அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலித்தோல் போர்வை!

இந்து மதத்திலே உள்ள இழுக்குகளைப் போக்கத்தான் வேண்டும் - அழுக்கு மூட்டைகளை ஒழிக்கத்தான் வேண்டும். ஜாதி பேதங்களைப் போக்கத்தான் வேண்டும் - பழைய ஏற்பாடுகளை ஒழிக்கத்தான் வேண்டும் - இந்து மதத்திலே உள்ள கறைகளைப் போக்க வேண்டுமேயல்லாமல், அதையே ஒழிப்பது, அல்லது, நான் இந்து அன்று என்று கூறுவது கூடாது என்று சிலர் போவதுண்டு. இஸ்லாமியருக்கு இடங்கொடுக்கக் கூடாது என்று எச்சரிப்பர், இந்து மார்க்கத்திலே பார்ப்பன ஆதிக்கம் இருப்பின் அதை ஒழிக்க முனைவோம், ஆனால் இந்து மார்க்கத்தை விட்டுவிடக் கூடாது என்று பேசுவர். இந்துக்களுக்கே இந்தியா சொந்தம் - இந்தியாவில் இந்துக்களின் ஆட்சியே ஏற்படவேண்டும் என்று முழக்கமிடுவர். இவர்கள் வீரசவர்க்காரின் இராமசேனையினர்.

பாகிஸ்தானை எதிர்க்கப் படை திரட்டும் இவர்கள், தமதிஷ்டம் போல், இந்துஸ்தான் ஆட்சி ஏற்படுத்தினால், என்ன காண்போம் என்பதற்கு, இதுபோது ஓர் அருமையான எடுத்துக்காட்டுக் கிடைத்திருக்கிறது.

தந்திரத்தால் ஊரை ஏமாற்றித் திரிந்த ஒருவன், கழுதைமீது புலித்தோலைப் போர்த்து, இருப்புச் சங்கிலியால்கட்டி வீட்டுக்குள் வைத்துக்கொண்டு, வீதியில் வருவோர் போவோரிடம், புலியைக் கட்டிப்பழக்கும் என்னிடம் எந்தப் போக்கிரிப் பயலாவது வாலாட்ட முடியுமா? என்று கூறி மீசை முறுக்கி வந்தானாம். நெடுநாட்கள், அவன் கூறினதை நம்பினர் மக்கள். ஓரிரவு பூர்ணசந்திரன் அழகுடன் பிரகாசித்தான். வீதியிலே போன பெண் கழுதை தன் பெருத்த குரலெடுத்துப் பாடிற்று. உள்ளே புலித்தோல் போர்த்துக்கிடந்த ஆண் கழுதைக்குக் “குஷி” பிறந்துவிட்டது. அவ்வளவுதான், அது ஆரம்பித்தது பதில் கீதம்பாட. தந்திரக்காரன் தடிகொண்டுத் தாக்கினான். கீதம் அதிகப்பட்டது, கும்பல் கூடிவிட்டது, உள்ளே சிலர் சென்று பார்க்க, புலித்தோல் கீழே புரளக் கழுதையின் முதுகில் தடியடி நடந்திடக் கண்டு, தந்திரத்தால் ஊரை ஏய்த்தவனைக் காதைப் பிடித்திழுத்துக் கன்னத்திலறைந்தது. ‘ஏடா, போக்கிரி புலித்தோல் போர்த்த கழுதையைக் கொண்டா ஊரை ஏமாற்றி வந்தாய்’ என்று கண்டித்தனர் என ஒரு கதை கூறுவர்.

இந்த மார்க்கத்தைப் புனிதமாக்க, அவ்வப்போது தோன்றிய அடியார்கள், மகாத்மாக்கள், மகரிஷிகள், பாஷ்யக்காரர்கள், ஆச்சார்ய புருஷர்கள் ஆகியோர் செய்ததைவிட, அதிமேதாவித் தனமான காரியத்தைச் செய்யும் திறமை தமக்குண்டு என்று பேசிககொண்டுள்ள, இந்து மகாசபைத் தலைவருள் ஒருவரான பாய் பரமானந்தர் சின்னாட்களுக்கு முன்பு, டில்லி சட்ட சபையிலே, சட்ட மெம்பர், சர். சுல்தான் அகமத், இந்துக்களிலே பெண்களுக்கும் சொத்துரிமை தரப்படவேண்டும் என்ற மசோதாவை ஆதரித்துப் பேசுகையிலே, இந்து மார்க்கத்தைப் புனிதமாக்கி, இஸ்லாமியரின் ஆதிக்கத்தை ஒடுக்கப்போவதாக ஓங்காரக்கூச்சலிடும், பரமானந்தர், மிகுந்த சோகமுற்று, முகத்தைச் சுளித்துக் கொண்டு, மார்பிலே அடித்துக்கொண்டு அழுது, அத்தீர்மானத்தை எதிர்த்தார். பெண்களுக்குச் சொத்துரிமை கூடாதாம்! ஜாதி பேதமெனும் பித்தத்துடன், மாதரை இழிவு செய்யும் மடைமையும், இந்து மார்க்கமணியின் ஒளியன்றோ, அதை எங்ஙனம், பரமானந்தர் கைவிடுவார்? ஆளப்பிறந்தவன் ஆண் மகன், அவனிஷ்டத்துக்கு, ஆடிப் பிழைக்க வேண்டியவள்தானே பெண்.

“அதோ, தலைமீது கூடையுடன் செல்லும் தையல் யார் தெரியுமோ? மகா உத்தமி, பெயர், நளாயினி.”

கூடையிலே என்ன தெரியுமோ? அவள் புருஷன், அவனோர் ரிஷி, குஷ்டத்தால் வாதாடுகிறான், எனவே, அவனை அப்பத்தினி கூடையில் உட்காரவைத்துத் தூக்கிச் செல்கிறாள். தேவாலயத் துக்கா? இல்லை. திருக்குளத்துக்கா? இல்லை. வேறோர் ரிஷியின் பர்ணசாலைக்கா? இல்லை, இல்லை, அவருடைய தாசி வீட்டுக்கு!!

இந்து மார்க்கம் புனிதமானதாகச் சோலைகளிலே பர்ண சாலைகளும், அங்கு வேத ஒலியும் வேள்விப் புகையும் இருந்த அந்த நாட்களிலே, பெண்களின் நிலைமை, எப்படி இருந்ததென் பதற்கு, நளாயினி கதை ஓர் எடுத்துக்காட்டு. புருஷனின் மனதின்படி நடப்பதன்றி வேறு உரிமை கிடையாது. அத்தகைய அதியற்புதமான மார்க்கத்தின் தலைவர், மாதருக்குச் சொத்துரிமையா தருவார்.

அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பு ஏன்? கல்லென்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால், பேராபத்து வருமே, என்ற இன்னோரன்ன கூற முடியாதல்லவா, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டால், உயர்வகுப்பென்று உறுமிக் கொண்டு, பிறரை அடக்கியாள்வதும், ஆண் என்று ஆர்ப்பரித்துப் பெண்ணை இழிவு செய்வதுந்தானே, பரப்பிரம்ம சொரூபிகளின் புனித இந்து மார்க்க நீதிகள். அதை இழக்க எப்படிப் பரமானந்தர் துணிவார், பாவம்.

1943ல், உலகு அதிவிரைவில் முன்னேறிய பிறகு, இந்த நாற்றத்தை, நாலாறு பேர் முன்னிலையில், வெட்கமின்றிப் பேசிட முன் வந்தாரே இந்த இந்து மகாசபை வீரர், இவரை, எந்தக் கண் காட்சிச் சாலைக்கு அனுப்புவது, இந்து ஆட்சியிலே, மாதருக்கு, இதுதான் கிடைக்கும்.
ஒரே குடும்பத்தின் மணிகளிலே, ஒன்று மாணிக்கமாக்கப் பட்டு, மற்றொன்று, மண்ணாங்கட்டியாக்கப் படுகிறது. சொத்து சுதந்திரம் ஆணுக்கு. சமையற்கட்டிலே வேகவும், சயனக் கிரஹத் திலே சாயவும், பெண். இந்த அநீதியை நீக்கி, பெண்களுக்குச் சொத்துரிமைதர, சீர்திருத்தவாதிகள், நீதிவான்கள், வற்புறுத்திப் பேசத்தொடங்கி, ஆண்டுகள் பலவாயின. இன்று, இதை எதிர்க்கும் அவ்வளவு பஞ்சாங்கப்புத்தி படைத்தவராகத்தான், இந்து மகா சபைத்தலைவர் இருக்கிறார், இதைத் தீவிரவாதிகள் கவனிக்க வேண்டுகிறோம்.

வாதாடினார், அவ்வேதியர். விசித்திரமான வாதம், பெண்களுக்குச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துரிமை தந்தால், குடும்பச் சொத்துப் பங்கிடப்பட்டுச் சிதறுமாம், எவ்வளவு பேதைமை பாருங்கள். ஒரு குடும்பத்திலே எட்டு ஆடவர் பிறந்து சொத்துரிமையால், பாகப்பிரிவினை செய்து கொள்கின்றனர். ஏர், ஒருவனுக்கும்; எருமை ஒருவனுக்கு, இடுப்பொடிந்த பசு மற்றொருவனுக்கு, கூரை கெட்டவீடு ஒருவனுக்கு, கரம்பான வெளி மற்றொருவனுக்கு, என்று சொத்துப் பிரிவினை நடக்கிறது, பாய் பரமானந்தரின் வாய் அது சமயம் மூடிக்கிடக்கிறது. ஆணுக்குத் தருவதுபோலப் பெண்ணுக்கும் சொத்துரிமை தர வேண்டும் என்று கேட்டால், தேள் கொட்டிய மந்தியின் தந்தினம் போல், ஆடுகிறார். மாதரை இழிவு செய்யும் இம்மகானுபவருக்கு அங்கேயே, ரேணுகா எனும் அம்மையார், சரியான சவுக்கடி கொடுத்தார். இந்து மகாசபையின், யோக்யதை எப்படி இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்; புலித்தோல் கீழே வீழ்ந்ததும், தந்திரக் காரனின் சூது, ஊராருக்குத் தெரிந்த கதை போல்.

4.4.1943