அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ரயிலேரி ராமேஸ்வரம் போவது...!
புத்தறிவும் புராண நிலையும்
எல்லையற்ற இடம்! எதும் இல்லை! ஒளி, ஒலி, உருவம், மலை, மடு, மாநதி, மரம், புல்பூண்டு ஒன்றும் இல்லை. பார்க்குமிடமெங்கும் நீக்கமறத் தெரிகிறது, பரந்த வெளி. வேறு எதுவும் இல்லை. கடலா அது? இல்லை! கடலெனும் உருவம் படைக்கப் படாத காலம் அது. மண்ணா, விண்ணா? இரண்டுமல்ல! மண்ணும் விண்ணும், முன்னதில் மாந்தரும், பின்னதில் சூரிய சந்திர நட்சத்திராதிகளும், அமைவதற்கும் முன்னால் இருந்தது, ஓர் பெரும்வெளி - எல்லைய்றற வெளி. காலத்தின் துவக்கம்.

இந்தப் பெருவெளியிலே, காலம், கண் விழித்தது.

வெளியிலே, ஓர் குரல், கொந்தளிப்பு ஏற்பட்டது. புகை சூழ்வதுபோல, நீர் பொங்குவது போல, பேரொலியுடன் பெரிய ஆறுகள் புரண்டோடுவது போல, ஓர் நிலை ஏற்பட்டது. எல்லையற்ற வெளியிலே, இன்னதென்று புரிந்துகொள்ள முடியாத நிகழ்ச்சியின் துவக்கம். வெண்மை, கருமை, புகை, நீர், இப்படி, நிறங்களும் உருவங்களும், அசைந்து எழலாயின. மூடுபனியும், உறைந்த கட்டிகளும், தென்படலாயின. எல்லையற்ற வெளி இரு கூறாகக் காணப்பட்டது. ஒருபுறம், கொந்தளிப்பு, கருமை, புகைப்படலம்! மற்றோர் புறம், ஒளி அழகு, அமைதி!

இருண்ட பகுதியிலே, இறைவன் கட்டளைப்படி, வெப்பக் கதிர்கள் புகுந்தன. பனி கரையலாயிற்று! ஓரளவு, கரைந்தானதும் அங்கிருந்து, மெள்ள, மெள்ள, ஆடி அசைந்து கொண்டு, கிளம்பிற்று, பிரம்மாண்டமான ஓர் உருவம்! அந்த உருவம் அரைத் தூக்கத்திலேயே இருந்தது. கோரமான அந்தப் பேரசுரனின் பெயர், யெமர். விழித்தெழுந்ததும், அவனுக்கு கடும்பசி ஏற்பட்டது. ஏன் செய்வான்?

பசி! பசி! பசி! - சுற்றுமுற்றும் பார்க்கிறான் - பசி போக்க எதும் காணப்படவில்லை. எங்கும் உறைந்த பனி, உருகும் பனி, காற்று., வேறு எதுமில்லை. பசியோ வாட்டுகிறது. யெமர் திகைத்தான் - உண்ண ஏதேனும் கிடைக்குமா என்று ஆலையலானான். கடும்பசி அவனுக்கு - பெருங்காற்று அவனைச் சுற்றி. காலத்தின் துவக்கத்தில் தோன்றிய பேரசுரன், பெரும்பசி தாங்கமாட்டாமல், வேதனையுடன் உலவலானான். கடவுளின் கட்டளைப்படி, வெப்பக்கதிர்கள் தமது வேலையைச் செய்து கொண்டே இருந்தன. உறைந்து கிடந்த பனிக்கட்டிகள் உருகியபடி இருந்தன. யெமர் எனும் பேருருவம் தோன்றிய விதமாகவே, மற்றோர் உருவமும் தோன்றிற்று. அந்த உருவம், பிரம்மாண்டமான ஓர் பசு!

பசுவின் பெயர், ‘இதும்லா’. உறைந்த பனி மீது கடவுளின் ஆணைப்படி கதிர்கள்பட, அது உருக, உருகாத பகுதியினின்றும் உருப்பெற்றெழுந்த இதும்லா எனும் பசுவைக் கண்டான் யெமர். வியப்புற்றான்! முதல் உருவம், இரண்டாவதாக எழுந்த உருவம் கண்டு, இது யாது? என்று ஆச்சரியப்பட்டு, அருகே சென்றது, தள்ளாடிக்கொண்டு! பசுவைச் சுற்றிலும், மூடுபனிப்படலம். அருகே சென்று பார்க்கும்போது, இதும்லாவின் மடிக்காம்புகளிலிருந்து, பால்வழிந்து கொண்டிருக்கக் கண்டான். நாலு வெண்ணிற ஆறுகள் கெருக்கெடுத்தோடுவது போல, வழிந்து கொண்டிருந்த பாலை, பேரசுரன், பருகலானான். பருகினான், பருகினான், பசி தீருமளவு பருகினான், மயங்கிக் கீழே சாயுமளவு பருகினான்! சாய்ந்தான். உறங்கினான்.

பால் கொடுத்து பேரசுரனை ரட்சித்த பசுவுக்குப் பசி பிறந்துவிட்டது, புல்லும் பூண்டுமற்ற இடம். பசு கலங்கிற்று.

பக்கத்திலே இருந்த ஒரு பனிப்பாறையை நாவினால் தடவித் தடவிப் பார்த்தது - அலுத்தது - பசி தீரவில்லை.

பசுவுக்குப் பசி தீரவில்லையே தவிர, அதன் நாவின் தடவுதல் பயன்தராது போகவில்லை. பனிப்பாறையின் எடே இருந்து ஐதோ உருவம் தெரியலாயிற்று. மூன்று நாட்களுக்குப் பிறகு, பசுவின்நா, பட்ட பாறை, கரைந்தது, முதல் தேவன் தோன்றினான், அவன் அழகன். பெயர் ப்யூர்.
பிறகு, இருண்ட பகுதியிலிருந்து, யெமர் போன்றவர்களும் ஒளிப்பகுதியிலிருந்து ப்யூர் போன்றவர்களும், உதித்தனர். தேவாசுரப் போர் மூண்டது! கடும்போர்! வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று தீர்மானிக்க முடியாதபடியான சமர்.

ஆறுதியில் யெமர் வீழ்த்தப்பட்டான். வீழ்ந்த பேரசுரனின் உடல் மீது தாவினர் தேவர்கள். கழுத்து நரம்புகளை அறுத்தனர். இரத்தம் இறென ஓடிவரலாயிற்று. அந்த இரத்தம், வழிய வழிய, இறளவிலிருந்து கடலளவாகி, அதிலேயே, யெமரின் சகாக்கள் மூழ்கி மடிந்தனர். பிறகு, யெமரின் உடலை, உலக ஆலை எனும், பொறியைச் செலுத்திக் கொண்டிருந்தவர்களிடம், தேவர்கள் தூக்கிக் சென்றனர். மாவரைக்கும் யந்திரம் போன்ற அந்தப் பொறியை ஒன்பது ஆசுர மாதர்கள், செலுத்திக் கொண்டிருந்தனர். ஆகோரக் கூச்சலுடன் இடிக்கொண்டிருந்த அந்த ஆலையிலே, பேரசுரனின் உடலைப் போட, உடல், சின்னா பின்னமாக்கப்பட்டது. எலும்புகள், மலைகளாக மாறின! பற்கள் பெற்கற்களாயின! இரத்தம், கடலாயிற்று! உடல், உலகமாயிற்று! மண்டை ஓடு, வானமாயிற்று! பிரபஞ்சம், இவ்விதம் சிருஷ்டிக்கப்பட்டதும், விண்ணிலே, சூரியன் சந்திரன், நட்சத்திரங்களைப் புதைத்தனர்.
*****

நம்புகிறீர்களா? நகைக்கிறீர்களா? நம்ப மறுப்பீர்கள்! ஆனால் இதை நம்ப மறுத்தவர்களை நாஸ்தீகர்கள் என்று நிந்தித்த, தண்டித்த மக்கள் இருந்தனர். உலகம் உண்டான விதம் இதுதான் என்று நம்பி, பேரசுரனின் பிணமே ஆப்பிரபஞ்சம் என்று பேசிப் பசுவைவணங்கிய மக்கள் இருந்தனர்.

இப்படியும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் உண்டா! எல்லையற்ற வெளியிலே ஒரு பேருருவம் தோன்றுவதாம்! அதற்குப் பால்தர ஒரு பசுவாம்! அந்தப் பசுவின் நா பட்ட இடத்தில் தேவனாம்! இவ்விதமாக ஒரு கூத்தா! சே! என்று கூறியிடத்துணிவு கொள்வோர் ஏராளமாக இருக்க முடியும். ஒரு காலம் இருந்தது. இந்தக் கதையைத் தேவரகசியம் என்று பக்தியுடன் கூறிக் கொண்டாடிய காலம்!

ட்யூடன் மக்கள் பிரபஞ்சம் இவ்விதமாகத்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்று நம்பி, புராணம் இயற்றி அதனைத் தம் புனிதத் ஐடெனக் கொண்டு, அதற்குத் தக்க பூஜைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

இன்று? இந்தக் கதையை நம்புகிற கூட்டம், மேனாட்டிலே, பித்தர் விடுதிகளிலேயும் கிடைத்தலரிது. மேனாட்டிலே, ஜெர்மனி, இத்தாலி, போலந்து, கிரீஸ், எந்த நாட்டிலேயும் சரி, சென்று, அங்குள்ள பேராசிரியர்களை அல்ல, விஞ்ஞானிகளை அல்ல, கல்லூரி மாணவர்களை அல்ல, வயலில் வேலை செய்வோர், ஆலைத்தோழர், போன்றவர்களைக் கூடச்சரி, அப்பா! பிரபஞ்சம் உண்டான கதை தெரியுமா? யெமரின் பிரதாபம், ப்யூரின் பேரழகு, இதும்லாவின் அன்பு, தேவசுரப்போர், இவை தெரியுமா? என்று கேட்டால், கேட்பவனின் மனம் குழம்பிக்கிடக்கிறது என்று எண்ணி விறைத்துப் பார்ப்பரே தவிர, “ஆமாம்! அந்தத் தேவ மாகதையை மறப்பாரும் உண்டோ! ஆதோ பாரும், அரச மரம், அதனருகே சென்று, கிழக்குத் தசையாகச் சென்றால் ஒரு காததூரத்தில், இதும்லா இலயம் காணலாம் - அங்கு ஆண்டுக்கொரு முறை, கல்பசுவின் காம்பிலிருந்து பால் பெருகும்! ஆண்டுக்கோர் முறை யெமர் கழுத்தறுப்பு விழா நடைபெறும் - என்று கூறமாட்டார்கள், ஏனெனில், அறிவுக்கதிர் பரவியதும், மூளையில் படிந்திருந்த மூடுபனி கரைந்து, போய்விடவே, அங்குசாதாரண மக்களுக்கும் இப்போது, தெளிவு பிறந்துவிட்டது. பிரபஞ்சம் உண்டான விதம் எப்படி என்று கேட்டால், அதற்கென்று உள்ள பிரத்யேக விஞ்ஞான நூற்களைக் காட்டுவர். மலையும் மாகடலும், நதியும் நவ நிதியும், காடும் மேடும், சூரியனும் சந்திரனும், ஒளிவிடு கதிர்களும், மழைவிடு மேகமும், ஆலையும் ஆவியும், இன்னோரன்ன இயற்கைச் சக்திகளும், சக்திகளை உள்ளடக்கிய பொருள்களும், ஏற்பட்ட வகைபற்றி எண்ணற்ற அறிஞர்கள், சிந்தித்துச் சிந்தித்து பரிட்சித்து, கண்டறிந்த உண்மைகளை, ஏடுகளாக்கி, புதிய எண்ணங்களை உலவவிட்டனர். இதன் பயனாக, பழைய நாட்களிலே கட்டிவிடப்பட்ட கதைகள், சீந்துவாரற்றுப் போயின.

எந்த நாட்டிலும்ட, இதிகாலத்திலே, மக்கள் குருட்டறிவு பெற்றவராகத்தான் இருந்திருக்க முடியும். இன்று பாமர மக்களுக்கும் புரியக் கூடிய தாக்கப்பட்டுவிட்ட பல விஷயங்கள், பழங்காலத்தில், இருட்டறையிலே இருந்தன!

முதலிலே, இயற்கைச் சக்திகளைக்கண்டு அஞ்சவும், இ;சசரியப்படவும், பூஜிக்கவும், புகழவுந்தான், மனிதன் பகினான். பிறகோ, அவனுக்கு, அந்தச் சக்திகளின் இரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் ஆவல் ஏற்பட்டது. அந்த ஆவல், அறிவுத் தாகம்! அப்போது, ஒவ்வொரு நாட்டிலும் ஏறத்தாழ ஒரேவிதமான கருத்துள்ள பலகதைகள் முளைத்தன. இந்தக் கற்பனைகளிலே ஒன்றுதான், முதலிலே கூறப்பட்டது. ட்யூடன் மக்கள் பலப்பல காலம் நம்பிய, தேவ மாகதை. இங்கு பேசப்படுவது போலவே அங்கும் தேவாசுரப்போர், இங்கு கூறப்படுவது போன்ற காமதேனு, அங்கு சிறிய மாற்றத்துடன், இப்படிப் பல கதைகள் உலவின. இங்கு இன்று பழமையில் புதுமை தூவி மகிழும் பண்பினர் கூறுவர். “நமது மூதாதையர் மூடரல்ல! தேவர் - ஆசுரர் என்று இருவகையினரை அவர்கள் கற்பித்தனர் என்றால், அழகிய கருத்தின் மீதுதான் - ஆஅது என்னையோ எனில், இருளில் கெட்டதும், ஒளியில் நல்லதும், இருப்பதுபற்றி எண்ணிய நமது மூதாதையர், இருண்ட மேனியும் கருத்த கருத்தும் கொண்டவர்களை ஆசுரர் என்றும், ஒளிவிடு மேனியும் தூய்மையான எண்ணமும் கொண்டவர்களைத் தேவர்கள் என்றும் கூறினர்! இருளுக்கும் ஒளிக்கும் போர்! அதனையே நமது இன்றோர் ஆசுரருக்கும் தேவருக்கும் போர் என்று கதை வடிவில் கூறினர். ஒளியே, இருளை விரட்டி, வெல்லும். எனவே வேதாசுர யுத்தத்திலே, தேவர்களே வென்றனர் என்றனர் சான்றோர், இவ்வளவு, அழகுற, ஆழ்ந்த கருத்துடன், அடிப்படை உண்மையை, அனைவரும் புரிந்து கொள்வதற்காகக் கதைகளாக்கிய, அவர்தம் திறமே திறம்! - என்று பேசி, மகிழ்ந்தவர். மகிழ்வதுடன் நில்லார். இத்தகு மதி, நமது பண்டையோர் தந்த நிதி! என்று பூரிப்பர். பூரித்ததுடன் நில்லாமல், இதுபோன்ற கற்பனைத் திறம், மதிவளம், உலகில் வேறு எங்கேனும் உண்டோ! - என்று கேட்பர்.!

பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின் ஊந்தியினின்றும், கொடியொன்று கிளம்பி, அதன் நுனியிலே தாமரை மலர்ந்து காட்சி தர, அந்த மலரணைமீது நான்முகன் அமர்ந்திருக்க, அவன் நாவிலே சரஸ்வதி வீற்றிக்க, அவள் கையிலே வீணை இருந்து ஒலிக்க, அதுகேட்டு இன்புற்று நாரதர் கீதம்பாட, அதற்கேற்ப நந்தி மிருதங்கம் கொட்ட, அதுகேட்டு முக்கண்ணன் நடனமாட, ஐயன் இடுவது கண்டு, அகிலமெலாம் ஆனந்தக் கூத்தாட, அதன் சூட்சம்தை விளக்கி சுத்தானந்த பாரதியின் பேனா ஓட, அதனை மதுரகீதமாக்கி வசந்த கோகிலம் பாட,.... இப்படி, இங்கு இன்றும், பிரபஞ்ச உற்பத்திக்கு, ஏன்றோ ஏற்பட்ட பழைய கதையைத்தான் பயன்படுத்துகின்றனர். இவ்விதக் கதைகள், நல்லறிவை நையாண்டி செய்யும் நாச வேலையன்றோ என்பதை இந்த நல்லறிவாளர்கள் எண்ணிப் பார்க்காதது மட்டுமல்ல, இவ்விதமான கதைகளுக்கு, உட்பொருள் தேடிக்கண்டறிந்து கூறும் வீண் வேலை செய்து வருவது மட்டுமல்ல, உலகிலேயே, ஐதோ, எவருக்கும் சாத்தியமில்லாத கற்பனையை, இங்கு முன்பு இருந்தோர் கோர்த்தனர், என்று நம் மக்கள் எண்ணும்படியும் பேசுகின்றனர். அந்தப் பேச்சு, எவ்வளவு ஆபத்தம் என்பதை எடுத்துக் காட்டவே, ட்யூடன் மக்கள் ஒரு காலத்தில் போற்றிப் புகழ்ந்து வந்த பிரபஞ்ச உற்பத்தியின் புராணத்தைக் குறித்து விளக்கினோம். கற்பனையைப் பொறுத்தமட்டிலே, ட்யூடன் புராணம், நமது பழைய புராணத்துக்கு மட்டமா? இல்லையே! அந்தப் புராணத்தை நம்பியதிலோ, நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜா காரியங்களை அமைத்துக் கொண்டதிலோ நமது மக்களுக்கு, ட்யூடன் மக்கள், எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நாரதரின் பக்கத்திலிருந்து தாளம்போட்டுக் கொண்டே கீதம் கேட்டவர்கள்போல இங்கு பழமை விரும்பிகள்பேசுவது போலவே, ட்யூடன் மக்களும், இதும்லாவின் மடியிலிருந்து ஒழுகியபாலைப் பருகியவர்கள் போலவே பேசிக் கொண்டிருந்தனர். இலயம் அமைப்பது, ஆறுகால பூஜை செய்வது, பூஜாரிக் கூட்டத்தின் பேச்சை தேவனின் வாக்கெனக் கொள்வது, சந்தேகிப் போரை, சித்ரவதை ùச்யவது, எதிர்ப்போரைக் கொல்வது போன்ற எந்தத் திருக்கலியாண குணத்திலும், இங்கு இன்றுள்ள நமது பழைமை விரும்பிகளுக்கு ஏள்ளளவும் குறைந்தவர்களல்ல, அந்த நாள் ட்யூடன் மக்கள்!

ஆனால் அங்கு இப்போது, அந்தக் கதையை நம்புவோர் கிடையாது. இங்கு இன்றும் அதே போன்ற கதையை நம்ப மறுப்போர், நாஸ்தீகர்கள்!

ஒருகாலத்தில், யெமரின் மண்டை ஓடு, வானம், என்று நம்பிய மக்கள், இன்று வானவூர்தியிலே பறந்தபடி, நம்முடைய மூதாதையர் கட்டி வைத்த புராணத்தை நாம் இன்றும் நம்பி, நடத்துகிற சூரசம்ஹாரத் திருவிழாவைப் பார்த்து, கேலி செய்கிறார்கள்! விண்ணும் மண்ணும், ஒளியும் ஒலியும், இன்று அங்கெல்லாம், ஆராய்ச்சிக் கூடத்திலே உள்ள மக்களால், ஆலசப்பட்டு, பயன்மிகு பல புதிய நுண்ணறிவு பரப்பப்பட்டு வருகிறது. நாமோ இன்னமும், திரிபுர தகனம் முதற்கொண்டு திருத்துழாய் மகிமை வரையிலே, ஒன்றுவிடாமல், நம்பியும் புகழ்ந்தும், பாராட்டியும், கெடாதபடி பாதுகாக்க முயற்சித்தும், கீதம், காட்சி, பழமையைக் காப்பாற்றியும் வருகிறோம்! இதுதான் உலகின் அறிவுள்ள பகுதிக்கும் நமக்கும் உள்ள வித்யாசமேயோழிய, இங்குள்ள சில பரனை மனப்போக்கினர் கூறுவதுபோல அற்புதமான கற்பனைகளை இக்கின திறம் நமது முன்னோர்களுக்கு மட்டுமே உண்டு, உலகில் வேறு எவருக்கும் கிடையாது என்பது உண்மையல்ல! கற்பனைக் கதைகள் கட்டினதிலே, நமது மூதாதை யாருக்கும் உலகின் வேறு பகுதியிலே இருந்தவர்களுக்கும், வித்யாசம், அதிகம் கிடையாது. பலதலைச்சாமிகள்! பறக்கும் சாமிகள்! பெண்களைப் பலிகேட்கும் தெய்வங்கள்! பேருருவத் தேவதைகள், போன்ற கற்பனைகளை, எங்கும் எவரும் கட்டித்தான் பார்த்தனர். அங்கெல்லாம், அறிவு பரவியதும், இதும்லா, யெமர் போன்ற கற்பனைகளை, விட்டொழித்து, உண்மையை மக்கள் நாடினர். நாமோ, உண்மையைக் காணவேண்டுமே என்ற உணர்ச்சியைக் கூடக் கொள்ளாமல், பழம் கதைகளை இன்றும் பயனுள்ளவை, பொருள்ளவை, புனிதமானவை, பாராட்டத்தக்கவை, பூஜிக்கத்தக்கவை, பழுதுபடாதபடி பாதுகாக்கத்தக்கவை என்று எண்ணி ஏமாறுகிறோம். இந்த மகத்தான வித்தியாசந்தான் இருக்கிறது, நமக்கும், உலகின் மற்றப்பகுதிக்கும். இந்த ஒரு வித்யாசம்! ஆனால் எவ்வளவு பெரிய வித்யாசம்! பெண் எலும்புருவாவதைத் தடுக்கத் தெரியாமல் எலும்புருவைப் பெண்ணாக்கிய பெம்மானின் கதையைப் போன்றும் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், எவ்வளவு பெரியது! ஆதோ தெரிகிறதோ நமது இரட்டை மாட்டு வண்டி, அதற்கும், மேலே மேகமண்டலத்தூடே பறக்கும் விமானத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் அல்லவா அது! காட்டேரி பூஜைக்கும் கம்பியில்லாத் தந்திக்கும், இடையே எவ்வளவு வித்தியாசம்!!

பூமி எப்படி ஏற்பட்டது என்பதற்கு, ட்யூடன் மக்கள் கொண்டிருந்த, அர்த்தமற்ற கருத்தை அவர்கள் விட்டொழித்தனர் - நாமோ இன்னமும், பூமாதேவி - ஆண்டசராசரங்களையும் இதிசேஷன் தாங்குவது - இரண்யாட்சதன் பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் ஒளித்துவிட்டது போன்ற கதைகளை, புண்யகதைகள் என்று நம்புவதும், இந்த நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜைகள் செய்வதும் திருவிழாக்கள் நடத்துவதுமாகக் காலந்தள்ளுகிறோம். சரியா? மேனாட்டினர், பூமியைப்பற்றி ட்யூடன் புராண மனப்பான்மை அளவிலேயே இருந்துவிட்டிருந்தால் இன்று பூமிக்கடியில் உள்ள புதை பொருளை வெட்டி எடுக்கும் வேலை நடந்திருக்க முடியுமா, அதன் பயன்களை நாம் இன்று அனுபவிக்கிறோமே, அதுதான் சாத்தியமாகுமா! பேரசுரனின் மண்டை ஓடுதான் விண் என்ற வீண்கதையோடு மேனாட்டினர் தங்கள் அறிவுக்கு முடிவு கட்டிவிட்டிருந்தால், இன்று, ஏற்பட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்குமா! - அந்த ஆராய்ச்சியின் பலன்களை அனுபவிக்கிறோம், அனுபவித்து அகமகிழ்கிறோமே, அப்போதாவது, அறிவுக்கு வேலை தருகிறோமா - நன்றியறிதலையாவது காட்டுகிறோமா, பழத்தைத் தின்றுவிட்டு, தோட்டக்காரன்மீது திப்பியைத் துப்பும் கொடுமை போல, அந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த அருமையான சாதனங்களை உபயோகித்துக் கொண்டே, அந்த ஆராய்ச்சியாளர்களெல்லாம், இத்மார்த்தம் அறியாதவர்கள், அழகிய கற்பனைகள் செய்யத் தெரியாதவர்கள் என்று நையாண்டியும் செய்கிறோம்! நியாயமா? நாம் கண்டுபிடிக்காத (கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ளாத நாம்) ரயிலில் பிராயணம் செய்து, எங்கே போகிறோம்? பிள்ளைவரம் கேட்க ராமேஸ்வரமோ முடிதர திருப்பதிக்கோ, பெரியபாளையத்தாளின் பொருளைத் தேடியோ! இந்தப் பழைய சாதனங்களைத் தேடிச் செல்வதற்கு அவர்கள் அளித்த புதிய பொருள்களை உபயோகிக்கிறோம். அப்போதாவது ஒருதுளி பாராட்டுதல் உண்டா? இல்லை, இல்லை! உழைப்பாளியின் வியர்வையால், பன்னீர் பெறுகிற முதலாளி, பாட்டாளியை எப்படிப் பரிகசிக்கிறானோ, அதேபோலத்தான், புத்தறிவாளர்கள் தரும் சாதனங்களை, வசதிகளை, நன்றாகப் பயன்படுத்திக் கொண்டே, பழைமை விரும்பிகள், ஆநதப் புத்தறிவைக் கேவலமாகப் பேசுகின்றனர். புத்தறிவைப் பழிக்கும் புல்லறிவாளர்கள், இன்று, எந்தெந்தக் கற்பனைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விடமறுக்கிறார்களோ, அந்தக் கற்பனைகளிலே காணப்படும் வாழ்க்கை நிலைக்குச் செல்லச் சம்மதிப்பாரா என்றால், சம்மதிக்கமாட்டார்கள்! மின்சார விளக்கு மங்கினால், இவர்களின் கோபம் பொங்கும்! விஞ்ஞானப் பொருள் கிடைக்கத் தடை ஏற்பட்டால், இவர்களின் வாழ்வே மங்கும்! ஆனால் ஆநத வசதிகள் தங்கு தடையின்றி, மாற்றார் உற்றார் எனும் பாகுபாடு இன்றி, கிடைக்கிற காரணத்தால், அவைகளை உபயோகித்துக் கொண்டே என்ன பலன் இவைகளால்! என்றும் பேசத் துணிகின்றனர்.

மதவாதிகள் விதித்திடும் நிபந்தனைகளைப்போல, விஞ்ஞானிகளும் விதித்தால், வேடிக்கையாக இருக்கும். இத்தகையவர்கிளன் நிலைமை!

வைணவராக வேண்டுமா? திருநாமம் தரிக்கவேண்டும்! திருப்பாவை படிக்கவேண்டும்! திருத்துழாய் நீர் பருக வேண்டும்! என்று, சிலபல நிபந்தனைகள் விதிப்பதுபோல, “ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டுமா?” - “சரி! புத்தறிவின் விளைவு இந்த ரயில்! இதிலேறிச் செல்லவேண்டுமானால் புத்தறிவு கொள்ள வேண்டும். உனக்கு அந்தப் புத்தறிவு இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று ஆரம்பித்து, ரயிலில் பிரயாணம் செய்ய வருபவரைப் பார்த்து.

“உலகம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டால் அவர்.

“உலகம், தட்டை”! என்று பதில் கூறுவார் - அவருக்குப் பழக்கமான புராணப் பயிற்சி காரணமாக. உடனே, “ஓஹோ! உமக்கு புத்தறிவின் அடிப்படையே தெரியவில்லை இந்த ரயில், தட்டையாக இருக்கிற உலகத்தில் ஓடுவதல்ல. உருண்டையாக உள்ள உலகத்தது, உனக்குத்தான், உலகம் உருண்டை வடிவம் என்பதே தெரியாதே, பிடிக்காதே, புரியாதே, அப்படிப்பட்ட, நீ உன் பாட்டன் முப்பாட்டன் கால முதற்கொண்டு இருந்து வந்த பழைய நம்பிக்கையான தட்டை உலகிலே, கட்டை வண்டியில் பயணம் செய்வதே சரியான காரியம். பழங்கால நம்பிக்கையை மறந்த மாபாவிகளான நாங்கள் கண்டுபிடித்த இந்த நவீனப் பைசாசத்தின் உதவியை நாடாதே! என்று கூறி, டிக்கட் தர மறுத்தால் வேடிக்கையாக இருக்கும்.

பத்தியமில்லாத மருந்துபோல, உரித்த சுளைபோல, நிபந்தனையற்ற நிலையில், சகல விஞ்ஞான வசதிகளும், பாடுபடாதவருக்கு மிகமிகச் சுலபத்திலே, தரப்பட்டு விட்டதால், அவைகளின் பயனை அனுபவிக்கும் நேரத்திலும்கூட, பழமைக்குப் பாராட்டும் போக்கு இருந்து வருகிறது. பாடுபட்டுத் தேடாத பொருள், அருமை தெரியக்காரணம் இல்லையல்லவா! இதனாலேதான், புத்தறிவை அலட்சியமாகப் பேசும் புல்லறிவு தலைவிரித்தாடுகிறது. ரயிலேறி ராமேஸ்வரம் போவதும், ரோடரி மிஷினில் ரமணர் நூல் ஆச்சாவதும், ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும், காமிரா கொண்டு கருடசேர்வையைப் படம் பிடிப்பதும், டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் - இவை போன்றவைகள், இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இந்த நிலை சரியா? பல் துலக்குவதற்குத் தயாரிக்கப்படும் பசையை பாத்திரம் துலக்கப் பயன்படுத்தினால் - கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குரிய துப்பாக்கிகயைக் கொண்டு எலியைக் கொல்ல கிளம்பினால் - என்ன எண்ணுவர் - என்ன கூறுவர்! அதுபோல, புத்தறிவு, புதிய வாழ்வுக்கு வழி செய்ய ஏறபட்டிருக்க அந்தப்புத்தறிவு தரும் சாதனங்களைக்கொண்டு, பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவரைப் பற்றி, என்ன எண்ணுவது! என்ன கூறுவது ஏன் அவர்கள், இத்தகைய போக்குக் கொள்கின்றனர்! அதற்குள்ள பல காரணங்களிலே ஒன்று, பழைய காலக் கற்பனைக் கதைகள் நமது மூதாதையரின் ஆபாரமான அலாதியான திறமைக்குச்சான்று, என்ற தவறான எண்ணம்; அத்தகைய கற்பனைகள், உலகிலே எங்கும் எந்த நாட்டவரும் செய்தறியாதன என்ற தவறான பிரசாரம். இதன் காரணமாக, அந்தப் பழைய கதைகளிலே விடாப்பிடியான பற்று, ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களே! நமது நாட்டிலே மட்டுமல்ல, நானிலத்திலே பல்வேறு இடங்களிலேயும் பழங்காலத்திலே, இப்படிப் பலப்பல கதைகள் உலவின, அவர்களெல்லாம், ஆநதக் கதைகள் பயனற்றன என்று கண்டறிந்து, புத்தறிவு பெற்றனர், என்பதை எடுத்துக் கூறவே ட்பூடன் புராணீகன், பிரபஞ்சம் எப்படி உற்பத்தியாயிற்று என்று கதை புனைந்தான் என்பதைக் காட்டினோம். ட்யூடன் கதையை மறந்து, அவர்கள் நியூடன் காலத்தில் புகுந்து, இன்று, அதற்கு அப்பாலும் சென்றுள்ளனர். யெமருக்குப் பால் கொடுத்த பசுவின் கதை கேட்டு மகிழ்ந்த காலத்தை மறந்து, காளையின்றி பசு, கன்றுபோடும் காலம்வரை வந்துள்ளனர்! மண்டை ஓடே, வான மண்டல் என்ற கதைக்காலத்தைத் தாண்டி, வான மண்டலத்திலே காணப்படும் சந்திர மண்டலம் சென்றுவரக் கற்றுக் கொள்ளும் காலத்துக்கு வந்துள்ளனர். பேரசுரனின் இரத்தமே கடல் என்ற கதைக்காலத்தைக் கடந்து, பல தினங்கள், நீர் மூழ்கிக் கப்பலில் தங்கி, கடலுக்கடியே இருக்க முடியும் என்ற ஆராய்ச்சிக் காலத்தில் புகுந்திருக்கிறார்கள். நாம்? இன்னமும் நரி பரியான பதிகத்துக்கு நாற்பத்து எட்டாவது விருத்தி ஊரை எழுதுபவருக்கு, நாமகள் தாசனார் விடுக்கும் மறுப்புரையைப் பிரசுரிக்கும் நற்காரியத்தில் உடுபட்டுக் கொண்டும் நமக்கு மட்டும் ஏனய்யா, இந் நம்பொணாக் கதைகள்! நானிலத்தில் வேறு எங்கும் இவைதமை நம்புவார் இல்லையே என்று கேட்போரை நாத்தீகர் என்று தூற்றும் ‘சத்காரியத்தில்’ உடுபட்டுக் கொண்டும், இருக்கிறோம். சரியா? முறையா? தகுமா? கூறவேண்டாம்! எண்ணிப் பாருங்கள்!!

(திராவிடநாடு - 21.12.47)