அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புரியாத கோளாறு!

“திராவிடரல்லாதவர்களையெல்லாம், விரட்ட வேண்டுமென்பதே அவர்கள் இலட்சியம்“.

அமைச்சர் பீடத்தை அலங்கரிக்கும் வாய்ப்புப் பெற்ற தோழர் சுப்ரமணியம், நாடகத் தடைச் சட்டத்தைப் பற்றிய விவாதத்துக்குப் பதிலளிக்கும் போது, இவ்வாறு குறிப்பிட்டாராம்.

ஒவ்வொரு கட்சியும், இந்தச் சட்டத்தை, ஏன் எதிர்க்கிறது என்று விளக்கிக் கொண்டு வரும்போது “சபையில், திராவிட பார்லிமெண்டு, கட்சியினரும் எதிர்க்கிறார்கள். தெற்கு வேறு – வடக்கு வேறு என்பதே அவர்களுடைய அடிப்படைக் கொள்கை தென்னாடு, தனியாக பிரிக்கப்பட்டு, அங்கிருக்கும் திராவிடரல்லாதவரெல்லாம் விரட்டப்பட வேண்டுமென்பதே அவர்கள், கொள்கை. இதற்குக் குறுக்கே வரும் எல்லா சட்டங்களையும் அவர்கள் எதிர்ப்பார்கள்“ என்று தெரிவித்தாராம்.

அரைகுறை ‘அறிவு‘ எப்போதுமே ஆபத்து திராவிட நாட்டிலிருந்து திராவிடரல்லாதவர்களை விரட்ட வேண்டுமென்று, திராவிட பார்லிமெண்டு கட்சி, எப்போது சொல்லிற்று? அல்லது திராவிட முன்னேற்றக் கழகமாவது சொல்லியதுண்டா?“ அமைச்சர் சுப்ரமணியம், எங்கிருந்து பெற்றார், இந்தத் தகவலை?

திராவிட நாடு – 9-1-55