அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலவர் பெருமக்கட்கோர் வேண்டுகோள்!

``வேண்டாத - இந்நாட்டுச் சிறுவர் களுக்கு ஏலாத இந்தி மொழியைக் கட்டாயமென் றும், விருப்பமென்றும் கூறிச் சிறுவர்கள் மீது சுமத்துவது, நாட்டையும், மக்களையும், தமிழை யும் அழிக்கச் செய்கின்ற செயலென்று இம்மாநாடு கருதுவதால், உடனே இந்தி மொழியை நடுநிலை உயர்நிலைப் பள்ளிக் கூடப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென அரசியலாரை வற்புறுத்துகின்றது.''

இந்தத் தீர்மானம் 14.8.48ல் சென்னையில் நடைபெற்ற மாகாண ஆசிரியர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். மாணவர்களை மன்பதையின மாணிக்கங்களாக்கும் ஆற்றலும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கே உண்டு. மாணவர்களை மட்டுமல்ல, மாநிலத்தை ஆள்வோரை அதற் குரியவர்களாகச் செய்யும் ஆற்றலும் ஆசிரியர் களுக்கே உண்டு. இதனை ஆளவந்தவர்கள் மறந்து விட்டது உண்மையிலேயே மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்தி, நாட்டையும் மக்களையும் தமிழ் மொழியையும் அழித்துவிடும் என்று ஆசிரியர் கள் கூறிய பின்னரும், ஆளவந்தார்கள் இந்தியைத் தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாக வைத்துக் கொண்டிருப்பது, தம்மை ஆளும் திறமைக்கு ஆளாக்கிய ஆசிரியர்களை அலட் சியப்படுத்தி அவமானப்படுத்தும் ஒரு ஆணவ மென்றே ஆசிரியர்கள் கருதுவர்.

மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எது? வேண்டாதது எது? என்பதை அறிந்து அதற்கேற்ப அறிவுத் துறைக்கு அழைத்துச் செல்லும் உரிமையை ஆசிரியர்களிடமிருந்து ஆளவந்தார்கள் பறிக்கும் கொடுமை, எதை- எப்படி- எப்போது-யார் செய்வது- யாரைக் கொண்டு செய்விப்பது என்பதைக் கூட அறிய முடியாதவர்களை நாடாள்வோராக ஆக்கிக் கொண்ட ஒரு நாட்டிலன்றி வேறெங்கும் நடக்க முடியாது.

இத்தகைய நெறி தவறிய ஆட்சிப் போக்கைக் கண்டிக்கும் முறையிலேயே,

``தமிழ் மொழியினைப் பிற எம்மொழியும் ஆதிக்கம் செய்வதைத் தமிழாசிரியர்கள் எவ் விதத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதற்கானவற்றை நடைமுறையிலும் செய்தே தீருவார்கள்.''

என்றும் ஆசிரியர்கள் மாநாட்டில் பேசப் பட்டது கண்டு களிப்படைகிறேன். இது, தமிழ் மொழி பிற மொழிக் கலப்பினால் கட்டாயம் சிதைவுற்றுத் தன் செம்மையை இழக்கும் என்பதை நன்குணர்ந்த புலமை மிக்க ஆசிரியர் களால் கூறப்பட்ட உண்மையாகும். இதனை ஆளவந்தார்களால் அறிய முடியவில்லை என்றால், திராவிடர் கழகத்தால் மேற் கொண் டுள்ள இந்தி எதிர்ப்பு அறப் போரில் ஆசிரியர் களும் ஈடுபட வேண்டுமென்ற நிலைமையை ஆளவந்தார்கள் உண்டாக்கி விட்டார்கள் என்றே பொருள். இல்லையேல், மாணவர்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு அறிவு புகட்டும் ஆசிரியர்கள் விரும்பாத இந்தித் திட்டத்தை மாணவர்கள் தலையில் ஆளவந்தார்கள் சுமத்துவார்ர்களா? இதனைப் புலவர் பெருமக்கள் பார்த்துக் கொண்டு வாளா இருப்பார்களா?

எனவே, புலவர் பெருமக்களே! தமிழுக்கு ஆபத்து வந்துவிட்டதென்பதை ஐயந்திரிபற உணர்ந்த ஆசிரிய அன்பர்களே! இனியும் நீங்கள் வாளா இருத்தல் முறையாகாது- தமிழ் உங்களால் வளர்கிறது- வளம் பெறுகிறது- பாதுகாக்கப் படுகிறது என்ற உண்மையினை நிலை நாட்டும் இந்த அரிய வாய்ப்பைக் கைவிடாதீர்கள். ஆம், நீங்கள் எல்லோரும் வந்துதான் தீர வேண்டும். திராவிடர் கழகத்தால் இப்போது நடத்தும் இந்தி எதிர்ப்பு மறியல், அரசியலைக் கைப்பற்றுவதற் காகச் செய்யப்படும் சூழ்ச்சி என்ற காங்கிரசன் பர்களின் சூதுரையைக் சுக்கு நூறாக்கி, அது உண்மையான கலாச்சார- மொழிப் போராட்டமே என்பதை ஆளவந்தார்களுக்கு உணர்த்தி, அவர் களின் தவறான போக்கைத் திருத்தும் பணியிலும், தமிழ்மொழியைப் பாதுகாக்கும் தொண்டிலும் புலவர்களாகிய நீங்களும் எங்களுடன் பங்கு கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது திராவிடர் கழகத்தார் சென்னையிலுள்ள தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தின் முன் இந்தி எதிர்ப்பு மறியலைச் செய்து வருகின்றனர். புலவர் பெருமக்களாகிய நீங்களும் சென்னையில் ஏதாவதொரு இந்தி கற்பிக்கும் பள்ளிக்கூடத்தின் முன் இந்தி எதிர்ப்பு மறியலைத் தொடங்கி நடத்துவீர்கள் என்றும், அரசினால், தமிழ் மொழியும், தமிழ்க் கலாச்சார மும் பாதுகாக்கப்படும் பணியில் வெற்றி பெற எங்களோடு ஒத்துழைப்பீர்கள் என்றும் எதிர் பார்த்து இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். வாழ்க தமிழ்! ஒழிக இந்தி.

அண்ணாதுரை
1-வது சர்வாதிகாரி.

(திராவிட நாடு - 5.9.48)