அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாதிபேதம் சாகும்வரை, சிறையில் இருப்போம்!

அடக்குமுறை காண அஞ்சோம்

28.9.50 காலை, பொதுச் செயலாளர் சி.என்.ஏ. சிறையிலிருந்து விடுதலையானார் என்ற செய்தி கேட்டு திருச்சி நகரம் மகிழ்ந்தது. மாணவரும், தொழிலாளரும், இயக்கத்தோழர்களும் இழந்த மதியைத் திரும்பப் பெற்றுவிட்டோம் என்பது போல குதூகலம் அடைந்தனர்! பொதுச் செயலாளர் தங்கியிருந்த என்.எஸ்.பங்களா நோக்கி, நகரின் பல பாகங்களிலிருந்தும் பலர்வந்த வண்ணமேயிருந்தனர். நடிகமணி தோழர் எம்.ஆர்.ராதா உள்பட பலர், சி.என்.மலர்மாலைகள் அணிவித்து, தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டனர்.

அன்று மாலை, திருச்சி டவுன் ஹால் முன் நகராண்மைக் கழக உறுப்பினர் தோழர் என். சங்கரன் தலைமையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பல கிளைக் கழகங்கள் வாயிலாகவும், ‘திராவிடப்பண்ணை’ போன்ற தனிப்பட்ட இயக்கப் பிரமுகர்களாலும் ஏராளமான மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. பிறகு திருச்சி தோழர் டி.கே.சீனிவாசனும், தோழர் ஈ.வே.கி.சம்பத்தும், ஆளவந்தாரின் போக்கு குறித்து, வீரமுழக்கம் செய்தனர். கடைசியில் தன்மீது மக்கள் காட்டும் அன்புக்கு நன்றி செலுத்தி விட்டு பொதுச் செயலாளர் பேசினார். அதன் சுருக்கம் கீழே.

தோழர் சம்பத் என்னை விடுதலை செய்தது சர்க்காருடைய புத்திசாலித்தனம் என்றார். அது ஓரளவு உண்மைதான். “ஏன் எனக்கு ஆறு மாதங்காவல் தண்டனை கிடைக்கச் செய்த இச்சர்க்கார் பத்து நாட்களுக்குள் தாங்களாகவே விடுதலை செய்தனர்’ என்று யோசித்தேன். எனக்கே புரியவில்லை எந்த சூழ்நிலை இ“ந“த ஆளவந்தாரை இம்முடிவுக்கு வரச் செய்தது என்பது பற்றி இன்று காலையில் இதைப்பற்றி எண்ணிக்கொண்டே ஒரு பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் என்னை விடுதலை செய்தது குறித்து சர்க்கார் சார்பில் வெளியிட்டிருந்த செய்தி, ஒன்று இருந்தது.

“தஸ்தாவேஜுகளைப் படித்துப் பார்த்தோம் இதுவரையில் அவர்கள் அனுபவித்த தண்டனை போதுமெனக் கருதுகிறோம். எனவே விடுதலை செய்துள்ளோம்” என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

படித்துப் பார்த்தார்களாம்! நாங்கள் சிறையில் கிடக்கும் நேரத்தில் தஸ்தாவேஸூகள் மீது கவனம் வைத்து படித்துப் பார்த்தார்களாம்!!

மகிழ்ச்சியடையக்கூடிய செய்திதான், இந்த சர்க்கார். இவ்வளவு பொறுப்போடு தஸ்தாவேஜூகளைப் படிக்கிறது என்பது! நான் சிறைக்குள் கிடக்க, எனது தம்பிமார்கள் கொதித்துத் துடிக்க, அது கண்டு தஸ்தாவேஜூக்களைத் தேடிச் சென்ற சர்க்கார். ஆரம்பத்திலேயே எங்களது புத்தகங்களைப் படித்திருந்தால், இவ்வளவு தூரம் எங்களை கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டியிராது அவர்களும் தஸ்தாவேஜூக்களை நோக்கிச் சென்றிருக்க வேண்டியிராது!

நான், எழுதினேன் பல புத்தகங்கள் பெரியாருடைய மொழிகளும், நூல் வடிவில், வெளிவந்தது. அவைகளை நாடு, பூரிப்போடு ஏற்றுக்கொண்டது இதைப்பார்த்து பொறாமையா படுவது சர்க்கார்? சிரிக்கிறீர்கள்? நீங்கள்! இந்தச் சர்க்காரின் போக்கே சிரிப்பாய்ச் சிரிக்கிறது!

இந்த நாட்டில் நானும், பெரியாருந“தான் கடைசி ‘மிதவாதிகள்’ (Moderate) எங்கள் கட்சியிலிருக்கும் ஏனையோரெல்லாம் தீவிரவாதிகள் சிறுமையைக் கண்டால் கொதித்தெழும் சிங்கங்கள்!

இதைப் புரிந்து கொள்ளாத இந்த சர்க்காரின் அறிவு சூன்யத்தைக் காண, அனுதாபப்படுகிறேன். எங்களைச் சிறையில் போட்டதன் பலன் என்ன ஆயிற்று? மிதவாதிகளைப் பிடித்தடைத்தால் என்ன ஆகும்? தீவிரவாதிகளின், கட்டு அவிழ்க்கப்பட்டால் என்ன நேரும்?

வெளியில் இருக்கும் போது, எங்கள் கட்சித் தோழர்கள், “ரயிலைக் கவிழ்ப்போம் காங்கிரஸ் காரர்கள் சுயராஜ்யத்தைப் பெற செய்ததைப் போல நாமும் செய்வோம்” என்று கேட்கும் போது “அது கூடாது நாட்டுக்கு நஷ்டம்” என்று நாங்கள் தடுப்போம். தபாலாபீசைக் கொளுத்துகிறோம். அது சுலபமான வேலை” என்று அனுமதி கேட்டால், “பாதை தவறாதீர்கள். என்ன அவசரம்? இதிலெல்லாம் ஈடுபடக்கூடாது!” என்று கண்டித்து கட்டுப்படுத்துவோம் வெள்ளத்தைத் தடுக்கும் கரைகளை இடித்துவிட்டால், என்ன ஏற்படும்? விளைவு, அசாமைவிட, பெரிய பூகம்பத்தையல்லவா நாடுகாணச் செய்யும்!

“ஆரிய மாயை” நான் 1944-45-46 ஆண்டுகளில் ‘திராவிட நாடு இதழில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூல் அந்த நூல் மீது, அவசரத்தோடு, இந்த 1950 ல், நடவடிக்கையெடுத்த சர்க்காருக்கு இப்போது ஒரு சட்டப்பிரச்னையை எடுத்துக்காட்டுகிறேன்! ‘வீராப்போடு என் மீது வழக்குத் தொடர்ந்த ஏ.அரசாங்கமே! உனக்கு என்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை” என்று தெரிவிக்கிறேன். ஆமாம்! என்மீது இச்சர்க்கார், சட்டப்படி பார்த்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம், “ஆரிய மாயை” நூல் அச்சடிக்கப்பட்டது இங்கல்ல சுதந்திர இந்தியாவில் அல்ல பிரெஞ்சுப் புதுச்சேரியில்!!

பிரெஞ்சுப் பிரதேசத்திலிருந்து வெளியான நூல் மேல் இங்கிலீஷ் சட்டமோ, அதைத்தழுவிய எந்தச் சட்டமோ நடவடிக்கை எடுக்க முடியாது.

அதேபோல, “பொன் மொழிகள்” நூலும், பெரியார், எங்கெங்கோ, எவ்வெப்பொழுதோ, பேசி, எழுதியவைகளிலிருந்து பொறுக்கி எடுத்து தொகுக்கப் பெற்றது. அவர் புத்தகமாக எழுதித் தந்தது அல்ல.

இந்தக் காரணங்களை விளக்கி எங்களால் தப்பித்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் எங்கள் பரம்பரை, கருத்துக்களை அனாதைகளாக விடக்கூடிய பரம்பரை அல்ல. ஆரியர்களின் வேத சாஸ்திரங்களைப் போல அசரீரியாகச் சொல்லப்பட்டவை அல்ல! ஆகையால்தான். தண்டனையை ஏற்றுக்கொண்டோம்.

1946 ம் ஆண்டில் எழுதப்ட்ட கட்டுரை மேல் பல்லாயிரக் கணக்கான மக்கள் படித்து அவர்கள் மனதில் பதிந்த பின்னர் 1950ல் வழக்குத் தொடர்கிறது சர்க்கார், 1946-1950!! இந்த நான்கு ஆண்டுகளில், சர்க்கார் கூறும் “வகுப்புத் துவேஷம்” பரவாமலா, இருந்தது? ‘ஆரியமாயை’ ஐந்து பதிப்புகள் வரை வெளிவந்து விட்டது. “பொன் மொழிகள்” முதல் பதிப்பு, முடிந்து, இரண்டாம் பதிப்பு வெளிவரும் தறுவாயிலிருக்கிறது. இவைகளிலிருந்து கருத்துகள் மக்களால் படிக்கப்பட்டு, அவர்கள் மனதிலெல்லாம் நிறைந்த பிறகு சர்க்கார் நடவடிக்கை எடுக்கிறது! 1946 ல் அல்லவா, எடுத்திருக்கவேண்டும். சட்டபுத்தகத்தை தொடுத்திருக்க வேண்டும் வழக்கு? பாம்பு என்று சொல்லி, அதற்குப்பால் ஊற்றி, பழம் வைத்துகாப்பாற்றி அது சாப்பிட்டு விட்டுப் போன பிறகு, அது இருந்த இடத்தை அடிப்பதைப் போலல்லவா இருக்கிறது சர்க்காரின் செயல்! நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ‘நாட்டில் வகுப்புத்து வேஷம் பரவாமல் தடுக்க வழக்குத் தொடர்ந்தோம்’ என்றால் என்ன அர்த்தம்? தங்களால் மறுப்பு எழுத முடியவில்லையே என்ற பொறாமை, நம்கட்சி வளர்வதுகண்டு துவேஷம் இதைத்தவிர வேறென“ன இருக்க முடியும்?

ஒன்பது நாட்கள் சிறையில் வைத்திருந்து பத்தாவது நாள் வெளியே விட்டிருக்கிறது சர்க்கார்-நவராத்திரி கொலுவைப்பது போல! நாங்கள் உள்ளே போனதும், வெளியே வந்ததும் நாடகத்தில் நடந்த ஒரு ‘சீனைப்’ போலத்தான் இருந்தது.

நாங்கள் இரண்டுபேர் செய்து முடிக்கவேண்டிய வேலையோ, ஏராளம்! எங்களுக்காகக்கண்ணீர் வடித்துக்கிடக்கும் காளைகள் ஏராளம்!! இந்நிலையில் வகுப்புத்துவேஷம் என்று சொல்லி வழக்கு சிறைத்தண்டனை பத்து நாட்கள் கழித்து விடுதலை! மந“தபுத்தியே மந்தபுத்தியே! நீதானா சர்க்கார்!!

அனாவசியமாக உள்ளே வைத்தாய் வெளியே விட்டாய் புத்தகம் எழுதியதற்காக! நான் வெளியில் வருவதற்கு முன்னால் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன் அதில் வில்லியம் என்பவன் மேல் வேலைக்காக இலண்டனுக்குப் போகிறான். அந்தச் சட்டத்தைப்படித்துக் கொண்டிருந்த போது, ஜெயில் சூப்ரண்ட் உங்களை விடுதலை செய்திருக்கிறது என்றார். என்ன காரணம் என்றேன். ‘கவர்னர் தீர்க்காலோசனைக்குப் பிறகு தஸ்தாவேஜூகளை அலசிப்பார்த்து வெளியில் விடும்படி உத்தரவிட்டிருக்கிறார்’ என்றார்.

ஆனால் என்னை வெளியிலேயே விட்டு வைத்திருப்பார்களா? இன்றிரவு மந்திரி மார்கள் கூடுவார்கள். வெளியே இருந்தாலும் உள்ளே அடைபட்டாலும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது என்று சிந்திப்பார்கள். சர்க்காருக்கு எங்கள் வளர்ச்சி பொறாமையாக இருந்தால் கேட்பவர்கள் காதுகளை அறுத்துவிடட்டும்! பேசுவோர் நாக்குகைத் துண்டித்து விடட்டும்! அதற்குப் போதுமான கத்திகள் இல்லையானால் யாகயோகாதிகளைச் செய்து நாங்கள் பேசமுடியாமலும் நீங்கள் கேட்க முடியாமலும் தடுத்துவிடட்டும்! அதற்காக நாட்டில் நிலவும் அமைதியை கெடுக்கவேண்டாம். நாட்டில் வகுப்பு இருக்கும்வரை, சாதிகள் இருக்கும்வரை, சுரண்டுபவன் சுரண்டப் படுபவன் என்ற வேற்றுமை இருக்கும்வரை, உயர்ந்த சாதிக்காரன் தாழ்ந்த சாதிக்காரன், என்றபோதும் இருக்கும்வரை நாங்கள் இருப்போம். நாங்கள் இல்லாவிட்டாலும் வேறு யாராவது இருக்கத்தான் செய்வார்கள். மலர் விரிந்தால் மணம் வீசத்தான் செய்யும்! மேகங்கள் கூடினால் மயில் ஆடத்தான் செய்யும்! தென்றல் வீசினால் குளிர்ச்சி ஏற்பட்டுத்தான் தீரும்! ஆட்சி நாறினால் மக்கள் கண்டிக்கத்தான் செய்வர்!

ஜெயிலிலே போட்டாய் என“ன நடந்தது? யார் யாருக்கு என்னென்ன தோன்றியதோ அதையெல்லாம் செய்யத் தொடங்கி விட்டார்கள் எப்படித் தடுக்கமுடியும்? கோவில்பட்டி மாநாட்டில் செய்த தீர்மானத்தின் படி ரயில்வே ஸ்டேஷன் போர்டுகளில் இருந்த இந்திப் பெயர்கள் எத்தனையோ இடங்களில் அழிக்கப்பட்டன. நாங்கள் வெளியே இருந்தபோது மலர்ந்திருந்த கருத்துக்கள் உள்ளே போனதும் செங்காயாகிப் பழுத்து போர்டுகளை அழிக்கச் செய்திருக்கின்றன! கும்பகோணத்தில் “பிராமணாள் காப்பி ஹோட்டல்” என்ற போர்டுகளில் இங்கே காப்பி மட்டுந்தானே விற்கிறார்கள். பிராமணர்களையும் விற்கிறார்கள்? என்று ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை அழித்திருக்கிறார்கள். நாங்கள் உள்ளே போனால் என்னென்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு ‘சாம்பிள்!’

நான் உள்ளே போனவுடன், கைதிகள் “நீங்கள் எதற்காக சிறைப் படுத்தப்பட்டீர்கள்?” என்று கேட்டார்கள். என்னால் என்ன பதில் சொல்லமுடியும். கன்னம் வைத்திருந்தால் சுவரேறிக் குதித்திருந்தால் சுலபமாகச் சொல்லியிருப்பேன். பேசாமல் இருந்தேன். மறுபடியும் கேட்டார்கள். “சர்க்காருக்கும் எனக்கும் சண்டை” என்றேன். அதிலே ஒரு கைதி சர்க்கார் பணத்தைக் கையாடி உள்ளே வந்தவன். நானும் அதே போல ஏதாவது செய்துவிட்டு வந்தேனா என்று கேட்டான். “இல்லை எதுவும் எடுத்து விட்டு அதற்காக வரவில்லை. ஒரு புத்தகம் எழுதினேன் அதற்காகச் சிறை” என்றேன். புத்தகம் எழுதினால் கூடவா இந்த சர்க்கார் பிடிக்கிறார்கள்? என்று ஆச்சரியப்பட்டார்கள். “எதுவும் சர்க்காரைத் திட்டியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். “சர்க்காரைத் திட்டவில்லை. பார்ப்பனீயத்தைக் கண்டித்திருக்கிறேன். ஜாதி முறையைக் கண்டித்திருக்கிறேன்” என்றேன். உடனே ஒவ்வொருவரும், “ஐயோ, நாங்கள் படிக்கவில்லையே, படித்திருந்தால் நாங்களும் அதேமாதிரி புத்தகங்கள் எழுதுவோமே” என்று வருத்தப்படத் தொடங்கி விட்டார்கள்.

சர்க்கார் நாட்டில் நாங்கள் இருந்தால் வகுப்புத் துவேஷத்தைப் பரப்புகிறோம் என்று சிறையில் போடுகிறது ஆனால் எங்களை அனுப்புகின்ற இடத்திலும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள்!

நாங்கள் விடுதலை அடைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தீர்கள். ஆனால் மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் எப்படிப்பட்ட பரம்பரையினர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் சேரன் செங்குட்டுவன் பரம்பரையினர் முன் காலத்தில் சேரன் செங்குட்டுவன் கங்கைக்கரையிலே கனக விசயர்களோடு போரிட்டு அவர்களைப் பிடித்து வந்து சிறையில் போட்டான் என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால் இப்போது செங்குட்டுவன் பரம்பரையினரை கனகவிசயன் பரம்பரையினரைக் கண்டித்தோம் என்று குற்றம் சாட்டிச் சிறையில் வைத்தார்கள். வெட்கம், துக்கம்-வேதனை அடையக்கூடிய விஷயமல்லவா இது?

உண்மையிலேயே இதில் உங்களுக்கு வேதனை இருந்தால் அடுத்த மாதம் 25 ந“ தேதி சென்னைக்கு மத்திய சர்க்கார் மந்திரி இராஜகோபாலாச் சாரியார் வருகிறார். கோவில்பட்டி தீர்மானப்படி அவருக்கு அனைவரும் கருப்புக்கொடி காட்ட வேண்டும். ஆனால் சர்க்கார் என்னை வெளியே விட்டுவைத்திருக்க மாட்டார்கள் உள்ளே தள்ளிவிடுவார்கள். மறுபடியும் தஸ்தாவேஜூகளைப் படித்துக் குற்றமில்லை என்று கண்டுபிடித்து விடுதலை செய்தாலும் செய்வார்கள்! நான் வெளியே இருந்தாலும் உள்ளே அடைபட்டிருந்தாலும் தீவிரமாக ஆனால் சட்டத்துக்கு உட்பட்டு இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும்.

இது இடைக்கால விடுதலை பரிபூரண விடுதலை அல்ல எப்போது பரிபூரண விடுதலை? நம்முடைய இலட்சியமான இன்பத் திராவிடத்தைப் பெற்ற பிறகுதான். அப்போது இப்போது நம்மை சிறையில் அடைத்தவர்கள் தயங்குவார்கள் நம்மோடு ஒன்று சேர, “தவறு செய்துவிட்டோமே” என்று தயங்குவார்கள் “பரவாயில்லை சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே” என்ற மூதுரைப்படி அவர்களையும் அணைத்துக் கொள்வோம்! அதுவரை “ஆலோலக் காட்சி போல பறவைகளை விரட்டும் போது அவைகள் ஓடுவதும் பிறகு வந்து உட்கார்ந்து கொள்ளுவதைப்போல உள்ளே போவதும் வெளியில் வருவதுமாகத்தான் இருக்கும்.

சிறைக்குப் போவதும் வெளியே வருவதும் இனி நம் கட்சியில் உள்ள அனைவருக்கும் சர்வசாதாரண நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும். தியாகத் தழும்புகள் நம் இளைஞர்கள் இதயங்களிலும் உடல்களிலும் படிய வேண்டும். சிறைக்குப் போனால் நமக்கு என்ன கஷ்டம். நமக்கு இலட்சியத்தில் பற்றும் நாணயமும் இருந்தால் கடுமையான தியாகங்களை எல்லாம் செய்யலாம். ஆண்டுக் கணக்கிலே சிறையிலே அடைபட, தூக்குமேடை ஏறவும் நீங்கள் தயாராக வேண்டும். திராவிடநாடு போராட்டம் தொடங்குவதற்கு முன்னால் படையில் சேர வரும் வாலிபர்களுக்கு உள்ள தகுதி எவ்வளவு தியாகத் தழும்புகள் ஏறியிருக்கிறது என்ற தகுதியைத்தான் பார்த்துச் சேர்க்கப்படுவார்கள். தியாகத் தழும்புகள் ஏறினாலொழிய நம் இதயகீதத்தை இழந்திருக்கும் இன்பத்தை, நம் இலட்சியமான திராவிடத்தைப் பெற முடியாது.

மந்திரி பக்தவத்சலம் திருச்சிராப்பள்ளியில் பேசும்போது குறிப்பிட்டாராம். “திராவிடநாடு அளவில் சிறியது. அதை வைத்துக் காப்பாற்ற முடியாது” என்று அகில உலக ஏகசக்ரவர்த்தியாக இருக்க ஆசைப்படும் பக்தவத்சலம் இப்போது எதை ஆளுகிறார்? சென்னை மாகாணத்தைத் தானே! புனாவில் தெரியுமா பக்தவத்சலம் யார் என்று? லக்னோவில் கேள்விப்பட்டிருப்பார்களா? அம்ருதசரஸில் உள்ளவர்கள் அறிவார்களா? இவர் திராவிடநாடு அளவில் சிறிது என்கிறார். பக்தவத்சலத்துக்கு ஓய்விருந்தால் சிந்திக்கும் சக்தியும் இருந்தால் பூகோளப் படத்தைப் பார்க்கட்டும். பிரான்ஸ் படத்தை ஒரு பக்கத்தில் மாட்டி அதற்குப் பக்கத்தில் திராவிட நாட்டுப் படத்தை மாட்டி ஒப்பிட்டுப் பார்கக்ட்டும். அதைப்போல ஸ்பெயின், இட்டாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்காண்டினேவியா இந்த நாட்டுப் படங்களோடு திராவிடநாட்டை ஒப்பிட்டுப் பார்க்கட்டும் இவைகள் எல்லாம் திராவிட நாட்டை விட சிறியவை அல்லவா? இவைகள் எல்லாம் அழிந்தா போயின அல்லது அமெரிக்கா அணுகுண்டைப் போட்டு இவைகளை எல்லாம் அழித்துவிட்டதா?

வடநாட்டை நம்பி நாம் எப்படி வாழ முடியும்? சரித்திரத்தைப் புரட்டினால் முதலில் அலெக்ஸாண்டர் பாஞ்சாலத்தில் படையெடுத்து பாஞ்சால மன்னர்களை வென்றான். அதற்குப் பிறகு கோரி படையெடுப்பு அதற்குப் பின்னால் கஜினி சோமநாதபுரத்தில் உள்ள சிலையைத் தகர்த்தெறிந்தான். செங்கிஸ்கான் வந்தபோது பாஞ்சாலம் பிணக்காடானது. அவர்களை எதிர்த்துப் போராட முடிந்ததா? என்ன ஆயின அக்னியாஸ்திரம், வருணாஸ்திரம், வாயுவாஸ்திரம் இவைகள் எல்லாம்? நீ சொல்லுகிறாய் இந்தியா ஒருநாடு என்று! உன்னை நம்பி எப்படி வாழ்வது?

சிறு நாடு ‘காஷ்மீர்’ அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்னால் பாக்கிஸ்தான் படை புகுந்துவிட்டது. அதுதான் காரணம் என்கிறாய். இந்தியப் படைத்தலைவர் பெயர் பல-தேவ்-சிங். பலம், தேவ சக்தி, சிங் என்ற பட்டம் இவை மூன்றும் என்ன செய்தது? காஷ்மீரைக் காப்பாற்ற முடியாத உன்னை நம்பி எப்படி வாழ முடியும்.

எனக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி காட்டியவர்களுக்கும், நான் போன பிறகு கழக விஷயத்தில் அக்கறை காட்டி வேலை செய்தவர்களுக்கும் என் நன்றி வெளியில் வந்துவிட்டேன். இனி என் வேலை தொடரும்!”

(திராவிடநாடு 8.10.50)