அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புதிய பொன்மொழி!
தைத்திங்கள் முதல்நாள் தமிழகம் எங்கும் குதூகலம் பொங்கும்! களிப்புக் கூத்தாடும்! மகிழ்ச்சி கரை புரண்டோடும்! எங்கும் இன்பமயம்! எத்திக்கு நோக்கினும், ஆனந்தம் களிநடம் புரியும்!

மனையெலாம் மகிழ்ச்சிக் குரல் கேட்கும். கதிரொளி பரப்பிட கதிரவன் புறப்படுமுன், எழுந்து புனலாடி, புது ஆடை உடுத்தி, பொன்னணி பூண்டு, புதுமலர் சூடி, பொன்னவிர் மேனியர் தத்தம் இல்லந்துலக்கி, எழிற்குடம் ஏந்தி நீர்முகந்து, புதுப்பானை தேடி, வெள்ளியைப் பழிக்கும் நல்லரிசி கொட்டி, நறுநெய் பெய்து, பசும்பால் கலந்து, சரிநிகர் சர்க்கரை இட்டு, ஏலம், முந்திரி, குங்குமப்பூ போட்டு, இறக்கிடும் சர்க்கரைப் பொங்கலை ஒரு கையிலும், அது விரல் வழி இழிந்து ஒழுகிடும் தங்கக் கரத்தால் செங்கரும்பு காட்டி, ‘கொடு, கொடு அப்பா’ என்று மதலை மொழி சிந்துவதைக் கண்டு மனம் நெகிழ்ந்து, மகிழ்ச்சி பெருகி, தரையில் நின்று பொற்கை நீட்டி, பொக்கைவாய் காட்டி, முத்துமொழியுதிர்க்கும் தங்கக் குடும்பத்தென்றலின் குளிர்ச்சியை ரசிக்கும் குதூகலக் கிழத்தம்பதிகள் இல்லாத இடம் இல்லை.

வீதிகள் எங்கும், அழகும் கவர்ச்சியும் கூத்தாட, குங்கும நிறத்தழகிகள், மயில் நடைக்காரிகள், மயக்கப் பார்வையினர் இங்கும் அங்கும் நடந்திடுவர். அவர் இப்படி, அப்படிப் போகையில், கேலி பேசிடும் காளையர் உண்டு.

“கரும்பு வேண்டுமா தாத்தா” என்று கேட்டு விட்டு, ஓடிடும் சிறுவன் “கடிக்க முடியாதடா, குறும்பா” என்று கூறி, ஓட்டை வாய்திறந்திடும் கிழவர் வீடுதோறும் இருப்பர்.

கூடிக் கும்மியடிக்கும் குமரிகள், அவர்களின் பின்னலைப் பிடித்து ஓடிடும் குறும்புக்காரச் சிறார்கள் குதூகலமாய் ஆடுவர்.

உழவர் உற்சாகப்படுவர், அவர்தம் உழைப்பின் திருவிழா அதுவென்று எண்ணி! அவர் கொணர்ந்து கொடுத்த புதுநெல் குத்திப் புடைத்து நிற்கும் அவர்தம் மனைவியர் முகம் மலரும்! அகமோ, களிப்பால் விரியும்! அவர்கள் காலைச்சுற்றி ஓடியாடிடும் குழந்தைகளோ அறுவடைத் திருநாளின் அற்புதத்தை நினைப்பூட்டுவர். தொழில் புரிவோர், தொண்டு புரிவோர், உண்டு மகிழ்வோர், ஏடு புரட்டுவோர், இரும்பு அடிப்போர், தங்கம் உருக்குவோர், சுரங்கம் தோண்டுவோர், மூட்டை சுமப்போர், பாரவண்டி இழுப்போர் - எத்தொழில் புரிவோரும் இன்பம் காண்பர் அன்று!

துன்பங்கள் அன்று துரத்தப்படும் - ஒருநாள் ஓய்வு கொடுத்து ஒதுங்கி நிற்கும்! ஆண்டு முழுவதும் உழைத்திடுவோரின் உணர்ச்சிகளுக்கு உற்சவம் நடத்துகிறார்கள் அன்று. ஆகவே, மக்கள் உள்ளமெலாம் உவகைப் பெருக்கு! களிப்புப் பிரவாகம்! மகிழ்ச்சி வெள்ளம்!

எங்கும் சுகத்தின் சாயல் - இன்பத்தின் நிழல் - மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு - பொங்கல் திருநாள், தமிழரின் தனிப்பெரும் திருநாள், அந்நன்னாளில் துன்பத்தின் வாடைகூடத் தெரியாது. தம்மை மறந்து, இன்பம் துய்ப்பர்- மகிழ்ந்து கிடப்பர்.

பொங்கல் திருநாள், உழவரின் பெருநாள் - கலப்பை விளைக்கும் விநோதங்களுக்கு அன்று மக்கள் நடத்தும் விருந்து - இயற்கையன்னையின் மடியில் புரண்டிடும் நெல்மணிக் குழந்தைகளுக்கு அன்று நாம் திருநாள் கொண்டாடுகிறோம்.

பொங்கல் திருநாள், ஆண்டு பிறந்ததும், மாதம் தவறாது சொல்கிறார்களோ, அம்மாதிரித் திருநாளன்று - இருள் மதிக் கொள்கைகளுக்காக, அறியாமையின் அடிப்படைத் தவறுதலால் - ஏற்பட்ட விழாவன்று! பொங்கல் திருநாள், புதியதொரு பொற்கருத்தை, ஆண்டுதோறும் மக்கள் இதயத்தில் செதுக்கிச் செல்கிறது! தூங்கிடும் தோழர்களுக்கு, ஒருதுளி மருந்து தருகிறது - துடித்து எழுந்து நடப்பதற்கு! அவனன்றி ஓரணுவும் அசையுமா, நாம் சாமான்யர்கள், சர்வேஸ்வரன் சம்மதமின்றி எது நடக்கும்? அன்று எழுதியவன் அழித்தா எழுதுவான் என்று வேதாந்தம் பேசி, வீண் பொழுதுபோக்கிடும் வீணர்களுக்கு, அரியதோர் உண்மையை எடுத்துக் காட்டி விட்டுச் செல்கிறது, பொங்கல் திருநாள்.

ஊழையும் உப்பக்கம் காண்பர், விடாது உழைப்பவர் என்று வள்ளுவர் அருளிய உறுதிமொழிக்கு, வலிவு தரத்தான் பொங்கல் நன்னாள், தைதோறும், குதூகல நடைபழகி வருவதுபோல வந்து, உழைப்பவர்க்கு உண்டு பலன் என்று காட்டி விட்டுப் போகிறது.

‘முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்’ என்று குறள் பேசத்தான் பொங்கல் திருநாள் ஏற்பட்டதோ என்று எண்ணும் வகையில், அது அமைந்துள்ளது. ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்று கேட்காமல் கேட்கிறது பொங்கல் திருநாள்!

செந்நெல்லையும், செங்கரும்பையும் காணும் எவருக்குத்தான் எத்தனை பேரின் உழைப்பு, வியர்வை, கஷ்டம், நஷ்டம், இவற்றின் விளைவுதான் அவையெனத் தெரியாது - விதைத்தவர், அறுப்பர்! பாடுபட்டவர் பயன் காண்பர்! இதனை எத்தனைமுறை வயலோரத்திலும், வாய்க்கால் பக்கத்திலும் கேட்டிருக்கிறோம்.

‘சும்மா கிடைக்குமா சுகம்’ என்று சொல்லாத நாளில்லை - எந்த வேலையைத் தொடங்கினாலும், கஷ்டப்பட்டால் நஷ்டமில்லையென்று பேசிப் பணியாற்றுகிறோம். இவை பொங்கல் திருநாள் அளித்த போதனையின் விளைவு!

உழைப்பின் பெருமையை உலகுக்குக் காட்டும் உன்னதத் திருநாள் பொங்கல். அந்நன்னாளில், நாமும் வாழ்த்தையும் வணக்கத்தையும் படைப்பதோடு, ‘முயன்றால் முடியும், முடியாதது எதுவுமில்லை’ என்ற புதுமொழியையும் நினைவூட்டுகிறோம்.

காலத்தே நீர்பாய்ச்சி, நல்ல எருவிட்டு, ஆழ உழுது பருவந்தவறாது விதைதூவி, கண்ணுங்கருத்துமாகக் காத்துக் களையெடுத்து, வேலியிட்டு, வெளியிலிருந்து மாடு, ஆடு மேய்ந்திடாமல் விரட்டி, கதிர் முற்றும் வரை காத்திருந்து பிறகு அறுத்து, களத்திலே பரம்படித்த பிறகே நெல்மணிக் குவியல்! அதுபோலத்தான், கண்ணீரைச் சிந்தி, கண்ணியத்தைக் கைவிடாது வெளியேறிய காளைகள், இரண்டாண்டுக் காலத்தில், எவரும் அஞ்சும்படி, நம்முடன் முன் இருந்தோர் பொறாமையால் பொங்கியழியவும், நம்முடன் இருக்க முடியாமல் வெளியிலிருப்போர் ஏங்கிடவும் கூடிய மாதிரியில் வளர்ந்து விட்டோம் -உழைப்பின் முயற்சி! - முயற்சியின் அறுவடை! ! தி.மு.கழகம் இன்று வளர்ந்திருக்கும் நிலை. அறுவடைத் திருவிழாவின் அடிப்படைத் தத்துவத்தை அப்படியே விளக்குகிறது.

சமுதாய வயலில், பகுத்தறிவு விதை தூவி, சனாதனம், சாதிவெறி, மூடமதிக் கொள்கைகள் போன்ற களைகளை அறுத்துத் தள்ளி, கதிர் வரும்வரை காத்திருக்கும் உழவர்களாக நாம் இருந்தோம். ஏமாற்றப்பட வில்லை, இந்தச் சமுதாய உழவர்கள்! விதைத்தவர், அறுத்தனர்! சனாதன சண்டித்தனம் ஒடுங்கித்தான் போயிற்று! சாதியாணவம் மறைந்து கொண்டுதான் வருகிறது! மூட நம்பிக்கைகள், மூலையிடங்கள் தேடத் தொடங்கிவிட்டன - சமுதாய உழவர்கள் கண்ட அறுவடைதான் இறையென்றெண்ணும் பொழுது, மேலும் ஊக்கம் பிறக்கிறது, உற்சாகம் வளர்கிறது, இன்னும் உழைத்தால், இந்தச் சமுதாய வயலை, மேலும் செழிப்பாக்கலாம், தங்கம் விளையும் தரணியென்று பார்ப்பவர் பாராட்டும் வகையில் மாற்றலாம் என்ற உறுதி பிறக்கிறது.
சமுதாய வயலைச் சுற்றி வேலியமைக்கப் புகும்பொழுதும், வெளியிலிருந்து நுழையும் மாடுகளையும், ஆடுகளையும், பறந்து வந்து பயிரையழிக்கும் பறவைகளையும் விரட்டும் பொழுதும் எதிர்த்தவர்கள் ஏராளம் - அவர்களையும், அதே வேலைக்கு இப்பொழுது அழைத்து வந்திருக்கிறோம் என்று உணருகிறபோது, முயன்றால் முடியாதது எதுவுமில்லையென்று நம்மையறியாமல் கூறத் தோன்றுகிறது.

திராவிடச் சமுதாய வயல், கரம்பாக்கப் பட்டுக் கிடந்தது. சூதுமதி கொண்ட சிலரால்! கிடைத்த அரைகுறைச் செல்வத்தையும் சுரண்டிக் கொண்டோடப் பலர் காத்திருந்தனர்! இந்த நேரத்தில், சுயமரியாதைக் கலப்பை ஏந்தி, திராவிட இயக்க உழவர்கள் வயலில் இறங்கினர்! அவர்களின் உழைப்பின் விளைவாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெற்றியே பெற்று வந்துள்ளோம்.

இந்தப் பொங்கல் நன்னாளில், புதுமகிழ்ச்சி பிறக்கிறது! சனாதனம் சாய்ந்தது; வைதிகம் மிரண்டோடியது; புராணவெறி பதுங்கிற்று; சாஸ்திர சர்ப்பம் செத்தது; சம்பிரதாய மோகம் குறைந்தது என்றபோதெல்லாம் கொண்ட களிப்பைவிடப் பன்மடங்கு பெருகுகிறது. இந்தப் பொங்கல் நன்னாளில், நம் செவி வந்து சேர்கிற சேதி, நம்மைப் புளகாங்கிதமடையச் செய்கிறது. அதுவும் நமது இடைவிடாத உழைப்பின் பயனாக; அந்த நிலைமையென்றால், நம்மை நாமே பாராட்டிக்கொள்ளத் தூண்டுகிறது மனம். எதிர்ப்பின்றி வளர்ந்துவந்த காங்கிரஸ் பாசீசம், சட சடவெனச் சரிந்துவிழுகிறது எங்கும் என்ற செய்தி, நம் உழைப்பின் பெருமையை விளக்குகிறது. முயற்சியோடு, பொறுமையும் சேர்ந்துவிட்டால், நினைத்ததை முடிக்கலாம் என்று அறிவிக்கிறது பொங்கல் நன்னாள்.

பொங்கல் திருநாளையொட்டி, வீட்டைத் துலக்குவர்; தூசுபோக்குவர்; வர்ணம் தடவுவர். இல்லங்களை எழில்மாடங்கள் போல் மாற்றுவர். வீட்டிலுள்ள அழுக்குப் பொருள்களை, பழைய உபயோகமற்ற சாமான்களைத் தீயிட்டுப் பொசுக்குவர். தூய்மையின் இருப்பிடமாக்கியே பொங்கல் திருநாள் கொண்டாடுவர்.

அப்படியே, தமிழகத்தில், மக்கள் மனமாளிகையிலிருந்து, வெளியேற்றப்பட்ட வேண்டியபல அழுக்கு மூட்டைகளை, பழைய சாமான்களை, ஆண்டுதோறும் வெளியேற்றி வருகிறது. சமூகத்திலுள்ள உபயோகமில்லாச் சடங்குகளை, சம்பிரதாயங்களை ஒழித்து வருகிறது. இந்தப் பொங்கலோ, ஆளும் பீடத்தில் ஏறியிருந்த அழுக்குப் பொருளான, காங்கிரஸ் பாசீசத்தைத் துடைத்து எறிந்துவிட்டுத் தூய்மைப்படுத்துகிறது!

முயன்றால் முடியும் இதோ, காங்கிரஸ் பாசீசம் கரைகிறது; கண்ணுக்குத் தெரியாமல் மறைகிறது! எப்படி முடிந்தது? நம்மாலா இதைச் செய்யமுடியும் என்று நம்மாலேயே நம்பமுடியாத காலம் ஒன்றிருந்தது. இன்று காங்கிரஸ் ஏகாதிபத்தியம் சாய்கிறது!

இப்படிப் படிப்படியாக, நாம் காணும் வெற்றிகள், நமது இலட்சியப் பாதையின் எல்லைக் கற்கள்! முயற்சி குன்றாது, மேலும் மேலும் சென்றால், நிச்சயம் நாம் விரும்பும் திராவிடத்தை, நமதாக்கியே தீருவோம்!

உழைப்புத் திருநாளில், அந்த உண்மையை, நாம் உணர்ந்து, உறுதி எடுத்துக்கொண்டால், உழைப்பால் பெற முடியாதவை உலகத்தில் எதுவுமில்லை என்பதை எண்ணி நடந்தால், இன்பத் திராவிடம் எய்தியே தீருவோம்!

இப்பொங்கல் நன்னாள், நம் உள்ளத்தில், அந்த உன்னதப் பொன்மொழியைப் பொறித்துச் செல்லட்டும் - அதன்படி, நாம் உழைப்போம் கடைசி மூச்சுவரை! உரிமைக்குப் போரிடுவோம், கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை! உணர்ச்சி குன்றாது, உற்சாகம் குறையாது பணியாற்றுவோம்! திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கம் அகில உலகமும் கேட்கும் நாள் மிக அண்மையில் இருக்கிறது. அந்த நாளை மிக விரைவாக்கும் சக்தி, நம் உழைப்பிற்குத்தான் உண்டு. அந்த உழைப்பைத் தர உறுதிகொள்வோம். இன்று உழைப்போம்; இன்பத் திராவிடத்தைப் பெறுவோம் - இது உறுதி! உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

(திராவிட நாடு பொங்கல் மலர் – 1952)