அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ராயலசீமா!

ஆந்திரப் பகுதியான ராயலசீமா பற்றி வரும் செய்திகள் நெஞ்சைக் கலக்குகின்றன. பட்டினிக் கொடுமையால் பரதவிக்கும் நமது ஆந்திரச் சகோதரர்களைக் கண்டு கலங்குகிறோம். வாழத் தவிக்கும் அவர்களின் பசி தீர்க்க, பஞ்ச நிவாரண வேலைகள் துவக்கப்பட பலர் முயற்சிப்பதாக அறிகிறோம்.

கடந்த 21-3-52 ‘ஜனசக்தி‘ இதழில் பஞ்சத்தை எதிர்த்துப் படை திரள்வோம் என்றொரு கட்டுரையைக் கண்டோம். இதுபோன்ற இன்றியமையாத ஒரு பணியில், ஜனசக்தி இதழினர் துவங்கும் முயற்சிக்கு தி.மு.கழகம் கைகொடுக்கும்.

தனித்தனி நபர்களி்ன் சொந்த முயற்சியைவிட, முற்போக்குக் கட்சிகளின் கூட்டணியே, பலனாகக் காரியத்தைச் செய்ய முடியும் தவிக்கும் ராயலசீமா மக்களின் துயர்துடைக்க எடுக்கப்படும் பெருமுயற்சியில், சிறிய பங்காகயிருக்க வேண்டுமென்று பொதுச் செயலாளர் அண்ணாதுரை 28-3-52 அன்று ஆந்திர கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான தோழர் நாகிரெட்டிக்கு ரூ.100 அனுப்பி வைத்துள்ளார். பாலைவனத்தில் தூவப்படும் சிறுதுளியானாலும், இந்த தொகை வதையும் மக்களுக்கான அன்புக் காணிக்கையென்றும் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

முற்போக்கெண்ணம் படைத்தோரால் மட்டுமே ஏழையுலகுக்கான நன்மைகளைச் செய்ய முடியும் என்பது நமது கருத்தாகும். பசியும் பட்டினியும் தாக்கி, வாழப்பிறந்த மக்கள் வீதிகளிலே பிணங்களாவதை, நாம் சகிக்க முடியாது. காங்கிரசாட்சியின் போக்கால் மக்கள் மாளத்துவங்கும் பரிதாபம் காண, இதயம் கொதிப்போர் ஏராளம் அவரது முயற்சி, இத்துயர்துடைக்கும் பணியில் திரளவேண்டுமென விரும்புகிறோம் – பசியும் பட்டினியும் பரவாமல் தடுக்க இடைக்கால நிவாரணம் செய்துதர.

திராவிட நாடு – 30-3-52