அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


பூனாவில் டோக்கியோ!

ஆர்ப்பரித்த ஜப்பான் அடிபணியும் நிலைபெற்றதும் முன்னாள் முதலமைச்சராக இருந்த டோஜோ, தற்கொலை செய்துகொள்ள முயன்று அதிலும் தோல்விகண்டு, படுக்கையில் புரண்டு கொண் டிருக்கிறார், அவர் உயிர் போகாதிருக்க, அமெரிக்க டாக்டர்கள், இரத்த இன்ஜக்ஷன் கொடுக்கிறார்கள், டோஜோவின் உயிரைக் காப்பாற்றும் காரணம் என்ன? தீய செயல்புரிந்து பலகோடி மக்களை வாடும்படி செய்தவன், தானாகச் சாகக்கூடாது, நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை பெற வேண்டும், என்பதுதான். டோக்கியோவிலே டோஜோ சாகக்கிடக்கிறார்; அவரைப் பிழைக்கவைக்க அமெரிக்க டாக்டர்கள் முயலுகின்றனர் - பிழைத்த பிறகு பிழைக்கேற்ற தண்டனை பெறட்டும் என்பதற்காக! மரணப்படுக்கையிலிருந்து டோஜோ தூக்குமேடைக்கு நடந்து போக வேண்டும்!! டோக்கியோவிலே டோஜோ!

பூனாவிலே காந்தியார் தங்கியுள்ள குடிசைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலே, காங்கிரஸ் தலைவர்கள் கூடுகின்றனர் மந்திராலோசனைக்கு. டோஜோ மட்டுமன்று, இவர்களும் தோற்றவர்களே! டோஜோ, பர்மாவை வென்று, சிங்கப்பூரை ஷோனானாக்கி, தாய்லாந்தைத் தழுவி, பிலிப்பைனைப் பிடியாளாக்கிப் பெருமிதத்துடன் இருந்த நாளிலே, இங்கே இந்தத் தலைவர்களில் தாக்கீதுகளின்படி நடக்கும் தொண்டர்குழாம், தண்டவாளங்களைப் பெயர்த்துத் தபாலாபீசுகளைக் கொளுத்தி, வெள்ளையனே வெளியே போ! என்று அவன் இல்லாத இடத்திலே எல்லாம், வீரதீரமாக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். டோஜோவும் தோற்றார், இந்தத் தலைவர்களும் ஆகஸ்டு இயக்கத்திலே தோற்றனர்.

டோஜோவுக்குப் பிழைக்க மருந்தூட்டுகின்றனர், அதுபோலவே காங்கிரசும் பிழைத்திருக்க, வேவல் பிரபு சீமைச் சரக்கு வாங்கி வரப் போயிருக்கிறார். டோஜோவைப் பிழைக்க வைப்பது, மரண தண்டனைதர! காங்கிரசைப் பிழைக்க வைப்பதும், அதற்கு நாடு, தண்டனை தரவேண்டும் என்பதற்காகவேயாகும்!

நேசநாடுகளை ஒழித்துவிடத் திட்டமிட்ட டோஜோ, நேசநாட்டார் நிறுவும் வழக்கு மன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவது எப்படித் தண்டனையோ அதுபோலவேதான், வெள்ளையனே வெளியே போ! என்று கூவிய வாயரை, விரைவிலே, விஸ்வாசப் பிரமாணம் எடுக்கச்செய் காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் களிக்கக்கூடும், “கனமாகி” விடக் கூடும், ஆனால் அதன்பிறகு அவர்கள் வாழ்வு நடத்துவது அவ்வளவு இலேசானதாக இருக்கப் போவதில்லை. தேர்தலுக்குரிய திட்டமோ, பதவிக்கேற்ற திட்டமோ வேவல் கொண்டுவரக்கூடும், ஆனால் அதற்கும், டோஜோவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருந்துக்கும் அதிக வித்யாசமில்லை - பிழைக்கலாம் இப்போது, பிறகு சாக! காங்கிரசுக்கு அரசாள அதிகாரம் தந்துவிட்டு காரசாரத்தையும் கடுவிஷத்தையும் காங்கிரஸ் இஸ்லாமியர் மீதும் திராவிடர் மேலும் தக்க வசதி செய்து தந்து அதன்பிறகு, இஸ்லாமியத் திராவிடக் கூட்டுப்படை, “காட்டாட்சியை ஒழித்தே தீருவோம்” என்று கூவிக்காங்கிரசைத் தாக்கித் தகர்க்க, ஏகாதிபத்யம் இப்போது காங்கிரசுக்குக் ‘கனிரச’ச்சுவையுள்ள மருந்தூட்டுகிறது. சாகட்டும் என்று டோஜோவையும் விட்டிருக்கலாம், இருந்தால் தண்டனை தரமுடியாது! காங்கிரஸ், நெருக்கடியான நாளிலே நாட்டைக் காட்டிக் கொடுத்தது என்பதற்காக அந்தக் கட்சியையும் கலைத்து, அதன்மூலம் அது தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைமையையும் உண்டாக்கியிருக்கலாம், ஆனால் அப்படிச் செய்திருந்தால், “ஆளப்போனோம் மீளாத் தொல்லையே கண்டோம்” என்று கதறும் காங்கிரசை அழுத்தப்பட்ட இனங்கள் அடித்தொழிப்பதைக் காணமுடியாது! அந்தக் காட்சிக்கான முன்னேற்பாடே, சட்டவிரோதமாகக் கருதப்பட்ட காங்கிரசுக்குச் சிம்லா சல்லாபம் கிடைத்த நிலைமை, தாராளமாக பிழைக்கட்டும்! நாடாளவும் வரட்டும்! ஆட்சிப் பீடங்களிலுள்ளவர்களை, ஆட்டிப் படைக்கும் ‘சக்தி,’ ஒன்று பதினாயிரமாகப் பெருகுவது திண்ணம்! டோஜோவுக்குப் பிழைக்கும் மருந்து தரப்படுவதும், காங்கிரசுக்கு நாடாள மருந்து தரப்படுவதும், பொருத்தமான முறைகளேயாகும்! குடிசைமுன் உள்ள கூடாரத்திலே, தேர்தலிலே கலந்து கொள்ளத்தான் வேண்டும் என்று முடிவு செய்தனராம்! டோக்கியோவிலே படுத்துள்ள டோஜோ பிழைப்பதற்கும், பூனாவிலே கூடியுள்ளவர்கள் தேர்தலிலே ஜெயிப்பதற்கும், வித்யாசம் அதிகமில்லை! பூனாவிலே நடைபெறும் காட்சியும் டோக்கியோவிலே காணப்படும் காட்சியும் ஒரே தன்மையுள்ளவை என்றே நாம் கருதுகிறோம். இரு இடங்களிலும் “குற்றவாளிகளுக்கு” தண்டனையைத் தாங்குவதற்காக, “மருந்து” தரப்படுகிறது.

16.9.1945