அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சேலம் வழி காட்டும்!

நீள் வையம் எதிர்த்திடினும் அஞ்சுதல் இல்லாத் தோள்வாய்ந்த மூவேந்தர் ஆட்சி பாழானது எதனால்? நாடாண்ட தமிழ் வீடாளவும் முடியாத நிலை ஏற்பட்டது எக்காரணம் பற்றி? எளியோர்தமை வலியோர் சிலர் வதையே புரிகுவதா, என்று வீரத்தோடு கேட்ட நாடு, வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி நிலை அடைந்தது ஏன்? தமிழர், தாசரானது எப்படி? என்ற இன்னோரன்ன பிற கேள்விகளுக்கு, ஒரே பதில்தான் உண்டு. சுயமரியாதையை, தன்னுணர்வைத் தமிழர் இழந்ததால்தான் இழிவும் இடுக்கணும், தொல்லையும் துயரமும், ஜாதியும் பேதமும், சூழ்ந்தன. இதை மறுப்பவர் தமிழர் வரலாற்றை மறுப்பவராவர்.

தமிழர் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், தருக்கராட்சி வீழவேண்டும், தன்மானம் தழைக்க வேண்டும், என்ற நோக்குடன் பணியாற்றிவரும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தை, தமிழர் தலைவர், பெரியார் இராமசாமி அவர்கள், சென்ற கிழமை திருச்சியிலே சுயமரியாதைத் தோழர்களின் கூட்டத்திலே, பேசியுள்ள பேருரை, தமிழகத்தின் எதிர்காலத்தைப் பண்படுத்தக் கூடியதாகும். தன்னுணர்வாளர்களைத் திரட்டி, அணிவகுத்து, முகாம்களும் பயிற்சி ஸ்தாபனங்களும் நிறுவிப் பாசறையைப் பலப்படுத்திப் போர் முறை வகுக்க வேண்டும் என்று பெரியார் கூறினது கேட்டுத் தமிழகமெங்கணுமுள்ள தன்னுணர்வாளர்கள், களிகொண்டு, கடனாற்ற முன்வருவர் என்பதிலே சந்தேகமில்லை. அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வமுள்ள தோழர்களுக்கு இதோ ஒரு வாய்ப்பு! அடுத்து, சேலத்தில் கூடும்போது, செம்மையான திட்டங்கள் வகுத்துக்,கேடு தீரவும் நாடு மீளவும், நாமினி தலைநிமிர்ந்து வாழவும் நன்னெறி வகுப்பார் நமது தலைவர். அந்த நாளை நாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கிறோம்.

19.9.43