அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புதுமுறைப் பிரசாரம்!

இப்போது நடத்தப்படும் இந்தி எதிர்ப்புப் போராட்டம், வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல, கலாச்சாரப் போராட்டமுமாகும் என்று நாம் கூறினோம். இந்தி மொழியைத் தமிழ் நாட்டில் நுழைப்பதன் நோக்கம் இந்நாட்டுக்கு ஒரு பொது மொழி வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல. தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்குப் புறம்பான வட நாட்டுக் கலாச்சாரத்தை இங்குப் புகுத்து வதற்காகவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்ட தென்றும் கூறினோம். இதைக் கண்ட காங்கிரசார் பலர் மந்திரிகள் உட்பட இப்ப்போது ஒரு புது முறையான- சரித்திரம் கண்டிராத பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.

இவர்களால் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் புதுமுறைப் பிரசாரம் எப்படிப்பட்ட தென்பதை அறிந்தால் அறிவுடை எவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அறிவுத் துறையில் சிறிதளவாவது தொடர்பு வைத்துக் கொள்ளாதவர்களன்றி, வேறு எவரும் இந்தப் பிரசாரத்தைச் செய்யவே மாட்டார்கள். அதிகார பலமும் அதனால் பெறற்கரியபேறாகப் பெற் றுள்ள ஆணவமுமேதான் சிலரை இத்தகைய பித்தலாட்டப் பிரசாரத்தைச் செய்யும்படி தூண்டி விடுகின்றது. இதற்குக் காரணம், அதிகாரம் அறிவுடையோர் கைக்கு வராதபடி செய்யும் நிலைமைக்கு நம் நாடு ஆளாக்கப்பட்டு இருப்பது தான். இந்த இரங்கத்தக்க நிலை மாறும் வரை இத்தகைய பிரசாரங்கள் நம் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கும். என்ன அந்தப் பிரசாரம் என்று கேட்கத் தோன்றும் உங்களுக்கு. அதனை யும் கூறிவிடுகின்றோம்.

``கலாச்சார முறையில் இந்தியா ஒரே நாடாகும். இந்த இடத்துக்கு ஒன்று, அந்த இடத்துக்கு இன்னொன்று என்று வெவ்வேறு கலாச்சாரம் இந்தியாவில் கிடையாது.''

என்பதுதான் இன்று காங்கிரசாரால் செய் யப்படும் புதுமுறைப் பிரச்சாரம், இவ்வாறு பிரசாரம் செய்பவர்கள் காங்கிரஸ்காரராய் இருந்தாலும், அவர்கள், உலக நடப்பும், சரித்திரம் கூறும் உண்மையும், அரசியலறிவும் பெறாதவர் களாய்த்தான் இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் மட்டுமென்ன, இதனைக் கேள்விப்படும் எவருமே அப்படித்தான் எண்ணுவார்கள். ஆனால், இதனைக் கூறியவர், கதர் அணிந்து- வந்தே மாதரம் பாடி- ஜெய் ஹிந்த் கூறினால் தாங்களும் காங்கிரஸ்காரர்கள் தான் என்ற அளவுக்குக் காங்கிரசைப் பின்பற்றும் சாதாரண ஆள் அல்ல. காங்கிரசின் பேரால் நடத்தப்படும் அரசியலில் பொறுப்புள்ள ஒரு பதவியைப் பெற்றுள்ள ஒருவர்தான் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சென்னை அரசாங்கம் மராமத்து இலாகா வுக்கு அமைச்சராக இருக்கும் தோழர் பக்த வச்சலம் அவர்கள்தான் 14-8-48ல் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்த போது இவ்வாறு பேசினார். தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் ஒரே கலாச்சாரம்தான் என்பதை இவர் எந்த ஆதாரத்தின் மீது கூறுகிறார் என்பது தெரியவில்லை. கலாச்சாரம் என்றால் என்ன என்பதே இவருக்குத் தெரியாதென்றுதான் நாம் நினைக்கிறோம். ஏனென்றால் அன்று பேசிய தோழர் பக்தவத்சலம் அவர்கள்,

``சமஸ்கிருதம் நமது புராதன மொழி.''

என்றும் கூறியிருக்கிறார். சமஸ்கிருதம் தான் நம்முடைய புராதன மொழி என்பதை ஆராய்ந்து கண்டறிந்த அமைச்சர், இந்தியா முழுவதுக்கும் ஒரே கலாச்சாரம் என்று கூறாமல் வேறு விதமாகக் கூறுவார் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்? அதிலும் அவர் பேசிய இடம் லேடி சிவசாமி அய்யர் பள்ளிக்கூடம். அங்கு சமஸ்கிருதத்திற்கு அமைச்சர் முதலிடம் அளித்துப் பேசியிராவிட்டால், அவரை அந்தப் பள்ளிக்கூடத்தார் வரவேற்ற முறை, அவரைத் திருப்பி அனுப்பும்போது மாறி வேறு விதமாக இருக்கும் என்பதை எமது அன்பிற்குரிய அமைச்சர் தம்முடைய பல அனுபவங்களால் நன்குணர்ந்ததாலேயே அவ்விதம் பேசினார் இல்லையேல், ஒரு தமிழ் மகன், அதிலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அமைச்சர் தமிழ்மொழியின் பழைமையையும் அதன் பெருமையையும் இழித்துப் பேசும் முறையில், ``சமஸ்கிருதம் நமது புராதன மொழி'' என்று பேசியிருப்பாரா என்பதை எண்ணிப் பாருங்கள்.

சமஸ்கிருதம் புராதன மொழி என்று பேசியிருந்தால் கூட நாம் வருத்தப்பட மாட்டோம். ஆனால், அந்த வாசகத்தில் காணப் படும் அந்த `நமது' என்ற சொல் இருக்கிறதே! அது, நம்மை (தமிழ் மக்களை) எல்லாம் சேர்த்துப் பேசப்பட்ட சொல்தானே என்பதை எண்ணும் போது தான் நமக்குப் பலவிதமான ஐயப்பாடுகள் உண்டாகின்றன. அந்த ஐயப்பாடுகளை இப்போதும் நாம் இங்கு விளக்க விரும்பவில்லை. என்றாலும் பிறப்பில் தன்னை ஒரு தமிழன் என்று கூறிக் கொள்ளும் எவரும் சமஸ்கிருதமே நமது புராதன மொழி என்று ஒருபோதும் துணிந்து கூறமாட்டார்கள் என்பதை மட்டும் இங்கு எடுத்துக் காட்டாமல் இருக்க முடியவில்லை. இட வேறுபாடு சமஸ்கிருதத்தை உயர்வாகப் பேச வேண்டிய நெருக்கடியை அமைச்சருக்கு உண்டாக்கியே போதிலும், அவர் இவ்விதம் பேசாமல் சமஸ்கிருதமும் நமது புராதன மொழி களுள் ஒன்று என்றாவது தந்திரமாகப் பேசி யிருக்கக் கூடாதா என்றுதான் நாம் அவர் மீது பரிதாபப்படுகிறோம்.
தென்னாட்டுக்கும், வடநாட்டுக்கும் கலாச் சாரம் ஒன்றுதானே அல்லது வெவ்வேறா? என்பது பற்றி இன்னொரு சமயம் விளக்கமாக அமைச்சருக்குக் கூடப் புரியும் விதமாக எழுதுகிறோம்.

(திராவிட நாடு - 22.8.48)