அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ரத்தும் – பயமும்!

குதூகலம்
மட்டற்ற மகிழ்ச்சி
நாடெங்கும் ஆனந்தம்
வீதிக்கு வந்துவிட்டது
விலை இறங்குகிறது
தாராளமாகக் கிடைக்கிறது
எங்கும் சந்தோஷம்

இவ்வித ‘கொட்டை எழுத்துக்களுடன்‘ ஆச்சாரியாரின் உணவுக் கட்டுப்பாடு ரத்து செய்த நடவடிக்கை குறித்து, ‘தினமணி‘ இதழ், கடந்த சில தினங்களாகப் பிரமாதப்படுத்தி வருகிறது அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திகளைத் திரட்டி, “சொந்த நிருபர் தெரிவிக்கிறார்“ என்றும் ‘பஞ்சம் பறந்தது! இனிப் பரதவிப்பு இராது! எனும் பாவனையில், செய்திகளைப் போடுகின்றன – தேசீய இதழ்கள் பத்திரிகைக் காரியாலயம் ஒரு விசித்திரமான இடம்! அறைக்குள்ளிருந்தபடியே பட்டுக்கோட்டை‘ நிருபரையும், ‘பக்டூனிஸ்தான்‘ நிருபரையும் பேசச் செய்துவிடும் திறமைபெற்ற துணை ஆசிரியர்கள் இருப்பார்கள். சும்மாவா சொல்கிறார்கள். பத்திரிகைகள் பலமிக்க பீரங்ககிகள் என்று! இப்போது இந்தப் பீரங்கிகள். எதற்கெடுத்தாலும் முழக்க ஆரம்பிப்பதையே கருத்தாகக் கொண்டுள்ள குண்டு இல்லாமல் இவ்விதம் இந்த பீரங்ககிள் முழங்குவதைக் காணும்போதுதான், நமக்குப் பரிதாபமும் அருவருப்பும் எழும்புகின்றன ‘உணவுக் கட்டுப்பாடு ரத்து அதன் விளைவாக நாட்டில் மகிழ்ச்சியும் ஏழைகளிடத்திலே இன்பமும் மலர்ந்திருப்பது உண்மையானால் நாம் மகிழ்வோம் – மனமார இந்நடவடிக்கையை எடுத்து ஆச்சாரியாரையும் வாழ்த்துவோம். “துணிவாகச் செய்தார்!“ “துயர் தீர்க்கச் செய்தார்!“ என்று துந்துபி எழுப்புகின்றன. இதழ்கள் இதையொட்டி, தாளமும் தட்டியிருக்கிறார்கள். சில தலைவர்கள். ரேஷனை ரத்து செய்ய துணிவு என்ன தேவை? இதென்ன மகா காரியம்! நீரில்லாமல் அவதிப்படும் மக்களின் கஷ்டத்தைப் போக்க ‘ரெட்ஹில்ஸ்‘ ஏரி இருக்கிறது – மழை பெய்தால் நீரைத் தேக்கி வைக்கிறார்கள். சிறிது சிறிதாக சென்ன மாநகர மக்களுக்கு சப்ளை‘ செய்கிறார்கள். மக்களும் தேவையானபோது கிடைக்கும் நீரைக் கொண்டு திருப்தி அடைகிறார்கள். இதற்குப் பதில். ஏரியின் வாய்க்கால்களை யெல்லாம் திறந்துவிட்டு, ‘தண்ணீரைத் திறந்துவிட்டுவிட்டோம், ஜனங்களே இஷ்டம்போல் எடுத்துக்கொள்ளுங்கள்‘ என்று செப்பினால், சென்னை மக்கள் மகிழவா செய்வர்? ஏரியில் தண்ணீர் இருக்கும்வரை வாய்க்காலில் நீர்ஓடம் – ஏரியில் தண்ணீர் எப்போதும் வற்றாதிருக்க வானம் பொய்க்கக்கூடாது. ஆனால் இப்போதிருக்கும் நிலை அப்படிப்பட்டதா? ஏரிக்குத் தேவையான மழையைப்போல், நாட்டுக்குத் தேவையான அரிசியும் பிறவும், இங்கு உற்பத்தியாகவில்லை. மக்கள் தொகையையும் உற்பத்தியாவதையும் ஒப்பிடும்போது சென்னை ஒரு பற்றாக்குறை பிரதேசம் என்பது, தெளிவாகத் தெரிகிறது. நீர் தேக்கிவைக்காவிடில் ஏரி வறண்டு போக எவ்வளவு நாள் பிடிக்கும்? அதிக உற்பத்தியில்லாத நாட்டில், கண்டிரோலை ரத்து செய்துவிட்டால், என்னென்ன அனர்த்தங்கள் ஏற்படும்!

‘அரிசி சிலை குறைந்துவிட்டது‘ அப்படி இப்படி என்று, பெருமையோடு பேசுகிறார்களே! அவர்கள் அவ்விதம் கூறுமளவுக்கு ஆச்சாரியார் ‘ரேஷனை‘ எடுத்ததும், இரவு அமர்ந்து ‘பஜகோவிந்தம்‘ பாடமறுநாள் காலையில் அரிசி பொழித்திட்டதாக! அல்லது ‘நாற்பது வேலி நிலமும் நாளைக் காலை விளையவேண்டும் ஐயனே!‘ என்று பாடினானாமே நந்தன் அதைப்போல, இவர் பாட, மறுநாளே கழனிகளிலெல்லாம் கதிர்கள் குலுங்கி நெல் குவிந்து போய்விட்டதா! அதுவும் இப்போது கோடைக்காலம் – சாகுபடி நேரங்கூட அல்ல இப்போது ‘அரிசி இஷ்டம்போல் கிடைக்கிறது‘ விலை குறைவாகக் கிடைக்கிறது‘ என்றால் என்ன பொருள்? கண்ணுக்கெதிரே தெரிகிறது – சர்க்கரினி் புள்ளி விபரமே பேசுகிறது – சென்னை ஒரு பற்றாக்குறை பிரதேசம் என்ற இந்நிலையில், எப்படி அரிசி குவியும்? எவ்விதம் விலை இறங்கும்! எங்கும் ஆனந்த கீதமும் பரவசப்பாடலும் நிறையும்.

ஆலையிலே பாடுபடுவோன், காலை மாலை ஆபீசுக்குச் சென்று வருவோன், கல்லுடைப்போன், வாணிபம் செய்ாவன், நகரத்தில் வாழ்வோன், போலீசாகயிருப்போன் – என்று பலப்பல அலுவல்களிலே மனிதர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களனைவருக்கும் தேவையானது உணவு. ஆனால், அவர்கள் உழுது, உணவு உற்பத்தி செய்யவில்லையே என்று அவரவர்க்குத் தேவையான உணவு கிடைக்காமலிருந்தால் என்ன ஆகும்! ‘ஆபீஸ் பைலை‘ச் சாப்பிட முடியுமா, அலைந்து சம்பாதிக்கும் காசால், பசி தீருமா, ஆலைப் பஞ்சு கும்பி கழுவிடச் செய்யுமா! ஆகாது – முடியாது எல்லோருக்கும் தேவையானது உணவு, இதை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்திட வேண்டும் ‘ரெட் ஹில்ஸ்சில்‘ நீர் குறைந்ததும், அளந்துதானே அனுப்பினார்கள், ஒவ்வொரு தினமும்! அதைப்போல, நாட்டில் நிலம் வைத்திருப்போர் விளைவிக்கும் உணவுப்பொருளைக் கொண்டு எல்லோரையும் வாழச் செய்யும் வேண்டும் எல்லோருக்கும் தேவையான அளவு உணவுப் பொருளிருந்தால் கவலை இல்லை, கட்டுப்பாடும் தேவையில்லை. நீர் குறைந்ததும் அளவு தேவைப்பட்டதுபோலப் போதிய அரிசி இல்லையென்றதும், கிடைப்பதைக் கொண்டு எல்லோரையும் வாழச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதன்விளைவாக, நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருளையும், வாழும் மக்களின் தொகையையும் கணக்கிட்டு, பங்குபோட வேண்டிய நிலையேற்படுகிறது. இதனால், ஏற்பட்ட முறைதான், பங்கீடு.

இந்தப் பங்கீட்டை எல்லோருக்கும் சரிசமமாகச் செய்ய வேண்டுமானால், நிலைம் வைத்திருப்போரின் மகசூலைக் கணக்கிட்டு, அவர்களடைய தேவை போக மீந்ததை சர்க்கார், கணக்கெடுக்க வேண்டும் – கொள்முதல் செய்ய வேண்டும்.

நாட்டில் உற்பத்தியாகம் உணவுப் பொருளை கொள்முதல் செய்து, அதை பங்கிட்டுத் தந்து, உணவு நெருக்கடியில்லாமல் பார்த்துக் கொள்ளும், நல்லதோர் முறைதான் பங்கீட்டு முறை.

ஆனால் இதை ரத்து செய்திருக்கிறார் ஆச்சாரியார்! கெட்டது இம்முறை‘ என்பதாலா? அல்ல! அல்ல! அந்தராத்மா சொல்லிற்றாம் அவருக்கு. அந்த அந்தராத்மா சொன்னதோ சொல்லவில்லையோ, பிற ஆத்மாக்களின் முணுமுணுப்பும் எரிச்சலுமே இந்நடவடிக்கைக்குக் காரணமாயிருக்க வேண்டும்.

சிறுமணி வேண்டுமா – கிச்சலி தேவையா – வெள்ளைச் சம்பா முதல் ரகம் – மூட்டையாகத் தரட்டுமா – எவ்வளவு தேவை – இவ்விதம் கேட்கிறார் நிலப் பிரபுக்களும் அவரைச் சார்ந்திருக்கும் வியாபாரிகளும் இநத்க் குரலை நாம் நேற்றும் கேட்கத்தான் முடிந்தது – அந்தி நேரத்தில் அல்லது சந்துமுனையில் அல்லது விளக்கில்லாத இடத்தில்! நேற்று ரகசியமாகக் கேட்டவர்கள் – இன்று பகிரங்கமாக விசாரிக்கிறார்க்ள்.

சர்க்காரின் ‘ரேஷன் முறை‘ இருந்தபோதும் ‘கொள் முதல்‘ திட்டம் அமுதல் நடத்தப்பட்ட நேரத்திலும் இத்தகைய குரல்களைக் கேட்டோம் இப்போதும் கேட்கிறோம்! என்ன அர்த்தம் இதற்கு? கொள்முதல் திட்டம் இருந்தபோதும் கள்ளத்தனமாக அரிசியும் நெல்லும் கிடைத்தது – ரயில் மூலமும் சிறுவண்டிகள் மூலமும் ஜில்லாக்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது சட்டசபையிலேயே, பலர் பேசினார்கள், ‘நான்கூட கள்ளமார்க்கெட் அரசி சாப்பிடுவேன்‘ என்பதாக

சர்க்கார் வசம் கொள்முதலும் பங்கீடும் இருந்தபோது, இவ்விதக் கோலாகலங்கள்! கிராமப்புறங்களில் ஒழுங்காக கொள்முதல் செய்யப்படவில்லை – அதிகாரிகளால் சர்க்காருக்கு மீதப்பட்ட நெல்லை விற்காமல் ஏமாற்றிய விவசாயிகளைச் சர்க்கார் தண்டிக்காமல் விட்டதா, என்றால், தண்டித்தது. இவர் இவ்வளவு நெல்லைக் கடத்தினால் – இந்த ‘அம்மா‘ இத்தனைபடி அரிசியைத் திருட்டுத்தனமாக வாங்கி வந்தார் – இவருக்கு அபராதம் ரூ.200 – இந்த அம்மாவுக்கு ரூ.25 அபராதம் – இவ்விதம் வழக்குகள் ஏராளமாக நடக்கத்தான் செய்தன! இருந்தும் ‘கள்ள மார்க்ட்‘ கொட்டம் அடித்தது. மாயம மந்திரமா. இதுவென்றெண்ணாதீர்கள், மகாத்மாவின் சீடர்கள் மண்டியிட்டு விட்டார்கள். நிலப்பிரபுக்களிடமும் குரல்வலுத்தோரிடமும் வழக்குக்கும் கோர்ட்டுக்கும் சிக்கியோரெல்லாம் மிகமிகச் சாதாரணமானவர்கள் – வீடுகூட்டும் குப்பாயி – இரண்டு வேலி மிராசுதார் போன்றவர்கள். வழக்குக்கும் அதிகாரிகளுக்கும் தப்பியோர்! மிகமிகப் பெரியவர்கள் – கதர்ச்சட்டை அணிந்தவர்கள் – ஆயிரக்கணக்கான ஏக்கர்களின் அதிபதிகள் அவர்களைச் சட்டமோ சர்க்காரோ எதுவும் செய்யவில்லை! செய்ய முடியவில்லை!

பணக்காரனை அவிழ்த்துவிட்டு வவிட்டதையும், தம்மைப் போன்ற சாதாரண விவசாயிகளைக் ‘கெட்டி‘ கட்டி கொள் முதலை வசூலிப்பதையும் கண்ட கிராமத்து நடுத்தர விவசாயிகள், காங்கிரஸ் ஆட்சியின் போக்கைக்கண்டு அதிருப்தியடைந்தார்கள். அதேபோல ரேஷன் வாங்குவோரும் கல்லும் மண்ணும் நிரம்பிய அரிசியை வாங்கிக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே! என்று ஆத்திரமடைந்தார்கள்.

இதனால் அதிருப்தி வளர்ந்தது – ரேஷன் முறையின் மீதே சீறினர் மக்கள். இந்தச் சீற்றத்தைக் குறைத்து, அட்சிக்கு வலிவுத்தேட, இதை துருப்புச்சீட்டாக்கப் பார்க்கிறார், அன்பர் ஆச்சாரியார்.

தோழர் பி. ராமமூர்த்தி சொல்லியதுபோல, “மக்களை வாழவைக்கும் பொறுப்பைச் சர்க்கார் தட்டிக் கழித்துக் கொள்ளுகின்றனர். தற்சமயம் மக்கள் இந்நடவடிக்கையை வரவேற்றாலும் வெகுவாய் தங்களைப் பாதிக்கிறதென்பதை விரைவில் உணருவார்கள்“.

பங்கீடு முறை – ஒரு அருமையான திட்டம் ஆனால், இந்த நல்லவர்கள் அதை ஒழுங்காக அமுல் நடத்த முடியாமல், சீர்கேடுள்ளதாகச் செய்துவிட்டனர். ஆண்டுதோறும் இரண்டு கோடியை செலவிட்டும் ஐந்து ஆண்டுகளாகியும், இதனை அமுலுக்குக் கொண்டுவர முடியவில்லை – முதுகெலும்பு பண ஆசையால் வளையும் சுபாவத்தைப் பெற்றிருந்ததால்

இந்த நிலையில், மக்களிடையே எழுந்த மன அதிருப்தியை ‘ஆட்டக்காயாக‘ வைத்துக் கொண்டு பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டார், பஜகோவிந்தப் பிரசங்கியார்.

காஞ்சி – மதுரை – கோவை முதலிய ஊர்களிலிருந்து நமக்கு வந்துள்ள கடிதங்களைப் பார்த்தால், ‘தேசீய ஏடுகள்‘ கூறுகிறபடி விலை குறைந்ததாகத் தெரியவில்லை! வீதிக்கு அரிசி வந்திருப்பதால் சில நாளைக்கு இத்தகைய மனமயக்கம் ஏற்பட முடியுமே தவிர, எவ்விதம் விலை குறையும்? இப்போதே, காஞ்சி போன்ற இடங்களிலிருக்கும் வர்த்தகர்கள் நெல் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டுப் போய்விட்டார்களாம்! சரக்குகளைப் பெருமிதமாக வாங்கிச் சேமித்து லாபம் பெறும் வேலைகளில் மார்வாடிகள் வேறு முனைந்து விட்டனராம். இத்தகவல்களைக் கேள்விப்பட, எதிர்காலத்தை எண்ணி நடுங்குகிறோம். புலிகளை அவிழ்த்துவிட்டு ஆடுகளையும் அலைவிட்டால், புலியின் வாயில் ரத்தத்ததைத்தானே காண முடியும். ஆடு வாழவா செய்யும்! இந்த நிலைக்குத்தான் ஆச்சாரியாரின் போக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. உணவுக் கட்டுப்பாடு ரத்து ஆனதும் எவரெவர் மகிழ்ந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன தெரியுமா! பெரிய மிராசுதாரர் – தஞ்சை ஜில்லாவில் மில் சொந்தக்காரத் தலைவர் – ஓட்டல் முதலாளிகள் – தென்னிந்திய வர்த்தக சபையினர் – சினிமாப் படச் சங்கத்தினர் இவர்கள்தாம் மகிழ்ந்திருக்கிறார்கள்!

ஆச்சாரியார் உத்திரவைக் குறித்து தூர கிழக்கு ஆசிய உணவு மாநாட்டின் பிரதிநிதியான ஜி. பரமேஸ்வரம்பிள்ளை எனும் கேரளத் தோழர், “போதிய அரிசி இல்லாமல் அவதிப்படும் பற்றாக்குறை மாகாண்தில் கட்டுப்பாட்டை ரத்து செய்வது மிகமிகப் பகிரங்கமானதாகும்“ என்று எச்சரித்துள்ளார்.

இதனையே நாமும் வலியுறுத்துகிறோம் – கம்யூனிஸ்டு கட்சியினர் கூறுவதுபோல, ஆச்சாரியாரின் இந்த ‘அல்ப சந்தோஷப் போக்கால்‘ – ஏழையர் உலகு மிகமிக வேதனைகளைத் தாங்கவேண்டிய நேரும். அவ்வித வேதனை வராமல் தடுக்கும் பொறுப்பு ஆச்சாரியாருடையது என்பதை நினைவூட்டுகிறோம்.

திராவிட நாடு – 15-6-52