அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


புயலுக்கு முன்!

போரினால் ஏற்பட்ட புண் ஆறா முன்பே, இரத்தவெள்ளம் பாய்ந்தோடிய இடங்களிலே, கரை போகா முன்பே, பிணவாடை அடியோடு ஒழியா முன்பே, நசித்த தொழில்கள் மீண்டும் தலை எடுத்துப் பழைய நிலையைப் பெறுவதற்கு முன்பே, பொருளாதாரச் சீர்குலைவு சரிப்படுத்தப்படாத முன்பே, இடிந்த கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்குள்ளாகவே, பாழான வயல்களிலே, மீண்டும் பயிர் ஏறா முன்பே, மற்றோர் போர் மூண்டுவிடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக, பல நாடுகளிலேயும் உள்ள தலைவர்கள், எச்சரிக்கை விடுக்கத் தொடங்கிவிட்டனர்.

அந்தந்த நாடுகளிலேயும், கிடைத்துள்ள அதிகாரத்தைப் பிறறர் பறித்துக்கொள்ளாமலிருக்கவும, சேகரிகப்பட்ட செல்வாக்குச் சிதறிவிடாதபடி தடுக்கவும், உள்நாட்டுப் பிரச்னைகளிலே மக்கள் கவனம் செலுத்தாதபடி தடுக்கவும், போர், போர், என்ற திகிலை ஊட்டுவது, ஆதிக்கத்தை இழக்க மனமில்லாத சில அரசியல் தலைவர்களின், தந்திரம், என்ற போதிலும், போர் மூண்டுவிடுமோ, என்று அனைவருமே சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகள் பல, காணப் படுகின்றன.

ஐரோப்பிய கண்டமே, இன்று, குத்துச் சண்டைக்குத் தயாராக நிற்கும் இரு பயில்வான்கள், காலை ஊன்றிக்கொண்டு, இடத்தின் அமைப்பையும், தாம், உலவ வேண்டிய முறையையும் பற்றி குறிப்பெடுக்கும், நிலைமையிலேயே இருக்கிறது.

நாஜி ஜெர்மனியை வீழ்த்துவதற்காக, ஏற்பட்ட கூட்டுறவு, நேசத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. வெற்றி கிடைத்ததுமே, யாருடைய வல்லமை, வெற்றிக்கு முக்கிய காரணம் என்ற பேச்சும், போரிலே, யார், அதிகக் கஷ்ட நஷ்டமடைந்தார்கள் என்பது பற்றி விவாதமும், பலப்பட்டதே தவிர, ஆபத்து வேலையில் அமைந்த இந்தக் கூட்டுறவை, நிரந்தர நேசமாக்குவதற்கு என்ன வழி காணலாம், என்ற எண்ணம் வலுவடையவில்லை.
“இவ்வளவு வீரதீரமும், போர்த்திறனும், புதுமையான போர்க் கருவிகளும், சோவியத்திடம் இருக்கக்கூடுமென்று நாம் கனவுகூடக் காணவில்லையே. இப்போதல்லவா தெரிகிறது, சோவியத்தின் படை பலமும், அங்குள்ள மக்களின் நெஞ்சு உரமும்” என்று எண்ணத் தொடங்கிய அமெரிக்கா, இப்படிப்பட்ட பலவான், தன் கூட்டாளியானானே என்று மகிழ்ச்சி கொண்டதா என்றால், இல்லை; மருட்சியே கொள்ளலாயிற்று; இவ்வளவு வல்லமை பொருந்திய சோவியத், நாஜியுடன் போரிட நேரிட்டதற்குப் பதிலாக, நம்மைத் தாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தால், நமது கதி என்னவாகியிருக்கும்? - என்று யோசிக்கத் தொடங்கியதுடன், பொறாமையைக்கூட வளர்த்துக் கொண்டது. அசூயை அச்சத்தையும் பிறக்கச் செய்தது. எனவே, சோவியத்தின் சக்தியையும் சமாளிக்கக்கூடிய பலத்தை நாம் பெற்றாக வேண்டும் என்று திட்டமிட்டு அமெரிக்கா வேலையைத் தொடங்கி, இன்றளவும், அதிலேயே தன் ஆற்றல் அவ்வளவையும் காட்டிக் கொண்டு வருகிறது. அதிலும், போரின் விளைவாக ஏற்பட்ட நாசத்திலிருந்து, மற்ற நாடுகளைவிட, மிக விரைவாக, சோவியத் விடுபட்டு, பழைய சோபிதத்தையும் அடைகிறது என்பதைக் கண்டதும் அசூயை ஆத்திரமாக மாறிவிட்டது.

அதுபோலவே, சோவியத்தும், ஒரே முகாமில் தங்கி, அமெரிக்காவுக்கு உள்ள அபாரமான பணபலத்தையும், அதனால் பெற முடிந்த படைபலத்தையும், அதனால் பெற முடிந்த படைபலத்தையும் தெரிந்துகொண்டதால், உலக நிகழ்ச்சிகளை, பாதிக்கக்கூடிய, பலம், அமெரிக்கா பெற்றிருப்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி, தன் திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்கிற்று.

இவ்விரு சக்திகளும், சந்திக்க முடியாதபடியும், சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படாதபடியும், இடையே இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்தி, எல்லைக்கல் போலிருந்து வந்தது. இந்தப் போர், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் பலமெல்லாம், பூஜாரியின் உடுக்கையின்போது, ஆவேசமாடுபவனுக்கு ஏற்படும் வலிவுபோன்ற முறையானதே தவிர, உண்மையான பலம் இல்லை, என்பதை இரு சக்திகளுக்கும், இந்த உண்மை தெரிந்ததைவிட, அதிகம் தெளிவாக, பிரிட்டனுக்கே இது புரிந்துவிட்டது. நஷ்டஈட்டுத் தொகையை எதிர்பார்த்துக்கொண்டு, யானை படுத்தால் குதிரை மட்டம், கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்றெல்லாம் பழமொழி பேசிக்கொண்டு மகிழ்ச்சியைத் துணைக்கு அழைக்கும், நடுநாட்டு, ஜெமீன்தார் நிலைக்கு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வந்து விட்டது. எனவே, சோவியத்தும், அமெரிக்காவும் சந்திக்காதபடி, வழிமறைத் திருந்த வல்லரசு விலகி விட்டது.

எனவே, இப்போது, இந்த இரு சக்திகளும், நேருக்கு நேர் நிற்கின்றன. நேசமாக வாழ்வதா, பூசலிட்டுக்கொள்வதா - என்ற பிரச்னை, மன்றத்திலே தோன்றுமளவுக்கு, இரு சக்திகளும் நெருங்கி உள்ளன.

இரு சக்திகளுக்கும் உள்ள ராஜதந்திரத் திறமைக்கு, பரீட்சைக்கூடம் போல அமைந்துவிட்டது, சாந்தியை நிலவச் செய்வதற்கு என்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை.

ஜெர்மனிக்குள்ளாகவேகூட, இரு முகாம்கள்! இரு வேறு திட்டங்கள்! இருவிதமான பிரசாரங்கள்!

ஜெர்மன் நிபுணர்களைக்கொண்டு சோவியத், பயங்கரமான இரகசிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் முறையைக் கற்றுக் கொள்கிறது, என்று அணுகுண்டு அமெரிக்கா, புகார் செய்கிறது.

அதிலே, என்ன தவறு? என்று கூறுகிற முறையிலே, கொட்டும் குளிரில், போரிடும் முறையை எமக்குக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அந்த ‘வித்தை’யை, குளிர்காலத்திலே ரஷியாவிலே, போர் நடத்தித் தெரிந்து கொண்டவர்களாயிற்றே, என்று பிரிட்டிஷ் படைத் தலைவர்கள் சரண்புகுந்த ஜெர்மன் படை நிபுணர்களைக் கேட்கிறார்கள் - பயிற்சியும் பெறுகிறார்கள்.

எமது ஆதீனத்தின் கீழ் இருந்தால் சாந்தி உண்டு, சபீட்சம் உண்டு, என்று சோவியத், தன் அண்டை நாடுகளுக்குக் கூறுகிறது. இந்த அன்பழைப்பை ஏற்க மறுத்தால் மல்லுக்கும் இழுக்கிறது.
எமது ஆதீனம் என்றுகூட அமெரிக்கா முதலில் கூறவில்லை. உங்களுக்குள் ஒரு பொது அமைப்பு ஏற்படுத்திக் கொள்வது நல்லது, நீங்கள் நேசத்தோடு வாழுவதைக் காண வேண்டுமென்பதே எமது நோக்கம், இந்தச் சிறந்த காரியத்தைச் சாதிக்க எம்மாலான உதவியைச் செய்கிறோம் - பணம், பண்டம், படை, என்ன வேண்டுமோ, வெட்கப்படாமல் கேளுங்கள் தருகிறோம், என்று பேசலாயிற்று.

ஐரோப்பாவின் மேற்குத் திக்கிலிருந்து அமெரிக்க அன்பு கிழக்குத் திக்கிலிருந்து, சோவியத் உபதேசமும், கிளம்பி, ஒவ்வொரு நாடாக நுழைந்து, ஆங்காங்கு ஒவ்வோர் விதமான நிலைமையை உண்டாக்கி வரலாயிற்று.

மந்திரிசபை மாறுதல்களிலிருந்து, மன்னர்கள் முடி துறப்பது வரையிலே, அரசியல் துறவிலிருந்து, அநியாயக் கொலைகள் வரையிலே, பல்வேறு நிகழ்ச்சிகள், ஐரோப்பாவிலே உள்ள பலநாடுகளில்.

போலந்து, பின்லாந்து, செக்கோ, யூகோ, போன்ற நாடுகள், சோவியத்தின் பதுமைகள், என்று அமெரிக்கா கூறவும், கிரீசிலிருந்து துவங்கி, பிரிட்டன் வரையிலே உள்ள நாடுகள், அமெரிக்காவின் கங்காணிகள் என்று சோவியத் கூறவும், நிலைமை இன்று இருக்கிறது.

இந்தச் சீர்கேடு, ஐரோப்பாவுடன் நின்றுவிடவில்லை. சீனாவிலே, ராஜதந்திர முழக்கம் என்ற அளவிலிருந்து, பீரங்கி முழக்கமெனும் அளவுக்கு, நிலைமை கேவலமாகிவிட்டது.

அமெரிக்காவுக்கு, ஐரோப்பிய கண்டத்திலே, பிரிட்டன் ஏஜண்ட் வேலை செய்கிறது - கடனாளி, நோயாளி, அமெரிக்கா வுக்குப் பங்காளி, இந்த பிரிட்டன், எனவே இந்தப் வேலையைக், கூச்சமின்றிச் செய்கிறது, என்று சோவியத் புகார் கூற, அதை மறுப்பது வீண்வேலை என்ற கருத்துடன், பிரிட்டன் ஆங்கிலோ - அமெரிக்கக் கூட்டுறவு, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தோழமை, பொது உடைமை எதிர்ப்பு முன்னணி, புனரமைப்புப் பொது முயற்சி என்ற வேறு பெயர்களைக் கூறிக்கொண்டு இரு சக்திகள் மோதிக் கொள்வதனால், அமெரிக்காவின் சார்பாகத்தான் பிரிட்டன் இருக்கும் என்பதை, விளக்கமாக்கிக் கொண்டு வருகிறது.

சின்னாட்களுக்கு முன்பு, செக்கோஸ்லோவேகியாவில் அரசாள்வோர் அகற்றப்பட்டு, பொது உடைமைக் கட்சியினர் ஆதிக்கம் பெற்று விட்டனர். வேறு கட்சி தலைகாட்டக்கூடாது என்று திட்டமிட்டு, வேலை செய்கின்றனர். செக்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவம், சோவியத்தின் சதிச்செயல், என்று, பகிரங்கமாகவே, குற்றம் சாட்டலாயினர். சோவியத், இதனைப் பலமாக மறுக்கிறது.

இது இன்றுள்ள சூழநிலை, எனவேதான், போர் மூண்டுவிடக் கூடும் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலே, இந்திய துணைக்கண்டத்தின் போக்கு, எவ்வித இருக்கவேண்டும், என்பதை, ஆளவந்தார்கள் தீர்மானிக்க வேண்டும் - அந்தத் தீர்மானம், பொது மக்களின் கருத்தை ஒட்டியதாக இருத்தல் வேண்டும். பொது மக்கள், இந்தப் பிரச்னைபற்றித் தங்கள் கருத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதுடன் ஆளவந்தார்களுக்கும் தெரிவிக்கவேண்டும். எதிர்காலம், எப்படி அமையும் என்பது, இந்தப் பிரச்னையைப் பொறுத்திருக்கிறது.

முதலமைச்சர், றிஇந்தியா, எந்தச் சக்திக்கும், சாமர வீசச் சம்மதிக்காது,றீ என்று கூறுகிறார். மகிழ்ச்சி. ஆனால் பிரிட்டிஷ், அமெரிக்கக் கூட்டுறவைத்தான் இந்தியா பெரிதும் விரும்புகிறது என்பதைப் பல நடவடிக்கைகள் மெய்ப்பிக்கின்றன.

போர் ஏற்படுமானால் விளக்கக் காரணத்தையும் விளைவுகள் என்ன ஆகும் என்பதையும் பொது மக்கள் சீர்தூக்கிப் பார்த்தால், ஆதிக்கம் தேடி அலையும் இரு சக்திகளில், எந்தச் சக்திக்கும் நாம் உதவி செய்யவோ, உடனிருக்கவோ கூடாது, ஒதுங்கியே நிற்க வேண்டும், என்பதை உணருவர். பொது மக்கள் இந்தக் கருத்தை தெளிவுபடுத்தியாக வேண்டும் - பல்வேறு கட்சிகளும், மக்கள் மன்றங்களும், இந்த மகத்தான பிரச்னைபற்றி, பொறுப்புணர்ச்சி யுடன் யோசித்து, யோசித்து, தங்கள் கருத்தை, ஆள்பவர்களுக்கு அறிவிக்க வேண்டுகிறோம்.

‘ஜலஉஷா’வைச் சின்னாட்களுக்கு முன்புதான், கடலில் செலுத்தினர். இந்த நிலையில் உள்ள, துணைக்கண்டம், பயங்கரப் போரிலே, ஒதுங்கி இருந்தால் மட்டுமே, தனது நிலையை காத்துக் கொள்ள முடியும். புயலுக்கு முன்பு, புயல் வருமோ என்ற சந்தேகம் எழும்போதே, துறைமுகம் சேர்ந்து நங்கூரம் பாய்ச்சிக் கொள்வது கலத்துக்கு நல்லது; நாட்டுக்குந்தான்!

28.3.1948