அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சேலம் வாரீர்!

வந்துவிட்டார்கள் விதண்டாவாதக் காரர்கள்; வாயை மூடிக் கொள்வோம்! சுயமரியாதைக்காரர்களா? அவர்களிடம் பேசி, யார் மீள முடியும்?

நாயக்கர் கூட்டமா? அதுகள் எதுவும் இல்லை என்று கூறுமே.

அடே! யார் நீ? சு.ம.வா? மதத்தைத் தூஷிக்காதே; பெரியவர்களைக் கண்டிக்காதே; சாத்திரத்தை இகழாதே; சாமியைக் குறை கூறாதே!

நாட்டிலே பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, மேலே துட்டப்பட்டுள்ள ஆத்திர அலறல் கேட்கப்பட்டு வருகிறது. ஒரு சிறு கூட்டத்தின் சிந்தனை, சொல், செயல், பெரியதோர் புரட்சியை உண்டாக்க முடியும். உறுதி படைத்த இலட்சியவாதிகளின் உண்மை உழைப்பு ஊராள்வோரையும் ஊராள்வோரின் குரு பீடங்களையும் மிரட்சி கொள்ளும்படி செய்ய முடியும் என்பதைச் சுயமரியாதைக் கூட்டம் காட்டிவிட்டது.

சுயமரியாதை இயக்த்தின் தோற்றம், வைதிக வல்லரசின் பீடத்துக்கு ஆட்டம் கொடுத்துவிட்டது. எங்கும் எதிர்ப்பு! எவரும் கண்டித்தனர்! அரசாங்கமும் தனது கண்களை அகலத் திறந்தது.
திரை மறைவிலே திருவிளையாடல், பூசி மெழுகிப் புன்னகை புரிதல் என்பன அறியாத, போர்க்குண இளைஞர்களைப் படை எடுத்தார்.

பிரட்சி பூத்தது
சனாதனிகளின் சீற்றம், முதலாளிகளின் மோதுதல், தர்ப்பா சூரரின் தாக்குதல், பண்டிதர்களின் பதட்டம், பாமரரின் பதைப்பு, காந்தீயக் கூட்டத்தின் கனல் எனம் பல்வேறு பாணங்கள் சு.மு. படை மீது பாய்ந்தன. பீறிட்டு வெளியே வரும் இரத்தத்ததைத் துடைக்கக் களத்தே உள்ள வீரனுக்க நேரம் ஏது? அது போலவே, தூற்றல்களைக் கண்டு துயருறவோ, துடிக்கவோ நேரமின்றி, சுயமரியாதை இயக்கம், பழமையைச் சாடி, வைதிகத்தை வாட்டி, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப போரிட்டது; பழமை மிரளக் கண்டது.

ஏன் என்ற கேள்வி எங்கும் முழங்கக் கேட்டனர். வைதீகர்கள், வைகுந்தநாதனை வேண்டினர். இவர்களின் வாய் மூட வழி இல்லையா என்று; கைலாயநாதனிடம் காவடி தூக்கினர், நெற்றிக் கண்ணால் சுட்டெறியும் இந்த நீசர்களை என்று. அந்த நாதர்களுக்கு என்னென்ன வேலை இருந்ததோ நாமறியோம். எவரும் சுயமரியாதைக்காரரிடம் வந்து நின்றதுமில்லை, வாய் அடைத்ததுமில்லை!

சுயமரியாதைக்காரர்களின் உழைப்புப் பலனளிக்காமலும போகவில்லை. சேரி சீறுவதும், அக்கிரகாரம் அழுவதும், பூசுரர் பார்ப்பானானதும், சூத்திரன் தமிழனானதும், புரோகிதனின் கெம்பீர நடை தள்ளாட்டமானதும, புராணீகனின் குரல் மங்கினதும, தத்துவார்த்தங்க கூறுவோர் தடுமாற்றமடைந்ததும், எதனால்? சடங்குகளைச் செய்வதிலே பெருமை கொண்டிருந்தவர்கள் இன்று ஒழிக்க முடியவில்லையே, பழக்கமாகிவிட்டதே, படிப்படியாகத் தானே நீக்க முடியும் என்ற பக்குவமாகப் பேசிச் சமாதானங் கூற முன் வருவது எதனால்? நீறு பூசி, நிகண்டு தூக்கி, நாமநெற்றி எனும் வேடமிடுவோரின் எண்ணிக்கை குறைவதன் காரணம் என்ன? பொதுவாகவே, வைகித்தின் ஆட்டம் ஓரளவு ஒடுங்கக் காரணம் என்ன? சுயமரியாதைக்காரனின் சளையாத உழைப்பு வைதிக அச்சு முறிந்து, சனாதனச் சக்கரம் சாய்ந்துபோனதன் காரணம், சுய மரியாதைக்காரன் அனுபவித்த மண் கல் வீச்சு, கால முழுவதும் சொல்லடிபட்டுச் சோர்வின்றி உழைக்கும் தலைவரின் தளரா ஊக்கம் இவைகளே! விதவைகளின் துயரம் துடைக்கப்பட்டது. கலப்பு மணம் ஓங்கிற்று. கபோதிகள் காணலாயினர். ஊமைகள் உக்கிரமாகப் பேசினர். புரட்சி மனப்பான்மை தாண்டவமாடிற்று. சமுதாயத்திலே சரியானதோர் புரட்சி துருக்கியிலே முஸ்தபா கமால் பாட்சாவும், சைனாவிலே சன்யாட் சென்னும் செய்தது போன்ற மாறுதல், இங்கு ஏற்படத் தொடங்கிற்று.

வந்தது விபத்து!
ஆனால், வந்தார் வர்தா முனிவர். நமது முயற்சியை முறியடிக்க முகாம் அத்தார். உள்நாட்டுக் கொள்ளைக்காரரை ஒழிக்க முனையும் நேரத்திலே, வெள்ளைக்காரன் மீது படை எடு என்று பேசி, நேரம் நினைப்பு சக்தி யாவும் பாழாக வழி செய்தார். சுதர்மம், இந்து மார்க்கம், ராமராஜ்யம், கீதோபதேசம், பாரதமாதா, வந்தேமாதரம் எனும் கற்பனைகளிலே மக்களை உலவ வைத்தார். அவர் மகாத்துமாவானார். அந்தராத்மாவின் தோழரானார். மக்களோ, வைதிகத்தின் எடுபிடிகளாயினர். வர்ணாசிரமத்தின் வலாயினிர். வளைத்தனர். அடிமை மனப்பான்மை கொண்டனர். வெளி நாடுகளிலே, சமதர்ம உணர்ச்சியைச் சாய்க்கத் தெசிய இயக்கம் கிளம்பியதை அறிவாளிகள் மறுக்கார். இங்கு பதுத்தறிவு இயக்கம், புரட்சி உதயம், காந்தீயத்தால் ஒடுக்கப்பட்டது.

இன்று ஆரியரின் ஆர்ப்பரிப்பு அதிகமாகிவிட்டது. அரசியல் போர்முனைக்கு நம்மவர் சென்றபோது, வைதிகங்கள் வளைகளை விட்டு வெளியே வந்து உலவி மீண்டும் கமக்களைத் துண்டின. இதன் பயனாக இன்று வைதிகம் தலைவிரித்தாடக் காண்கிறோம். சுயமரியாதை இயக்கம் ஒழிந்துவிட்டது என்ற அக்ரகாரம் நினைக்கிறது.

வானத்திலே மயில் ஆடிடக் கண்டேன் என்ற கூறிடுபவனை, என்னவென்று கூறுவீர்கள். வாடை வீசினால் குடியன் என்றோ, இல்லையேல் மூளை குழப்பியவனென்றோ கூறுவர். ஆனால் துர்ப்பாக்கிய மிகந்த இந்த நாட்டிலே, இல்லாததைஉண்டென்பவன் ஞானி, இருப்பதை மாயை என்பவன் வேதாந்தி, இயற்கைக்கு மாறானதை இயம்புபவன் கலா நிபுணன். பகத்தறிவுக்கு ஒவ்வாதது கூறுவோனைப் பரமபாகவதன், பகற்கொள்ளையிடுபவனைக் குரு என்ற கூறும் பாமரத்தன்மை இருக்கிறது. இதை வளர்த்துப் பயனமையும் கூட்டம் ஒன்றுண்டு. அதன் ஆதீனத்திலே எது நடப்பினும் இசை, நடனம், இலக்கியம், நாடகம், சினிமா, பத்திரிகை, பிரசங்கமேளை ஆகிய எதுவாகவிருப்பினும், அவற்றின் மூலம் மனம் பாழ்படவும் பாழ்பட்டதன் விளைவாகப் பராரியாகவுமான நிலைமையை நீடிக்கச் செய்வதையே கைங்கரியமாகச் செய்து வருகிறது. முன்னேற்றத்தை மூலையில் தள்ளி, மடத்தனத்துக்கு மாலையிட்டு உலக முன்னணியிலே ஒதுக்கிடம் பெற்றுக் கிடக்கும் இந்நாட்டுக்கு, இக்கூட்டம் செய்துவரும் கேடுபோல் உலகில் எக்காலத்திலும் எங்ககம் நடந்ததில்லை என்று குன்றின் மீதேறியுங் கூறலாம்.
மருந்தே விஷம்

மற்ற நாடுகளிலே, மூடர்கள் மடத்தனத்தைக் கொண்டோராகவும், அதனை வளர்ப்பவராகவும் இருந்தனர். அந்தக் காட்டுமிராண்டிக் காலம் அறிவுக் கதிரொளி படப்பட ஒழிந்தது. அற்புதம் செய்வோன், ஆரூடக்காரன், மாந்திரீகன் என்ற தெகிடுதத்தக்காரர்கள் ஒவ்வோர் நாட்டிலும் ஓர் காலத்திலே உலவினர். ஊரை அடக்கினர். ஆனால் அறிவு வளர வளர, அவர்களின் ஆதிக்கம் அழிந்தது. மக்களின் மனம் பண்படப் பண்பட இத்தகையவர்களை நம்பும் மனப்பான்மையை மாற்றிக்கொண்டனர். அறிவு உலகின் எதிர்ப்பும், கேலியும், கண்டனமும், ஏய்த்து வாழ்ந்த கூட்டத்தை அடக்கி ஒடுக்கிற்று. ஏமாளிகளாக இருந்த மக்கள் பின்னர், விடுதலை பெற்று, வீறு கொண்டெழுந்து, விஞ்ஞானத்தின் துணை கொண்டு வாழ்வை வளமாக்கிக்கொண்டனர். இங்கோ! இருபதாம் நூற்றாண்டிலும், ஏடு பல கற்று, பட்டம் பல பெற்று, விரிந்து பரந்த அறிவு பெற்றோர் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, விவேகி என்ற விருதுடன் உலவினாலும், மந்திரி, நிர்வாகி, ஆசான், ஆசிரியர், தலைவன், நடிகன் எனம் எந்தப் பதவியில் அமர்ந்தாலும் ஒரு கூட்டம் மக்களை மீண்டும் மீண்டும் மடத்தனத்தில் அழுத்தி வைக்கவே தங்கள் அறிவு ஆற்றல் வெல்வாக்கு அதிகாரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. மக்களின் பட்டிக்கு ஓநாயாக உள்ளனர். தமது சுயநலம், குலநலமன்றிப் பிறிதொன்றினைப் பற்றிக் கருதார். பேதைமை போக்க முன் வாரார்; சாதனை செய்து தமது சோற்றுத் துருத்தியைச் சொகுசாக்கிக் கொள்வதற்காக ஏதுமறியாத மக்களை, எடுப்பார் கைக்குழவிகளைக் கொடுமையான நிலையிலே வைத்து, அவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து ஊன் சுமந்து திரிகின்றனர். எந்த அறிவுத்துறை, விஞ்ஞானவழி, பிரசாரபீடம், மடமையைப் போக்க மற்ற நாடுகளிலே பயன்பட்டனவோ, அதே துறைகள் இங்கு, மக்களின் மடத்தனத்தையே நம்பி வாழும் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டிருப்பதால், மருந்தே விஷமாக்கப்படுகிறது! எங்கும் வைதிகம்

சிறார்களுக்குப் பள்ளிகளிலே ஊட்டப்படுவது வைதிக விஷமே, சிந்தனைக்கு வேலைதரும் பருவமின்றிச் செந்தேன். போல் வாழ்க்கை இனிக்க வேண்டுமென்றும், சேல்விழியாள் சின்னஞ் சிற்றிடையாளுடன் கூடி ஆனந்தமாக ஆடிப்பாடி இருந்தலே வாழ்வின் இலட்சியமென்றும், மெருகு கெடாத மோட்டார் ஏறுதல், மேனாட்டு மாளிகை போன்றதான வீடு தேடுதல் ஆகியவைகளே பேறு என்றும் கருதும், கனவுலகில் வாழும் இளைஞர்கள் கல்லூரிகளிலே பெறவது மட்டுமென்ன? அதே விஷந்தான், ஆனால் அதற்கு வசீகரமான மேல்பூச்சு உண்டு. வாழ்க்கைப் போட்டியால் வளைந்து, வறுமையில் நெளிந்து, குடும்ப பாரத்தால் களைத்துக கிடக்கும் பருவத்திலே பெறுவது என்ன? பழைய போதையே! ஏட்டிலே, நாட்டின் நானாவித நிகழ்ச்சிகளிலே, நாடகத்திலே, சினிமாவிலே, பாட்டிலே, வீட்டிலே வீதியிலே, காலையிலே, மாலையிலே, கனவிலேயுங்கூட வைதிகத்தின் ஆதிக்கமே காண்கிறோம். இவைகளை மாற்றப் பத்திரிகை உலகு, வெளிநாடுகளிலே பயன்பட்டது. கொடுங்கோலரை வீழ்த்தக் கோணல் நடத்தை கொண்டோரைக் கவிழ்க்க, வைதிக வல்லரசை ஒழிக்க, மத ஆதிக்கத்தை மாய்க்க, மடமையை வளர்போரை வாட்ட, பத்திரிகை உலகம் பயன்பட்டது. இங்கோ?

வருவாயும், வளமும் பெற்ற பத்திரிகைகள் ஆரியக் கூட்டத்தின் ஆயுதங்களாக உள்ளன. ஆளுங் கூட்டத்தின் ஆலிங்கன சுகங்கண்டன. அவை அறிவை வளர்க்கவில்லை. மூடத்தனத்தை மக்களிடை புகுத்தும் முரசாயின. இதன் பயனாக நேரிடும் பயங்கரமான விளைவுகளைத் தடுக்க, நமதாட்சி இல்லை. ஆங்கல ஆட்சி இதனைப் போக்க முயலவில்லை. முயலுமென்று நாம் எதிர்பார்க்கவுமில்லை.

ஆரிய ஏடுகள்
ஒவ்வோர் நாளம், நமது நாட்டிலே ஆரிய ஏடுகள், வைதிகம் வளர, பகுத்தறிவு பாழ்படி எவ்வளவு பாடுபட்டு வருகின்றன என்பதைக் கூர்ந்து நோக்குவர் கலங்குவர் என்போம்.

மோசடி நேரிடா வண்ணம் பாதுகாப்புத் தேட, ஆபத்து விளையா வண்ணம் அறிவு அரண் அமைக்க, வேடதாரிகளின் கபடத்தைக் கலைக்கப் பயன்படவேண்டிய பத்திரிகை உலகம், ஆரிய ஆதிக்கத்திலே இருப்பதனால், நாட்டை நாசமாக்குகின்றன. யாரோ ஒர் பிழைக்கும் வழி கற்ற திருப்பிரம்மம் எனது தாயத்துகள், முடிக்கயறுகள், வேல், சகல ரோகத்தையும் போக்கிச் சங்கடத்தை நீக்கிச் சங்கநிதி தரும் சக்தி வாய்ந்தன என்று ஓர் விளம்பரம் அனுப்பினால், உடனே இரத்தத்தைச் சிந்தி உயிரைப் பணயமாக வைத்து வீரப் போரிடும் ரஷியரின் செய்திக்கும் பக்கத்திலே ஒய்யாரமாகக் கட்டமமைத்து, இன்ன ஐயரின் இன்ன விதமான தாயத்தை வாங்கி அணுயுங்கள் என்ற விளம்பரத்தை ஆரிய ஏடு வெளியிடுகிறது. இது தகுமா என்று கேட்கிறோம். விளம்பரம், பணத்துக்காக என்று வாதிடுவர். சரி! பத்திரிகையின் இலட்சியமென்ன? மக்களை இத்தகைய மடிசஞ்சிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனப் பிழைப்புத்தானா? வைதீகத்துக்கும் வகையில்லாதாருக்கும் இடையே நின்று தரகு வேலை செய்வதுதான், அரசுகளையே ஆட்டி வைக்கும் பத்திரிகையின் பணியா? வெட்கம் மானம் ரோஷம் இருக்க வேண்டாமா? விவேகி என்ற பெயருக் கேற்றபடி செயலிருக்க வேண்டுமே என்ற உணர்ச்சி வேண்டாமா? சீச்சி! எதைச் செய்தேனும் எட்டடுக்கு மாடி கட்டி அதிலே பெண்டு பிளளைகளுடன் உலவுவதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்றிருக்கலாமா என்று கேட்கிறோம்.

வடலூர் வள்ளலார் வருகிறார் உயிரோடு என்று எவனோ ஓர் வயிற்றுக்காக வாயை விற்பவன் கூறினால், உடனே அதை வெளியிடுவது, அதற்காக் காசு பெறுவது, எந்த நியாயத்துக்குப் பொருந்தும் என்ற கேட்கிறோம். ஊரை ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருப்பது மானமற்ற செயலல்லவா? மனங் கூசவில்லையா? உள்ளம் பதறவில்லையா என்று கேட்கிறோம்.

இன இயல்பு
இத்தகைய நிகழ்ச்சிகள் விளம்பர விஷயங்கள், போலி என்பதும், பொதுமக்களுக்குக் கேடு செய்யும் என்பதும் அப்பத்திரிகை ஆசிரியருக்குத் தெரியாதா? தெரியும்? அதுவுந் தெரியும், அத்துடன் இவ்விதமான எண்ணம் நாட்டிலே இடம் பெற்றால்தான் தன் இனம் குனியாது நிமிராது ஊர் உழைப்பிலே வாழமுடியும் என்பதும் தெரியும். எனவேதான், இத்தகைய விஷயங்களைத் தாராளமாக வெளியிடும் மனப்பான்மை இருக்கிறது. கட்டை அவிழ்த்துக் கொண்டு ஓடிய ஓர் மாடு, ஊரிலே சுற்றி, கோயிலொன்றைக் கண்டு உள்ளே நுழைந்தது, பின்னர் மீண்டும் வெளியே வந்ததாம் சின்னாட்களக்க முன்பு! அறிவு வளர்ச்சியிலே அக்கரை, மடமையைப் போக்க வேண்டுமென்ற நோக்கமிருப்பின், இந்த நிகழ்ச்சிக்குப் பத்திரிகையிலே இடமளிப்பாரா? வெளியிட்டாலும், மாட்டுக்குத் தெய்வ பக்தி பிறந்தது என்ற கருத்துப்பட அது குறித்து எழுதுவரா? கட்டவிழ்த்த மாடு கொல்லைமேடு தெரிந்திருந்தால், அங்கு ஒடியிருக்கும். கோயில் தெரியவே அதனுள்ளே ஓடிற்று. இது நந்தியின் தெய்வபக்தி என்று பத்திரிகையிலே வெளிவருவதா? எவ்வளவு மடத்தனம்?

மலத்தைத் தேடி புறக்கடையிலே வரும் பன்றிகளை, மகாவிஷ்ணுவின் விஜயமென்று வெளியிடவோ, குப்பை கூளம் தேடி, அக்ரகாரத்திலே நடமாடும் கழுதைகளை, கழுதைகளுக்குள்ள பிராமண பக்தி என்றும், இனி அப்பத்திரிகைகள் வெளியிடவும் முன்வரக்கூடும்.

சேலம் சுயமரியாதை மாநாடு இத்தகைய நேரத்திலே கூடுகிறது. மீண்டும் சுயமரியாதை முரசு கொட்ட வாரீர். அணிவகுப்பைச் சரிசெய்து, ஆயுதந் தாங்கி, அறப்போர் புரிய முன்வாரீர் என்று அழைக்கிறோம்.

சேலத்திலே சுயமரியாதை இயக்கம், எதிர் காலத்திலே எவ்விதம் பணியாற்ற வேண்டுமென்பது நிர்ணயிக்கப்படவேண்டும். புதுத் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். அதனைச் செய்யும் ஆற்றலும், இயல்பும் இளைஞர்கட்கே உண்டு. ஆகவே, நாடெங்குமுள்ள இளைஞர்கள் திரண்டு சேலம் வர விழைகிறோம்.

போருக்குப் பிறகு உலகிலே ஏற்படப்போகும் மாறுதல், அற்புதமானதாக இருக்கத்தான் போகிறது. அதுபோது, நம்நாடு பகுத்தறிவும் சமதர்மமும் பூத்திடும் புன்னகைப் பூந்தோட்டமாக இருக்கவேண்டும. அதற்காவன செய்யவே, இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் சேலம் வரக் கோருகிறோம். வீரரே வருக! தோழரே வருக!!

(திராவிடநாடு - 10.01.1943)