அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புயல் கொடுமையைப் போக்க தி.மு.கழகத் திட்டம்! நொந்தோம்!

ஆச்சாரியார் முன்வருவாரா?

‘கூட்டு ‘லெவி‘ விதிக்கலாம்‘

“குவிந்திருக்கும் பணத்தைத் திரட்டலாம்“

அவசரச் சட்டம் பிறக்குமா?

சி.என்.ஏ. தரும் யோசனைகள்

“ஐந்து கோடிக்குமேல் தஞ்சை திருச்சி மாவட்டங்களில் சேதமென சர்க்கார் கூறுகிறது. இந்த நஷ்டம் சாதாரணமானதல்ல இதை ஈடுசெய்து. கஷ்டப்படவோருக்கு நிவாரணம் செய்யும் சுலபமான வழிகளைக் கூறுகிறேன். எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டங்களை அள்ளி வீசும் ஆச்சாரியார் சர்க்கார், இந்த நல்ல யோசனையை அமுலாக்கத் துணியுமா? அவசரச் சட்டம் பிறக்குமா?“ என்று 14-12-52 அன்று மாலை தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் மன்றத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணாதுரை அறைகூவல் விடுத்தார். மேற்படி பொதுக்கூட்டத்தில் தனது யோசனைகளை விளக்கி. அவர் பேசியதாவது.

“இயற்கையின் கொடுமையால் தஞ்சையும் திருச்சியும் பாழ்பட்டதை எண்ணிப் பதறினோம். அழகுள்ள தஞ்சைத் தரணி! சாலையும், சோலையும் நிரம்பிய நன்செய் பூமி, புயலுக்கு இரையாகித் தவிக்கிறது. “கன்னித் தமிழ்ச் சோலையோரம்“ என்று நண்பர் கே.ஆர்.ராமசாமி பாடினார். அந்தப் பாடலை மெய்ப்பிக்கும் தமிழ்ச் சோலைகள் இன்றில்லை! சாய்ந்த மரங்கள் கிடக்கின்றன – அவைகளுக்கு அடியிலே பிணங்கள் – அலையால் சுருண்டு வீழ்ந்த குடும்பங்கள் – கடல்நீர் ஊருக்குள் புகுந்து, உரைக்கவும் அஞ்சுமளவுக்கு நாசம். வாழையில்லை! தென்கைள் சாய்ந்தன! அழகு மிளிரும் தோட்டங்கள் நாசம்! இத்தகைய கோர அளவுகளுக்கு ஆட்பட்ட தஞ்சைத் தரணியில் கொஞ்சம் நிலை வரவேண்டும், மீண்டும். புயலின் ஒரு நாள் புன்னகை – சாலைகளிலே சாய்ந்தன மரங்கள்! ‘பாலைவனம்‘ காட்சியளிக்கிறது, இங்கே! இயற்கையின் கொடுமையால் ஏற்பட்ட நஷ்டம், இவ்வளவு அவ்வளவென்று சொல்லி முடியாது. இருப்பினும் சர்க்கார் மதிப்பிட்டுள்ளதாம், ஐந்து கோடி ரூபாய்க்கு சேதமிருக்கலாமென்று! சர்க்காரின் மதிப்பு இது என்றால், சாதாரணமாக ஏற்பட்ட நஷ்டங்களின் மொத்த மதிப்பு எவ்வளவோ? இவ்வளவு சீரழிவு, ஒருநாள் புயலால்! சிதைந்த பூமியைப் பார்க்கிறேன் – சிந்தை நோகிறேன். இயற்கையின் தொட்டில் போல விளங்கும், இத்தரணியிலே, மீண்டும் பழைய நிலை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் – அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறேன். இதற்கான எல்லாவித ஒத்துழைப்பையும் சர்க்காருக்குத் தர தயாராயிருக்கிறேன் – தி.மு.க.வும் தயாராயிருக்கிறது. புயலின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்ட நஷ்டம் சாதாரணமானதல்ல. அவ்வளவு பேருக்கும் சகாயம் செய்வதென்பது எளிதல்ல. இந்தப் பிரச்னையைக் கவனிக்க “நல்லெண்ணம் வேண்டும் – அந்த நல்லலெண்ணம்“ அரசியலை ஏற்று நடத்தும் ஆச்சாரியார் அவர்களுக்கு இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். அவ்வித நல்லெண்ணம் இருக்கிறதென்றால், அதிகாரம் எனும் அம்புறாத்தூணி யிலிருந்து எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டங்களை அள்ளி வீசும் சர்க்கார் புயலுக்கென ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். புயலால் இரு மாவட்டங்கள் பாதிக்கபட்டதென்பது. சாதாரண பிரச்னையல்ல. அது ஓர் மாகாண பிரச்னை. வதையும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய பிரச்னை. ஆகவே, இதற்கென ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். செய்யுமா, இந்த சர்க்கார்? சுலபமான வழியில், நஷ்ட மடைந்ததை ஈடு செய்துவிடலாம் – தவிப்போருக்கும் நன்மைகள் செய்யலாம் இதை நிறைவேற்ற நல்லெண்ணம்தான் தேவை – அந்த நல்லெண்ணத்தின்பேரால் எனது யோசனையைத் தெரிவிக்கிறேன். “ரூபாய் பத்துக்குமேல், வரி செலுத்துவோர் ஒவ்வொரு பத்துரூபாய்க்கும் ஒவ்வோர் ரூபாய் செலுத்த வேண்டும்“ – இவ்விதம் ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கட்டும். அதற்குப் புயல் நிவாரணச் சட்டம் என்ற பெயர் வேண்டுமானாலும் தரட்டும். நான் ஆதரிக்கிறேன்! இவ்விதம் ஓர் சட்டம் போட்டு, வீட்டு வரியாகவோ நில வரியாகவோ சர்க்காருக்குச் செலுத்துவோர், தாம் செலுத்தும் ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் ஒரு ரூபாய் வீதம் – இருபது என்றால் இரண்டு, நாற்பது என்றால் நான்கு, நூறு என்றால் பத்து இவ்விதத்தில் வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் பிறப்பித்தால், சுலபமாக வேண்டிய தொகையை வசூலித்து விடலாம். பாதிக்கப்பட்ட இரு மாவட்டங்களையும் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில், இந்தச் சட்டத்தை அமுல் நடத்தலாம். இவ்விதம் ஓர் சட்டம் பிறப்பிப்பது – அதுவும் நல்லதோர் ‘திருப்பணி‘க்காகப் பிறப்பபிப்பது தவறு அல்ல. ஆட்களைக் கொல்லவும், தடிகளைத் தூக்கவும், அவசரச்சட்டங்களைப் பிறப்பிக்கும் அரசாங்கம், அவதியுறுவோரின் கண்ணீரைத் துடைக்க இவ்விதம் ஓர் சட்டத்தைப் பிறப்பிக்கலாம். “தகுதிக்குத் தக்கவரி“ அதுவும் ஓர் திருப்பணிக்காக! செய்யுமா, சென்னை சர்க்கார்? முன் வருவாரா முதலமைச்சர்? இவ்விதம் வரி விதித்தால் அதனை வசூலிப்பதற்கென, பித்தியேகச் செலவு எதுவும் அரசாங்கத்துக்கு ஏற்படாது. சாதாரண ‘கிஸ்தி‘ களை வாங்க, சர்க்காரின் சிப்பந்திகள் இல்லாமல் இல்லை! ‘பில் கலெக்டர்கள்‘ ஏராளம் இருக்கிறார்கள்! அவர்களைக் கொண்டே இந்த வரியை வசூலிக்கலாம். சர்க்காருக்கென, எவ்வித நிர்வாகச் செலவும் ஏற்படாது. நல்லதோர் காரியத்துக்கு, எவரும் பணம் வழங்குவர், கல்லால் செய்யப்பட்டதாயிருந்தாலும் கண்ணீர் துடைக்கும், இத்திருப்பணிக்கு மனமிரங்கி, தானாகவே உதவும்! இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு உதவ, நம் நாட்டு மக்கள் எப்போதும் தயங்கார் குருத்து வாழை இலைபோட்டு, வெள்ளிபோன்ற சோற்றைப் படைத்து, வீட்டு வாயிலைத் திறந்து வைத்து, வரும் விருந்தினரை வரவேற்று, ‘அண்ணாவா? வா!‘ ‘அக்காவா? வா!‘ என்று அன்பு சொல்லிட்டு அழைத்து, மனையிலிருந்து மகிழ்வோடு உபசரிக்கும், தென்னாட்டு மக்கள், பிறர்துயர் தீர்க்கும் இந்தப் பணிக்கு உதவ, சிறிதும் தயங்கார்! ஆகவே, இத்தகைய சட்டம் பிறப்பித்து, இடுக்கண்ணுக்காளானோருக்கு எல்லோரும் உதவ, வழி செய்யுமா, இந்த சர்க்கார்? ந்லெண்ணத்தோடு, கூறுகிறேன்! முன்வருவாரா, ஆச்சாரியார்! சாய்ந்து காய்ந்து கிடக்கும் மரங்களை நகர்த்த, நாங்கள் தயார்! “வீழ்ந்த பிணங்களைப் புதைக்க ஆளில்லை – வா!“ என்றால் வருகிறோம். எவ்வித ஒத்துழைப்பு கேட்டாலும் இருக்கிறோம் நாங்கள்! இதுபோன்ற எதுவும் செய்யமுடியும் எங்களால். உப்புத் தண்ணீரால் உருக்குலைந்த நன்செய் நிலங்கள், வீழ்ந்த வெற்றிலைத் தோட்டங்கள், தென்னஞ்சோலை, இவைகளை மீண்டும் காணச்செய்வதென்பது இலேசான காரியமா? உடலுழைப்பால் உருவாகிடக் கூடியதா இது! அல்ல – அல்ல. இதனால், பாதிக்கப்பட்டோரும் – ஏற்பட்டிருக்கிற நஷ்டமும் சாதாரணமானதல்ல ஐந்து கோடியாம் – சர்க்கார் தெரிவிக்கிறது.

இவ்வளவு பெரிய தொகையை நாடகம் ஆடியா, நாங்கள் திரட்டியுதவ முடியும்? இதனால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்க “வேஷம்“ தடவிவிடுவதால் முடியுமா? எங்கள் விகிதாசாரத்துக்கு ‘ஏதோ‘ தரமுடியும் – அதுபோல கம்யூனிஸ்டுகளால் ‘பிடி அரிசி‘ கேட்டோ, வேறு வழியிலோ, ஏதாவது உதவ முடியும் – ஏனைய அரசியல் கட்சிகளும் அவையவை சக்தியானுசாரம் உதவ முடியும் ஆனால், ஐந்துகோடி ரூபாய் சேதத்தை, எவ்விதம் ஈடுசெய்ய முடியும்? அவ்வளவு பெறுமானமுள்ள தோட்டமும், துரவும் அழிந்ததை, எவ்விதம் மீண்டும் உண்டாக்க முடியும்? ஐந்துகோடி! - இவ்வளவு பெரிய தொகையுதவ, அரசியல் கட்சிகளால் மட்டுமல்ல, நகர சபைகளால் – ஜில்லா போர்டுகளால் – ஏன்? சென்னை சர்க்காராலேயே முடியாது. சென்னை சர்க்காரால் முடியாது என்பது மட்டுமல்ல, இவ்வளவு பெரிய தொகையை வதைவோர்க்கு வழங்க, இந்திய சர்க்காருக்கும் மனம் வராது. ‘டில்லிக்கு மனசு வராது‘ என்பதை நான் மட்டமல்ல, ‘பத்துகோடி கடன் கேட்டு, ‘இல்லை‘ யென்று டில்லி பதில் தந்தபோதே, சி.ஆர்.தெரிவித்திருக்கிறார், ‘டில்லிக்கு மனமில்லை‘ என்று ஆகவே, கண்களில் நீர் சொரியவைக்கும், இக்கஷ்டம் போக்க, எனது யோசனையை ஏற்றுக் கொள்வாரா, ஆச்சாரியார்? ஆளுக்கு ரூபா ஒன்று வீதம், வசூலித்தாலே போதும்! மீண்டும் சோலையும் செழிப்பும் கொஞ்சச் செய்யலாம்! ஏற்பாரா, இதனை? “மற்ற கட்சிக்காரர்கள் என்மீதும், என் சர்க்கார்மீதும் குறை சொல்வதில் தானே இருக்கிறார்கள்? எங்கே, உருவான யோசனைகள் சொல்கிறார்கள்?“ என்று அடிக்கடி, ஆச்சாரியார் வருவோர் போவோரிடம் தெரிவிப்பதாகக் கூறுகிறார்கள். இதோ, உருவான யோசனை! நல்லெண்ணத்தோடு கூடிய யோசனை! நம்பிக்கையோடு, கூறுகிறேன். ஏற்க முன்வரட்டும், முதலமைச்சர்! எனது ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு என உறுதி கூறுகிறேன். “மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!“ என்று ஜபித்தவண்ணம், செம்பொன் குவியலையும், பாசிப்பிடித்த பணமூட்டைகளையும், தங்கப்பீடங்களையும் ஆடையாபரணங் களையும், முடக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்கள், தம்பிரான்கள்! அவர்களுக்கேன் இது? செம்பொன்னும் செல்லாக்காசும் ஒன்றுதானே அவர்களுக்கு! அவர்களுக்கேன் இவ்வளவு குவியல்கள், அதனைக் கேட்டு வாங்கி, அவதியைத் துடைக்க உதவலாம் – ‘ஐந்து கோடி‘யைத் திரட்டலாம் ஏன், இதற்கோர் அவசரச் சட்டம் போடக்கூடாது சர்க்கார்? “தேவை போக – மிச்சத்தை தருக“ என்றோர் சட்டம் ஏன் பிறப்பிக்க கூடாது? திருவிழாக்களெனும் பெயரால், தேவாலய விழர்க்களெனும் சாக்கிட்டு, செலவழிக்க ஒதுக்கப்படும் தொகை எத்தனையெத்தனை! இவைகளை, இந்தப் புயல் நிவராணத்துக்கு ஒதுக்கச் செய்தால், என்ன? சீறுவோர் யாரிருக்கிறார்கள்! ஆண்டவன் மனம் ‘இத்திருப்பணி‘ காண குளிருமேயன்றி, கோபிக்கவா செய்யும்? அருமையான பலன் கிடைக்கும்! சுலபமான வேலையுங்கூட! செய்வாரா முதலமைச்சர்? நல்லெண்ணத்தால் அழைக்கிறேன்! அவதிப்படும், தஞ்சை திருச்சி மக்களின் வாழ்வைச் செப்பனிட முன் வருவாரா, ஆச்சாரியார்? “புயலால் சீரழிவோருக்கு நிவாரண உதவிகளை இஷ்டப்படி செய்யும் கலெக்டருக்கு உத்திரவிட்டுள்ளேன்“ என்று தெரிவித்ததாகப் பத்திரிகைகளில் படித்தேன் இஷ்டப்படி செலவு செய்வதென்றால் என்ன அர்த்தம்? இஷ்டப்படி செலவு செய்ய எங்கேயிருக்கிறது பணம்? சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்றோர் பழமொழி உண்டு. என்ன இருக்கிறது, சட்டியில்! இதனை எவரும் அறியார் எனும் போக்கில் இவ்விதம் பேசிவிட்டால் போதுமா?

“கஷ்டமடைந்த எந்த ஏழையும் கலெக்டரைக் கண்டு உதவி கோரலாம்“ என்றும் கூறப்பட்டுள்ளது. இது நடக்கக்கூடிய காரியமா? கலெக்டர், ஏழை விவசாயி சந்திக்கக்கூடிய தூரத்திலா இருக்கிறார்? இவ்விதம் கலெக்டர்களை கை காட்டிவிடுவது – போதுமா? புயலின் கொடுமைகளைப் போக்க கண்துடைக்கப் பயன்படலாம்? காரியத்தை நிறைவேற்ற இதுவா வழி? கலெக்டர்களை நாடக்கூடிய வசதியும் வாய்ப்பும் பெற்றோர் யார்? வடபாதி மங்கலங்களும் குன்னியூரும்தானே நெருங்குவோர் உதவியும் பெறுவர் இவ்விதம் பேசிடுவதுதானா ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் வழி? புயல் சூழ்ந்து பாலைவனம்போல் காட்சியளிக்கும் பகுதியில் மீண்டும் செழிப்பை காணச் செய்யும் திட்டம்? மீண்டும் உறுதி கூறுகிறேன். எங்கள் நல்லெண்ணத்தின் காரணமாக இதனை வலியுறுத்துகிறேன். தகுதிக்கேற்ற “லெவி“ தம்பிரான்களிடம் வசூல் செய்ய முன் வரட்டும் ஆச்சாரியார் உழைக்க ஒத்துழைக்க நாங்கள் தயார். இந்த வேதனையைத் தீர்க்க டில்லியார் அக்கரைகாட்டார், பசிக்கிறது என்ற போது “மரம் நடு“ என்று சொன்ன முன்ஷிக்களின் இருப்பிடம் அது “அரிசியில்லையா கோதுமையைச் சாப்பிடு கோதுமையில்லையா பருத்திக் கொட்டையைத் தின்னு“ என்று உபதேசித்த உத்தமர்கள் இருக்குமிடம் அது. அது நமது வேதனையறியாது ஆகவே புயல் நிவாரணத்திற்கு புது வழி புகச் சொல்கிறேன். சென்னை சர்க்காரின் நிதிநிலையை நன்குணர்ந்து மனிதாபினத்தால் வெளியிடுகிறேன். இந்த யோசனைகளை நல்ல காரியத்திற்கு எவரும் உதவுவர். முன்வருவாரா ஆச்சாரியார்?

எதற்கும் சுலபத்தில் அனுதாபம் தெரிவித்துவிடலாம் ஆதரவு வழங்குவதாக அறிவித்துவிடலாம். ஆனால் அந்த வேதனைகளைத் தீர்க்க அவை போதாது. நல்லெண்ணம் வேண்டும். அதனை ஆச்சாரியாரிடம் எதிர்பார்க்கிறேன். அதனால் இந்த யோசனைகளை வெளியிடுகிறேன். ஏற்பாரா? முன் வருவாரா? அல்லது இதற்கும் ஆண்டவன் சித்தம் என்ற பதிலைத் தருவாரா? ஆண்டவன் அருளைப்பெற அன்பைத் தரவேண்டும் அன்பைத் தந்துதான் அருளைபெற முடியும் என்று அவரே கூறுகிறார் அதனை நினைவூட்டுகிறேன் ஏற்பாரா என் யோசனைகளை? முன்வருவாரா? நல்லெண்ணத்தின் யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவர.

திராவிட நாடு – 21-12-52