விசாரத்தோடும் சில கூட்டம் வெற்றிக் களிப்போடும் இருந்ததை, இவைகளை எல்லாம் படம் எடுத்திருக்கலாமே!

“மகாத்மாகாந்திக்கு ஜே!” என்ற கோஷமிட்டு, மந்திரி கோட்டி ரெட்டியார் தலைமையிலே அரிஜனங்களும், காங்கிரசாரும், ஆழ்வார் திருநகர் கோயிலுக்குள் நுழையக் கிளம்ப வைதீகர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு, வாசற்படியிலே நின்றுகொண்டு, கூச்சலிட்டு எதிர்ப்புக்காட்ட, இதமாக ஏதேதோ எடுத்துக்கூறியும் தன் பேச்சுக்கு வைதீகர்கள் இணங்க மறுத்தது கண்டு, மந்திரியார் மனவேதனையுடன் திரும்பிய காட்சியையும், எங்கோ ஓர் இடத்திலே, மடியிலே கோயில் சாவியைப் ‘பத்திரமாக’ வைத்துக்கொண்டு, “மந்திரியானால் என்ன? மகாராஜனானால் கூட என்ன? சாவிதர முடியாது! சண்டாளர்களையா கோயிலுக்குள்ளே விடுவது? என் உயிர்போனாலும், சாவிதர முடியாது. சாவி இல்லாமல், பூட்டு எப்படித் திறக்கும்னேன்? பூட்டு திறக்காமே கோயில் கதவு திறக்குமோன்னேன்! அது திறக்காமே ஆலயப்பிரவேசம் எப்படிச் சாத்தியம்னு கேட்கறேன்? என்ன எண்ணிண்டா இவரளெல்லாம்? மந்திரியானா என்ன, ராஜதந்திரியானா என்ன! மரியாதையா ஊரை விட்டுப் போகச் சொல்லும்” என்று சீற்றத்தோடு பேசிய வைதீகரையும், ஊராள்கிற மந்திரியாரை சாதாரண மடி சஞ்சி, இப்படி ஆட்டிவைக்க முடிகிறதே! எவ்வளவு அதிகாரம் பார்த்தாயா இந்த ஆரியருக்கு? என்று திகைப்புடன் பேசிய பொதுமக்களை, “இதனாலேதானே ஈரோட்டுப் பெரியார், இந்தக் கும்பல் என்றாலே பிடிக்காமே கண்டிக்கிறாரு. அவர் சொல்வதிலே என்ன தவறுன்னு சொல்லுங்கய்யா இப்போ. ஊர் உலக
மெல்லாம் சரி என்குது, உத்தமகாந்தி இது அவசியம் என்கிறாரு, இந்தத் திவசம் தர்ப்பணம் செய்துகிட்டுப் பிழைக்கிற ஆசாமிக தடுக்கிறார்களே. அவர்கள் தடுக்கறாங்க நாம்பளும், சும்õ வாயைப் பிளந்துகிட்டு, தலையைச் சொறிந்து கிட்டுத்தான், கோபுரத்து எதிரிலே நிற்கிறோம். செச்சே! நினைச்சா, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கு” என்று ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட குரலிலே பேசிய காங்கிரஸ் தமிழரை, இப்படிப்பட்ட காட்சிகளைப் படம் பிடித்திருக்கலாமே!
**

“போ! 34! என்னதான் ராஜ்யம் மாறினாலும், சுயராஜ்யம் வந்தாலும், நம்மளவங்களே ஆளவந்தாலும், நமக்கு இருக்கிற தொல்லை எப்பவும் உள்ளது போலத்தான் இருக்கு. என்னமோ, இந்தக் காங்கிரஸ்காரரு, ஆளவந்து விட்டாங்க,இனி வெள்ளைக்கார ராஜ்யத்திலே நமக்கு இருந்த மாதிரியான வேலைகள் இருக்காது. கிளர்ச்சி, கூட்டம், கலகம், 144, கூட்டத்தைக் கலைக்கிறது, தடியடி, துப்பாக்கிவிடறது, இதுமாதிரி தொந்தரவு பிடிச்சவேலை இருக்காதுன்னு நினைச்சா, நம்ம ஆசையிலே மண் விழுந்துப் போச்சி நம்ம ‘ட்யூடி’க்கு ஓய்வு காணோமே ‘341 இப்பவுந்தான், ‘பிடி! அடி! சுடு’ இதெல்லாம் இருக்குது. இராத் தூக்கம் இல்லை. போறவன் யாரு? சிகப்புச் சொக்காயான்னு பாருன்னா, பார்க்க வேண்டி இருக்கு.”

“இதுதானா? கோயிலுக்குள்ளே போற ஊரிலே, போறவனுங்களை, போகக்கூடாதுன்னு சொல்றவங்க தடுக்காமே கொள்ளாமே,கலகம் கிலகம் நடக்காமே, பார்த்துக்கிறதொல்லை வந்து நம்ம தலையிலே விடியுதா? கோயிலுக்குள்ளே போகாத ஊரிலே கோயிலுக்குள்ளே போகவேணும்னு சொல்றவங்க, நுழைஞ்சிவிடாதபடி பார்த்துக்கொள்ற தொல்லையும் விழுது. என்னத்துக்காகத் திறந்துவிடறேன் விடறேன்னு சொல்லோணும் அடெ! தொறந்து விடறதுன்னா, திறந்து ஆச்சின்னு ஒரு சட்டத்தைச் செய்து போட்டா நம்ம வேலையாவது மிச்சமாகுமா! அதுவும் செய்யறதில்லை. அனாவசியமா நமக்குத்தான் ஒண்ணுக்கு இரண்டா வேலை அதிகமா வளருது. இந்த வேடிக்கையைக் கேளு. முன்னாலே எல்லாம் கள்ளுக்கடைகளிலே கலாட்டா வராமே பார்த்துக்கொள்றது, எவனாவது வெறிப்பய, குடித்து விட்டு ஆடினா அடக்கறது, இந்த அளவோடு இருந்ததா வேலை. என்ன செய்யறது! நம்ம ‘ட்யூடி’ நாம்ப செய்தோம். இப்ப என்னாடான்னா, இதிலேயும் புதுவேலை வந்துடுத்து - எங்கெங்கே திருட்டுச்சாராயம் காச்சறான்னு கண்டுபிடிக்க வேண்டிய வேலை இதுவேறேதொல்லை முளைச்சுது” என்று பேசும், கான்ஸ்டபில்களைப் படம் பிடிக்கலாம்.
***

“ஏண்டா! டே! சடையா? என்னமோ, உலகத்தையே புரட்டி விடப் போறவனுங்கபோலே, கூட்டம் போட்டுகிட்டு, எவனெவன் பேச்சையோ கேட்டுகிடடு ஆடினீர்களே, என்னடா ஆச்சு உங்க கதை? பார்த்தயா? கூண்டோடு உங்க லீடர்களைப் பிடித்துப் போட்டாச்சி கப்சிப் பயலுக, பெட்டியிலே போட்ட பாம்புமாதிரியா ஆகிவிட்டானுங்க. காங்கிரஸ் ராஜ்யாம்னா நீங்க என்னடா கலப்பை ராஜ்யம்னு எண்ணிகிட்டிங்களா? உங்க திமிரு ஒண்ணும் செல்லாதுடா செல்லாது. எந்த ராஜங்கம் வந்தாலும், எங்க ராஜாங்கத்தை ஒண்ணும் அசைக்கக்கூட முடியாதுடா, முடியாது. முட்டாப்பயகளே! ஜாக்ரதையா இருக்கோணும். இல்லையானா பிடிச்சிமூடிடச் சொல்வேன், தெரியுதா” என்று அவசரச் சட்டம் பிடிறந்த ஆனந்தத்துடன், பேசும் பண்ணை முதலாளிமார்களையும், அலை அரசர்களையும், படம் பிடிக்கலாம். பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும்!!
***

“ஜெமீனை, ஒழிச்சுப்போடுவானுக இல்லை! சூரப்புலிக! ஜெமீனை ஒழிக்க வந்துட்டானுங்க. டே! கூப்பிடுடா ஒரு பத்து ஆளை - ஏண்டா தடியா, காதிலே விழலையோ - போ கூட்டிக் கிட்டு போய், காட்டிலே இருக்கேமரங்க, ஒண்ணுவிடாமெ, வெட்டி, விறகு ஏலம் போடுங்கடா. போ! ஜெமீனை எடுக்க வர்ரப்போ, வெறும்பொட்டல் இல்ல காட்டுவேன் கண்ணுலே; ஓஹோன்னானாம்! இந்தப் பக்கத்திலே யாரு ‘ஜபம்’ சாயுதுன்னு பார்க்கறேன். டே! ஏரிக்கரை சரிந்திருக்கே, அது அப்படியே கிடக்கட்டும். எவனாச்சம் அதெரிப்பேர் செய்யப்போனிக, கட்டி விட்டு உதைக்கச் சொல்வேன், தெரியுதா? ஜெமீன் வேணுமாமே இல்ல, ஜெமீனு. வெறும் மண்ணைத்தாண்டா காணவேணும், வேறே ஒண்ணும் கிடைக்காது, அதுக்கும் நான் சொல்கிற கிரயத்தை, முள்ளங்கிபத்தெபோலப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டவேணும். ஜெமீனை, சூரப்புலிக!” என்று சீறிப்பேசி, காடுகளை அழித்தும் வயல்களைக் கெடுத்தும் வரும், ஜெமீன்
தாரர்களைப் படம் பிடிக்கலாம். அழுத குழந்தை கூடவாய் மூடும்!! அருமையான படமாக அமையும்.
***

“வானம் இருண்டு வருகிறது! ஒருவிதமானவாடைக் காற்று அடிக்கிறது. டே! கரியா! தடிப்பயலே! மழைக்காற்று அடிக்கிறதே தெரியலையா? மடப்பய? போய், மாடி ரூம் ஜன்னல் கதவைச் சாத்துடா. போ! மழைக்காத்துப்பட்டா மார் சளிபிடிக்கும். மங்கா தூங்குது அறையிலே. குரங்காட்டம் ஆடிக் கிட்டுபோய் சந்தடி செய்து எழுப்பி விடாதே, மெதுவாகப் போய், ஓசைப்படாமே, ஜன்னலை மூடிவிட்டு ஓடிவா. போ” என்று கூடத்து ஊஞ்சலிலே திண்டுமேல் சாய்ந்தபடி, மருந்து கேட்லாக் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு மிராசு மருதவாணர் கூறுகிறார். ஓடுகிறான் வேலையாள், மங்காவின் தூக்கம் கலையாதபடி மெதுவாக ஜன்னலை மூடிவிட்டு வருகிறான்.

படத்திலே ஒருபகுதி. பிறகு மளமளவென்று, ஊர் பூராவும் காட்சியாக்கி, ஊருக்கு வெளி காற்று அடிப்பது, மரங்கள் ஆடுவது, ஆடுமாடுகள் ஓடுவது, போக கிடமத்தவர்கள் தெருத்திண்ணைகளில் ஒண்டுவது, சாலை, சோலை, பனந்தோப்பு, ஏரி, சேரி இதுவரையிலே காட்சியைப் பிடித்துக் காட்டி, சேரியிலே ஒரு குடிசைக்குள்ளே வரவேண்டும்.

“குப்பி! மழை வரும் போலிருக்கு”

“ஆமாம்! காத்தும் அடிக்குது”

“ஆமா, சில்லுன்னுவீசது, மழை நிச்சயமா வரும். நான் வயக்காட்டுப்பக்கம் போயிட்டு வர்ரேன். நீ படுத்துக்கோ”

“போய்வா! என்னமோ சாமி புண்யத்திலே மழை பெய்தாத் தான் இந்த வருஷமாச்சும் கால் வயத்துக்காவது கிடைக்கும் போய் வா....”

“ஏன் குப்பி! ஏன் ரொம்ப ஆயாசமாப் பேசறே. கடப்பாரை எங்கே? நீ எழுந்திருக்கவேணாம், இடத்தெச் சொல்லு.”

“அதோ, கிழக்காலே பாரு. அப்பா! ஐயோ!”

“ஏன் குப்பி! என்ன? இழப்பெ ரொம்ப வலிக்குதா?”

“ஆமாம் - நீங்க ஓடிப் போயிச் சுருக்கா வந்துடுங்க, போங்க.”

ஓடுகிறான், மாட்டு வாழ்விலே உள்ளமனிதன் - கர்ப்பவதியான அவன்மனைவி குப்பி வேதனைப்படுகிறாள்.

மீண்டும், மிராசு மாளிகையைக் காட்டுங்கள் காட்சியாக - மாங்கா தும்முகிறாள். அந்தச் சத்தம் கேட்டதும், அலறி எழுந்து, மிராசுதார், அருகே ஏதோ வேலை செய்து கொண்டுள்ள வேலையாள் முதுகிலே ஒரு அடி கொடுத்து, ‘முட்டாளே! ஜன்னலைச் சரியாகச் சாத்தவில்லையா?” என்று கேட்கிறார். சரியாகத்தானே சாத்திவிட்டு வந்தோம், ஏன் ஐயா கோபிக்கிறார் என்று திகைக்கிறான் வேலையாள். “அதோ! அம்மா தும்முதேடா - சில்லுகாத்து பட்டதாலேத்தான் தும்மல் - நீ கதவைச் சரியாச் சாத்தலே, சனியன் பிடிச்ச மழை வந்தாலே அவ உடம்புக்கு ஆகிறதில்லை”, என்று ஆயாசமடைகிறார் மிராசுதார்.

அந்தச் “சனியன் பிடித்த மழை”யினால் கிடைத்த, சீரகச சம்பா அமபாரத்தையும், குப்பியின் குடும்பபாரத்தை அதிகப்படுத்த வந்த நாலாவது குழந்தையையும் காட்சியாக்கி, விதையும் விளைவும் என்று படம் பிடிக்கட்டுமே! செய்வார் களா, பிரகாசம்பிக்சர்சார்! அதோ ஓடும் மெருகு கலையாத மோட்டார்! அதனுள்ளே உல்லாசச் சீமான்! எதிரே, பாரவண்டி! மாடல்ல, மனிதன் இழுக்கிறான்! படம் எடுக்கட்டும்.

இதோ ஓர் குருடன். பிச்சை எடுக்கிறான்! அதோ கோடி சூரியப் பிரகாசத்துடன் தங்கரிஷப வாகன சேவை நடக்கிறது! படம் எடுக்கலாம்!

ஜவுளிக் கடைகளின் வாசலிலே நித்தம் தவங் கிடக்கும் கூட்டம்; ரேஷன் கடைகளிலே நின்ற அரிசியைக் கையாலே எடுத்துப் பார்த்து, “ஆண்டவனே! இந்தக் கஷ்டம் தீராதா” என்று கவலைப்படும் தாய்மார்கள், இவர்களைப் படம் பிடிக்கலாம்; காலம் எவ்வளவு சுபீட்சமாக இருக்கிறது என்பதற்கான படமாக அமையும்.

எங்கு பார்த்தாலும் ‘சமுத்திரமயமாக’ நீர் இருப்பது, ஏரி உடைப்பு எடுத்துவிடுமோ என்று பயத்துடன் கரையைக் கண்டு ஏக்கம் கொள்ளும் விவசாயிகள், இவர்களைப் படம் பிடித்து விட்டு, சென்னையிலே நடைபெறும் மகா யாகத்தையும் படம் எடுக்கலாம், முக்கியமாக, யாக நோக்கத்தை விளக்கி ஒருவர் பேசினாரே, “இந்த யாகம் வருணனை வேண்டிச் செய்யப்படுவது; மழை பொழிய வேண்டும் என்பதற்காக” என்று, அந்தப் பகுதியைப் படம் பிடித்து, அற்புதமான படமாகக் காட்டலாம்.

நேருவைக் காஷ்மீர் மன்னர் கைதுசெய்ததற்காக மாணவர்கள் நடத்திய கண்டன ஊர்வலம், அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்திலே, மாணவர்களின் சுதந்திரதாகத்தைப் பாராட்டி வீரகர்ஜனை செய்த காங்கிரஸ்” தலைவரின் கெம்பீரத் தோற்றம், இந்தோசீனா விழாவுக்காக அதே மாணவர் நடத்திய ஊர்வலம், தடியடி தரப்பட்ட காட்சி, “மாணவர் எவ்வளவு கெட்விட்டார்கள் தெரியுமா? கட்டுப்பாடே இல்லை! தடை உத்தரவு போட்டால் மீறுகிறார்கள். இது தப்பு! இது கூடாது! மாணவர்க்கு அழகல்ல!” என்று பேசும் காங்கிரசார், ஆகிய இவ்வளவையும் சேர்த்துப் படமாக்கலாம்! பள்ளிக் கூடங்களிலே கூட இலவசமாகக் காட்டலாம்.

ஓட்டல்கள் சிலபலவற்றிலே ஆதித்திராவிடமக்கள் அனுமதிக்கப்பட்டதையும், அவர்கள் நுழைந்ததையும், ஐயர் அன்புடன் உபசரித்ததையும் படமாக்கி, அதைத் தொடர்ந்து, அறிவாலயங்கள் என்று போற்றப்படும், கல்லூரிகளிலே நடைபெறும் ஹாஸ்டல்களிலே, மாணவர்களின் சாப்பிடுமிடத்திலே காட்டப்படும் ஜாதி பேதத்தையும் படமாக்கிக் காட்டலாம், படத்துக்கு, பொதுவான ஒரே தலைப்பு கொடுக்கலாம். கதம்பம் என்றோ அல்லது எல்லாம் உண்டு! என்றோ பெயரிடலாம்.

மதுரையிலே ஜாதி இந்துக்களின் பிணம் கொளுத்தப் பட வேண்டிய இடத்திலே, ஆத்திராவிடனுடைய பிணம் கொளுத்தியதற்காக, கூண்டிலே நிறுத்தப்பட்ட ஆதித்திராவிடனையும் எடுத்து, பக்கத்திலே ஜெகஜீவன்ராம், சிவசண்முகம்பிள்ளை ஆகியோருக்கு நடைபெறும் உபசாரங்களையும் படம் பிடித்துக் காட்டலாம் - பாட்டுக் கூட இருக்கலாம். அதிலே “ஜாதி மதங்களைப் பாரோம்” என்று உரத்த குரலிலே! நீதிபதி கொடுத்தாரே தண்டனை, அந்த ஆதித்திராவிடனுக்கு. அதைக் கொஞ்சம் ‘சுருதி’யைமட்டாக்கிச் சொல்லிக் கொள்ளலாம் படம், வெற்றிகரமாக ஓடும்!

மில்லினால் வரும் கேடுகளையும் கைராட்டையால் வரும் நன்மைகளையும் படமாக்கிக் காட்டி, அதே படத்துடன், ஷோலாப்பூர், ஆமதாபாத், பம்பாய், கான்பூர், ஆகிய இடங்களிலே மில்களிலே தயாராகும் அழகிய ஆடைகளின் மேன்மையைத் தெரிவிக்கும், விளம்பரங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். பிர்லாவுக்கே படத்தின், அகில இந்திய, அகில மலாயா, கிழக்கு தெற்கு ஆப்பிரிக்க, உரிமைகளைத் தந்தும் விடலாம். நல்ல இலாபம், படம் இன்டர் நேஷனல், சர்வ தேசப்புகழ் பெறும். நல்ல சந்தர்ப்பம்.
***

“வாங்கடி, வாங்கடி பெண்டுகளா!
உங்கவளையல்குலுங்கிட குத்திடுங்க,
வாழவழிஇது தெரிஞ்சிடுங்க
நெல்லை வாட்டமாகக்குத்திப்பார்த்திடுங்கோ.
கைக்குத்து அரிசியைத் தின்னவேணும்
இனி காந்தி மகான் சொல்லை நம்பவேணும்
காட்டுறார் அமைச்சர் கதிநமக்கே
கையில் கனத்த உலக்கையை எடுத்திடுவீர்!”

என்று நாமக்கல்லாரைக் கொண்டு கும்மிபாடச் சொல்லி, அதைத் தேசீய இசைவாணியார் யாரையாவது கொண்டு பாடச் செய்து அந்தப் பாட்டுக்கு ஏற்றபடி, உலக்கைகளை எடுத்துக் கொண்டு நெல்குத்துவதற்கு ஒரு டஜன் நாட்டியராணிகளைத் தயார் செய்து, அவர்கள் அங்ஙனம்நெல்லைக்குத்த, கைராட்டையைச் சுற்றியபடி கனம்: மந்திரியார் யாராவது ஒருவர் பார்த்துப் புன்னகை புரிய, பக்கத்திலே மேலாடை வீரர் வரதாச்சாரியாரைக் கொண்டு தக்ளியும் சுற்றச் சொல்லி, அற்புதமானபடம் எடுக்கலாம். டைரக்ஷனை, அடையார் நாட்டியக்கலா நிலையத்தாரிடம் தந்து விடலாம். படம் அ.கூ. சந்தேகமே வேண்டாம். நமது இந்திய நண்வர்கள் என்ற தலைப்பிலே, அமெரிக்காவிலே ஆண்டு முழுவதும் ஓடும். அமெரிக்கா அனுப்புகிற சிரமம் கூட சென்னை சர்க்காருக்கு வேண்டாம், ஒரே ஒரு கடிதம் விஜயலட்சுமி அம்மையாருக்கு. போதும், அதற்கேற்ற ஏஜன்சியை அவர்களே தெரிவிப்பார்கள். நல்லபலன் இருக்கும்.

விஞ்ஞானக் காங்கிரசிலே வீர ஜவஹர், விழிப்புற்ற இந்தியா விஞ்ஞானத்தைப் போற்ற வேண்டும் என்று பேசியதை ஏற்கனவே படமாக்கி இருப்பார்கள். அதிலே ஒரு ‘காப்பி’ வாங்கிக் கொண்டு, பம்பாய், சென்னை ஆகிய இடங்களிலே நடைபெற்ற யாகங்களைப் படமாக்கி, இணைத்து, இந்தியா முன்னேறுகிறது என்ற தலைப்பிலே படமாக்கி, சகலதேசங் களுக்கும் அனுப்பலாம். படத்திலே யாகப்பகுதியை விளக்க, வேதாந்தி சர்: ராதாகிருஷ்ணனை பேசச் செய்வது நல்ல, இங்கிலீஷில்!
***

இந்த நாட்டு ஜாதிக் கொடுமை, உயர் ஜாதி என்று கூறிக் கொண்டுள்ளவர்களின் அட்டகாசம், அமுல் இந்த நாட்டிலே உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு, அதனால் வரும் கேடுகள், இவைகளைப் போக்காமல், முரண்பட்ட பல முறைகளைக் கையாளும் போக்கும் அதன் விளைவுகளும், ஆகியவற்றினைத் தைரியமாகப் படம் எடுக்க முன் வரட்டும் பிரகாசம் பிச்சர்சார்! வலாத்காரச் செயல், ஜாதியின் பேரால், முதலாளித்துவத்தின் பேரால் நடத்தப்படுகிறதே, அவகைளைப் படம் பிடிக்கட்டும், ஓலைக் குடிசை தீப்பிடித்துக் கொள்ள உள்ளே கிடக்கும் குழந்தையைத் தூக்கப் பதறி ஓடும் ஏழைத் தாய், பாதை ஓரத்திலே நின்று பல்லைகாட்டிப் பாவிகளையும், புண்யவான்களே என்று அழைத்துப் பிச்சை கேட்கும் பராரி, பட்டினியால் வாடுபவன் எதிரே, ‘நூறு பிராமணாளுக்கு போஜனம் அளித்து’ப் புண்யம் தேடியவன், கள்ள மார்க்கட்காரன் தந்த காணிக்கையால் செய்யப்பட்ட வெள்ளி ரிஷபத்தின் மீது ஜடையில் பிறை அணிந்த சடாட்சரம் ஊர்வலம் வருவது, இவைகளைக் காட்டலாமே படமாக்கி! செய்வார்களா? இவைகளை எல்லாம் செய்யாவிட்டாலும் போகிறது, தோழர் வைத்தியநாத ஐயர் குறிப்பிட்டபடி, ஆகஸ்ட்டு இயக்கத்தின்போது ஜெயிலிலே காங்கிரஸ் தலைவர்கள் இருந்தது, அப்போது அடக்குமுறைச் சட்டங்களைக் கண்டித்தது, இன்று கம்யூனிஸ்டுகள் அவசரச் சட்டத்தால் கைதுசெய்யப்பட்டுக் காராக்கிரகத்திலே தள்ளப்படுவது - சட்டசபையிலே அவசரச்சட்டத்துக்குப் பிரதமர் ஆதரவு கோருவது - இவைகளைப் படமாக்கி ஆளவந்தார் என்ற தலைப்புடன் வெளியிடட்டும். படமும் அருமையாக இருக்கும், பாடமும் சிலாக்கியமானதாக இருக்கும்.

திராவிடநாடு - 9.2.1947