அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சச்சிவோத்தமர்!

தமிழ்ச்சீயங்கள் உலவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் சச்சிவோத்தம சர்.சி.பி. ராமசாமி அய்யர் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். அவரது ‘வருகை‘ நாட்டோர் பலருக்கு ஐயத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஆனால் மாணவமணிகளும் அஞ்சுகிறார்கள் – ஐயம் கொண்டு கிடக்கிறார்கள். எதிர்கால ‘உலகை‘ உருவாக்கும் ஓர் பல்கலைக் கழகத்துக்கு, உலகியலறிவவும் வாழ்வியலறிவும் உணர்ந்த பெரியவர்கள், துணைவேந்தர்களாக அமைவது, மிகமிக வரவேற்கத் கூடியதுதான். உலக அரங்கில்தாம் கற்ற பாடங்களை வடித்தும், வகுத்தும், மாணவர்களைத் தயார் செய்ய அத்தகையவர்கள் துணை வேந்தர்களாக நியமனம் செய்யப் பெறுவதும், அவர்களும் தமக்குக் கிடைத்த நற்பணி இதுவெனக் கருதி, பொறுப்பேற்பதும் நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்களாகும்.

இப்போது, சச்சிவோத்தமர், நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்! அவரும் பொறுப்பேற்றிருக்கிறார்!

அவரது நியமனம் கண்டு, அறிவுலகம் திகைக்கிறது. மாணவர் குழாம் – மருள்கிறது சந்தேகக் கண்களோடு பல்கலைக் கழகக் கட்டிடங்களைப் பார்க்கிறது. காரணம், தமிழ்மணம் கமழும் ஓர் பூங்காவில், ‘சமஸ்கிருதம்‘ போற்றும் ஒருவர் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார் என்பது மட்டுமல்ல, எங்கேயோ அலைந்து கொண்டிருந்தவரை இழுத்து வந்து அரியாசனத்தில் அமர்த்த வேண்டிய அவசியம் யாது? எனும் ஐயம், தமிழர் தம் உள்ளங்களைக் குடையாமற் போகாது.

சச்சிவோத்தம சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களை, அறிவோம், நாம்! அவர், திவானாக இருந்து திருவாங்கூரைப் படுத்திய பாட்டை, இந்த உபகண்ட முழுமையுமுள்ளோர் அறிவர்! அத்தகையவர், இன்று அமர்த்தப்பட்டிருக்கிறார், ‘அண்ணாமலை‘க்குத் தலைவராக.

“அவர் அமர்த்தப்பட்டதற்குக் காரணம் நானே!“ என்று முதலமைச்சர் ஆச்சாரியார், சென்னையில் தெரிவித்துள்ளார் – நாடகப் பேராசிரியரின் பாராட்டுக் கூட்டத்தில். தமிழர் உள்ளம் திகைப்பதற்கு, வேறென்ன சான்று வேண்டும்?

அகில உலகும் போவதும் வருவதுமான சிறப்புப் பெற்றவர் சி.பி. மறுப்பாரில்லை. வேதாந்த வியாக்யானங்களில், சிறந்தவர், மறுப்பாரில்லை. அதிகாரமூலம் காரியங்களைச் சாதிக்கக் கூடியவர், மறுப்பாரிலை. ஆனால், இந்த குணாதிசயங்களல்லவே துணைவேந்தருக்குத் தேவையானவை! சனாதனமும், பழைமையும், ஆதிக்க முடியும், இந்தக் குணாதியசங்களைக் கண்டு கொஞ்சலாம்! மகிழலாம்! கூத்தாடலாம்! ஆனால், ஓர் பல்கலைக் கழகத்துக்கு....?

இந்த ஐயத்தால்தான், தமிழுலகம் திகைக்கிறது – மாணவர் குழாம் அவர் பதவியேற்ற நாளில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்கவில்லை.

இதன் பலாபலன்களை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்ச்யில் அக்கரை கொண்டோர், எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், ஆச்சாரியாரின் பிடி, அவர்களையும் வளைத்திருக்கிறதே!

திராவிட நாடு – 8-2-53