அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புலியின் கிலி!

நுனிமரமேறி அடிமரம் வெட்டிக் கொண்டிருந்த முட்டாள், அவ்வழியே வந்த மிராசுதாரரைப் பார்த்துச் சிரித்தபடி, “உங்க பண்ணையிலே இந்த ஏழைக்கு ஒரு வேலை தரப்படாதா? நாயா உழைச்சி, உங்கள் காலடியிலே விழுந்து கிடப்பேனே! எந்தக் காரியத்தையும், திறமையாகச் “செய்வேன்” என்று கூறி, வேலை கேட்டால் மிராசுதாரன் என்ன பதில் கூறுவான்?

புல் தடுக்கிக் கீழே வீழ்ந்த கால் நடுக்கி கோபுரத்தின் விளக்கை ஏற்ற நான் போகிறேன்! என்று கூறினால், யார்தான் சிரிக்க மாட்டார்கள்.

இருமலால் வதையும் வைத்தியரின் வீட்டு வாயற்படியிலே, “தீராத இருமலைத் தீர்த்துவைக்கும் சூரணம் விற்கப்படும், விலைசகாயம்” என்று தீட்டப்பட்ட விளம்பரப் பலகை தொங்கினால் வீதியிற்போவோர் எள்ளி நகையாடாரோ!

தந்தையை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டுத் தாயைச் சாவடியிலே தலைவிரி கோலமாக உருளச் செய்துவிட்டுத், தர்பார் நடத்தும் தன்னலக்காரன், ஊருக்குப் பஞ்சாயத்துக்கூறும் தலைவனாக்கப்பட்டால். அந்த ஊரின் கதி ஏதாகும்! கள்ளப் புருஷனைக் கொல்லைப் புறத்திலே மறைந்திருக்கச் செய்தவிட்டு, வீதிக்குவந்து, அடுத்த வீட்டுக்காரியை ‘அடி! போடி விபசாரி!’ என்று வசைபாடும் வனிதையை என்ன கூறி வாழ்த்துவது? லோபி, வள்ளல்கள் கதை படிப்பதும் கோழை பட்டாளத்தைப் பார்வையிடும், செவிகெட்டவன் சிந்து பாடிடு கேட்போம் என்றுரைப்பதும், ஏற்றுக்கு! அதுபோல், அநீதியும் அக்ரமமும், ஆபாசமும், அநாகரிகமும், அறிவீனமும் ஆணவமும், ஜாதிவெறியும் நெளியும் நிகழ்ச்சியை நாட்டிலே கண்டு சீறி எழுந்து அதனை அழிக்கவோ, அடக்கவோ முன்வரும் மாண்பின்றி, அது இல்லாது போயினும், அதைக்கண்டு வெட்கித் தலைகுனிந்து, துக்கித்துக் கண்ணீர் பெருக்கும் நெஞ்சு நெகிழ்ச்சியும் காட்டாது, கண்மூடி வாய் மூடியாவது கிடப்போம் என்று கடையரின் நிலையும் இன்றி, மமதையுடன், மானங்கெட்டதன்மையை மறைக்க மேதாவி என்ற மேலாடை போர்த்துக்கொண்டு அந்த அக்ரமத்துக்கு ஆதரவுகாட்டி, விபரீதத்திற்கு வியாக்கியானம் கூறிக்கொண்டு, இந்நாட்டிலே நிலவும் ஏடுகளும். “திருப்பிரம்மங்களும்” கடல்கடந்து காணப்படும், அநீதிகண்டு இங்கு மாரடித்துக் கொள்வதையும், இந்தியரின் மானத்தை வெள்ளையர் கெடுக்கின்றனர் என்று கூவிக்கண்ணீர் வடிப்பதையும், நீதி இல்லையா, நேர்மையில்லையா என்று கேட்டுக் கைபிசைந்து நிற்பதையும், இந்தியர் ஆற்றிய தொண்டுகளை மறக்கலாமா என்று பல்லிளிப்பதையுங் காணும்
போது நமக்கு, முட்டாள் வேலைக்கு மனுப்போடுவதும், புல்தடுக்கி கோபுரமேறுவேன் என்று கூறுவதும், பிணியாளன் மருந்து விற்பதும், அநியாயக்காரன் ஊரதிபனாவதும், விபசாரி ஆசாரம் பேசுவதுங்கூட, அவ்வளவு நகைப்புக்கிடமாகத் தோன்றவில்லை! நாட்டிலே நடைபெறம் அநீதிக்குப் பக்கமேளம் கொட்டும் சுக்கிரநீதிகள், ஆப்பிரிக்காவிலே இந்தியருக்கு இழைக்கப்படும் அநீதிகண்டு கலங்குகிறோம், கொதிக்கிறோம், என்று கலம் கலமாக எழுதும்போது, நமக்குச் சிரிப்பும் சீற்றமும் கலந்தெழுகிறது. எவ்வளவு ‘அப்பாவிகளாக’ மக்களைக் கருதிக்கொண்டு, இந்தக் கேடர்கள் சாணக்கியம் செய்கின்றனர்! எவ்வளவு நெஞ்சழுத்தம்!

தென் ஆப்பிரிக்க நாட்டிலே இந்தியர்களுக்குப் பெருந்தீங்கு விளைந்துவிட்டதாம்! இங்கு அதற்குத் தேசியத் தூதர்களின், உதடு வீங்கிவிட்டது, கண்டனப் பேச்சுப் பேசிப்பேசி! கண்கள் சிவந்து விட்டன. கோபத்தாலும் கொதித்துக் குதித்த கண்ணீராலும்! இருதயம், தில்லை நடனசபாபதியாகிவிட்டது! என்ன தீங்கோ என்று கேட்பீர்! தென் ஆப்பிரிக்காவிலே குடியேறியுள்ள இந்தியர்களுக்கு, உரிமை இல்லையாம்! ஓட் இல்லையாம்! அங்குள்ள வெள்ளையர்கள் இந்தியரை அவமதிப்பாக நடத்துகிறார்களாம்! வெள்ளையர், கருப்பர் என்ற வித்யாசம், துவேஷம் காட்டப்படுகிறதாம். ஓ! என் சோதரரே! ஒரு சேதி கேளீர்! என்று தேசியத்தாள் ஓலமிடுகிறது. இடையே அலைகடல் மட்டும் குறுக்கிடவில்லையானால், இந்த அக்ரமத்தை ஒரு நொடியிலே ஒழித்துவிட முடியுமே என்று கனல்கக்கிக் கூவுதும் காகிதக் கட்டாரி ஆடுவதும் காண்கிறோம்.

நிறத்திமிரை நாம் பலமாகக் கண்டிக்கிறோம். மனிதனை மனிதன் மரியாதைக் குறைவாக நடத்துவது, மடைமை, கொடுமை என்பதைக் கூறக்கூசோம். கறுப்பர் என்று வெள்ளையர், கடுமொழி புகன்றிடுவது கற்றரி மூடர்நிலையில் சில பலர் அங்குமுளர் என்பதையே காட்டுகிறது என்று என்றும் கூறிடத்தயங்கோம். பேதங்கள் ஒழிக்க, பேதைமை ஒடுங்க, அநீதி அழிக்கப்பட, அக்ரமம் துடைக்கப்பட, எத்தகைய கஷ்ட நஷ்ட மேற்றுப் போரிடவும் மறக்கோம். மேதாவிகள் இத்தகைய பேதங்களுக்கு என்ன மினுக்குக் கருத்துரை கூறினாலும் மயங்கோம். ஆம்! எங்கும் நீதி நிலவவேண்டும் என்பதே நமது போர் முழக்கம். ஆப்பிரிக்காவிலோ, அண்டார்ட்டிக் தீவிலோ, அக்ரமம் எங்கு இருப்பினும், அதை எந்த இனத்தான், நாட்டான், வளர்ப்பினும், அதைக் கண்டிக்காது விடோம். ஆகவே ஆப்பிரிக்காவிலே இந்தியருக்கு அநீதி என்று நாட்டு நண்பர்கள் தீப்பொறி பறக்கக் கூறியதுகேட்டு, அதனை ஆராய்ந்தோம். என்ன அந்த அநீதி?

தென் ஆப்பிரிக்காவிலே, டர்பன் நகரிலே இந்தியர்கள் பெருவாரியாகச் சொத்து வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று, “புகார்” கிளம்பிற்று. அதை விசாரணை செய்யப் பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு கமிஷன் நியமித்தனர். அநீதி இதுதான்! இந்த மாபெரும் கேடு சூழப்பட்டு, மனங்கசியும் மாபெருங்கூட்டத்தின் தொகை எத்தனை கோடி? எத்தனை இலட்சம்? என்று எண்ணுகிறீர்கள். 25 ஆயிரம்! இருபத்தைந்தாயிரம் இந்தியர், பரந்த இப்பூபாகத்தில் பல்வளம் நிறைந்திருந்தும், கடல் கடந்து சென்றனர்! வேற்றுநாட்டிலே தங்கினர், வீடு வாசல் தேடினர். அதிகமான தொகையினராக இந்தியர் பெருகி, ஆப்பிரிக்காவிலே சொத்துகளை வாங்கிவிட்டால், தமது சொந்தநலன் பாதிக்கப்படுமே என்று அங்குள்ள வெள்ளையர், விசாரணை துவக்கினர். வேதனை இதுதானாம்! பரம்பரையாக இங்கு வாழ்ந்து, பாதுஷாக்களைக்கண்டு, பலநூறு ஆண்டுகள் நாட்டைப் பரிபாலித்துவந்த 10 கோடி முஸ்லீம்களுக்கு, இன்றும், “முரடன்” என்று இழிபெயரிட்டழைத்து, ஊரிற் குடியிருக்க ஒதுக்கிடந்தந்து, உண்டிச் சாலைகளிலே அவன் மானம் கெடும் விதத்திலே, ஓரத்தில் இருக்கச் செய்து, சில இடங்களிலே உள்ளே நுழையவே அனுமதி மறுத்து, இரயில்வே நிலையங்களிலும், இந்துபானி - முஸ்லீம்பானி - என்று நீரும் வேறு வேறாகித்தந்து, அவனது நிழலும் தனது புனிதத்தன்மையைக் கெடுக்கும் என்ற நினைப்புடன், இங்கு நிகழ்ச்சிகள் உள்ளன. இதனைப்போக்க இம்மியும் மனமின்றி, இந்த அநீதியை அக்ரமத்தை சகித்துக்கொண்டும், வளர்த்துக்கொண்டும், முஸ்லீம்கள் அன்னியர் என்று துவேஷப்பிரசாரம் புரிந்து கொண்டும், ஒதுக்கினீர், ஆகையால் ஒதுங்கினோம் என்றுரைத்து, நாமிருவரும் கலந்து வாழ முடியாதபடி, பிரிந்து விட்டோம், எனவே எங்களுக்குத் தனி அரசு வேண்டும் என்று அப்பத்துக்கோடி மக்கள் கிளர்ச்சி செய்தால், அதனையும் அடக்க, எம்முறையும் சரியே என்று எண்ணிடும் கூட்டம், ஆப்பிரிக்காவிலே இந்தியருக்கு அவமதிப்பு வந்து விட்டதற்காக, இங்கு அடிவயிற்றிலடித்துக் கொள்கிறது. இந்த விநோத நீதியை வேறெங்காவது காணமுடியுமா? மதுவிலக்குப் பிரசாரத்தைக் குடியனிடம் ஒப்படைப்பதுபோல, மத மமதையும் இனச்செருக்கும், குல ஆணவமும் கொண்ட கூட்டம், வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் வித்யாசம் ஏன்? என்று மனித நீதி பேசுகிறது! எவ்வளவு துணிவான சூது!! ஆறுகோடிக்கு மேற்பட்ட, பழங்குடி மக்களை நாட்டுப் பட்டாக்காரரைப் பாதுகாவலரை, பாட்டாளி மக்களைப், பரிதாபத்துக்குரிய பஞ்சமராக்கி, எலும்புந் தோலுமாக்கி, மலமும் சிறுநீரும் புழுவும் பிறவும் நிறைந்த ஊர்க் கோடியை அவர்களுக்கு உறைவிடமாகத் தந்து, எருமை புரளும், நீர் பருகி எச்சில் உண்டு, எடுபிடி ஆளாகி உழன்று, மேனி கருத்துத் தலைகாய்ந்து, உடல் ஒடிந்து, இரத்தம் சுண்டி, சரிந்த மண் சுவரிலே, சுரைக்கொடி படரவிட்டுக் கூரையாக்கி, கிழிந்த கோணியைக் கதவணியாகக் கொண்டு, பறைகொட்டியும் பாடுபட்டும், உழுது உழன்றும், ஊர்க்காவல் புரிந்தும், ஊசலாடும், “தீண்டாதாராக” வைத்துக்கொண்டு - நந்தன் காலத்துக்கு முன்பிருந்து டாக்டர் அம்பேத்கார் காலம் வரையிலே இந்த அநீதியை, அக்ரமத்தை ஒழிக்காது இருந்ததுடன், இந்த ஜாதிமுறை ஒழியவேண்டும் என்று கூறிச் சீறிப் போரிடும் சீர்திருத்தவாதிகளைச் சதியால் வீழ்த்திச் சனாதனத்தைக் காப்பாற்றி, வர்ணாசிரமத்தை வளையாது ஒடியாது இருக்கச் செய்துவரும் கூட்டம், அங்கே ஆப்பிரிக்க நாட்டிலே, டர்பன் நகரிலே இந்தியருக்குச் சொத்து வாங்க உரிமையில்லையே, என்று பரிதாப மேலிட்டுப் பரணிப்பாடுகிறது! அன்னைக்கு அரைவயிற்றுக் கஞ்சி இல்லை, ஆடலழகிக்கு ஆபரணம் தருகிறான், ஆணழகன்! இங்கு, இஸ்லாமியரை இழித்தும், பழங்குடி மக்களைப் பாழ்படுத்தியும் வரும் பாதகத்தைக் களைய முன்வர வீரமும் நெஞ்சுறுதியும், நேர்மையில் நாட்டமும் நீதியில் கவலையும், மனிதாபிமானத்தில் அக்கரையும் கொள்ளாத “மகானுபாவர்கள்”, ஆப்பிரிக்காவிலே இந்தியருக்குச் சொத்துரிமை வாங்கிதரப் பேரிகை கொட்டுகின்றனர். எவ்வளவு பெருநோக்கம்! எத்துணை உரிமை ஊக்கம்!! யார் கூறவல்லார் இவர் தம் பெருமையைத் தலைநிமிர்ந்து வாழமுடியாது, தத்தளிக்கிறான் தமிழன். அவன் ஆண்ட தரணியில் இன்று அவன் தாசனாகித், தரித்திரனாகித் தன்னை மறந்தவனாகித் தவிக்கிறான். காடு களைந்தும் கல் பிளந்தும், பாதை அமைத்தும் பல்லக்குச் சுமந்தும்; வண்டி ஓட்டியும் வரகரசி சேர்த்தும், குப்பை கூட்டியும் குகதியும் வெட்டியும், பில்லை அணிந்தும், கல்லைச் சுமந்தும், காலந்தள்ளுகிறான். வானத்தை நோக்குகிறான், ‘வராதா சாவு’ என்று வரங்கேட்கிறான்’ இன்றைக்கிருப்பாரை நாளைக்கு இருப்பாரென்று எண்ணவோ திடமில்லை என்று அழுகிறான். ஐந்தடித்துண்டு, இதற்கு ஒன்பது வாசல், என்று அழுகுரலில் வேதாந்தம் பேசுகிறான். அவன் இந்நாட்டு மன்னர்குடி! இங்கு ஆண்டவரின் வழி வழி! இனம்பல இயல்பு பெறாமுன்பு, ஒளிவிட வாழ்ந்தவன்! மண்டலங்கள் அமைத்தவன். மரக்கலங்கள் செலுத்தியவன், மலர்த்தோட்டத்தில் உலவியவன், மானத்தோடு வாழ்ந்தவன், மறத்தமிழன்! அவன் இன்று சொந்தநாட்டிலே, பிறருக்கு, ஒரு சிறு கூட்டத்துக்குச், சூதுச்செல் வருக்கு, சுகபோக விரும்பிகளுக்கு, அடிமை! இதைக்கூற, மாற்ற, மனமில்லாது கெடுமதியெனும் படுகுழியில் படுத்துறங்கும் “பண்புடையோர்”தான், ஆப்பிரிக்கா நாட்டிலே அநீதி என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
ஊராருக்கு நீதிகாட்ட நாட்டினருக்கு நலன் புரிய முன்வரக் காணோம். சுதேச ஊழலைப் போக்கச் சிறுவிரலும் அசையவில்லை. பரதேசம் போனவர்க்குப் பட்டா வாங்கித்தர இங்கு ஜல்லடம் கட்டுகின்றனர், ஜாரின் சாயல்கள்! நிறத்திமிர் கண்டிக்கும் வீரர்கள், இங்குள்ள ஜாதித்திமிரைக் கண்டிக்க முன்வரட்டுமே பார்ப்போம். ஆப்பிரிக்க நாட்டிலே, இந்தியருக்கு உரிமை வாங்கப் போரிடும் சூரர்கள், இந்தியாவிலே இந்தியர் என்று எவரையும் அழைக்கும் சொல்லுக்கேற்ப, எவருக்கும் சம உரிமை வாங்கப் போரிட வேண்டும் என்ற சூடுசொரணையை மறந்திருக்கக் காரணம் என்ன என்று கேட்கிறோம். நீதியும் நேர்மையும், உரிமையும் உயர்கொள்கையும், கடல் கடந்தால் தான்பெற வேண்டும் போலும்! இங்கு உழைத்து அலுத்து, உரிமை உண்டு, அதை இழந்தோம் என்பதையும் மறந்து உள்ள மக்களுக்குத் துணைபுரிவார் இல்லையா! இங்குள்ள அநீதியைப்போக்க ஒரு கரம் கிளம்பலாகாதா ஒருநா அசையலாகாதா! ஏன் தேசியத் திருஷ்டி அங்கெல்லாம் பாய்வதில்லை! ஆரியஸ்தான் அப்பக்கம் திரும்பவிடுவதில்லை என்பதன்றி வேறென்ன கூறமுடியும்!

ஆப்பிரிக்காவிலே வெள்ளையர் வாழுமிடங்களிலே கறுப்பர் வசிக்க வீடு பெற அனுமதிக்கப் படுவதில்லையாம், இதுகூறி அழுகிறது ஒரு தேசியத் தினசரி. வேதியர் வீதியில், அதன் ஆசிரியர் வேண்டப்படுபவராக, விருந்துண்ணும் நேசராக, விளையாடும் அன்பராகக் கருதப்படலாம். ஆனால் அன்பர் சொக்கலிங்கனாரின் இனம், அந்தப் பூசுரபுரத்திலே இன்றும் வாழ அனுமதி கிடைக்காது! பார்ப்பன ஓட்டலிலே இன்றும் தமிழனுக்கு வேறு இடந்தான்! தமிழன் செல்வமிகுதியால் ஒருநாள் கட்டிய கோயிலிலே, தமிழனுக்கு உரிமை என்ன இருக்கிறது? பூஜைக்காக அமர்த்தப் பட்டுப், பூச்சூடிச், சந்தனம்பூசி, பூரித்துக் காணப்படும், பூசுரனிடம், பயபக்தியுடன் நின்று, பழமும் சூடமும் அவனைத் தொடாமல் எட்ட நின்று தந்து தட்சணையும் தந்து தொலைவினில் நின்று, தபாலாபீசில், தந்திச் செய்தியை எழுதிக் கொடுத்துவிட்டு, எட்ட நின்று போய்ச் சேருமா என்று அதிகாரியைக் கேட்பதுபோல், அர்ச்சகனின் சகஸ்ரநாமம் முடிந்ததும், ஆண்டவனிடம் என் முறையீடுபோய்ச் சேர்ந்ததா என்று கேட்டுவிட்டு, வீடு திரும்பு கிறான். குளக்கரைகளிலே வேறுவேறு படித்துறை! கல்லூரிகளிலே வேறுவேறாகச் சாப்பிடுமிடம். எங்கு இருக்கிறது தமிழனுக்கு உரிமை! இதைக்கேட்க எந்த அறிவாளி முன்வருகிறான்? எந்தத் தேசியத்தலைவன் கேட்கத் துணிகிறான்? எந்த ஏடு கேட்க முனைகிறது? ஏன், இதற்கெல்லாம் மௌனம், ஆப்பிரிக்க நாட்டு அநீதிக்காக ஆர்ப்பரிப்பு, இந்த விசித்திரத்தை நாட்டினர் காண்கின்றனர், ஆனால் கண்மூடிக் காலங்கழிக்கின்றனர்.

அறிவுபெற கல்விக் கூடஙகள் அமைக்கப்படுகின்றன. குருட்டு நோக்கமும், மூடமதியும், போக்கும் மருந்து என்று பெயராம் கல்விக்கு! அத்தகைய கல்விச்சாலைகளிலே என்ன நிலைமை காண்கிறோம். அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் விடுதியிலே ஒரு வைதிக உணவுமனையாம்! அதை விட, வைதிக மாணவருக்கு மனமில்லையாம்! அந்த மாணவரின் அந்த அற்புதமான உரிமையில் குறுக்கிட அதிகாரிகளுக்கு இஷ்டமில்லையாம்! நாட்டுக்கு விடுதலை தேட, அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவுச் சுடர்கள், ஆறடி மேலெழும்பி, பத்தடி முன்னால் பாய்ந்து, பாய் மரமற்ற கப்பல்போல் ஆடினர்! தங்கள் கண்முன் காணப்படும் பேதத்தை மறந்தனர்!

தஞ்சை திருவையாறு கல்லூரியில், சமபந்தி விடுதி அமைப்புக்கு, நாடெங்கும் அமளி கிளப்பி, ஏடெல்லாம் வைதிகரின் இருதயத்துடிப்பை எடுத்தெழுதிப் போரிட்டன. சங்கராச்சாரி முதல் சாஸ்திரிவரையில், பிராமணச் சிறுவர்களுக்கு நேரிட்ட இந்த மகத்தான ஆபத்தைக்கண்டு மனம் பதறி, அழுதனர். அக்குரலைக் கேட்டு இந்நாட்டுத் தமிழர், என் செய்தனர்? ஏதும் அறியேன் பராபரமே என்று இருந்து விட்டனர். இந்நிலை உள்ள நாட்டிலே உள்ள ஏடுகள் தான், வெள்ளையர் கறுப்பரை அவமதிக்கலாமா, இதைக் கண்டும் நாம் வாளாயிருக்கலாமா என்று, வெட்கம் மானமின்றி, எழுதுகின்றன. தூ! தடித்த தோலரே!!

இதே நேரத்திலே, விஞ்ஞானக் கல்லூரியிலே வைதிகம் தலைவிரித்தாடுகிறது. இந்நாட்டிலே அறிவு வளர்ந்தால் அக்ரமம் அழியும் என்றனர், நம் நாட்டுக் கல்வி நிலையங்களிலே ஜாதிபேதம் குடி கொண்டே இருக்கக் காண்கிறோம். சாதாரண அறிவை விட விஞ்ஞானம் பரவினால், விவேகம் பிறக்கும் என்றனர். விஞ்ஞானக் கல்லூரியில் விவேகம் விளங்கும் விதம் கேளீர்!

பெங்களூர், விஞ்ஞானக் கல்லூரியில், மாணவர்களுக்குச் சமபந்தி விடுதி கட்ட ஆரம்பித்தனர் கல்லூரி உணவு விடுதியில், சமபந்தி உணவு கொள்ள இசையும் மாணவரே சேர்க்கப்படுவர் என்று அறிவித்து, அதற்கு இசைந்தவரிடம் கையொப்பம் பெற்றனர். கட்டடம் எழும்பிக் கொண்டிருந்தது, மாணவர்கள் உள்ளத்திலே வைதிகம் குடைந்து கொண்டே இருந்தது. சமபந்தி விடுதிகூடாது என்று கிளர்ச்சி, அதற்குச்சில மாணவர் உண்ணாவிரதம், அதற்கு “இந்து” பத்திரிகையின் வக்காலத்து, இவ்வளவும், இத்திங்கள் நடந்தன! ஆப்பிரிக்க நாட்டிலே இந்தியருக்குச் சமஉரிமை இல்லையா என்று தேசியச் சங்கநாதம் கிளம்பிய நேரத்திலேயே பாரதபூமியில் ஆரிய தர்மம் அழிவதா? என்று சயன்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிற் சிலர் சனாதனச் சங்கத்தை ஊதினர். கட்டடம் மேல் எழும்பவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டு, மாணவர்களின் குறை என்ன என்று கல்லூரி நிர்வாகிகள் விசாரிக்கின்றனர். வழக்குரை காதை நடக்கிறது. மேலான விஞ்ஞானப் படிப்புக்கு வந்துள்ள மாணவர்களின் மனப்பான்மை இதுவெனில், மடிசஞ்சியின் மனநிலை பற்றிக் கூறிவரவேண்டும். இவைகளைக் கண்டு வெட்கப்படாத ஏடுகள், ஆப்பிரிக்க நிலைமை கண்டு வெட்கப்படுகின்றன, துக்கப்படுகின்றன. நூலணிந்த ஓர் சிறு கூட்டத்தின் வால் வளர்வதைத் தடுக்க கோலோச்சுபவரும் முனைய வில்லை இத்தகைய துக்ககரமான நிலைமையில், தமிழன் விடுதலை பெற, தன்மானம்பெற, தன்னரசுபெற, ஆரியம் அழிக்கப் பட்டாலன்றி வேறென்ன வழி இருக்கிறது. ஆப்பிரிக்காவிலே, 25 ஆயிரம் ‘இந்தியர்’ அவமதிக்கப்படுவதற்கு, இவ்வளவு துடிக்கின்றனர். இங்கு இஸ்லாமியரும் திராவிடரும் இழிவாக நடத்தப்படுவதற்கு யார் துடிக்கின்றனர், யார் அவர்களுக்காக முன்வருகின்றனர்! புலிக்குக் கிலி வந்தால் எலிக்கு அரசு கிடைக்குமாம்! ஆரிய அரசு இன்று இம்முறையில்தான் ஏற்பட்டது.

21.3.1943