அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாக்கடை அருகே!

சிறிய நாட்டுத் தலைவர் -
`ஜெர்மனியின் எதேச்சாதிகாரத்துக்குப் பணிய வேண்டுமென்று மிரட்டுகிறீர், இது தர்மமல்ல! எங்கள் தாய் நாட்டுச் சுதந்திரம் என்ன ஆவது?

ஹிட்லர்- ``ஜெர்மன் மேற்பார்வைக்கு இசையாவிட்டால் என்ன நேரிடும் தெரியுமோ?

சி. தலைவர்- ``என்ன நேரிடும்?’’

ஹிட்லர் - ``அந்தப் பயங்கரப் புயல் வீசும், உங்கள் நாடு நாசமாகும்.’’

சி. த- என்ன புயல்! என்ன நாசம்!

ஹி- விஷயமே தெரியவில்லையே உமக்கு! மாஸ்கோவிலிருந்து கிளம்பும் பொது உடைமைப் புயல் வீசும். அந்தப் பயங்கரப் புயலினால் உங்கள் நாடு நாசமாகும். நான், உங்கள் தேசத்தையும், மற்றுமுள்ள சிறிய நாடுகளையும் அந்தப் பொது உடைமைப் புயலினின்றும் காப்பாற்றவே இவ்வளவு பாடுபடுகிறேன். என் நோக்கத்தின்படி நடக்காவிட்டால், பொது உடைமை பரவும், ஜாக்ரதை! எச்சரிக்கிறேன்!!
* * *

சர்க்கார் - ``காந்தியாரே! உங்கள் நாட்டின ருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒழியுங்கள் முதலில், பிறகே இங்கு சுயாட்சி நிலைக்கும். நாங்கள் காங்கிரசை மட்டுமே இந்தியாவின் கட்சி என்று எண்ணிக் கொண்டு, நாட்டு ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் காங்கிரசிடம் கொடுத்து விட்டால், மற்றக் கட்சிகள் தொல்லை தருமே!

காந்தியார்- எனக்கு அதெல்லாம தெரியாது. காங்கிரசுக்குப் பூரண அதிகாரம் தந்தாக வேண்டும். இப்போதே அதைச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பயங்கரமான நிலைமை வளரும். தலைமேல் ஆபத்து இருக்கிறது!

சர்க்கார் - என்ன ஆபத்து அது?

காந்தி- என்ன ஆபத்தா? பொது உடைமை பரவும்! நான் சொல்லிவிட்டேன். நாம் இருவரும் கூட்டாளிகளாகவிட்டால் இங்கு நிச்சயமாகப் பொது உடைமை பரவிவிடும், ஜாக்ரதை!
* * *

ஐஸ்டின் பத்மப்பிரியா- என்னமோ தம்பீ! நமக்குள் இப்படி தகராறு இருந்தால், அது நல்லது இல்லை.

சுயமரியாதைக்காரன்- ஆமாம்! ஆனால் கொள்கையிலே வேறுபாடு வந்து விட்டதே என்ன செய்வது?

ஐ.ப- இவ்விதம் நமக்குள் தகராறு நேரிட்டால் பிறகு இங்கே என்ன நடக்கும் தெரியுமா? பெரிய ஆபத்து வர இருக்கிறது.

சு. ம- என்ன ஆபத்து?

ஜ.ப.- அது தெரியாமல்தான் இப்படி நடந்து கொள்கிறாய். இங்கு பொது உடைமைப் புயல் வீசும்!
* * *

ஒட்டர்- கன்சர்வெடிவ்களுக்கு என் ஒட் அளிப்பது? அவர்கள்தான் பழமை விரும்பி களாயிற்றே, பங்களாவாசிகளாயிற்றே.

சர்ச்சில் - கன்சர்வெடிவ்களுக்கு ஒட் தராவிட்டால், தொழிற் கட்சி ஆள நேரிடும்.

ஒட்- ``ஆளட்டுமே! அதனால் என்ன?

ச- அதனால் என்னவா? ஒன்றுமே தெரியவில்லையே உங்களுக்கு, தொழிற் கட்சி அதிகாரத்துக்கு வருமானால், பெரிய ஆபத்து நேரிடுமே!

ஒட் - என்ன ஆபத்து நேரிடும்?

ச- பொது உடைமைப் புயல் அடிக்குமே! தனி மனிதனின் உரிமை பறிபோகுமே!
* * *

சிறு நாடுகளைப் பணிய வைக்க ஹிட்லர் எண்ணியபோதும், பிரிட்டிஷாரிடம் பேரம் பேசக் காந்தியார் திட்டமிடும்போதும், ஓட்டர்களுக்குத் தொழிற் கட்சியிடம் இருக்கும் பற்று போகும்படி செய்து தன் கட்சிக்குப் பலம் தேட சர்ச்சில் நினைக்கும் போதும், ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் பட்டம் பதவிகள் பெறத் துடிப்பவர்கள் சுயமரியாதைக் கட்சியினரின் தீவிரக் கொள்கை களை ஒடுக்க வேண்டும் என்று எண்ணும் போதும், ஒரேவிதமான பேச்சைப் பேசக் காணலாம், பொது உடைமை வந்துவிடும்! ஜாக்ரதை! என்று பயங்காட்டுவர்! சுகபோகிகளை யும், பிறர் உழைப்பினாலேயே பிழைக்க வேண்டுமென்று எண்ணுபவர்களையும், சீமான் களையும், படை திரட்டிப் பயன்பெற, இந்தப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அதுவும் பழைய பசலி, இனி அதற்கு வலிவு இராது. பொது உடைமை வந்துவிடும் என்று பயங்காட்டினால் இனி அதற்காகக் கிலி கொண்டு ஆடுவார் உலகில் அதிகம் பேர் இல்லை! அந்தக் கொடுக்கிலே விஷம் குறைந்து விட்டது! சுயநலம், கட்சிக்கு வெற்றி எனும் சில்லறை விஷயங் களுக்காகப் பொது உடைமை ஆட்சியைக் கண்டித்தாக வேண்டுமென்று, சர்ச்சில் கூட்டம் எண்ணுவது அவர்களுக்குக் கண்ணியமும் தராது, உலகப் பொதுப்பிரச்னையின் சிக்கலையும் தீர்க்காது. மாறாக புதிய, பயங்கரப் பிரச்னை களையே உண்டாக்கும். மேலும், பொது உடைமையை அமுல் நடத்தும் சர்க்காரின் நடவடிக்கையிலே குறைபாடுகள் இருக்கக்கூடும், ஆனால் அதற்காக அந்த இலட்சியத்தையே குறை கூறுவது, கேவலமான போக்கு என்போம். நாமும் கூடத்தான், மாஸ்கோ முன் மண்டியிட்டும் காசிக்குக் காவடித் தூக்கியும் மார்க்ஸ் மடம் கட்டியும் அங்கே காந்திபூஜை நடத்தியும், அபேதவாதம் பேசியும் அதே சமயத்தில், பிர்லா கூட்டத்திடம், பிரேமைக் காட்டியும், நயவஞ்சக நாடகமாடும், நமது நாட்டுப் பொது உடைமைக் கட்சியினரின் போக்கைக் கண்டிக்கிறோம். சிறிது காரமாகவும் கூட. ஆனால் இதற்காக வேண்டி, அந்த பொற்காலக் கருத்துக்களை பொது மக்களின் வாழ்விலே புது மலர்ச்சியை உண்டாக்கிய மார்க்கத்தை, ஏழையின் விடுதலைக்காகக் கிளம்பிய ஏற் பாட்டை, கண்ணீரும், செந்நீரும் கலந்து தீட்டிய அடிமையின் விடுதலை சாசனத்தை கண்டிப் போமா? அந்தக் கயமை, இல்லை நமக்கு! நல்லெண்ணம் படைத்த எவருக்கும் இராது. பொது உடைமை என்ற உடனே, ஐயோ அதுவா? அது வருவது என்றால் இரத்த ஆறு ஓடாதா? தலைகள் பனங்காய்கள் போல வெட்டி வீசப்படுமே! கூச்சலும், குழப்பமும், கோரமும் தாண்டவ மாடுமே, பயங்கரமான நிலையன்றோ ஏற்படும் என்று மக்கள் எண்ணும்படி, மதியைச் சதிக்குப் பயன்படுத்தும் சிலர் விஷமப் பிரசாரம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறு. இரத்தத்தைப் சிந்திடும் புரட்சி நடத்தியே தான், அந்தத் திட்டத்தை ஏற்படுத்த முடியும் என்று ஒரு நியதி இல்லை. சட்டபூர்வமாகவே, அறிவை ஆயுதமாகக் கொண்டே கூட அந்த அற்புத மாறுதலைச் செய்துவிட முடியும். இன்று, பொது உடைமை பூச்சாண்டி என்ன உரைக்கும். சர்ச்சில் வாழும் நாட்டிலே, பலப்பல மாறுதல்கள், அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகிய பல துறைகளிலே, கத்தியின்றி, இரத்த மின்றி, புத்தியையும், சமரச நோக்கத்தையும் துணை கொண்டே செய்யப்பட்டுள்ளன. எனவே, பொது உடைமை என்றால் இரத்தக் காடு என்று பொருள் என்று இனிக் கூறி, மக்களை ஏய்க்க முடியாது. அவ்விதமாகக் குறுகிய நோக்கத்துக் காக, உயரிய ஒரு இலட்சியத்தைப் பற்றி பொதுமக்களிடையே தவறான எண்ணம் உண்டாகும்படி பிரச்சாரம் செய்வது, மிகமிகத் தவறு, சர்ச்சில், பல கோடி மக்களின் புகழ் மாலையைச் சூட்டிக் கொண்டி ருக்கும் இந்த நேரத்தில், பல இலட்சம் பேர்கள் இரத்தத்தைச் சிந்தியதைக் கண்டபிறகு, கேவலம் கட்சியின் வெற்றிக்காகச் சாக்கடைச் சேற்றிலே கை வைத்திருக்கத்தான் கூடாது. சாக்கடையை விட்டு விலகும்படி நாம், சர்ச்சில் துரைக்குக் கூறுகிறோம்.

(திராவிட நாடு - 10.6.1945)