அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலி புலம்புகிறது!

உலவி உலவி ஊரை உருக்குலைந்து வந்த புலியை, வேட்டைக்காரர்கள் நாலா பக்கமும் சூழ்ந்து கொண்டு, வேலை ஏவியும் அம்பு எய்தும் விரட்ட, உடலிலே உதிரம் பீறிட, உயிருக்க ஆப்த்து வந்ததை உணர்ந்து புதர்களிலே பதுங்குவதும், அந்தப் புதரருகேயும் அம்பு பாந்து வரக்கண்டு வேறோர் புதருக்கு ஓடுவதுமாக இருப்பது போலாகிவிட்டது ஜெர்மனியின் நிலை இன்று. டென்மார்க் கவிழ்ந்தது, நார்வே நலிந்தது, பாரிஸ் பணிந்தது, போலந்து குலைந்தது, ரஸ்டாவ் பிடிபட்டது, கார்காவ் சிக்கிக்கொண்டது, என்றெல்லாம் செவியில் விழவும், சிந்தை நோகவுமாகவுமாக இருந்ததுபோய், இன்று, அரண்கள்பிளக்கப்பட்டன, கோட்டைகள் தகர்க்கப்பட்டன, யுக்ரைனியிலிந்து ஜெரமானியர் விரட்டப்பட்டனர், ரோம் நகரிலிரூந்து ஓடிவிட்டனர், மின்ஸ்க் மீட்கப்பட்டது, மிரட்சி அடைந்தனர் நாஜிகள், நார்மண்டியிலே வெற்றி, செர்பர்க் துரைமுகம் சிக்கிவிட்டது என்ற செய்திகளைக் கேட்கிறோம். கண்டறியாதன கண்டோம் என்று கூறிப் பேருவகை அடைகிறோம். சோவியத் சம்மட்டி அடியினால் தாக்குண்டு ஓடும் நாஜிகள், மினுஸ்க என்றும் நகரருகே அமைத்திருந்த அரணின் பெயர், புலி அரண் என்பதாம்! நார்மண்டியிலே ஜெனரல் ரோமலின் அரணுக்கு நரி அரண் என்று பெயராம்! இக்கிழமை, இவ்விரு அரண்களும் தவிடுபொடியாகிவிட்டன. சோவியத் படைகள், மின்ஸ்க் நகரை, வெள்ளை ரஷியாவின் தலைநகரைப் பிடித்துக்கொண்டு மேலும் பல மைல்கள் முன்னேறிவிட்டன. நாஜிப்படைகள் கூட்டம் கூட்டமாகச் சரணடைகின்றனவாம்! போர்ப்பொருள் களத்திலே குவியல் குவியலாகக் கிடைத்தனவாம், சோர்விலாது உழைத்து வெள்றி பெற்றுவரும் வீரமணிகளாம் சோவியத் மக்களுக்கு.

இதுபோது இத்தாலியிலே முன்னேறி வரும் நேசப்படைகள், அடிக்கடி ஹிட்லரும் முசோலினியும் சந்திக்கும் இடமான பிரென்னர் கணவாயை நோக்கியும் மற்றோர் நேசப்படை பாரிஸ் பட்டினத்தை நோக்கியும் சோவியர் படை, ஜெர்மன் எல்லையை நோக்கியும் பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன, போரிட்ட ஜெர்மன் புலி புலம்புகிறது. அதன் கடைசிக் குரல் கேட்கும் காலம் நெருங்குகிறது.

அதுபோலவே, இம்பால் கோஹிமாப் பகுதியிலே இருந்த ஜப்பானியர் விரட்டப்பட்டனர், மற்றம் ஜப்பானியரிடம் பிடிபட்டிருந்த உக்ரூல் என்ற இடமும் நேசப்படையினால் மீட்கப்பட்டுவிட்டது புலம்பும் புலியும் புண்பட்ட நரியும், மறையும் கடைசிக் கட்டத்தைக் காண உலகம் ஆவலோடு காத்திருக்கிறது.

(திராவிடநாடு - 16.0744)