அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘சேலம்’ பிறந்த இடம்!
‘திருச்சி மாநாடு, எப்படி இருநட்தது” என்று கேட்கிறார் திருவாளர். “திருச்சி மாநாடா! அற்புதமான இருந்தது! எவ்வளவு கூட்டம் தெரியுமோ? தாய்மார்கள் எவ்வளவு! என்ன ஆர்வம்! எவ்வளவு உற்சாகம்” என்றுதோழர், தமது ஆர்வத்தைக் கொட்டுகிறார். திருவாளர் அந்த நேரத்திலே, வானத்திலேர வட்டமிடும் தோர் நிறுத்தியதும், திருவாளர் “பெயரியகூட்டம்! தொண்டை வலிக்கக் கத்தினீர்கள்! பெரியாருக்கு ஜே என்று கூவினீர்கள்! போதுமா?” என்றுகேட்கிறார். தோழர் கொஞ்ம் திகைக்கிறார். திகைப்புக்குக் காரணம் தாட்சணியம் என்பதைத் தெரிந்துகொள்ளாத திருவாளர், தோழரைத் திருவாளராக்க முயற்சிக்கிறார்!

“பெரிய கூட்டம்! பெரியார் பேசினார்! அழகிரி முழக்கம் செய்தார்! ஆயிரக்கணக்கானபெண்கள்! இதெல்லாம் கிடக்கட்டும் தம்பி! என்ன உருவான காரியம் செய்தீர்கள்?” என்று திருவாளர் கேட்கிறார். “ஏன்! சேலம் தீர்மானம் அமுலுக்குவர வேண்டியது என்று தெரிவித்துவிட்டோம்” என்கிறார் தோழர். திருவாளர், “பெரியகாரியம் செய்துவிட்டதாக எண்ணமோ? பட்டம்கூடாது, பதவிகூடாது, எலக்ஷன் கூடாது, இதுதானே உங்க சேலம்! என் தம்பி! இப்படி ஒருகட்சி இருக்குமா? பெரியார் பேசிவிட்டால், நீங்களெல்லாம் கூடச் சேர்ந்து கூச்சல் போட்டுவிட்டீர்கள். பெரியார் சொன்னால் போதும், உடனே ஆமாம் என்று கூவிவடவேண்டியது, அததானே நடந்தது. இதற்கு ஒருமாநாடு!” என்று திருவாளர் குத்துகிறார். தோழர் யோசிக்கிறார்,“ஏன் இப்படி இவர் கேலிசெய்கிறார். இவரே ஆயிரம் தடவை, பெரியாரைப்பின்பற்றவேண்டும், அவராலேதான் இந்தக்கட்சி இவ்வளவு முன்னேற்றம் அடைந்தது. அவர்தான் நமக்கு விடுதலை தருபவர் என்றெல்லாம் பேசினவராயிற்றே, இப்போது என்ன இப்படிப்பேசுகிறார்” என்று. திருவாளர் விடவில்லை, “இதுதானே ஐயா உங்கமாநாடு ஒருகூட்டம் கூடவேண்டியது, அவர் ஏதாவது சொல்லவேண்டியது நீங்களெல்லாம் கை தூக்கவேண்டியது. இதுதானே மாநாடு!” என்று மறுபடியும் குத்துகிறார். அன்று அவர் கண்ட ஆர்வமும், கட்சியிலே ஏற்பட்டுள்ள புதுமுறுக்கும் வாலிப உள்ளங்களுக்கு ஏற்பட்ட உற்சாகமும், தோழனின் மனக்கண் முன் தோன்றுகிறது. திருவாளரின் கரத்திலே கட்சி இருந்தபோது, “மாநாடு நடைபெறும் மக்கள் கூட்டம் இன்றி! தலைவர்கள் தீர்மானம் கொண்டுவருவர், அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்” என்ற முறையிலே இருந்தது. அப்படிப்படட கட்சிக்க, எதிரிகள் கண்டு வியக்கக்கூடிய அளவு செல்வாக்கு ஏற்பட்டு, வளர்ந்து கொண்டுவரும் வேளையிலே, திருவாளர்களின் கோம் கிடைக்கிறதே, ஏன், என்று தோழன் சிந்திக்கிறான்! அந்தச் சிந்தனை செல்லும் விதம் இது.
***

நமக்குள்ளே ஆயிரம் இருக்கலாம் நண்பரே! தேர்தலிலே காங்கிரஸ்கட்சி, போட்டியின்றி வந்துவிடுவதென்றால், வெட்கமாக இல்லையா? - என்று ரோஷமூட்டி வேலைவாங்கும் தந்திரசாலிகள் சிலர் கேட்கின்றனர். வெட்கமாம்! யாருக்கு? ஏன்? ஜஸ்டிஸ்கட்சி, பார்ப்பனரல்லாதார் கட்சி, பார்ப்பன ஆதிகத்தை ஒழிக்கும் கட்சி, என்று அழைக்கப்படும் கட்சியிலே நடு நாயகங்களாக அமர்ந்திருந்து, அவர்களை எங்கள் தலைவர்! எங்கள் வீராதி வீரர்! என்று நாங்ளக் வாய்வலிக்க வாழ்த்த, அவர்கள் அந்த வாழ்த்தொலி கேட்பதால் தங்கள் காதுவலிக்கிறதே என்றுகூற, அதற்கு நாங்கள் ஐயோ! நமது தலைவர்களுக்கு நாம் இந்தக் கஷ்டத்தைக் கொடுத்து விட்டோமே என்றுவருந்த, தர்பார் நடாத்திய அந்தப் பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்கள், கலியாணத்துக்குக்கனபாடியைக் கூப்பிட்டுக் காலில் வீழக்கண்டு சங்கராச்சாரியாரை அழைத்துக் காணிக்கை கொடுக்கக்கண்டு, பாரத இராமாயணம் படிக்கச் சொல்லி பட்டாடையும் பால் செம்பும் பரிசளிக்கக்கண்டபோது, நாங்கள் விவரிக்கமுடியாத அளவுவெட்கப்பட்டோம்! வேதனை தருமளவு வெட்கப்பட்டோம்!!

“ஏ! கூவிக்கிடக்கும் ஏமாளியே! பார்! நீ கொக்கரிக்கிறாய் ஆரியம் ஒழிக என்று. நீ பரணி பாடுகிறார். பார்ப்பனியம் அழிக என்று! நீ யாருக்காகக் கொடிபிடிக்கிறாயோ, அந்தத் தலைவர்கள், எங்களுக்குத் தாசானு தாசராய் நிற்பதைப்பார்! தொங்கவிடு, தலையை! ஒரு முழக்கயிறு தேடு, வெட்கமாக இருந்தால்” - என்று எங்களை நோக்கி ஆரியம் வினாடிக்க விநாடி கூறி வந்தது, அந்த வெட்கத்தைவிட, இன்று போட்டியின்றிக் காங்கிரஸ் ஜெயித்து விடுவதனால், அதிகவெட்கமொன்றும் ஏற்படக் காரணமில்லை. காங்கிரஸ் வெற்றி என்றால் என்னபொருள்? பிரச்சாரம் வெற்றி பெற்றது என்றுபொருள்!

நாங்கள் எதற்காக வெட்கப்படவேண்டும்!

“வெள்ளையனே! வெளியே போ!” என்று தேர்தல் சுலோகம் கூறியே, ஒரு கட்சி தேர்தலிலே வெற்றிபெற்றதாமே என்ற செய்தியை உலகு அறியட்டுமே, அதிலே நமக்கென்ன வெட்கம்? நடந்த தைமறப்போம் என்று நாவாரப்பேசிய பரங்கித்தலைவர்களல்லவா வெட்கப்பட வேண்டும்!
வெள்ளையனே வெளியோபோ என்று வீண் அதிகார முழக்கமிட்டோம், தேர்தலிலே வெற்றியும் பெற்றோம், பண்டித ஜவஹர் சொன்னபடி, டெல்லிசலோ ஜெய்ஹிந்த் என்று கோஷமிட்டோம், ஆனால் டெல்லி சென்றதும், வெள்ளையன், பைடோபண்டிட்ஜீ! ஏக்கப்சாயா ஒனாஜீ! என்று கூறுகிறானே. நாமும் சலாம் சர்க்கார்ஜீ என்று கூறுகிறோமே, ஒட்டப் போனவனும் ஒடவேண்டியவனும் ஓருயிர் ஈருடலாக இருக்கிறார்கள் என்று ஊர் தூற்றுகிறதே, என்று பண்டிதர்கள் வெட்கப்படட்டும், நமக்கென்ன வெட்கம்!

தைரியமிருந்தால், நாணயமிருந்தால், நம்பிக்கை இருந்தால், நாம எந்தக்காரணத்திற்காகக் காங்கிரசை எதிர்க்கிறோமோ அதை நேர்மையுடன் ஒப்புக் கொண்டு, இந்த நாட்டிலே பார்ப்பனியந்தான் இருக்க வேண்டும் என்று கூறித், தேர்தல்நடத்திப் பார்க்கட்டுமே காங்கிரஸ். அப்போது தெரியும் முத்துரங்கங்கள் கூடச் சத்தமிடாத நிலைமை! கட்டுப்பாட்டுக் குள்ளே சிக்கிக்கிடக்கும் காமராஜர்கள்! கர்ஜிக்கவேண்டி நேரிட்டகாலம் இது என்றால், தேசீயம் - காந்தீயம் - சுயராஜ்யம் என்ற முகமூடியை எடுத்தவிட்டு, முன்வந்துநின்று பார்க்கட்டுமே, பார்ப்பனிய ராஜீயக்கூட்டம்! அவர்களைப் படைத்த பிரமன், புரண்டு அழுமளவுக்குத், தேர்தலிலே தாக்கிக்காட்டுகிறோம். தெரியாதா எங்களுக்கு, அந்த முகமூடி கீழே விழுந்த உடனே, என்ன நேரிடும் என்று! திராவிடர் கழகம், அந்த முகமூடி கீழே விழுவதற்கான பணியிலே மம்முரமாக ஈடுபடும்!

ஆகவே, இந்தமுறை தேர்தலிலேநாம் ஈடுபடாததாலேயே, நமது போர்ப்பாதையிலிருந்து விவகினதாகக் கருதத் தேவையில்லை, இதிலே வெட்கப்படக்காரணமுமில்லை. சக்தி வீணாக்கப்படாமல் சேகரித்துவைக்கப்படுகிறது என்று மகிழ்ச்சி அடைவோம். நரைமயிர்கருக்கும் தைலம் பூசி அயத்தங்க பஸ்பம் கொடுத்து, வயோதிகனை மண அறைக்கு அழைத்துச் செல்லமறுக்கிறோம், மணக்குதிரை வேண்டாமென்கிறோம், கூடாநட்பு கேடாமடியும் என்று கூறுகிறோம், உக்கும் எனக்குதம் இல்லைப் பொருத்தம் இதை எடுத்துரைத்தால் என்பா வருத்தம் என்று கேட்கிறோம், சேலத்தில் காலத்தின் குறியைக் காட்டினோம், திருச்சியில் செல்லவேண்டியதிக்கையும் தெரிவித்தோம். இன்று இதன்பயனாகக் கோபங்கொண்டு நம்மை விட்டுப் போகிறவர்களிலே ஒருபகுதி உண்மையில் நல்லவர்கள், ஆனால் நிலைமையால் நம்மைத தவறாகக் கருதுபவர்கள் - அந்தப்பகுதி - தேர்தல் பருவத்திற்குப் பிறகு, கண்ணகியை நாடிவந்த கோவலராகவந்து சேருவர்! கட்சிக் கண்ணகி, கோவலரைக் கொலைக் களத்துக்கல்ல, போர்க்களம் அழைத்துச் செல்வாள்! இடையே கொஞ்சம், அவர்கள் ஸ்தல யாத்திரை செய்துபார்க்கட்டும், நஷ்டம் என்ன? கஷ்டம் ஏன்?

என்றென்றைக்கும் தேர்தலே கூடாது என்றுநாம் கூறவில்லை. நாம் பஜனை மடம் நடத்துபவர்களல்ல. இன்றைய நிலையில், நம்மை உதாசீனம் செய்துவிட்டு, உலகறிய எந்தக் கட்சி ஐந்தாம்படைவேலை செய்தது என்று கூறினார்களோ, அதே கட்சியுடன் குலவும் சர்க்காரின் போக்கைக் கண்டிக்கச், சற்றே விலகி இருப்போம் என்று கூறுகிறோம். இதற்குச் சீற்றமா? இதற்கே மனமாற்றமா? இதுதான் இந்திய உபகண்டமத்தின்கடைசித் தேர்தலா! நம்முடைய புதிய அமைப்புமுறை பலமாகட்டும், புத்துணர்ச்சி வளரட்டும், தியாகத் தழும்பினரின் தொகை அதிகரிக்கட்டும், சில்லறைச் சலுகைக்கும் சீமைச் சிரிப்புக்கும் பலியாகி, கொள்கையை இந்தக்கட்சி இழக்காது என்பதை வெள்ளை வேதியரக்ள் உணரட்டும், உரத்தகுரல் பேசுவோர் ஊராள வரட்டும், பரிநரியா கட்டும், அடித்துவிரட்ட ஆண்மையா இல்லை அதுபோத! அதற்குள் ஆயாசம் ஏன்? ஆத்திரம் எதற்கு? தண்கண்டனத்தைத் தெரிவிக்கத் தேர்தலை பகிஷ்கரிக்கும் முறையைக்கையாண்ட கட்சி கடையாதா? கழுதையும் நாயுமே சட்டசபை போகும் என்றகிளர்ச்சியை, நடத்திய காங்கிரஸ் கட்சி பிறகு “கனம் களை” காட்டவில்லையா? இதிலே என்ன எங்கும் நடவாதது நடந்துவிட்டது? தேர்தலில் நிற்கவேண்டுமானால், எப்படி, எதற்கு, எப்போது என்ற விசாரணை வேண்டாமா? சேலத்துக்குமுன்பு, நாம் சேர்ந்து வாழ்ந்தபோது, கட்சி உழைப்பாளிகள், குஷ்டம் பிடித்த கணவனைக் கூடையிலே உட்காரவைத்துத் தலைமீது சுமந்து கூத்திவீடு கொண்டு சென்ற நளாயினிகள் போலக் கட்சித்தலைகளைத் தாங்கிக்கிடந்த கட்சி உழைப்பாளிகள், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஒருசொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தார்களே, அப்போதாவது தேர்தல் சமயங்களிலே, மனத்தாங்கல் ஏற்படா திருந்ததா? திறந்த மனதுடன் இருந்து பதிலுரைக்கட்டும், அந்தச் சமயத்திலே, நடைபெற்ற உரையாடல்களைக் கவனப்படுத்திப் பார்க்கட்டும், தேர்தலுக்கு மனுப்போட்டுவிட்டு, தேவகிமைந்தனைத் தொழுது கொண்டிருப்பார், தேனூர்மிட்டாதாரர்! அவர் வீட்டுவாயற் படியருகே தேசீயத் தொண்டர் படை, “தேனூர் மிட்டாதார். ஒழிக” என்று கூவும். கணக்கெழுதும் கண்ணுசாமியைக் கூப்பிடுவார் மிட்டாதார். “என்னடா சத்தம்” என்று மிரட்டுவார். எஜமானின் கேள்வியே, உத்தரவு என்று கண்ணுசாமி எண்ணுவான், தொண்டர் படையிடம் சென்று தொலைவாகப்போ! என்று கூறுவான், கைகலக்குமத் - அன்று மாலை, காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டார் என்று கண்டனக் கூட்டம் நடைபெறும், ஊர், மிட்டாதாரரைத் தூற்றும், பிறகு தந்திபறக்கும் ஈரோட்டுக்கு?

“நம்மவீட்டிலே சுயமரியாதை, எங்க அப்பா காலத்திலே இருந்து உண்டு” என்பார் மிட்டாதாரர்! அவர் நெற்றியிலே உள்ளபட்டை நாமத்தைக்கண்டு பெரியார், மிரளுவார், கூடச்
சென்ற தொண்டர் சிரிப்பை அடக்கமிகச் சிரமப்படுவார். கூட்டம் நடக்கும், இன்னின்ன விஷயம் போதும் என்பார், மிட்டாதார்! தோல்விக்குப்பிறகு, தாத்தாச்சாரியார் வருவார், “மிட்டாதாரவாள்! ஒரே ஒருகாரியம் தவறு செய்துட்டேள். கோபிக்கப்படாது. அந்த இராமஸ்வாமி நாயக்கரை வரவழைத்தீர் பாரும், அதுதான் கெடுதலாக முடிந்தது.” என்று சொல்வார், “தெரியாமல் தான் வரவழைத்தேன் நம்ம குருக்கள் சொன்னார் ஜாதகம் கூடச்சரியாக இல்லைன்னு. எதையும் கவனிக்காமல், என்னமோ கட்சி கட்சின்னு, காசுபோச்சி” என்பார். “நீங்க மட்டும் காங்கிரசிலே இருந்திருந்தா...” என்று ஆசைகாட்டுவார் ஐயர்! சின்னாட் களிலே, கதர்வேஷ்டியும் வாங்கித் தருவார்!

இன்று எல்லோரும் ஒன்றாகக்கூடித் தேர்தலை நடத்தி இருக்கவேண்டும் என்று கூறுகிறார்களே, அவர்கள் தேனூர்மிட் டாதாரர்களைத் தவிர, யாரைமனதிலே வைத்துக்கொண்டு பேசமுடியும்? அத்தகையவர்களின் சார்பாகத்தானே அரசியலில் மதவிஷயம் ஏன்? சுயமரியாதை வேறு, என்றெல்லாம் பேசப்படு கிறது. அத்தகைய ‘தேர்தல் திருஉலாக்காரருக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காகவா, நமதுசக்தி பாழாகவேண்டும்? வேறு பயனுள்ளவேலை, இல்லையா? நமது கட்சியின் சக்தியை விளக்க வேறுமார்க்கம் கிடையாதா?

ஒன்றுபட்டு வாழ்ந்தோம், தேர்தல்களிலே ஈடுபட்டோம் என்று கூறப்படும் அந்த நாட்களிலேயுங்கூட, கட்சிக்குள்ளே குமுறல் இல்லை என்று கூற முடியுமா? கட்சிப் பிரச்சாரம் இல்லை! பொதுமக்களிடம் தலைவர்கள் போகிறதில்லை! எதிர்க்கட்சியின் தப்புபிரசாரத்துக்குத் தக்க பதிலளிப்பதில்லை! ஜமீன்தாரர்களிடம் கட்சி சிக்கிவிட்டது. சீரழிகிறது! கட்சித் தலைவரைக் காணச்சென்றால், பேட்டி கிடைப்தில்லை! கட்சித் தலைவர்கள் பதவிகளில் அமர்ந்தால் கட்சியைக் கவனிப்பதில்லை, கட்சி என்று வாயிலே கூறுவதோடுசரி, கட்சி என்று வாயிலே கூறுவதோடுசரி, பார்ப்பனல்லாதாருக்குக் கடுகளவு பரிவும் காட்டுவதில்லை - என்றகுற்றச்சாட்டுகள் உலவவில்லையா? இவைகளைக் கூறிப்பலர் கட்சியை விட்டு விலகவில்லையா? அந்ததச் சமயத்திலேதானே, பெரியாரிடம் கட்சி இருக்கவேண்டும், என்ற நாதம் எழுந்தது! அந்தக் குமுறலின் விளைவு தானே, கட்சியைவிட்டுக் கனதனவான்கள் வெளியேறத் தொடங்கியது - கட்சியின்புதிய அமைப்புக்கு இதுதானே முதல் அங்கம்! கட்சி மீட்சிக்குவழி காணும் படலம், அது! தேர்தல்வந்தது, கட்சி சின்னாபின்னமாயிற்று! தலைவர்கள் திகுக்கு ஒருவராகப் போயினர்! பிறகு தேடிவந்து தேம்பிநின்று, கட்சியை நடத்திச்செல்க, என்று பெரியாரிடம் ஒப்படைத்தனர், அவரும், கட்சியிலே கொள்கைக்காக உள்ளவர்கள், பலனுக்காக இருப்பவர்கள் என்னும் இருதரப்புகளையும் ஒன்றாகப் பிணைத்துச் செப்படிவித்தை செய்துபார்த்தார்! ஒட்டவில்லை! “சேலம்”, ஏற்பட்டது!!
***

“சேலம்” ஏற்படாதிருக்கவேண்டுமானால், என்ன் நிலைமை இருந்திருக்க வேண்டும்? கட்õய இந்தியை எதிர்த்து நாங்களெல்லாம் - எங்களைத் தள்ளுங்கள் - நமது தாய்மார்கள், சிறைச்சாலைக்குச் சென்றார்களே, அந்தச் சமயத்தில், எமது தலைவர் பெல்லாரியில் கிடந்த நேரத்தில், பட்டங்கள் பறந்திருக்கவேண்டாமா? பதவிகளை வீசி எறிந்திருக்க வேண்டாமா? எர்ஸ்க்கைன் துரையின் முகத்திலே! சிறைக் கூடங்களிலே, மாஜிமந்திரிகள் நுழைந்திருக்கவேண்டாமா? வீரரின் வழி அது. போகட்டும் வீரம் குறைந்து இருந்தது, பரிதாபப்படுவோம்; ஆனால் விவேகமாவது இருக்க வேணடாமா? “என்ன இது? இந்த வாலிபர்கள், சிறைக்குத் தாவுகிறார்களே. தமிழ்ப் பற்றுக்காக, இதுவரை, ஏடுபடித்தவர்களை, வித்வானானவர்களை, மகாமகா வித்வான்களானவர்களைக் கண்டதுண்டு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்றுபாடிக் கொண்டு கூண்டுக்குள் செல்கின்றனரே தமிழர்கள், நாமோ பங்களாக்களிலே இருந்து கொண்டு பரிதாபத்தைத் தெரிவித்தபடி இருக்கிறோமே, இவர்கள் சிறையிலும் நாம் சிங்காரவாழ்விலும் இருப்பது, நமது எதிர்காலக் கூட்டுவாழ்க்கையையே பாதிக்குமே, நாடும் இந்தக் கூட்டுவாழ்க்கையைக் கேலிசெய்யுமே, ஒன்று நாமாவது சிறைபுகவேண்டும், அல்லது சிறைபுகும் தோழர்களையாவது, வேண்டாம் என்று தடுத்து, வேறுவழி காட்டியிருக்கவேண்டும், என்றாவது தோன்றியிருக்க வேண்டுடாமா? செய்தனரா? நாம் அந்தச் சமயத்திலே அவர்களின் பேச்சைக் சேட்டு இருப்போமோ, இல்லையா என்பது வேறுவிஷயம். இவர்களுடைய கடமை என்ன? வீரம், விவேகம் என்பதிலே எதன்படி, நடப்பதானாலும் வரி! விவேகிவீரத்தைத் தான் விரும்புவான், வீரந்தான் விவேகம்! இரண்டும் இலலை! என்ன நடந்தது? வாயிலே நுரை தள்ள ஓடிவரும் பந்தயக் குதிரை மீது, பட்டாடை அணிந்த சீமான்களும் பந்தயம் கட்டினார்கள்! குதிரைகள் குடல் அறுபட ஓடின, இங்கே குதூகலமான விளையாட்டு!! அந்த நேரத்தில், காலை 6-மணிக்கு, விழித் தெழுந்ததும், எங்கள் உடலிலே, சர்க்கார் உடையும், எதிரே வார்டரின் கடையும் கண்டபோது, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எங்கள் பில்லைகளைப் பளபளப்பாக்கித் தொங்கவிட்டுக்கொண்டு நாங்கள், அதிகாரி பார்வைக்காக நின்ற போது, மாலை 6-மணிக்கு, - வெளியே உலவப்போக வேண்டிய சமயத்தில் - உள்ளே தள்ளி நாங்கள் பூட்டப்பட்டபோது - எங்கள் எதிரிலே தகரக்குவளைகளும் மண்கலயங்களும் காணப்பட்ட போது - நாங்களென்ன மரக்கட்டைகளா, எங்கள் மனதிலே, உணர்ச்சி தோன்றாதிருக்க! அந்த நேரத்திலே உங்களைப் பற்றி, சிறைபுகுவது செந்தமிழ்த் தொண்டர் கடமை, தலைவர்கள் கடமை அதனைக் கண்டு மகிழ்தல் என்ற முறையிலே நடந்து கொண்ட உங்களைப் பற்றி, உள்ளே இருந்தவர்கள், மிகமிக உணர்வான எண்ணமாகொண்டிருக்கமுடியும்? நமது தலைவர்களின் திருக்கலியாண குணங்களை எண்ணி எண்ணித் தலையணைகளைக் கண்ணீரால் நனைத்ததுண்டு! தோழர்களே! அவர்கள் அறியவில்லை, சேலம் பிறந்த இடம் சிறைச்சாலை என்பதை! அந்தப்போராட்டத்தின்போது, நமது சர். சண்முகம், நேரு வாகியிருக்கலாம், குமாரராஜா, பட்டேலாகியிருக்கலாம், இன்றுநாம் தேர்தல் போரிலே ஈடுபட்டுமிருக்கலாம்! இன்று அதனை மறந்து நாங்கள், தேர்தலிலே நமது நேற்றையத் தலைவர்களுக்காக ஈடுபடுவதென்றால், எப்படி இரக்குமென்று நினைக்கிறீர்கள்? இதிகாசங்கள் கேட்டு இன்புறும் அந்தத் தலைவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஓர் உதாரணமே கூறுகிறேன், இன்று நாங்கள் இவர்களுக்குத் தேர்தல் வேலைசெய்வதென்றால், பாரதத்திலே விராடபர்வத்திலே, பிரகந்நளையாக உருமாறிய அர்ஜுனன், வாய்வீரம் பேசிய உத்திரகுமாரனுக்குத் தேரோட்டின கதை போலிருக்கும்! பெரியாரின் பெரும்படை, இந்தப் பிழைபடுபாதையில் செல்லமறுத்துவிட்டது! தவறாகுமா? அல்லது இந்த நிலைமை கட்சிக்கு, வளரும் ஒருகட்சிக்கு ஏற்படாதிருக்க முடியுமா? ஒருகட்சி, பொதுமக்களுக்காகப் பாடுபடவேண்டிய கட்சி, கொள்கையின்படி நடப்பவர்களின் கூடமாகுமா? அல்லது காருண்ய மிகுந்த சர்க்காரின் கொண்டா
டடங்களிலே கொலுப்பொம்மைகளாக இருக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று குதூகலிக்கும் கோமான்களின் கோட்டையாகுமா? நீங்களே கூறுங்கள்! காங்கிரசை எதிர்க்கிறோம், எவ்வளவோ கஷ்டம் இதனால், கவர்னர் பிரவுவே! இதற்காக எனக்கு, கபுர்தலாவிலேதிவான் வேலை தரப்பட்டதா,அதுதான் தராவிட்டால் போகிறது, எங்கள் கட்சிக்காரர் என்று எண்ணிக் கொண்டு எதிராஜநாயுடுவுக்கு ‘சர்’ பட்டம் கிடைக்கச் செய்தீராமே, இதுமுறையா, என்று முகாரிபாட, ஒருகட்சியா, அதற்கு எங்கள் இரத்தமும் வியர்வையுமா! பார்ப்பனர்களை எதிர்க்க ஒருபடை தேவை, அதைக் கொண்டு பேரம் முடித்துக் கொள்ளச் சமயம் தேவை, என்பதற்காக ஒருகட்சியா, அதற்கு எங்கள் உழைப்பா? நாங்களென்ன, எடுப்பார் கைப்பிள்ளைகளா! காங்கிரசார் நமது கட்சியை, பிரிட்டிஷாரை ஆதரிக்கும் கட்சி என்று சொல்லும்போது கூட அவ்வளவு கோபம் வருவதில்லை - ஏதோ அவர்கள் பாமரரை ஏமாற்றி ஓட்டுப் பறிக்கக் கூறுகிறார்கள் என்று எண்ணிக் கொள்வேன், நம்மை ஆதரிக்கும் கட்சி, என்று பிரட்டிஷாரே எண்ணினால் பிரிட்டிஷார் எண்ணும்படியான முறையிலே நமது கனதனவான் கள் கட்சியை நடத்திக் சென்றால், உண்மையைக்கூறுகிறேன்,கோபமும் துக்கமும் பொங்குகிறது. அடிமைக்கட்சி, சர்க்காரின் தாசர்கட்சி என்று எதிரிதூற்றலாம், அது தப்புப்பிரச்சாரம், சர்க்காரே அவ்விதம் எண்ணுகிற நிலைமை ஏற்பட்டால் எந்தத் திராவிடன் அதனைச் சகித்துக் கொள்ளமுடியும்! தேவவியாசனுடன் போரிடுவது வேவல்பிரவுவின் அடிமையாவதற்கா? பார்ப்பனியத்தின் பிடிஆள் ஆவதற்கா? ஒருபோதும் இல்லை! அப்படி ஒருகட்சி இருக்கவேண்டிய அவசியமில்லை! அடிமைகளுக்குக் கட்சி ஏன், அவர்கள் இருக்க வேண்டிய இடம் சர்க்காரின் இலாயம்! மக்களின் விடுதலைக்காக எட்டுமுறை சிறைசென்ற ஒரு மாவீரனின் தலைமையிலே வந்தபிறகும், இந்தக்கட்சி, இளித்தவாயரின் இருப்பிடமாகவோ, பிரிட்டிஷாரின் எடுபிடியாகவோ, பார்ப்பனரை அரசியலில் எதிர்ப்பதும் மத சமுதாயத்துறையிலே அடிபணிவதுமாக இருக்கும் கொள்கை யற்ற கும்பலின் கூரையாகவோ, இருக்குமென்று எதிர்பார்ப்பது பைத்யக்காரத்தனம், இல்லையே என்று ஏங்குவதுபோலக்கிரித் தனம், இப்படி ஆய்விட்டதே என்று சோகிப்பது ஏமாளித்தனம்.

ஒருகாலம் இருந்தது - காங்கிரசும் ராஜபக்திபாடியகாலம் - அந்த நேரத்திலே சதியைத் தடுத்த சர்க்கார், தக்கர் கூட்டத்தைத் தடுத்தசர்க்கார், சனாதனச் சிலந்திக்கூண்டை அழிக்கும் என்று நாம் நம்பியகாலம், அந்தநாளிலே சொன்னோம், ஆரிய ஆட்சியைவிட ஆங்கில ஆட்சிமேல் என்று! இன்று, ஆங்கில ஆட்சி இங்கிலாந்திலே இருக்கிறது, இங்கு நடப்பது ஆங்கில மேற்பார்வையிலேயுள்ள ஆரிய ஆட்சி என்று உணர்ந்தோம்! ஒருகாலம் இருந்தது - எங்கள் சாம்ராஜ்யத்திலே சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று பிரிட்டிஷார் பெருமையுடன் கூறியது கேட்டு நாம் பூரித்தது, இன்று சூரியனைக் கூட அந்த பிரட்டிஷ் ஏகாதிபத்யம் ஏமாற்றுகிறது போலும் என்று கூறுகிறோம்.

தண்டவாளத்தைப் பெயர்க்கிறானே தருமமா? தபாலா பீசைக் கொளுத்துகிறானே நியாயமா? பட்டாளத்துக்க ஆள் சேரக்கூடாது என்று பேசுகிறானே இந்தியாவுக்கு ஆபத்தல்லவா? என்று முறையிட்டு, நமது சர். ராஜனையும் சர். குமாரராஜனைவுயும், சர். பத்ரோவையும், நிபந்தனையற்ற யுத்த ஒத்துழைப்புக் காரராக்கிப் பெரியாரை அந்த அணிவகுப்பிலே நிறுத்திப்பார்த் சர்க்கார், சிம்லாவின்போது ஸ்ரீஜத்கள் வந்தால் போதும் என்றுகருதினதை, கருத்தில் வைத்துப்பாருங்கள், இந்தத் தேர்தல் நமக்காக அல்ல, என்பது தெளிவாகும்! உதாசீனப் படுத்தப்பட்ட நாம், ஊராள, தண்டவாளம் பெயர்ப்பவர்களை விடுவோமே கொஞ்சக்காலம்! உலகு கேட்கட்டுமே, இந்தியாவிலே நடைபெறும் இந்த மூனிக் ஒப்பந்தத்தை! இந்தத் தேர்தலிலே காங்கிரஸ் வெற்றி பெற்றால், வெள்ளையன், அந்தமுடிவை ஏற்றுக்கொண்டு, வெளியேபோகட்டும் மூட்டை முடிச்சுகளுடன், ஆனால் போகுமுன்பு, மூட்டைமுடிச்சுகளை அவிழ்த்துப் பரிசோத்தித்து அனுப்ப வேண்டும், போகிற போக்கிலே எதையும் சுருட்டிக் கொண்டு போகாதபடி தடுக்க!

இந்த மனப்பான்மைக்கும், மன்னர்பிரான் சர்க்காருக்குத் தாங்கள் செல்லப் பிள்ளைகள் என்று எண்ணிக் கொண்டு அது சர்க்காரின் நினைப்புமல்ல, இவர்களின் எண்ணம் - ஒருதலைக் காதல் - எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும், எப்படிக் கூட்டுவாழபுக்கை முடியும்?

அந்தப் பிரமுகர்களைக் கொண்டு, நமது கட்சி, பிரட்டனுக்கும் உலகுக்கும் ஒரு நல்ல பாடத்தைக் காட்டிவிட்டது, அதை நான் மறக்கவில்லை, பெருமையுடன் கூறத்தயங்கவுமில்லை. ஒருகாலம் இருந்தது, பாராளும் பண்பும் பட்டப்படிப்புப் பெறும் யோக்கியதையும், பதவிகளிலே வீற்றிருக்கம் ஆற்றலும், நிர்வாகத்திறனும், பார்ப்பனர்களுக்கே உண்டு, நம்மவருக்கு இல்லை என்று பார்ப்பனர் சொன்னகாலம்; அதை உண்மை என்று ஆங்கிலர் நம்பிய காலம். அந்தத் திறமைக்குக் காரணம் இருவரும் ஆரிய இனம் என்று கூறிய மாக்ஸ் முல்லரைச் சாட்சியாகக் கொண்டுவந்த காலம். அது கூட அவ்வளவு வேடிக்கையல்ல! அதனை நம்மவர்களும் நம்பியகாலம் அது. நமது கட்சி,தனதுமுதல் கடடத்திலே இந்த உரை பொய்யென்பதை, நமது இனப் பிரமுகர்களைக் கொண்டு நிரூபித்துக்காட்டிவிட்டது! அந்தத்துறையிலே நாம் முழுàவற்றி அடைந்தோம்! அப்படிப் பட்டகாந்தியார் கூடப் பார்ப் பனரல்லாதார்தானே என்று காங்கிரஸ் யைர்கள் கவலையுடன் கூறிடும் அளவு வெற்றிபெற்றோம். இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டு விட்டபிறகு, ஜாதிகுலம் பார்த்தால் இலாபம் இல்லை, கலப்புமணம் தேவைதான் என்று ஆச்சாரியார் பேசவேண்டிய நிலைமைவளருமளவு வெற்றி பெற்றுவிட்டோம். ஆச்சாரியார் இப்போது பேசுகிறார். நான் அப்போதே உணர்ந்து, கொங்கு வேளாளரைக் கணவராகக் கொண்டேனே என்று மங்களூர் பார்ப்பன அம்மையார் எண்ணக்கூடிய அளவு வெற்றிபெற்றாகி விட்டது! எத்தனையோ நாட்டுத்தலைவர்கள் கூடினர், சர். இராமசாமிக்கு இணையாரும் இல்லை, என்று சாம்பிரான்சிஸ் கோமாநாடு பற்றிக் கூறினதைக் கேட்டுஉச்சீகுளிரும் அளவு வெற்றிபெற்றோம். அல்லாடி அல்லாடி என்று பெருமை பேசுகிறாயே, எங்கள் எதிராஜைப்பார்! சி.பி. சிபி என்று ஜம்பம் பேசுகிறாயே எங்கள் சண்முகத்தைப்பார்! என்று பெருமையுடன் கூறினோம்.

அந்தக் கட்டம் - நமது இனத்தலைவர்கள், ஆரியர்களுக்கு அறிவிலே ஆற்றலிலே ஆளுந்திறமையிலே அவனிபுகழ் அடைவதிலே இம்மியும் குறைந்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் கட்டம் முடிந்தது. இது போது இரண்டாம் கட்டம்! “ஆமப்பா, ஆற்காட்டு முதலியார் ஆற்றல்மிக்கவர் தான், ஆனால் அவர் நெற்றியிலே திருநாமத்தைப்பார்! சர். சண்முகம் ராஜசபைகளுக்கேற்ற தேஜஸ் உள்ளவர்தான்! ஆனால் அவர் மாளிகைளிலே உள்ளவிநாயகர் ஆலயத்தைப்பார்! அவர் வீட்டுத் திருமணங்களுக்கு ஐயர் வருவதைப் பார்” என்று ஆரியம் நம்மை கேலிசெய்தது. நமது கண்ணும் கருத்தும் அந்தத் துறையிலே சென்றுதானே தீரும். நமது சர்களைக் கண்டு சந்தோஷப்பட்ட நமது கண்களின் முன்பு, வீதியில் புரளும் வேலன், காவடி தூக்கும் கந்தன், மொட்டை அடித்துக் கொள்ளும் முனியன், கும்பாபிஷேகம் செய்யும் குமரன், ஆரியனுக்கு மானியம் தரும் ஆறுமுகம், அணுக்குண்டைவைத்திருக்கும் உலகின் முன்னே நின்றகொண்டு, காட்டேறி, இருளன், சாமுண்டி, காளி, கருப்பாயி என்னும் படை இருப்பதாகக் கூறும் குப்பன், ஐயர் உயர்ஜாதி, அது அயன் படைப்பு என்று இன்றும் நம்பும் ஏமாளி, இந்தக் குறைபாடுகள் ஒழிந்தால் தான் உன் அறிவு வளரும் செல்வம் நிலைக்கும் என்று கூறவோரை எதிர்க்கும் கோமாளி, ஆகியோர்களைப் பார்க்கிறோமே! உலகம் புகழும் இராமசாமியைக் கண்ட கண்களால், இத்தகைய உதவாக்கரை மனப்பான்மையைக் கொண்டமக்களையும் காண்பது என்றால், இதற்குக்கண் ஏன்? கண்டபிறகு, இந்தக் கோரத்தை மாற்றித் தீரரைக் கொண்டதாகத் திராவிடத்தைத் திருத்தி அமைக்கவேண்டும், அதுவே கட்சியின் கடமை என்று கருதாவிட்டால், கட்சி ஏன்? இதைச் சிந்தித்துப் பார்க்கப் பொறுமை இல்லாவிட்டால், அவர்களின் கோபத்தை நாம்பொருட்படுத்துவானேன். கட்சி இயற்கையாக வளரவேண்டியது முறை, வளர்ந்து இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது! இது பிறர்மீது துவேஷத்தால் ஏற்படுதுத்தப் பட்டதல்ல என்று காளையாகிவிட்டது!

கட்சி கெட்டுவிட்டது என்று கூறுவோர், பெரியார் சொன்னால் கைகொட்டி விடுகிறார்கள் என்று பேசுவோர், திருவாளர்கள், இதனைத்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும், கோபத்தால் நம்மை விட்டுப் போய்விட்டாலும் தனியாக இருக்கும்போது, யோசித்துப் பார்க்கவேண்டும், கட்சி இந்தக் கட்டத்துக்கு வராமலிருக்கமுடியுமா, வராமலிருக்கலாமா, இந்த மூலப்பிரசனையைக் கவனிக்கக்கட்சி ஒரு முன்னணிப்படையானாலொழிய வேறுமார்க்கம் உண்டா என்று, பிறகு விளங்கும், இன்று கட்சிவளர்ந்துள்ள வகையினால் தான், திராவிடநாடு விடுதலை அடையமுடியும்! என்ற உண்மை!
***

பல்வேறு நாடுகளிலே, நிலைமையை எண்ணியும், கட்சியை உரமாக்கும் கருத்துக்காகவும், ஆளும் கூட்டத்தின் போக்கைக் கண்டிக்கும் குறியாகவும், கட்சி, தேர்தலிலே ஈடுபடக்கூடாது என்று கட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர். பெரியார், அரசியல் கட்சிகளுக்கே அடுக்காத ஒரு அக்ரமத்தைச் செய்கிறார் என்று ஆயாசப்படும் அன்பர்கள், இதனை ஆர அமர யோசித்துப்பார்க்க வேண்டும். பழைய வரலாறுகளைப் பற்றி யோசிக்க, ‘தேர்தல் மோகம்’ இடந்தராது. எனவே,இன்ற, வெளிவந்துள்ள ஒரு செய்தியைக் கூறலாம் என்று எண்ணுகிறேன்.

கிரீஸ் நாட்டிலே, பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த ஜனவரி 20ல், தேர்தல் நடத்தச் சர்க்கார் முடிவு செய்துவிட்டனர்.

“இந்தத் தேர்தல் திருக்கூத்து நாட்டுக்குக் கேடுண்டாக்கிக் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தும். எனவே இந்தத் தேர்தலை, எங்கள் கட்சி பகிஷ்கரிக்கும்” என்று, கிரீஸ் நாட்டு லிபரல் கட்சித்தலைவர் தெமிஸ்டாக்லிஸ் சோபுலீஸ், அறிக்கைவிடுத்துள்ளார், அக்டோபர் 7-ல்.
கிரீஸ் லிபரல் கட்சித்தலைவர் அரசியல் அறியாதவரா? ஏன், தேர்தலில் கட்சி ஈடுபடக்கூடாது என்று தீர்மானித்தார். லிபரல் கட்சி தேர்தலிலே ஈடுபடாவிட்டால், எதிர்க்கட்சி வெற்றிபெற்றுவிடும், என்பது தெரியாதா? ஒரு அரசியல் கட்சி, தேர்தலிலே ஈடுபடாமலிருக்கலாமா, என்று யோசித்துப் பார்த்திருக்கமாட்டாரா? ஏன், தேர்தலைப்பகிஷ்கரிக்க முடிவு செய்துள்ளார்! இன்று, கிரீஸ் சர்க்கார் தேர்தல் சம்பந்தமாகச் செய்துள்ள முடிவும் முறையும் தவறு என்று தெரிவிக்க, சர்க்காரின் போக்கைக்கண்டிக்க! “உன் தேர்தல்முறை சரியானது என்று நான் ஒப்புக்கொள்ளமுடியாது. அந்த முறையை நான் கண்டிக்கின்றேன். கண்டனத்தின் அறிகுறியாக, இந்தத் தேர்தலிலே நான் கலந்துகொள்ளப் போவதில்லை,” என்று லிபரல் கட்சித் தலைவர் கூறுகிறார்.

பெரியார் ஈ.வெ. இராமசாமி, ‘மெயில்’ நிருபரிடம்,
“திராவிடர் கழகம், தேர்தலைப் பகிஷ்கரிக்கிறது. ஏனெனில் வேவல்பிரபு சர்க்காருடன் ஒத்துழைப்பது வியர்த்தம் என்று விளங்கிவிட்டது.

வேவல்பிரபு, காங்கிரசைத் தட்டிக் கொடுத்ததோடு, போர் ஆதரவுக்கான உதவி அளித்தவர்களை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டார்.

முஸ்லிம்களுக்கும் ஷெடியூல்டு வகுப்பினருக்கும் இருப்பதுபோலத் திராவிடருக்கும் தனித்தொகுதி வேண்டுமென்று கூறினோம்; அதன்படி தனித்தொகுதி தரவில்லை.

யுத்தத்திலே நாங்கள் மனமார ஒத்துழைத்தோம், பிரிட்டிஷ் சர்க்கார், இந்த ஒத்துழைப்புக்குக்காரணம், எங்கள் பல ஹீனம் என்று எண்ணிவிட்டது.

எனவே, திராவிடப் பெருங்குடி மக்களின் அதிருப்தியைத் தெரிவிக்க, இந்தத் தேர்தலிலே கலந்துகொள்வதில்லை என்று தீர்மானித்தோம்.”

என்று கூறியிருக்கிறார். இதிலே விளக்கம் இருக்கிறது, கிரீஸ் சம்பவம் இதற்கோர் எடுத்துக்காட்டாகவுமிருக்கிறது, என்றாலும், திருவாளர் திருப்திபெற மறுத்தால், தோழன் என்ன செய்ய முடியும்!

திராவிடநாடு - 14-10-45