அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ராதாவுக்குத் தடை

கரூரில் நடைபெறவிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள், நடைபெற வொட்டாமல், கடந்த 27ந் தேதியன்று தடைசெய்யப்பட்டதாக அறிகிறோம்.

மேற்படி தடையை வீசிய மாஜிஸ்டிரேட் மேற்படி நாடகங்கள் நடைபெற்றால் அமைதிக்குப் பங்கம் ஏற்படுமென்று குறிப்பிட்டுள்ளார்.

நண்பர் ராதா-மக்கள் மனங் கவர்ந்தவர். தினசரி அவரது நாடகம் நடக்காத இடமில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராக அவரது நாடகசபையினர் தமது நாடகங்களை நடத்தி வருகிறார்கள். நடத்தி வருகிறார்களென்றால் ‘நவாப்’ கம்பெனிகள் போலல்ல, பெருமித வசூல் அபாரமான கூட்டம்-எப்படியப்பா நடிக்கிறார்’ என்ற பாராட்டுதல்களோடு.

அந்த ஊர்களிலெல்லாம் ஏற்படாத அமைத்திக்குப் பங்கம், கரூரில் மட்டும் எப்படி ஏற்படுமோ, விளங்கவில்லை. நாமும் தொடர்ந்து கவனித்து வருகிறோம். கரூரில் மட்டுமே அடிக்கடி ராதாவுக்கு தடை உத்திரவுகள் போடப்பட்டு நாடகங்கள் நடத்தப்படாமல் தடுக்கப்படுகின்றன. நான்கைந்து முறைகள், இது போல நடை பெற்றிருக்குமெனக் கருதுகிறோம். ஒருமுறை நடத்த அனுமதிதந்து, அதனால் ஏற்பட்ட ‘அமைதிக்குப் பங்கத்தால்’ தான் இப்போதும“ தடுக்கப்படுகிறது என்று கூறமுடியாது! ஏனெனில் தொடர்ந்து அங்குமட்டும் தடைகள் போடப்பட்டிருக்கின்றன!!

சிலருடைய சொந்த விருப்பு வெறுப்பு அன்றி வேறெதைக் காட்ட முடியும் இந்நடவடிக்கைக்கு?

ஆட்சியின் அம்புகள் இத்தகைய அடாபிடிச் செயலில் இறங்குவது காண உண்மையில் வருந்துகிறோம். மனித உரிமையை உதாசீனம் செய்வது பேராபத்தைத் தரும் இதை உணரவேண்டும். அதிகாரத்தால், இஷ்டம் போல உலவுவோர்.

(திராவிடநாடு 6.4.52)