அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சேர்க்கை வாசனை

மாகாண மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி களையும் இந்நாட்டு மக்கள் கற்கவேண்டுமென்று, அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வந்த நிதி அமைச்சர் தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். மாகாண மொழி கற்கவேண்டுமென்பதற்கு அவர் கூறிய காரணம், மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்படும்போது (பிரிக்கப்பட வேண்டும்) அந்தந்த மாகாண மொழியை அந்தந்த மாகாணங்களில் இருப்பவர்கள் தங்கள் தாய்மொழியாகக் கொண்டு கற்க வேண்டு மென்பதற்கு அவர் கூறிய காரணம், இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமென்பது ஆங்கிலம் கற்பதற்கு அவரால் கூறப்பட்ட காரணம், உலக நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள அது தேவை என்பது.

மாகாண மொழியை, அந்த மாகாணத்தில் இருக்கும் மக்கள் தாய்மொழியாகக் கொண்டு கற்க வேண்டுமென்று அமைச்சர் அவர்கள் கூறியது, மொழிவார் மாகாணங்கள் பிரிக்கப்படும்போது, அந்த மாகாண மொழி அல்லாத வேறு மாகாண மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள், அந்த மாகாணத்தைவிட்டுத் தங்கள் சொந்த மாகாணத்துக்குப் போக முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அத்தகையவர்கள், தங்கள் சொந்த மொழியை விட்டுத், தாங்கள் இருக்கும் மாகாண மொழியையே தாய்மொழியாகக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்விதம் கூறினார் என்று கருதுகிறோம். உதாரணமாக, தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டுவிட்டால், தமிழ் மாகாணத்தில் நெடுங்காலமாக இருந்துவரும் ரெட்டி, நாயுடு போன்ற தெலுங்கு மொழியைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்டவர்கள், தமிழ் மாதா எனவே அவர்களும் தங்கள் தாய் மொழியாகத் தமிழையே கொள்ள வேண்டும். ஆனால் இது அனுபவ சாத்தியமாகுமா? பந்நெடுங்காலமாகவே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழ் மக்களோடு கூடி வாழ்ந்தபோதிலும், தெலுங்கு பேசுகின்ற ரெட்டி, நாயுடு வகுப்பைச் சேர்ந்த மக்கள் தாங்கள் தாய் மொழி (வீட்டு மொழி)யாகத் தெலுங்கையே கொண்டுள்ளார்கள் என்பது கண்கூடு. இந்த நிலையில், தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டாலும் அவர்கள் தங்கள் தாய்மொழியாகத் தெலுங்கையே கொள்வார்களன்றி, ஒருபோதும் தமிழைத் தங்கள் தாய் மொழியாகக் கொள்ளவே மாட்டார்கள்.

எனவேதான், தவிர்க்க முடியாத பல காரணங்களால் ஒன்றுபட்டு ஒருமித்து வாழவேண்டியவர்களான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஓர் இனமொழிகளைப் பேசும் மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு - திராவிட நாடு - தனியாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றோம். அப்போது இத்தகைய மொழிப் போராட்டத்துக்கே இடமேற்படாது. தமிழ்நாட்டில் இருக்கும் ரெட்டியாரையோ, நாயுடுவையோ தமிழைத்தான் தாய்மொழியாகக் கொள்ளவேண்டுமென்று வற்புறுத்த வேண்டிய அவசியம்கூட ஏற்படாது, இதுமட்டுமன்று; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றாக்கி, ஓர் இனமக்களாக வாழ்வதற்குத், திராவிட நாடு தனியாகப் பிரிக்கப்பட்டாக வேண்டுமென்பதற்கு நாம் கூறும் மிகமிக முக்கியமான காரணம், வாழ்க்கையின் உயிர்நாடியான பொருளாதாரத் துறையில் நாம் பிற நாட்டவரால் சுரண்டப்படாமல் இருப்பதற்கு இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்பதுமாகும். இதனை உணர மறுப்பவர்கள் உண்மையை உணரமறுப்பவர்களாவர்.

இனி, இந்தி மொழியை எல்லாரும் கற்று, அதனையே இந்தியாவின் பொது மொழியாகக் கொள்ள வேண்டுமென்று தோழர் சண்முகம் அவர்கள் கூறுவது, சேர்க்கை வாசனையைப் பொறுத்து அவர் கொண்ட கருத்தாகும். இப்போது அவர் போய்ச் சேர்ந்துள்ள இடம், எப்படி மொழியாக்கி விடவேண்டுமென்று பாடுபடுவர்கள் கூடியுள்ள இடமாகும். எனவேதான், ஆங்கிலமே இந்நாட்டுக்கும் பொதுமொழியாக இருக்கக் கூடியது என்று ஒரு காலத்தில் கூறிய தோழர் சண்முகம் அவர்களே இப்போது, இந்தியை இந்நாட்டுப் பொதுமொழியாகக் கொள்ள வேண்டுமென்று கூறும் சங்கடமான நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார். இந்தி, இந்நாட்டுப் பொதுமொழியாகக் கற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்று கூறியவரே, உலக நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தையும் கற்கத்தான் வேண்டுமென்று வற்புறத்துகிறார். உலக நிகழ்ச்சிகளை அறிந்துகொள்வதற்காகக் கற்றுக் கொள்ளும் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டே இந்தியா என்று சொல்லப்படும் இவ்வுபகண்டத்திலுள்ள நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டால் என்ன? இவ்வுபகண்ட நிகழ்ச்சிகளை மட்டும் அறிந்துகொள்ளத் தனியாக ஒரு புதுமொழியைப் பொதுமொழியாக ஏன் கற்றுக் கொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை.

ஆங்கிலேயர் நம்மைவிட்டுப் போனபின்னரும், அவர்களுடைய மொழியான ஆங்கிலம் நம்மை விட்டுப் பிரிய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ள நாம், அதனையே நம்முடைய பொதுமொழியாகக் கொள்வதில் தவறென்ன? உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் வேண்டுமென்று கூறும்போது, இவ்வுபகண்டத்தையும் உலகத்தின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ளாமல், அதனை ஒரு தனி உலகமாக்கி, அதற்கு ஒரு தனிப் பொதுமொழி உண்டாக்க முயலும் புதுவேலை - பிரயாசை எதற்கு? உலகத் தொடர்பிலிருந்து அறுபட முடியாத நாம், நமக்கென ஒரு புது மொழியைப் பொதுமொழியாகக் கொள்வதைவிட, உலகம் ஒப்புக்கொண்ட பொதுமொழியான ஆங்கிலத்தையே நாமும் நம்முடைய பொது மொழியாக வைத்துக் கொள்ளலாமே!

ஆங்கிலம் கற்கக்கூடாது - அதன் முகதரிசனமே நமக்குக் கூடாது என்ற பதிவிரதா தன்மைக்கு நாம் வந்துவிட்டாலாவது, நமக்கு ஒரு பொதுமொழி வேண்டுமென்று கூறுவதில் சிறிதளவு பொருளாவது இருக்கிற போதும்கூட, இந்நாட்டுப் பொது மொழியாவதற்கு இந்தி ஒன்றுதான் ஏற்புடைத்ததா என்பது, இந்நாட்டுப் பன்மொழிப் புலவர்கள் அனைவரும் ஒன்றுகூடிப்பேசி முடிவு காண வேண்டிய விஷயமாகும். அப்பொழுது உலகத் தொடர்புக்கு இந்நாட்டு மொழிகளில் எது ஏற்புடைத்தது என்ற பிரச்னை எழும். அந்தப் பிரச்னை எழும்போது மறுபடியும் ஆங்கிலம்தான் நம்கண்முன் காட்சியளிக்கும். எனவேதான், உலகத்துக்கும் நமக்கும் (நாமும் உலகத்தின் ஒரு பகுதியினர்தானே) பொதுவாகவுள்ள ஆங்கிலத்தையே பொது மொழியாகக் கொண்டு, இந்தப் பொதுமொழிப் பிரச்னையில், வீண் சச்சரவுகளை உண்டாக்கி, இருக்கும் சிறிதளவு ஒற்றுமைக்கும் ஏன் பிளவை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்கிறோம். பல சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கவல்ல தேழர் சண்முகம் அவர்கள், மத்திய சர்க்காருக்கு இந்தப் பிரச்னையையும் விளக்கிக்கூறி, அவர்கள் கொண்டுள்ள பொதுமொழி மயக்கத்தைப் போக்க இனியாவது முயற்சிப்பாரா அல்லது சேர்க்கை வாசனை அவருடைய திறமை யைக்கூட மறைத்துவிடக்கூடிய முறையில் நடந்துகொள்வாரா என்பது இனிப் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்றாகும்.

25.4.1948