அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலமைக்குப் பொருள் புளுகுவதுதானா?
ஒருவர் புலர், மற்றவர் புலமையற்றவர், என்ற போதிலும் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர். புலவர், தம்முடைய புலமையினால் தம்முடைய நண்பரைத் திகைக்க வைப்பது வழக்கம். எப்பொழுது பார்த்தாலும் ஏதாவதொன்றைக் கூறித் தம்முடைய ந்பரைத் திணறடித்து விடுவார். தாம் இவ்விதம் செய்வதை ஒரு பெருமை என்றே புலவர் எண்ணிக் கொள்வார். இப்படிப்பட்டவர்களும் உலகில் உயிரோடு உலவுகின்றனரே என்றுகூ அந்தப் புலவர் எண்ணித் தம்முடைய புலமை கண்டு புளகாங்கிதமடைவதுண்டு. புலவர் இவ்வாறெல்லாம் தம்மைக் கிண்டல் செய்வதை அந்த நணபர் தவறாகக் கொள்ளாமல், தம்மிடமுள்ள பற்றுதல் காரணமாக நகைச்சுவையாகப் பேசி ஆளவளாவுகிறார் என்றே முதலில் எண்ணியிருந்தார். ஆனால். இது நீடிக்கவில்லை. புலவர் தம்முடைய புலமைக்குத் தாமே முற்றுப்புள்ளி இடுகிறோமே என்பதையும் மறந்து, வரவரத் தமது வாயாட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டே வந்தார். இதை நண்பரால் சமாளிக்க முடியவில்லை. “இந்தப் புலவர் எனக்கு நண்பராய் இருந்தும் - என்னிடம் புலமை இல்லை என்பதைத் தெரிந்திருந்தும் - ஏன் என்னிடம் தம்முடைய புலமையைக் காட்டுகிறார்” என்று எண்ணினார். “எட்டுச்சுரைக்காய்ப் புலவரான இவர், எனக்கு இயற்கையாக இருக்கக்கூடி அறிவுகூட இல்லையென்று பேசி என்னிடம் ஏதேதோ பேசி ஏக்களிப்படைகிறாரே ஏன்?” என்றும் எண்ணினார். “இவரோ என்னுடைய நெடுநாள் நண்பர் இவரைப் பகைத்தும் கொள்ளவும் என்னுடைய பகுத்தறிவு இடம் தரவில்லை” என்றும் கவலைப்பட்டார். எப்படியாவது இவருடைய ஆறுமாப்பை அடக்க வேண்டுமென்று உறுதி கொண்டார். சிலகாலம் அந்த நண்பர் இந்தப் புலவரின் கண்களில் படாமலேயே இருந்து வந்தார்.

ஒருநாள், திடீரென்று இந்தப் புலவர் அந்த நண்பரைக் காண நேர்ந்தது. அப்போது புலவர் தம்முடைய நண்பரின் நலனை ஊசாவும முறையில், அவருடைய வாழ்க்கை வளமாக நடைபெறுகிறதா என்பதை அறிய விரும்பி, “நண்பரே, உமக்கு என்ன கிடைக்கிறது?” என்று தம்முடைய புலமை கலந்த கேள்வியால் கேட்டாராம். இதனைக் கேட்ட அவருடைய நண்பர் உடனே,

“எனக்கு மாசம்பத்துக் கிடைத்து வருகிறது”.
என்று விடை அளித்தாராம். இதைக்கேட்ட புலவர், “மாசம் ஒன்றுக்குப் பத்து ரூபாதான் கிடைக்கிறதா? இதை வைத்துக் கொண்டு நீர் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்?” என்று கேட்டாராம். இதைக் கேட்டதும் அந்த நண்பர் குலுங்கக் குலுங்க நகைத்துவிட்டு, “புலவரே! உம்முடைய புலமை எல்லாம் இவ்வளவுதானா? நான் சொன்ன வாசகத்திலுள்ள பொருள் என்ன என்பதைக் கூட உம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே! உம்முடைய புலமை எல்லாம் எங்கே போய்விட்டன?” என்று கேட்டாராம். புலவருக்கு ஒன்றுமே புலனாகவில்லை. தம்முன் நிற்பவர் தம்முடைய பழைய நண்பர்தானா என்ற ஐயம்கூட அவருக்குண்டாகி விட்டதாம். ஒருமுறைக்கு இருமுறை அவரை நன்றாக உற்றுப் பார்த்து, அவர் தம்முடைய பழைய நண்பரேதான் என்ற முடிவுக்கு வந்து, “என்ன, நண்பரே! நீர் புகன்றதொன்றும் புரியவில்லையே!” என்றாராம். அதற்கு அந்த நண்பர், நீரோ எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தவர், நானோ எதும் அறியாதவன், அப்படியிருந்தும் என்னைக் கேலி செய்யும் முறையில், நான் கூறிய வாசகத்துக்குப் பொருள் கொண்டு, என்னைக் கேவலம் மாசம் ஒன்றுக்குப் பத்து ரூபா பெற்று வாழ்பவன் இன்று இழிவாகப் பேசுவது முறையா” என்று மேலும் கேட்கவே, புலவர்பாடு திண்டாட்டமாகி விட்டது. “நான் என்னுடைய நண்பரிடம், உம்முடைய வாழ:க்கையை நடத்துவதற்குப் போதிய வருவாய் கிடைத்து வருகிறதா என்று தானே கேட்டேன், அவர் அதற்கு, எனக்க மாசம்பத்துக் கிடைத்து வருகிறது என்று சொன்னார். மாசம் ஒன்றுக்குப் பத்து ரூபா எப்படிப் போதும் என்று கேட்டால், இவ்வளவுதானா உம்முடைய புலமை என்று கிண்டல் செய்கிறார். மாசம் பத்துக் கிடைக்கிறது என்ற வாசகத்துக்கு வேறு பொருள் இருப்பதாகவும் தெரியவில்லையே! நாமோ புலவர்! ஆவரோ சாதாரண பேர்வழி! எத்தனையோ தடவை நான் அவரை எண்னுடைய புலமையினால் மடக்கியிருக்கிறேனே! இப்போது அவர்நம்மை நாவசைக்க முடியாதபடி செய்துவிட்டாரே!” என்ற ஏக்கமும் கலக்கமும் புலவருக்கு ஏற்பட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நிலையில், தம்முடைய புலமை அனைத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நண்பரை நோக்கி, “நீர் கூறிய வாசகத்தின் உண்மையான பொருள்தான் என்ன?” என்று வெட்கத்துடன் கேட்டார். அதற்கு அந்த நண்பர், “எனக்குக் கிடைப்பது மாசம் பத்தல்ல, மா-சம்பத்து, அதாவது மா-பெரிய, சம்பத்த-செல்வம் கிடைக்கிறது” என்று விளக்கம் கூறினாராம். இதைக் கேட்டு புலவர் வெட்கித் தலைகுனிந்து போய்விட்டாராம். நுண்ணிய அறிவு வெறும் புலமையினால் மட்டும் ஏற்பட்டுவிட்டது, பகுத்தறிவும் அதறகு வேண்டும் என்ற பண்பை அந்தப் புலவர் அதன் பின்னர்தான் உணர்ந்தாராம்.

இந்த நிலையில்தான் இன்று நம் தமிழ்நாட்டுப் புலவர் பலர் இருக்கின்றனர். புலமையும் பகுத்தறிவும் ஒன்று சேரக் கூடாதென்னும் போக்கினர் இவர்கள்.

ஏதாவதொன்றுக்கு ஒருபொருள் தான் இருக்கும். இன்னொன்றுக்கு இரண்டு பொருள்களும் அதற்கு மேலும் இருக்கும். எடுத்துக்காட்டாக “வேலை” என்ற தமிழ்ச் சொல் பொதுவாகவே “தொழில்” என்ற பொருளைத்தான் தரும். அதற்கு இன்னொரு பொருளும் உண்டென்று புலவர் பெருமக்கள் புகல்வர். அதாவது கடல் என்ற சொல்லுக்கு வேலை என்ற சொல்லும் பொருந்தும் என்பர். எப்படியென்றால், கடலானது அலையடித்தலாகிய வேலையை ஓயாது செய்துகொண்டிருப்பதால், அதற்கு “வேலை” என்ற பெரும் ஏற்பட்டதென்று விளம்புவர். இவ்வாறு சிற்சில தமிழ்ச்சொற்களுக்கு இயற்கையாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் ஏற்படுவதுண்டு. இவ்வாறு பொருள் ஏற்படுவது ஒரு சொல்லுக்கு மட்டுமல்ல, ஒரு சொற்றொடருக்கே கூடப் பலபொருள்கள் ஏற்படுவதுண்டு மாசம்பத்து, மா-சம்பத்தாகவும், பொன்நாடு, பொன் இடாகவும் புலவர் பெருமக்களால் பொருள் கொள்ளப்பட்டுப் புகழ் பெறும் பழக்கம் நம் நாட்டைத் தவிர வேறெங்கும் அவ்வளவாகக் கிடையாது. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
இரண்டு புலவர்கள் ஓர்நாள் இரவில் வழி நடந்து சென்றார்கள். பனிக்காலமாக இருந்ததால், பனியின் கொடுமையை விளக்கப்புகுந்த ஒரு புலவர் மற்றபுலவரை நோக்கி,

“பனிக்காலம் தீது”
என்றார். அதனைக் கேட்ட அந்தப் புவலர்.
“பனிக்காலம் நன்று”

என்றார். இதனால், இரு புலவர்கட்கிடையே பெருஞ்சண்டை மூண்டு விட்டது. பனிக்காலத்தைத் தீதென்று கூறியவர், அதனை நல்லதென்று கூறிய புலவரை நோக்கி, “நீ எப்படிப் பனிக்காலத்தை நல்லதென்று கூறலாம் என்று கேட்க, அதற்கவர், நானும் அதனைத் தீதென்றுதான் கூறுகிறேன் என்று கூற, இல்லை, நீ கூறுவதில் பனிக்காலம் தீதென்று எப்படிப் பொருள் ஏற்படுகிறது என்று கேட்க, அதற்கவர், தாம் கூறிய பனிக்காலம் நல்லது என்ற சொற்றொடரை மறுபடியும் கூறி அதற்கு விளக்கமுரைத்தாராம். அதாவது “பனிக்காலம் நல்லது” என்று நான் கூறிய சொற்றொடரைப் பிரித்தால், “பனிக் காலம்” என்ற சொற்றொடர் பனிக்கு இலம் என்று இரு சொற்களாகிப் பனியைப் பார்க்கிலும் இலம் அதாவது நஞ்சு நல்லது என்ற பொருளைத் தந்து, பனிக்காலம் தீதென்று நீர்கூறயிதையே மேலும் நன்றாக வலியுறுத்தினேன் என்றார். இவ்வாறு, நஞ்சைவிடப் பனி தீதென்று விரிவுரை கூறி விளக்கம் உரைத்தாராம். ஒரு சொற்றொடருக்கு இரண்டு பொருள்கள் ஏற்படுவது போலவே, நாம் மேலே எடுத்துக்காட்டியவது போலவே, இரண்டு சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் ஏற்படுவதுண்டு. இவையெல்லாம், தமிழ் மொழியின் ஒப்புயர்வற்ற தனிப்பெருஞ் சிறப்பைக்காட்டுவனவாகும். ஆனால், இவற்றையெல்லாம், நம்முடைய தமிழ்ப் புலவர்கள், தங்களுடைய புலமைக்கு அரண் தேடுவதில் பயன்படுத்தி இவற்றிற்குள்ள உண்மையான மதிப்பையே கெடுத்து விடுகின்றனர். படிப்பறியா மக்கள் இவர்களின் புலமைப் பித்தலாட்டடங்களை அறிந்து கொள்ள முடிவதில்லை. புலவர்கள் தங்கள் பிழைப்புக்கு வழி தேடிக் கொள்ள எதை வேண்டுமானாலும் எப்படியும் கூறுலாம், நாம் புலவர்கள் நாம் கூறுவதைத்தானே அந்தப் புல்லர்கள் நம்பியாக வேண்டும் என்ற ஆணவத்துடன், அங்கொன்றும் இங்கொன்றுமாக இளைப்பார்த்து அறிவை விற்கின்றனர். அகப்பட்ட வரையில், இலாபம் என்பதைத் தவிர, இவர்களிடம் உண்மையான குறிக்கொள் எதுவும் இருப்பதில்லை.

ஒரே புலவர் சுயமரியாதைச் சங்கத்திலும் பேசுவார் - சைவ மெய்யன்பர்கள் கூட்டத்திலும் பேசுவார். பேசும் பொருளும் ஒன்றாகவே இருக்கும். ஆனால், கருத்தில் கனத்த மாறுபாடுகள் காணப்படும். சுப்பிரமணியக் கடவுளைப் பற்றிச் சைவமெய்யன்பர்கள் கூட்டத்திலே பேசும்போது, கந்தபுராணமே அவருக்கு இதாரமாக நிற்கும். ஆக்னிப் பொறிகள் ஆறுமுகக் கடவுளாகி, வள்ளியை வனத்தில் மணந்து, தெய்வயானையைத் தேவலோகத்தில் மணந்து, சூரபதுமனை மாய்த்து, பழத்துக்காகப் பறந்து பழனியில் தங்கிப் பின் சம்பந்தராகப் பிறந்து சமணர்களைக் கழுவேற்றிச் சைவத்தைக் காத்த செய்தி வரையில் ஒன்றுவிடாமல் ஒப்பித்துக் பாலும் பரிசும் பெறுவார்.

ஆனால், அதே புலவர் சுயமரியாதைச் சங்கத்தில் பேசும்போது அவருக்குப் பகுத்தறிவே இதாரமாக நிற்கும். சுப்பிரமணியரைப் பற்றிப் புராணங்களில் கூறப்படும் கதைகளை எல்லாம் கட்டுக்கதைகளாக்கி, அவருக்கு ஒரு தனிவிளக்கம் கொடுப்பார். அதாவது, சுப்பிரமணியன் என்றோ முருகன் என்றோ ஒரு கடவுள் எங்கும் கிடையாது - பண்டைக்காலத் தமிழ் மக்கள் பகலவனையே கடவுளாக வைத்து வழிபட்டனர் - ஏன் பகலவனை (சூரியனைக்) கடவுளாக வைத்து வழிபட்டனர் என்றால், “ஆக்காலத் தமிழ் மக்கள, பகலவன் உலகுக்கு ஒளியை வழங்கும் பெருஞ்செயலை மேற்கொண்டிருப்பவனாதலால், அவனுக்கு நல்ல மதிப்பைக் கொடுத்துப் போற்றி வந்தனர், என்ற போதிலும் அப்போற்றுதல் இஞ்ஞான்று பேசப்படும் கடவுள் வழிபாட்டைக் குறித்ததாய் இருந்ததில்லை. பகலவனைப் போற்றுவதற்கு இயற்கையான பல காரணங்கள் இருந்தன. பகலவனைக் குறித்துப் பார்வையைச் செலுத்திக் கொண்டிருப்பதால், கண்களில் உள்ள நச்சுக்கிருமிகள் பகலவன் ஒளியில் நசித்துக் கண்களுக்கு ஒளி மிகுதியாகின்றது. இவ்வாறு செய்வதால் உடல் நலமும் இயுள் நீடிப்பும் பேணப்படுகின்றன. இந்த முறையை இஞ்ஞான்றை மேல்நாட்டவர் பலர் கையாண்டு அதனால் உடல் உரமும் நோயின்மையும், இயுள் நீடிப்பும் பெற்று வாழ்கின்றனர். ஆதோடு நெல் முதலான உணவுப் பொருள்கள் நன்றாக விளைவதற்கும் பகலவனே துணையாகவும் காரணமாகவும் நிற்கின்றான். மழை பகலவனின் ஒளியின்றிப் பெய்ய முடியாதென்பதை இன்று விஞ்ஞான முறையில் மழையைப் பெய்ய வைக்கும் ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்” என்று தொடங்கி “அப்படிப்பட்ட பகலவனுக்கு ஒரு வடிவத்தைக் கற்பிக்க எண்ணிய ஆக்காலத் தமிழறிஞர்கள், அங்ஙனம் கற்பித்தார்கள். அதாவது, பகலவன் விடியற்காலையில் கடலினின்றும் கிளம்பி வருவது போல் தெரிவதால், கடலை அவனுக்கு ஊர்தி மயில்என்று கூறப்பட்டது. இனி, பகலவனுக்குச் சேவற்கொடி எப்படி ஏற்பட்டதென்றால், பகலவன் முதன்முதலில் நம்மால் பார்க்கப்படுவது விடியற் காலமாதலால், பகலவன் தோன்றிவிட்டான், எல்லோரும் விழித்தெழுங்கள் என்று கூறுவதுபோல் சேவல் கூவுவதால், சேவலைப் பகலவனின் கொடியாகக் கொண்டனர்” என்றும் இன்னும் பல காரணங்களைக் காட்டியும் பகலவன் முருகக் கடவுளான கதையைப் பகுத்தறிவாளர்களும் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளும் முறையில் கூறி அவர்களுயைட பாராட்டுதலையும் பெறுவர். இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏன் பேச வேண்டும் என்று ஏவரேனும் கேட்டு விட்டாலோ, “எல்லாம் இந்த வயிற்றுப் பிழைப்புக்காகத்தான்” என்று கூறித் தங்கள் வறுமையை முன்கொ;டு வந்து நிறுத்தி மன்னிப்புக் கேட்பதுபோல் பாசாங்கு செய்வர். எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடந்து கொள்ள வேண்டுமென்ற போக்கிலுள்ள இவர்கள் ஏன் நேரான வழியில் செல்லாமல் சேற்றில் ஒருகாலும் ஆற்றில் ஒரு காலுமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கவலைதான் இவர்கள் பேரில் நமக்கு உண்டாகிறது.

ஆனால், நம்முடைய தமிழ்ப்புலவர்களில் ஒரு சாரார் இருக்கிறாரக்ள், அவர்கள் அறிவுலகிற்கே நஞ்சூட்டுபவர்கள்! ஆணவத்தின் முழு வடிவத்தையும் அவர்களிடம்தான் காணமுடியும். தங்களை மிஞ்சிய அறிவாளிகள் எவரும் எங்கும் இல்லையென்ற ஆறுமாப்போடு கூடியவர்கள்! தாங்கள் கூறுவது எதுவாயினும் அதனைத் தட்டிக்கூறித் தவறு கண்டுபிடிக்கும் தகுதி தரணியில் எவருக்கும் கிடையாதென்ற தான்தோன்றிகள்! ஏதாவதொன்றைத் தாம் ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியே முடிந்த முடிபென்று மூளையின்றி உள்றுபவர்! மற்றவர்கள் ஆராய்ந்து கண்ட உண்மைகளை ஒப்புக் கொள்ள மறுக்கும் மமதையினர்! அதுமட்டுமல்ல, மற்றவர்கள் கூறும் உண்மைகளைக் கேலி செய்யும் கெடுமதியினர்! இப்படிப்பட்டவர்களின் தொகைதான் நம் நாட்டில் மிகுதியென்று கூடச் சொல்லலாம்.

நம்முடைய தமிழ்ப் புலவர்களில் ஒருவர், ஒருபாட்டுக்குப் பொருள் கூறமுற்பட்டு, இதற்குமுன் அப்பாட்டுக்குப் பொருள் கூறியவர்களையெல்லாம் முட்டாள்கள் என்றும், தாம் ஒருவர் மட்டுமே புலமையின் எல்லையைக் கண்டவர் என்றும் பொருள் கொள்ளும் முறையில் பேசியிருக்கிறார். இவரால் எடுத்துக் கொள்ளப்பட்ட பாடல்,

“தாவரமில்லை தனக்கொரு
வீடில்லை, தேவாரம் எதுக்கடி
- குதம்பாய், தேவாரம் எதுக்கடி”

என்பதாகும். இந்தப் பாடலுக்கு இப்புலவர் கண்டுபிடித்த பொருள்தான் உண்மைப்பொருள் என்பதை விளக்க முற்பட்ட இவர், மற்றவர்கள் இப்பாடலுக்குக் கூறிய பொருள்கள் எல்லாம் பொருத்தமற்றவை - பொருளற்றவை என்று கிண்டலும் செய்கிறார்.

“தாவரமும் வீடும்தான் இதில் கூறப்பட்டனவா? இம் என்பார் சிலர், தாவரமும் வீடும் இல்லாத பரதேசிக்குத் தேவாரம் எதற்கு என்பதுதான் இதன் பொருள் என்று கேலிகூடச் செய்வார்கள் ஏன்? அதுதான் உண்மைப்பொருள் என்று கூட அவர்கள் சொல்வார்கள்” என்பதாக இப்புலவர் பெருமகனார், மற்ற புலவர்களைக் கேலி செய்து தாம் அப்பாடலுக்குக் கண்டுபிடித்த “உண்மைப்பொருளை” உரைக்கிறார். இதோ, அப்பொருள்!

தாவரம் என்ற அந்தப் பாடலில் வரும் சொல்லை இந்தப் புலவர், தா என்றும் வாரம் என்றும் இரு சொற்களாகப் பிரித்து, தா என்றால் வருத்தம் என்று பொருள் என்பதாகவும், வாரம் என்றால் பங்கு என்று பொருள் என்பதாகவும் கூறி, “பிறர் பெறும்துன்பதைப் பங்கிட்டுக் கொண்டு, அத்துன்பத்தை நீக்க வகையில்லாவர்களுக்கு மோட்சம் கிடைக்காதாகையால், அப்படிப்பட்டவர்கள் தேவாரம் படிப்பதால் பயன் இல்லை” என்று அந்தப் பாடலுக்கு இந்தப் புலவர் புதுப்பொருள் விரிக்கிறார். தம்முடைய இந்தப் புதுப்புளுகுப் பொருள் விளக்கத்திற்குத் தொல்காப்பியரை வேறு துணைக்கழைக்கிறார். தாவரம் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்ததை ஏவரேனும் பிழையென்று கூறிவிட்டால் என் னசெய்வதென்றஞ்சிய இந்தப் புலவர், “தாவே வலியும் வருத்தமுமாகும்” என்று தொல்காப்பியத் சூத்திரத்தைத் துணைக்கழைத்துத் தம்முடைய வாதத்தை நிலைநாட்ட முயல்கிறார் - மோட்ச லோக வாழ்வுக்கு வழி திறந்து காட்டுகிறார். தாவரம் இல்லை தன்ககொரு வீடில்லை என்ற சொற்றொடரில் வரும் வீடில்லை என்ற சொல்லுக்கு, மோட்சமில்லை என்று பொருள் கூறுகிறார் இந்தப் புலவர் - தம்முடைய குறை மதியை வெளியிடுகிறார் கூச்சமின்றி!
இந்தப் பாடல் யாரால் பாடப்பட்டது! எப்போது பாடப்பட்டது? எதற்காகப் பாடப்பட்டது? என்பனவற்றால் உணராமலேயே ஏதேதோ உள்றிக் கொட்டுகிறார். குதம்பைச் சித்தர் என்ற பெயரோடு விளங்கிய ஒருதுறவியால் இப்பாடல் பாடப்பட்டது. உலகில் நடைபெறும் அட்டூழியங்களைக் கண்டு, உள்ம் நொந்து உலக வாழ்வை வெறுத்து நாடோடிகளாய்த் திரிந்து நாட்டுக்கு நல்லுரை பல வழங்கிய பலருள் குதம்பைச் சித்தரும் ஒருவர். உலக வாழ்வில் இருந்துகொண்டே உலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்தால், அதனை அவர்கள், ஏதோ தன்னலத்திற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி என்ற கருதி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றெண்ணிய பலர், தந்நலம் துறந்து தரணி சுற்றி நாட்டுக்கு நலம் பல செய்ய முயன்றனர். அவர்களில் இப்பாவைப் பாடிய குதம்பைச் சித்தரும் ஒருவர். நாயன்மார்களால் பாடப்பெற்ற தேவாரத்தை ஏன் பாடவில்லை என்று அவருடைய மனம் கேட்ட கேள்விக்கு விடையாக அவருடைய பகுத்தறிவினின்றும் எழுந்த பாடலே இது, “தேவாரம் பாடினால் மோட்சம் கிடைக்குமென்று கூறுகிறாயே, தேவாரத்தைப் பாடித் திரிந்ததால் தங்கியிருப்பதற்கு தெருத்திணணைகூடக் கிடைக்கவில்லையே! இதோ தெருத்தெருவாய் அலைகின்றேனே! இன்னுமா தேவாரத்தைப் பாடும்படி சொல்கிறாய்” என்று குதம்பைத் சித்தர் தம்முடைய மனதோடு நிகழ்த்திய போராட்டத்தின் விளக்கமும், தேவாரத்தைப் பாடினால் மோட்சம் கிடைக்கும் என்பது முழுப்பொய்யாகும் என்ற தெளிவுமே இப்பாடலால் வெளிப்படுகின்றது. இதனை அறிய முடியாத இந்தப் புலவர், தேவாரத்துக்கு உயர்வு தேட முற்பட்டுத் தொல்காப்பியரைத் துணைக்கழைத்துத் தொல்லைப்படுவதைப் பார்க்க நமக்கே பரிதாபமாக இருக்கிறது! நாலும் ஆறும் பத்தென்பதை அறிய நன்னூல் படிக்கவேண்டுமென்று கூறுபவருக்கும் “தாவரம்” என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து அதற்கு ஏதோ பொருள் கூறித் தேவாரத்துக்கு உயர்வு கொடுக்கத் தொல்காப்பியரைத் துணைக்கழைக்கும் இந்தப் புலவருக்கும் யாதாயினும் வேறுபாடு காணமுடியுமா?

தேவாரம் பாடக் கூடியவர்கள், பிறர் பெறும் துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டு, அத்துன்பத்தை நீக்குபவர்களாய் இருத்தல் வேண்டும் என்று கூறும் இப்புலவர், தேவாரத்தைப் பாடிய நாயன்மார்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றியும், புத்தர்களை மண்டையில் அடித்தும் கொன்றனரே! இவைதான் பிறர்துன்பத்தில் பங்கு கொள்ளும் முறையா என்பதை ஏன் எண்ணிப்பார்க்க மறந்தாரோ!

தேவாரம், எதனை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதென்பதைக்கூட இந்தப் புலவர் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் நின்று கொண்டு, ஓதுபவர்கள் பிறர்படும் துன்பத்தில் பங்கு கொள்ளக்கூடியவர்களாய் இருக்கவேண்டுமென்று கூறுகிறாரே என்பதை எண்ணும்போது, அப்படிப்பட்டவர் - குதம்பைச் சித்தர் பாடலுக்குப் பொருள் காணத் தொல்காப்பியரைத் தேடிச் சென்றதில் வியப்பொன்றுமில்லை. தேவார - பிரபந்தங்களைப் பற்றிப் புகழ்ந்தும் வியந்தும் பேசவேண்டும், அதேபாது தொல்காப்பியத்திலும் இரண்டொரு சூத்திரங்கள் தெரிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும், இல்லையேல் தம்மை ஒரு புலவர் என்ற பிறர் மதிக்கமாட்டார்கள் என்ற நிலையில் உள்ளவர்களன்றி மற்றெந்தப் புலவரும், தங்கள் புலமைக்கு அரண் செய்யும் பகுத்தறிவை விட்டுக் குறுக்கு வழி சென்று தங்கள் குறைமதியைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.

தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே, பிறரைத் துன்புறுத்துவதுதான் என்பதனைத் தேவாரத்தை நடுநிலையுடன் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்வார். தோவரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத்தில் நிற்கமாட்டான் - ஒரு சமணன் நிற்கமாடடான் - ஒரு புத்தன் நிற்கமாட்டான் - இன்றும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், சமரச சன்மார்க்கம் பேசும் ஒரு சைவன்கூட அதன் பக்கத்தில் நிற்கமாட்டான். அந்த அளவுக்கு வசைமொழிகளை வாரி வாரி இறைத்திருக்கிறார்கள் தேவாரத்தைப் பாடிய திருஞான சம்பந்தரும் பிற நாயன்மாரும்! தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசைமொழிகள் பல தேவாரம் பாடிய நாயன்மார்கள் வாயினின்றும் வந்திருக்கின்றனவே!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேசப்படும் இக்காலத்தில், பல கடவுளரை உண்டாக்கி, அவர்களுள்ளும் சிவனே பெரியவன் - மற்றவர் சிறியவர் என்று பேசும் சைவ விளம்பரப் பாடல்களான தேவாரத்தை ஏன் தெருத் தெருவாய் கொண்டு சென்று விற்கவேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

இலக்கண அரிச்சுவடி கூடத் தேவைப்படாமல் பொருள்களை மிகவும் எளிதாக விளங்கக்கூடிய முறையில் அமைந்த குதம்பைச் சித்தர் போன்றவர்களால் பாடப்பட்ட பாடல்களுக்குத் தொல்காப்பியத்தைத் துணைக்கழைத்த இந்தத் துண்டுப் புலவரின் துடுக்குத்தனத்தை என்னென்பது!

குதம்பைச் சித்தர் போன்றவர்கள், தேவாரம் போன்ற பஜனைப் பாடல்களைப் பாடுவதால் மக்களுக்குப் பக்தியை உண்டாக்கும் பணியிலா ஈடுபட்டிருந்தனர் என்பதைக் வட உணர முடியாதவர்கள், தங்களிடம் புலமை இருப்பதாகத் தண்டோராப் போட்டுத் திரிவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதைவிட வேடிக்கை, அப்படிப்பட்டவர்களின் பாடல்களுக்குப்ப பதவுரையும் விளக்க ஊரையும் கூற முற்படுவது! இல்லாத ஒன்றுக்கு இருப்பதாக ஏதோ ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தி, வலிந்து பொருள் காட்டுவதன் வாயிலாக, இவர்கள், புலமைக்குப் பொருள் புளுகுவதுதான் - என்ற இழி நிலையை ஏன் உண்டாக்க வேண்டும்? இந்த நிலைமாறி, உண்மையை உள்ளபடியே ஒப்புக் கொண்டு, அதனை உலகுக்கு உரைக்க நம்முடைய தமிழ்ப் புவலர்கள் முன்வர வேண்டுமென்ற நோக்கம் நமக்கு உண்மையாக இருப்பதாலேயே, தவறு நம்முடைய நண்பர்களால் செய்யப்பட்ட போதிலும், அவர்கள் மேலும் தொடர்ந்து அத்தகைய தவறுகளைச் செய்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இழிவை உண்டாக்காதிருக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடனேயே இவற்றை எழுதுகிறோம்.

(திராவிடநாடு - 10.4.49)