அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புயல் அடிக்கிறது
கோவையில், எதிர்பார்த்த படி வேலைநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. 30 மில்கள் மூடிக்கிடக்கின்றன! பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.“

ஆறுமாதக் கூலியைப் போனசாகத் தரும்படிக் கேட்கின்றனர் தொழிலாளர்கள்.

மூன்று மாத போனஸ்தான் தரமுடியும் என்று கூறுகின்றனர் முதலாளிகள்.

குடிசைக்குள் இருந்து குமுறியபடி கேட்கிறான் தொழிலாளி, மாயிலிருந்து கொண்டு, தரமுடியாது என்று பதிலைத் தருகிறார் ஆலை அரசர்.

“வாழ்க்கைச் செலவுக்குப் போதவில்லை, ஆகவே பனோஸ் தருக” - இது பாட்டாளி கேட்பது.

வந்த இலாபத்தைப் பங்கிடவோ? வாழும் இந்நாடு ரஷியாவே?” - இது ஆலை அரசர்களின் கேள்வி.

“சொந்தக் கட்சியே சர்க்கார், அறிவீர்! சோற்றுக்கலைபவிடார் தெரிவீர்!” என்று நம்பிக்கையுடனும் பாசத்துடனும், மூவர்ணக் கொடியைச் சுட்டிகாட்டிக் கூறுகின்றனர் தொழிலாளர்க்ள.

“சொந்தம் உனக்கு மட்டுந்தானோ! இதோ சொகுசாகப் பறப்பது தெரியலையோ? தேசீயம் விலைபேசி வாங்கி விட்டோம், இதைத் தெரிந்து நடந்துகொள், திரும்பிப்போ, போ!” என்று ஆலை அரசர்கள் கூறுகின்றனர் - தத்தமது ஆலை, மாளிகை மோடார், ஆகியவற்றிலே பறக்கும் மூவர்ணக் கொடியைக் காட்டி.

இந்தவிதச் சூழ்நிலையில் கோவை இருக்கிறது.

போரின் காரணமாக மூடி போட்ட விளக்கும், அளவு அரிசியும், கண்டு கலங்கினர் பொது மக்கள் - தாக்குண்டனர் தொழிலாளர்.

ஆலை அரசர்களோ, போட்ட முதல் தொகைபோலப் பன்மடங்க அதிகத் தொகையை இலாபமாகப் பெற்றுள்ளனர்.

பொச்சரிப்புப் பேச்சல்ல, புள்ளி விவரம் காட்டுவது!

இந்நிலையில் ஆறுமாதபோனஸ் தரமுடியாது என்கின்றனர் ஆலை அரசர்கள்.

வேலை நிறுத்தப்புயல் அடிக்கிறது.

அங்கும் மூவர்ணம், இங்கம் மூவர்ணம், ஆடசியாளர் கரத்திலும் மூவர்ணம்!

ஆலைப்பாட்டாளியின் வீட்டில் அழுகுரல் - ஆலை அரசர்தம் வசந்தமாளிகைகளில் கோபக்குரல் - ஆளவந்தார்களின் முகத்திலே, திகைப்பு! என்ன செய்வதென்று தெரியாமல்.
இத்தகைய திகைப்பின்போது, தொழிலாளர்களைத் தவறான பாதையிலே, யாரோ, எதற்காகவோ, குரோத புத்தியுடன் இழுத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள். என்று கூறித் தப்பித்துக் கொள்ளவும், கோபப்பார்வையை வேறுபக்கம் செலுத்தவும் தான் எண்ணம் பிறக்கும் ஆளவந்தார்களுக்கு. வேலைநிறுத்தங் களை, வேறு கட்சியினர் முன்னின்று நடத்துகிறார்களா, என்று கவனித்து, அப்படி வேறுகட்சியினர் இருந்தால், உடனே “பாருங்கள், பாருங்கள்! இவர்களெல்லாம் காங்கிரசின் எதிரிகள். காங்கிரசுக்கு ஏதாவது தொல்லை தரவேண்டுமென் பதற்காகவே, இந்த வேலைநிறுத்தத்தைச் செய்கின்றனர். காங்கிரசாட்சிக்குக் சங்கடம் விளைவிக்கின்றனர். தொழிலாள
ருக்கு ஆசை வார்த்தை சொல்லி, காங்கிரசின்மீது ஏவி விடுகிறார்கள்” என்றெல்லாம், கூறவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முற்படுகின்றனர். திராவிடர் கழகம், தொழிலாளர்களின் துயர் துடைக்கப்படவேண்டும் என்பதை நன்கு அறிந்து, தமது ஆதரவைத் தொழிலாளர் இயக்கத்துக்குத் தருகிறது என்ற போதிலும், நேரடியாகத் தொழிலாளர் சங்கங்களிலே ஈடுபட்டு, இப்படிப்பட்ட வேலைநிறுத்தச் சமங்களிலே முன்னாலிருந்து காரியமாற்ற முடியாமலிருப்
பதற்குக் காரணம் இதுதான், திராவிடர்கழகம் தலையிட்டால் உடனே, எதிர்க்கட்சிக்காரன் சூட்சி இது! காங்கிரஸ் விரோதியின் வேலை! என்று தூற்றுவது டன், எங்களை அடக்குவதாகக் கூறிக்கொண்டு தொழிலாளர் எழுச்சியையும், தொழிலாளர் புரட்சியை அடக்குவதாகக் கூறிக் கொண்டு, சமய சமூகப் பொருளாதார ஏற்றத் தாழவுகளைப் போக்கும் விடுதலை இயக்கத்தவராகிய எங்களையும், ஒழித்து விட முனைவர். எனவேதான் களத்திலே. நேரடிபுக இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் தொழிலாளர்களுக்கு அவர்களின் காரியத்தின் போதுவேறு கட்சி கிடையாது. என்று பேசப் பட்டாலும்கூட, தொழிலாளர்களிலே, குறிப்பிடத்தக்க ஒரு பகுதியினருக்கு இன்னமும் காங்கிரசிடம் பாசம் இருக்கத் தான் செய்கிறது. நாங்கள் நேரடியாகத் தொழிலாளர்களுக்குப் பாடுபடும்! துறையிலே வந்தால், காங்கிரஸ் பாசம் கொண்ட தொழிலாளர்களைக் கிளப்பிவிட்டு, ‘நமக்குள் ஆயிரம் சண்டை இருக்கட்டும் தேசீயத் தோழா! இந்தத்திராவிடக் கழகத்தான் பொது எதிரி நமக்கு காங்கிரஸ் வைரி, இவனுக்கு இடமளிக்
கலாமா? இவனுக்கு என்ன வேலை இந்தப் பிரச்சனையில்!’ என்று கூறி, தொழிலாளர் இயக்கத்திலேயே பிளவை ஏற்படுத்தி பார்வையை முக்கிய பிரச்னையிலிருந்து வேறுபக்கம் திருப்பிவிடுவர், தொழிலியை மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக் கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில், நினைப்புக் கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால்மட்டும் சாத்தியமாகக் கூடியதன்று. இந்த இலட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில்பலரின் சுகபோகங்களைக் - கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.

ஒரே நாளில் வெற்றி பெற்று விடக்கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறிவையும் முயற்சியையும் குலைப்பதற்கு, அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனந்தம். வன்மைமிக்கது. ஒவ்வொன்றாகத் தான் நொருக்க முடியும். ஒருவிலங்க ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில்லையேயென மனச்சோர்வு ஏற்படுவது இயல்பு. அந்த மனச் சோர்வுக்கு இடங்கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில், முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ளவேண்டும். இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும், குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம், எதற்கும் இப்போராட்டத்தில் சம்மந்தப்பட்டுள்ள சக்தி - எதிர் சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.

வாழ்க்கை இன்பம், சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அவ்வளவு பொருட்பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப்பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம். தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந்திருக்கிறது என்ற பேருண்மையை உணராதாதாலேயே, சுரண்டல் முறைவளருகிறது, அதன் விளைவாக, பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம்மலாட்டம், என்று சிலபல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

திராவிட நாடு - 21-12-1947