அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாமான்யமல்ல!

நீங்களே இதைப் பாருங்கோ! எவ்வளவு நேர்த்தியாக இருக்கு - இதன் அருமை, உங்களைப் போலத் தெரிந்தவாளுக்குத் தெரியுமே தவிர, மத்தவர்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், சொல்லுங்கோ! ஒண்ணுமில்லே ஒரு சேதி கேளுங்கோ, நம்ப நாராயணபுரம் ஜமீன்தார் இந்தச் சரக்கு இங்கே இருக்கிறது தெரிந்தா போதும், கடையை முற்றுகை போட்டு விடுவார். உயிர் அவருக்கு இதன்மேல். சாயம் நிற்குமோன்று சந்தேகப்படுவீர் - சந்தேகமே வேண்டாம், விலையைப்பற்றிப் பேசவே கூடாது. 150க்குத் தம்படி கூடக் குறையாது, வழக்கப்படி 5% தள்ளுபடி உண்டு. உம்ம கொழுந்தை இருக்கு பாருங்கோ, கோமளம், அது உடுத்தினா, பேஷாயிருக்கும். என் கையாலே தர்ரேன், யோசிக்காமே எடுத்துண்டு போய்ப்பாரும். திவ்யமான நாள்.

கலாமோகன் ஸ்டோர், மானேஜர் கந்தசாமி ஐயரின் இந்த வர்ணனையின் அழகு, அவர் பிரித்துக்காட்டி, ஒழுங்காக மடித்து, கலர் காகிதம்போட்டு, காலண்டர்கூட வைத்து, “பாக்” செய்து கொண்டிருந்த சேலையின் நேர்த்தியைவிட நேர்த்தியாக இருந்தது. ஆசாமி அளக்கிறான் என்பது, அ.உ.க. அளகப்பச் செட்டியாருக்கு ஒருவாறு தெரியும், என்றாலும், தெரிந்தவாளுக்குத்தான் இதன் அருமைத் தெரியும் நாராயணவரம் ஜெமீன்தாருக்கு இதன்மீது உயிர் என்று ஐயர் சொல்லிவிட்ட பிறகு, சேலை நேர்த்தியில்லை என்று சொன்னால், தனக்கு நாகரிகம் தெரியாது என்று சொல்வாரோ என்ற பயம். 150 ரூபாய் கொடுத்துவிட்டுப் போனார். கந்தசாமி ஐயர், மூன்று வருஷங்களாக மூலையிலே கிடந்த சனியன் தொலைந்ததே என்று சந்தோஷப்பட்டார்.

கச்சேரி அபூர்வம் என்று பலர் சொல்லவே அவன் அங்கு சென்றான். அவர் பாடியதோ அவனுக்குப் புரியவில்லை, ஆனால் அதை வெளியே சொல்லவோ முடியவில்லை. பலர் தலையசைத்தது கண்டு இவனும் அசைத்தான். தலைகள் மட்டுமா ஆடின, கண்கள் சுழன்றன. காதிலே தொங்கிய “லோலக்கை” ஆட்டிவைத்த ஒரு கன்னியைக் கண்டார். பக்கத்திலே இருந்தவர், நகை வியாபாரி. லோலக்கின்மீது நாட்டம் விழுந்த நண்பரின் செவியில் மெல்லச் சொன்னார், புஷ்பராகம் என்று. ‘தெரியுமே! அருமையாகப் பாடுகிறார். இவர் எப்போதுமே புஷ்பராகந்தான் அருமையாகப் பாடுவார்’ என்றான். அந்த அப்பாவி, புஷ்பராகம் என்பது இராகத்தின் பெயர் என்று தவறாகக்கருதி. நகை வியாபாரி சிரித்த சத்தம் கேட்டுச் சபையிலே பலர், சத்து! சத்து! என்று அதட்ட வேண்டி நேரிட்டது. அந்த ஆள் சிரிக்காமல் என்ன செய்வான்!
* * *

வர்ணனையைக் கேட்டு அதை மறுக்கும் வகை தெரியாது, அதிக விலை கொடுத்துச் சேலை வாங்கிய செட்டியாரும், சொல்லுவது எதையென்று தெரிந்துகொள்ளாது, தன் அறியாமை
யைப் பிறர் தெரிந்துகொள்ளக் கூடாதென்று கருதி, தலையாட்டித் தம்பிரானாக இருந்த இளித்தவாயனும், இனித் தைரியமடையலாம், ஏனெனில் இவர்களைத் தோற்கடிக்கும் பேர்வழிகள் தோன்றி விட்டார்கள்.

என்ன இருந்தாலும் சார், கலையைக் கெடுக்கக்கூடாது, பாருங்கோ, என்று பழமையால் பிழைக்கும் கூட்டத்தினன், அதற்கு வரும் ஆபத்தைப் போக்க ஆள் பிடிக்கும் வேலையிலே இறங்கும்போது பேசுவான். அதைக் கேட்கும் “அப்பாவி” கலை எனக்கென்ன தெரியுமய்யா? என்று கூறிவிட்டால், மதிப்புப் போய்விடும் என்று பித்துக்கொள்ளி எண்ணங்கொண்டு ‘ஆமாம்’ என்று ஆமோதித்துத் தன் மேதாவித்தனம் நிலைநாட்டப்பட்டு விட்டதாக எண்ணிக் கொள்கிறான். கலை என்ற சாக்குக்கூறி, தன் கபடச் சரக்கை விற்க முனையும் அந்த வலைவீசி, கலையை ரசிக்கத் தெரியாதவர்கள், கம்ப இராமாயணத்தைக் கொளுத்துவோம் என்று கூறுகிறார்கள். இது எவ்வளவு அக்ரமம் பாருங்கோ. நம்ம பெரியவாள் சிரமப்பட்டுத் தேடிவைத்த கலையை இழப்பது, தர்மமா? உங்களக்குத் தெரியாததை நான் என்ன சொல்லப் போகிறேன்! கம்ப இராமாயணத்திலே எவ்வளவு அருமையான கலை இருக்கிறது. அதற்கு உலை வைக்கிறார்களே” என்று குமுறுக்குகிறார். கம்ப இராமாயணத்திலே இல்லாத கலை உலகிலே ஏது? அதையா அழிக்கப்போகிறார்கள். என்ன அக்ரமம். அடடா! கேட்பார் இல்லையா? என்று “அப்பாவி” கலை தெரிந்தவனாகக் காட்சி தரவேண்டும் என்று கருதிப் பேசுகிறான். ‘சரி, இந்த ஏமாளியைக் கோடரிக்குக் காம்பாகக் கொள்ளலாம் என்று கோணலாட்சிக்கார நாணல் வீரன் தீர்மானித்து விடுகிறான். கலை என்றால் காசுக்கு எத்தனை குலை என்று கேட்கும் நிலையில் உள்ள “பலதுகள்” இப்போது, கலாநிபுணர்களாகி, கலாசேவகர்களாகி, கலா பாதுகாவலராகி, கலா ரசிகராகி, கலா வீரராகி விட்டனர். கலை தெரியாது என்று கூறுவது கௌரவத்துக்குக் குறைவு என்று ஏமாளிப்பத்தியால், இன்று எங்கெங்கோ கிடந்த ஏகாந்திகள், எக்காளமிடும் கலைக்காவலராகி விட்டனர்.

மெகலா எனும் ஆங்கிலேயனைவிட, கிண்டி குதிரைப் பந்தயம், இங்குள்ளவர்களுக்கு ஆங்கில ஆசானாகி உதவி செய்தது, ஒருவிதத்திலே, கையொப்பமிடவே கண்ணும் கையும் கருத்தும் நடுங்கும் பலருக்கு இப்போது, வின், பிளேஸ், ஜாக்கி, எச். பிளாக், ப்ளுக், டபில் இவண்ட், டோட் என்று சில ஆங்கிலப் பதங்கள் தெரியும். இலாபந்தானே என்று கேட்பீர்கள். இந்த அரை குறை அவசரப் படிப்புக்காக அவர்கள் செலவிட்ட தொகையும், செருப்புத் தேய மார்வாடியிடம் நடந்த அலுப்பும், வீட்டிலே மூண்ட அமளியும், அடகு வைத்த அலங்கோலமும் தெரிந்தால், இந்த அற்ப சுகத்துக்காகவா இவ்வளவு அல்லல் என்று கூறுவீர்கள்.

கிண்டி, ஆங்கில ஆசானானதுபோல இப்போது, சுய மரியாதைக்காரர்கள் துவக்கியுள்ள கம்ப இராமாயணக் கண்டனக் கிளர்ச்சி, பலருக்குக் கலை உணர்ச்சியை ஊட்டி விட்டதாகத் தெரிகிறது. ஏ! அப்பா! எத்தனை விழாக்கள், மாநாடுகள், கழகங்கள், சொற்பொழிவுகள், சூளுரைகள், கலைக்காக! கலையே! நீ காணாய், கலைகல்லா உன் அடியாரை, தலை நீ குனிவாய், இந்தத் தம்பிரார் நிலை உணர்ந்தால் என்று நான் கூடப்பாடிடலாமா என்று தோன்றுகிறது, அவ்வளவு கலாநிபுணர்கள் இப்போது கிளம்பியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் பெருக்கம், தமது ஆதிக்க வளர்ச்சிச் சருக்கம் என்பது தெரிந்த பழமையால் பிழைக்கும் பரப்பிரம்ம சொரூபிகள், பகவானே! எங்களையும் படைத்து, இந்த ஏமாளிகளையும், படைத்தாயே, உன் கருணையை எப்படிப் புகழ்வோம் என்று ஏத்தித் தொழுது, இனி நம் ஏப்பம் குறையாது. தொந்தித் தளராது, சந்தனம் குறையாத, என்று பூரிக்கின்றனர். வலையிலே சிக்கிய இந்த வகையிலாதாரைக் கண்டால், வேதகாலமுதல் வலைவீசி வாழ்ந்த வேதியக் கூட்டம், மகிழாமலா இருக்கும்.

ஆற்று வெள்ளத்திலே அடித்துக்கொண்டு போகும்போது நரி கூவிற்றாம், உலகம் போச்சே! என்று கரையிலே இருந்த கருத்திலாதான், நரியைத் தூக்கிக் கரையில் சேர்த்து, “எந்த உலகம் போச்சய்யா!” என்று கேட்டானாம், நரி நகைத்துக்கொண்டே, “என்னை நீ கரைசேர்த்திராவிட்டால் எனக்கு உலகம் போச்சு என்று தானே பொருள் - நான் செத்திருப்பேன், அதைத்தான் உலகம் போச்சே என்று கூவினேன்” என்று சொல்லக்கேட்ட அந்தச் சோற்றுத் துருத்தி ‘அப்படியா விஷயம்! நான் எங்கேயோ ஏதோ ஓர் உலகம் முழுகிவிட்டதோ என்று நினைத்தேன்’ என்று கூறினானாம்! இந்தக் குட்டிக்கதையை (அன்பர் ஆச்சாரியார், குட்டிக் கதை கூறும் என் உரிமையில், பரதன் நுழையலாமா என்று கேட்க மாட்டார் என்று நம்புகிறேன்) ஏன் கூறினேன் என்றால், சுயமரியாதைக்காரரின் புரட்சி வெள்ளத்திலே வீழ்ந்து மூச்சுத் திணறும் ஆரியம் எனும் நரி, “கலை போச்சே! கலை போச்சே! என்று கதறுவத கேட்டு, கருத்திலாத கபந்தங்கள், உடன் முழக்கமிட்டு, ஆரியத்தை வாரி அணைத்து முத்தமிட்டு, ‘கலையா போகிறது’ என்று கேட்கின்றனரே, ஆரியம் அந்தரங்கத்திலே என்ன கருதுகிறது என்பதறியாமல் என்று நான் பரிதாபப்பட்டு, நரி தப்பிடப் பேசியது போல, ஆரியமும் தான் தப்ப இதைக்கூறுகிறது என்பதை இனியாவது கபந்தங்கள் உணரமாட்டார்களா என்ற ஆசையால்தான் இக்கதை சொன்னேன்.

இன்றைய கிளர்ச்சி, நமது பெரும் போரிலே, ஒரு முக்கியமான கட்டம். கட்டாய இந்தியை ஒழிக்கத் துவக்கிய போர், மொழியிலே கிளம்பிற்று, தமிழனுக்குத் தமிழே வேண்டும் என்று முழக்க மிட்டோம் வெற்றி பெற்றோம், தமிழனுக்குத் தமிழ்க்கலையே வேண்டும், ஆரியக்கலையை அணைத்துக் கொண்டு, உடல் புளகாங்கிதமடைவதாக எண்ணி உண்மையில் புண் கொண்டோராகி விடவேண்டாம், என்று இப்போதே கூறுகிறோம். இடையிலே தமிழனுக்குத் தமிழ் இசையே வேண்டும் என்ற கிளர்ச்சி துவக்கப்பட்டு, வெற்றி கிட்டியது. இந்தக்கட்டம், ஆரியத்துக்கு ஆட்டம் அதிகம் கொடுக்கக்கூடியதாகையால், அவர்கள், தமது சாணக்கியத்தைச் சரமாரியாக உபயோகிக்கின்றனர், அதனால் பாம்பைப்பழுது என்று கொண்டு சிலர் பாழாவது கண்டு நான் பரிதாபப்படுகிறேன்.

கலையினிடம் தங்கட்கே விசேஷமான அக்கரை இருப்பதாகக் கருதும் சிலரின் செயலும் சொல்லும், எனக்குக் கோபத்திற்குப் பதில் சிரிப்பே மூட்டிவிடுகிறது. ‘அட பித்துக்கொள்ளிகளா! எவ்வளவு சுலபத்திலே ஆரியத்தின் சூதுக்கு இரையாகி விடுகிறீர்கள்’ என்று கூறிட நினைத்தேன், மரமண்டைகட்கு மதியூட்டச் சுலபத்தில் முடியாதே என்று திகைத்தேன். சிந்து ராஜ்யாபதியாக வேண்டுமென்ற ஆவல்கொண்டு, பீர்பகாரோ என்பவன், ஆர்ப்பரித்து, ஆள்திரட்டி, ஆயுதம் வீசி, சட்டத்தைச் சாய்த்துச் சமாதானத்தைக் கெடுத்தான் - கட்டம் தனக்குத் திட்டமாகக் கிடைக்கும் என்று எண்ணினான்! கடைசியில் அவன் கதி என்னவாயிற்று? தலை போயிற்று! சிலர், இயக்கத் தலைவராக வேண்டும், அல்லது தங்கட்கு முதல் தாம்பூலம் தருபவர் எவரேனும் தலைவராக வரவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, வேலை செய்கின்றனர். அவர்கள் இந்தக் கிளர்ச்சியிலே நுழைந்தால், தமது நோக்கம் ஈடேறும் என்று கருதுகிறார்கள். இன்று உள்ள நிலையும்போய் பீர்பகாரோவின் தலை போனதுபோல் போகுமே, என்பதைக் கோபபோதை குறையும் வேளையிலாவது யோசித்துப் பார்க்கட்டும் என்று அவர்கட்குக் கூறுகிறேன். நீ என்ன கூறுவது, நான் என்ன கேட்பது? என்று இரட்டித்துப் பேசுவார்களானால், மெத்தச் சரி மேதாவிகளே! நீங்கள் கருங்கற் சுவரிலே மோதிக் கொள்வதை யுக்தி என்றோ, வீரமென்றோ கருதினால், செய்யுங்கள், பிறகு சிகிச்சை பெறுங்கள் என்று கூறி, விட்டுவிடுவதன்றி வேறென்ன செய்ய முடியும். நான் என்ன மடாதிபதிகளிடம் போய் மடிபிச்சை கேட்க முடியுமா? மதபரிபாலகர்களின் மனமகிழ முன்னோடியோ, பின்பாடியோ இருக்கமுடியுமா? எனக்கென்ன வேறு வேலையா இல்லை! அன்றோர் நாள் அளவளாவினோமே, அநியாயமாக அலைந்து கெடுகிறார்களே, என்ற பரிதாப உணர்ச்சிக்காகவே இவ்வளவும் கூறுகிறேன். பெரியாரும் அவரது அந்தியகால சீடரும் என்று கூறிடும் பெருந்தகையினர், இதுவரை தாங்கள், யாராரைக் குருவாகக்கொண்டு, என்னென்ன வேடம்பூண்டு, எத்தனை வகை தெந்தினம்பாடி வாழ்ந்தனர், என்பதை எண்ணிப்பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். அந்திய காலம் பெரியாருக்கு என்று, இந்த “என்றும் பதினாறுகள்” கூறியும் அந்தியக்கால சீடரென்று நமது இயக்கத் தோழர்களிலே யாரையோ நையாண்டி செய்தும் காலந்தள்ளும் பேர்வழிகள், தமது அந்தியக்காலத்திலே; சந்தி சரிக்கும் நிலை தமக்கு ஏற்படாதபடி, பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளட்டும் பாவம்!

தூற்றலும் பயமுறுத்தலும், கேலியும் கிண்டலும் செய்து பார்த்துத் தோற்றபிறகு, ஒரு மாஜி, தமிழர் தளபதி ஒருவரிடம் சென்று, முறையிட்டுக் கொண்டாராம், “நாயக்கருக்கு நீங்களாவது இந்த நூலைக் கொளுத்த வேண்டாம் என்று சொல்லக்கூடாதா?” என்று கசிந்து கூறினாராம். தளபதி, “நூலைக் கொளுத்தினால் உங்கட்கு என்னய்யா நட்டம்” என்று கேட்டாராம். துள்ளிக் குதித்து அந்தத் தோழர் “கலை போகுதே!” என்றாராம். “அவ்வளவுதானே! சரி! நாளைக்கே, கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவைகள், வெறும் கற்பனைகள், அவைகள் நமது இன மக்களின் ஒழுக்க போதனைக்கோ, சமயக் கோட்பாடுகளுக்கோ, சமுதாய நீதிகளுக்கோ, தகுந்த ஏடுகளல்ல. அவைகளிலே உள்ள கலை நுட்பங்களை மட்டும், கற்று உணர்க, மற்றவற்றைக் கொள்ளற்க” என்று தமிழ்ப் புலவர்கள் மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றிப், புத்தகங்களின் முன்னுரைகளிலே சேர்த்து, மக்களுக்கும் அறிவித்து விடுங்கள்; பெரியாருக்குக்கூறி, நூலைக் கொளுத்தும் வேலை வேண்டாம் என்று பிறகுநான் நிறுத்திவிடுகிறேன் என்று கூறினாராம். முறையிட்டுக்கொண்ட முதியோர் முறைத்துப் பார்த்து, முருகா! என்று பெருமூச்சுக் கலந்த அர்ச்சனை செய்துவிட்டு, வீடு திரும்பினாராம். இந்தத் திருமுறைகள் திருப்திபெற, அந்தத் தளபதி கூறிய ஒருவழி இருக்கிறது. அதை ஏன் செய்யக்கூடாது என்று கேட்கிறேன். கலை, சாமான்யமன்று என்று கதறினால் போதுமா!

28.3.1943