அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ரஷிய தினம்

சோவியத் ரஷியா என்ற சொல் கேட்டாலே, நடுநடுங்கிக் கொண்டும், வெறுப்பாகக்கண்டித்துப் பேசிக் கொண்டுமிருந்த நாடுகளெல்லாம், இந்தப் போரின் போக்கிலே, சோவியத் நாட்டின் அருமை பெருமைகளை உணர்ந்து கொண்டனவாகையால், இவ்வாண்டு பல்வேறு நாடுகளிலே ரஷிய தினம் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

ரஷியாவுடன், பிரிட்டனும் அமெரிக்காவும் நேசமாக இருப்பது, ஜெர்மனிக்குத் தலைவேதனையாக இருக்கிறது. எப்படியாவது, இந்தக் கூட்டுறவை வெட்டிவிட வேண்டுமென்று ஜெர்மனி முயன்றபடி இருக்கிறது. ஆனால், மாஸ்கோ மாநாடு, இக்கூட்டுறவைப் பலமாக்கி
விட்டது. போர்க்காலம் வரையில் மட்டுமன்று, போர் முடிந்தபிறகும், கூட்டாக இந்நாடுகள் வேலை செய்வது என்ற தீர்மானம், மாஸ்கோ மாநாட்டினால் வலிமை பெற்றிருக்கிறது.

மாஸ்கோவில்
மாஸ்கோவிலே, சிகப்புக்கொடிகள் கெம்பீரமாகப் பறக்கின்றன. எங்கு பார்த்தாலும், மார்க்ஸ், ஏன்ஜல்ஸ், லெனின், ஸ்டாலின், ஆகியோரின் படங்கள் தொங்கவிடப் பட்டிருப்பதுடன், ஆங்கில- ரஷிய-அமெரிக்கக் கூட்டுறவு நீடூழி வாழ்க என்ற எழுத்துகள் கொண்ட அட்டைகள் பல இடங்களிலே தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

தோழர் ஸ்டாலின் விழாவிலே பேசுகையில், இக் கூட்டுறவைப் பாராட்டிப் பேசியதுடன், நேசநாட்டினர், ரஷியாவுக் குப் போர்ப்பொருள் உதவி வருவதைப் பாராட்டியுள்ளார். ஜெர்மன் உற்பத்தி வட்டாரங்களை, நேசநாட்டு விமானப் படை அழித்து வருவதையும் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டாம் போர்முனை விரைவிலே ஆரம்பமாகப் போகிறது என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

சோவியத் விழாவுக்கு, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலர், வாழ்த்துச் செய்திகள் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் ரஷியா
பார்லிமெண்டரி காரியதரிசி, மிஸ்டர் ஜார்ஜ் ஹிக்ஸ், பிரிட்டிஷ் தொழிலாளரிடையே பேசுகையில், “புரஷியன் (ஜெர்மன்) ராணுவத்தலைவர்களை ரஷ்ய விவசாயத்தலைவர்கள் விரட்டியடிக்கிறார்கள். ரஷ்ய உத்வேகத்தைப் பாருங்கள். சரியான படி அமைப்பு ஏற்பட்டு, சரியான தலைவரும் கிடைத்தால், பிரிட் டிஷ் தொழிலாளரும், ரஷ்யர்போல் வீரராகலாம்” என்று பேசினார்.

14.11.1943